இன்று பொன்னான நாள் (2)
இன்று மகத்தான திருநாள்(2)-
ஆம்.
மகாத்மாக்கள் இன்னுயிர் ஈந்து விடுதலை பெற்றுத் தந்த விடுதலைத் திருநாள். 140 கோடி இந்தியர்களும் மகிழ்ந்திருக்கும் 75 ஆவது சுதந்திரப் பெருநாள்.
மேலைநாட்டுக் கல்வியும் சட்டமும் படித்த இளைஞர்கள், அரசியல் விடுதலை கோரிப் போராடினர். பாதிக்கப்பட்ட சிப்பாய்களும் பதவி இழந்த மன்னர்களும் மனம் கசந்தனர். வரிச் சுமையால் பசிபட்டினிக்கு ஆட்பட்ட விவசாயிகளும் நலிவடைந்த கைவினைக் கலைஞர்களும் பெருந்துயரம் அடைந்தனர்.
ஆங்காங்கே பற்றி எரிந்த விடுதலை வேள்வித்தீயை மகாத்மாக்கள் ஒருங்கிணைத்தனர். திட்டமிட்ட அகிம்சைப் போராட்டங்களால் ஆங்கிலேய அரசு திணறியது; இந்தியத் தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறியது.
சுதந்திர இந்தியா பிறந்தது (2).
வறுமையையும் வேலையின்மையையும் ஒழிக்கத் திட்டமிட்ட பாதையை அரசு தேர்ந்தெடுத்தது. கல்வி வளர்ச்சியை ஊக்குவித்தது. நேர்மையான தேர்தல்களை நடத்தி மக்களாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்தியது. வேளாண்மைப் புரட்சி மூலம் வறுமையை ஒழித்தது. தொழிற்புரட்சி மூலம் வேலையின்மையைக் குறைத்தது. பொதுத்துறை நிறுவனங்கள் சமதர்ம பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தின.
உலகப் பொருளாதாரத்தோடு போட்டியிடும் வகையில் தனியார்மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் போன்ற கொள்கைகளை அரசு பின்பற்றியது. இன்று தவிர்க்க முடியாத இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு என்று அனைத்துத் துறைகளிலும் இந்தியா கோலோச்சி வருகிறது.
சமூக அமைதி மற்றும் ஒழுங்குடன் நிலையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் இந்தியத் திருநாட்டில் ஊறுவிளைவிக்கும் வகையில் தீவிரவாதம், பிராந்தியவாதம், மதவாதம் ஆகியவை தலைதூக்கி வருவது சவாலானதாகவே இருக்கிறது.
'நாம் அனைவரும் இந்தியர்' என்ற உணர்வை மேலோங்கச் செய்வதன் மூலம் இவ்வகையான தீங்குகளை விரட்டலாம். "நாம் அனைவரும் உடன் பிறந்த சகோதரர்" என்ற உணர்வோடு பழகுவதன் மூலம் வேற்றுமைகளைக் களையலாம்.
இன்றும் இந்தியா அரசியல் சமூகப் பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அரசியலில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்கள் விரைவான வளர்ச்சியை எட்டி வரும் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் விரும்பத்தக்கதல்ல. கொரோனாப் பேரிடரை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு வரும் வேளையில் கல்விநிறுவனங்களில் ஆங்காங்கே நடைபெறும் விரும்பத் தகாத நிகழ்வுகள் சமூகத் தலைக்குனிவை ஏற்படுத்துகின்றன.
சில அரசியல் கட்சிகள் இனவாதம், பிராந்தியவாதம் மற்றும் மொழிப் பிரச்சனைகளை மையப்படுத்தி பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது தேசப்பற்றுக்கு குந்தகம் விளைவிக்கின்றன. தேசப்பற்றுக்கு ஊறு விளைவிக்காமல் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
இந்தியா பன்முகத்தன்மையும் பன்முகக் கலாச்சாரத்தையும் கொண்ட ஒரு பூந்தோட்டம். மணமுள்ள பூ, நிறமுள்ள பூ, மணமும் நிறமும் உள்ள பூக்கள் எனப்பலவகைகள் உண்டு. வேண்டாத பூ என்று எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இந்திய தேசத்தில், ஆளும் அரசியல் கட்சிகள் பன்முகத்தன்மைக்கு எதிரான சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த முயல்வது அரசியல் அமைப்பின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
அரசியலில், சமூகத்தில், பொருளாதாரத்தில் சமத்துவத்தைப் பேண இடஒதுக்கீட்டு கொள்கை சீரான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எல்லாத் தருணங்களிலும் அரசியலமைப்பின் மாண்பு குலையாமல் பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். இதை மனத்தில் கொண்டு வாழ்வதே சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். அதுவே பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் வழியும் ஆகும்.
இந்த நல்ல தருணத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!