செவ்வாய், 9 டிசம்பர், 2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுஸ்ரீ

 

நீ பிறந்ததும் 

உன் உலகிற்குள் நுழைந்தேன்.

என் தூக்கத்தைப் 

பல இரவுகளில் இழந்தேன்.

எந்நேரமும் உன் 

நினைவினில் கழித்தேன்.

உன்னை அள்ளி 

அரவணைத்து மகிழ்ந்தேன்.

உன்னைத் தாலாட்டி 

அமுதூட்டிக் குளிப்பாட்டி 

ஊர்சுற்றி உலகைக் காட்டி 

உனக்குள்ளே கிடந்தேன்.

உன் வாழ்நாளெல்லாம் 

தித்திப்பாகட்டும் என்று எண்ணி 

உனக்கு "மது" என்று 

பெயரிட்டு அழைத்தேன்.


நீ வாழும் உலகம் விசித்திரமானது! 

மந்தை புத்தியுடையது !

மதி மயக்கத்தில் உலழக் கூடியது.!

இவர்களிடமிருந்து விலகி நில்.! 



அறிவார்ந்த செயல்களை மட்டுமே செய் !

மந்தையோடு மந்தையாகக் கலந்து விடாதே! 

மந்தையை மேய்ப்போனாக மாறிவிடு!

அறிவால் மந்தையைத் திருத்து!


வீணர்களிடம் விவாதம் செய்யாதே!

நற்சொல்லைக் கேளாதவனுக்கு 

உபதேசம் பண்ணாதே!


மனக்கவலை தீர்க்கும் மாமருந்து 

'நீதி நூல்களே" என்பதை உணர்!

நூல்களை வாசி! 

உன் கவலைகளெல்லாம் தூசி! 


எடுத்த செயலை முடிக்கும் வரை ஓயாதே! 

பிடித்த செயலை,

ஊர் போற்றும் செயலை 

ஒருபோதும் விலக்கி விடாதே!

ஒத்தி போடாதே! 


வெற்றியை நோக்கி ஓடாதே! 

வெற்றி ஒரு போதை! 

வெற்றி பெற்றால் துள்ளி மகிழாதே! 

தோல்வி கிடைத்தால் துவளாதே!


உன் கடமையைச் செய்!

அது போதும்! 

அதன் பலனை எதிர்பாராதே! 

அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்!

கடமையை மட்டும் செய்! 

கடமையைச் செய்வதிலே கண்ணும்கருத்துமாக இரு! 


கடமை தவறியவர்களே 

வாழ்க்கை முழுவதும் கலங்கி நிற்பார்கள்!

கடமையை ஒத்தி போட்டவர்களே 

துன்பத்தை அனுபவிப்பார்கள்!


எந்தக் கடமையையும் 

நாளை பார்த்துக் கொள்ளலாம் 

என்று நினைக்காதே! 

இப்போதே செய்து முடி! 

இன்பமே தேடி வரும்! 

ஓடி வரும்!


எப்போதும் 

உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்!

வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்! 

மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்!

ஏனெனில், 

சுத்தமான இடத்தில் தான் 

கடவுள் குடியிருப்பார்! 


நீ கண்களால் காணும் 

காட்சிகள் எவையும் உண்மையல்ல...

அத்தனையும் போலியானவை!

உண்மைக் காட்சியைக் காண

உன் அகக்கண் கொண்டு பார்!

உன் அறிவுக்கண் கொண்டு பார்!!


போலியானவை எப்போதும் 

உன்னை ஈர்க்கும்!

உன் மனதை மயக்கும் !

நம்பிவிடாதே!

மயங்கி விடாதே!

விட்டில் பூச்சிகள் எல்லாம் 

விளக்கின் ஒளியில் மயங்கி

இறந்து விடுகின்றனவே!.


என்ன செய்தாலும் 

உன் மனச்சாட்சியிடம்

கேட்டுவிட்டுச் செய்.!

மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடு.!


பிறருக்காக யார் நடித்தாலும்

நீ நடிக்காதே !

எப்போதும் நீ உண்மையாகவே இரு!!

அதனால் வரும் துன்பத்தைத்

தாங்கிக் கொள்!


உண்மையானவர்களுக்குக் கடவுள்

அதிக துன்பத்தைத் தருவார்!

உனக்கு அதிக துன்பம் வந்தால் 

அதை எதிர்கொள்ளும் மனவலிமையையும் 

கடவுள் உனக்குத் தருவார்.

கடவுளிடம் நம்பிக்கை வை.


உன் மனவலிமையை வளர்த்துக்கொள்!

மனவலிமையை விடச் சிறந்தது எதுவுமில்லை!

மனவலிமை இருந்தால் 

எதையும் வெல்லலாம்!


உள்ளத்தின் அழகே

உண்மையான அழகு!

புறத் தோற்ற அழகு எல்லாம் 

அழியக் கூடியது.!


அதனால், புறத்தோற்ற 

அழகில் மயங்காதே!

அழகுக்கு அதிக முக்கியத்துவம் 

கொடுக்காதே!


மனதைக் கட்டுப்படுத்த 

பயிற்சி எடு!

மனதைக் கட்டுப்படுத்த முடிந்தால்

உலகத்தையே கட்டுப்படுத்தலாம்!


உணவை ருசித்து உண்!

ஆனால், பசித்த பின் உண்!

உணவின் மீது அதிக பிரியம்

வைக்காதே!

பெரிய பெரிய முனிவர்கள் 

எல்லாம் 

செய்கிற தவத்தில்

பசியை மறந்தவர்கள்!


உன்னதமான செயல்களைத்

தவம்போல் செய்!

கவனத்தை குவி!

காரியத்தில் மனதை நிறுத்து!

அச்சு பிசகாமல் 

குற்றங்குறை எதுவும் இல்லாமல் 

செய்து முடி!!


மனதை அமைதிப்படுத்து! 

கலங்கிய குட்டை நீர் 

குடிநீர் ஆகாது! 

காத்திரு! 

மனம் அமைதியாகும்! 

மனம் தெளிவாகும்! 

குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

சிறிது நேரம் ஒத்தி போடு! 

கோபத்தை அடக்கக் கற்றுக்கொள்!

நிதானமாகப் பேசு!


நாளை என்ன நடக்கும் என்பதை 

இப்போதே கணித்து விடு! 

நாளைக்கு ஏற்பத் திட்டமிடு!

சூழலுக்கு ஏற்ப உன்னைத் தகவமைத்துக்கொள்! 


பெரிய இலக்குகளை 

திட்டமிட்டால் தான் செய்ய முடியும்! 

திட்டமிடு-பாதிவேலை முடியும்! 

செயல்படு-மீதி வேலை முடியும்! 


பொருத்தமற்ற ஆசைகளைத் துரத்தி விடு!

நல்லதொரு இலட்சியத்தை உருவாக்கு! 

நாளும் அதை அடைய செயல்படு!

வெற்றி எப்போதும் உன் வசமே!

மகிழ்வோடும் மன நிறைவோடும் 

நெடுங்காலம் வாழ்வாயாக! 

உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது ஸ்ரீ!!!

திங்கள், 8 டிசம்பர், 2025

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே, மது ஸ்ரீ

 

ஆருயிர் மகளே! 

என் அன்பு சித்திரமே! 

உன் வருகைக்கு முன்பு 

எனக்கு ஒரு தனி உலகம் இருந்தது. 

நீ பிறந்த பிறகு 

உனக்கான உலகத்தில் 

உனக்காகவே வாழ்வதன்று 

முடிவெடுத்து விட்டேன். 

என் ஒட்டுமொத்த உலகமும் நீதான். 


எது சரி? எது தவறு? என்று 

மற்றவர்களை விட எனக்கு நன்றாக தெரியும் மகளே! 

வாழ்க்கையில் பொழுதுபோக்கு அவசியம்தான்! 

ஆனால், வாழ்க்கையையே 

பொழுதுபோக்காக போக்கி விடக்கூடாது. 

குழந்தையாய் இருக்கும்போதே 

படிக்கும் திறனை வளர்த்துக் கொள்! 

வளர்ந்த பிறகு 

உலக விவரம் அறிந்த பிறகு 

படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே! 

வளர்ந்த பிறகு 

கவலைப்பட மட்டுமே நேரம் இருக்கும்! 

கண்களை மூடிக்கொண்டு சிந்தித்துப் பார்! 

உன்னையும் உலகத்தையும் தொடர்பு படுத்திப்பார்! 

உன்னை உன் நண்பர்களுடனோ 

உன் ஊராருடனோ தொடர்பு படுத்தாதே!. 

உலக அளவில் 

உன் வயது குழந்தைகள் 

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று 

ஒப்பீடு செய்து பார்! 

அவர்களுக்கு தலைவியாக 

அவர்களுள் சிறந்தவளாக 

அவர்களோடு இணைந்து வாழ 

அவர்களைப்போல திறன்களை 

ஆற்றல்களை 

சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டாமா? 

அவர்கள் சொல்வதை 

நீ கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்கள் உன் சொல்லைக் 

கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்களெல்லாம் இடைவிடாது படிக்கும்போது 

விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் போது 

நீ சோம்பி இருக்கலாமா? 

சோம்பல் ஒரு கொடிய விஷம்! 

சோம்பல் நம் எதிர்காலத்தை கொல்லும்! 

உழைப்பே உன்னதம்! 

உயிருள்ளவரை உழைப்பை நேசி! 

உழைக்கும் போது மகிழ்ச்சி பெருகும். 

ஏனெனில், உழைப்பு வெற்றியைத் தரும் 

உழைப்பு நம்பிக்கையைத் தரும் 

உழைப்பு பெருமையைத் தரும் 

உழைப்பு பெருமித உணர்வைத் தரும் 

உழைத்தால் வாழ்நாளும் அதிகரிக்கும் 


ஆனால், சோம்பல் நோயைத் தரும் 

சோம்பல் வெறுப்பை விதைக்கும் 

சோம்பல் அவநம்பிக்கையைத் தரும் 

சோம்பல் வாழ்க்கையைச் சிதைக்கும் 

சோம்பித் திரியாதே! 

சோம்பல் இருந்தால் 

பொழுதை வீணாகக் கழிக்க தோன்றும் 

கவலையை அதிகரிக்கும் 

உன்னால் முடிகிற 

சாதாரண வேலையைக் கூட 

"செய்ய முடியாது போல" 

என்று எண்ண வைக்கும் 


எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக படிக்கிறாயோ? 

அவ்வளவுக்கு அவ்வளவு 

உனக்கு மதிப்புக்கூடும். 

உனக்கு ஆற்றல் அதிகரிக்கும் 

உனக்கு நீ நினைத்தது 

எல்லாம் கிடைக்கும் 

படிப்பே உனக்கு எல்லாப் பண்புகளையும் தரும் 

அன்பு, நேர்மை, உண்மை, நம்பிக்கை, முயற்சி 

எல்லாமே உன் படிப்பில் தான் இருக்கிறது 

ஆனால், உன் படிப்போ 

உன் சுறுசுறுப்பில் தான் இருக்கிறது! 

உன்னையே நீ சுறுசுறுப்பாக்கிக் கொள். 

மனிதரைச் சுறுசுறுப்பாகும் எந்திரம் 

இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆனால், உனக்குள் எப்போதும் ஓர் எண்ணம் 

இருந்து கொண்டே இருக்க வேண்டும் 

அது "நான் சாதாரண குழந்தை அல்ல 

நான் சாதாரண பெண்ணல்ல 

நான் சாதிக்க பிறந்தவள் 

எனக்குள் அந்த சக்தி இருக்கிறது 

சாதிக்க பிறந்த நான் 

சோம்பேறியாக இருக்கக் கூடாது 

உலகத்தையே ஆள வேண்டிய நான் 

ஓய்வு எடுக்கக்கூடாது 

நான் ஓய்வு எடுத்தால் 

உலகத்தை யார் காப்பாற்றுவது? 

காற்று மழை கதிரவன் நிலா 

என்றாவது ஓய்வெடுத்ததுண்டா? 

ஏன் என் இதயம் கூட 

ஓய்வெடுத்ததில்லையே !

நான் ஓய்வு எடுக்கக்கூடாது !

கடவுள் என்னைப் படைத்தது 

ஓய்வு எடுக்க அல்ல !

கடவுள் என்னிடம் 

உலகத்தை பார்த்துக்கொள்ள அனுப்பி இருக்கிறார் 

இந்த உலகத்தில் 

நான் சும்மா பிறக்கவில்லை 

நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் !

அதனால் நான் சோம்பலை 

விட்டு விட வேண்டும் 

எல்லாருக்கும் முன்மாதிரியாக 

நான் இருக்க வேண்டும் !

உலகத்திற்கு புதிய வழியைக் 

கண்டுபிடித்து தர வேண்டும் 

உலகத்திற்கே வழிகாட்டியாக 

இருக்க வேண்டிய நான் 

முயற்சி இன்றி 

நம்பிக்கையின்றி இருக்கலாமா? கூடாது! 

நான் இப்போது இருப்பது போன்று 

இருக்கலாமா? கூடாது!" 

என்று அடிக்கடி மனதிற்குள் எண்ணிக் கொள்! 


எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் நம்பிக்கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் செயல்களில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் முயற்சிகளில் தான் இருக்கிறது 


இதையெல்லாம் 

என்னுடைய ஆசைகளை 

கனவுகளை 

உன்னிடம் திணிப்பதற்காகச் சொல்கிறேன் 

என்று தவறாக எண்ணி விடாதே! 

நீ யாரிடத்தும் 

எப்போதும் தலைகுனிந்து நடக்கக்கூடாது 

என்பதற்காகச் சொல்கிறேன். 

நீ எப்போதும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் 

அதற்காக நீ எப்போதும் தலைகுனிந்து 

"படித்துக் கொண்டே இரு" 

அம்பேத்கரைப் போல....


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மகளே!

வரவேற்புரை

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தரும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு ஏ ஆர் ஆர் சீனிவாசன் அவர்களுக்கு வரவேற்புரை 

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் 

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணியப் புலவன் பாரதியின் 

பாடல் வரிகளுக்கு ஏற்ப 

கல்விப் பணியை முதற்பணியாக கொண்டு 

அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்ற 

நமது தமிழக முதல்வரின் கனவுகளை நினைவாக்க 

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தந்திருக்கும் 

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்கள் நீங்கள் 

கழகத்தின் மணிமுடியில் பதிக்கப்பெற்ற 

ஒளிமிக்க வைரக்கல் நீங்கள்

அறுபத்தெட்டு வயதிலும் இளைஞர் இவர் 

அயராது இடையறாது மக்கள் பணி ஆற்றும் மாணிக்கம் இவர் 

அழகாபுரியில் அவதரித்த சூரியன் 

நான்காம் முறையாக மணிமுடிசூடக் காத்திருக்கும் நாயகன்

அப்பழுக்கற்ற உன்னதமான தலைவர்

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்

திரு. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களை 

வருக வருக என வரவேற்பதில் 

எமது பள்ளி பெருமை கொள்கிறது.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

Annual day - model

 


அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம் 

ஆண்டு விழா 2024-2025

நாள்:14-02-2025

தமிழ்த்தாய் வாழ்த்து 

வரவேற்புரை

வெயிலிலும் குளிர்தரும் நிழலாய், 

வெள்ளிக்கிழமை வந்தது!

ஆர்வமும் ஆரவாரமும் பொங்க, 

ஆண்டுவிழா வந்தது!

மாணவர்கள் மகிழ்ச்சி கொள்ள, 

மதியவேளை வந்தது!

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

ஆர்வத்தால் விளைந்த நடனமும் நாடகமும் இருக்கு.

அதைக் கண்டுமகிழக் கோடிக்கண்கள் வேண்டும் நமக்கு. 

வேண்டாத செய்கைகள் இருந்தால் இப்போதே விலக்கு.

வெற்றிமேடை ஒன்று காத்திருக்கு உனக்கு.

வீணில் உண்டு நீ தயங்கி நிற்பது எதற்கு?

_________________________________________________________________


கனியிடையே ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும், 

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்

பாகிடை ஏறிய சுவையும்;

நனிபசு பொழியும் பாலும் - தென்னை 

நல்கிய குளிரிள நீரும், 

இனியன என்பேன் எனினும் - தமிழை 

என்னுயிர் என்பேன் கண்டீர் ! - என்ற பாரதியின் வரிகளில் தமிழன்னையை வணங்கி, வரவேற்புரையைத் துவங்குகிறேன்.

_________________________________________________________________________

தலைமை ஆசிரியருக்கு...

தன்முனைப்புடன் 

தான்தொடங்கிச் செயலாற்றும் 

தலைமைப் பண்பாளர்!

தனித்துவமான செயல்வீரர்!

தன்னிகரற்ற நிர்வாகி!

இருளை விலக்கும் ஒளிச்சுடர் !

இன்றைய விழாவின்நாயகர்!

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே! வருக! வருக!

_________________________________________________________________________




சிறப்பு விருந்தினர் திரு ச. ராஜகுமார் வட்டாட்சியர் அவர்களுக்கு...

ஊருணி நீராய்

ஊர்நடுவே பழுத்த மரமாய்

மருந்து மரமாய் 

ஒப்புரவுநெறி போற்றி,

நுண்மான் நுழைபுலம் கண்டு,

அருவினை தன்னை, 

கருவியால் முடிக்கும், 

சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களே! 

வருக! வருக! என வரவேற்கிறோம்.

________________________________________________________________________

சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் டாக்டர். சேகர் அவர்களுக்கு....

பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் 

மக்கள் யாக்கை இது என உணர்ந்து 

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன் -

என்று நல்ல அறத்தையே விரும்பி செயலாற்றி வருகின்ற சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் டாக்டர். சேகர் அவர்களே! வருக வருக என வரவேற்கிறோம்.

_________________________________________________________________________

சிறப்பு விருந்தினர் திரு. ஜான் எலிசா தேவகுமார் அவர்களுக்கு...

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு 

உரிமை உடைத்து இவ்வுலகு- என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழும் சிறப்பு விருந்தினர் AAA கல்லூரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் திரு. ஜான் எலிசா தேவகுமார் M.TECH அவர்களே! வருக வருக என வரவேற்கிறோம்

_________________________________________________________________________

ஆசிரியர் பெருமக்களுக்கு...

வழுவா நெறிநின்று வழிகாட்டி

மனம்செலுத்திக் கற்பவர் 

வாழ்வில் ஒளியூட்டி 

மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் திசைகாட்டி 

மாநிலம் வாழ்வுற மதியூட்டி

மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 

பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

_________________________________________________________________________





மாணவன் யஸ்வந்தாமனுக்கு...

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் பெருங்கடலும் 

அகிலை ஈன்றதால் அடர்ந்தகாடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

மாணவர் யஷ்வந்தாமனைப் பெற்றதால் இப்பள்ளியும் பெருமையடைகிறது. 

மாணவர் யஷ்வந்தாமனை வருக வருக என வரவேற்கிறோம்!

_________________________________________________________________________

மாணவச் செல்வங்களுக்கு...

பெரும் கனவுகளைச் சுமந்து 

புதிய பாதையை வகுத்து 

புதிய ரத்தத்தைப் பாய்ச்சி

புதிய பாரதத்தை படைக்க 

புதிய நடைபோட்டு வந்திருக்கும் 

சிறகுகள் இல்லாத பறவைகளே

காட்டில் வாழாத சிங்கங்களே

மண்ணில் புதையாத தங்கங்களே

எனதருமை மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்! 

_____________________________________________________________________

சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தல்....

சிறப்பு விருந்தினர், விருதுநகர் வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வர்.

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் திரு.ஜான் எலிசா தேவகுமார் அவர்களுக்கு நம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

_________________________________________________________________________

ஆண்டறிக்கை சமர்ப்பிக்கும் தலைமை ஆசிரியர் அவர்களை வரவேற்றல்...

காலங்கள் நில்லாது

கடமைகள் தவறாது

காரியம் சிதறாது

கடந்து வந்த பாதைகள்

அவற்றிலோ சில தடைகள்

இருப்பினும் சில சாதனைகள்...

நடுநிலை தவறாத

நிதிநிலை அறிக்கை போல்

ஆண்டறிக்கை சமர்ப்பிக்க 

பெருமைமிகு தலைமை ஆசிரியர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்!

_________________________________________________________________________

ஆண்டறிக்கை சமர்ப்பிக்கும் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுதல்....

ஆண்டறிக்கை 

நமது பள்ளியின் வெள்ளை அறிக்கை 

நமது பங்களிப்பை

நமக்கு உணர்த்தும் அறிக்கை 

நமது இலக்கின் அறிக்கை ...

நமது பள்ளிவளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் அறிக்கை...

அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

________________________________________________________________________

வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்களைச் சிறப்புரை வழங்க வரவேற்றல்

அமிர்தம் வேண்டிப் 

பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்!

அடைக்கலம் வேண்டிக் 

கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்!

அருந்தமிழோங்கச் 

சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்!

அதுபோல,

சிறப்புரை வேண்டி 

ஆவலாய்க் காத்திருக்கும் எம் பள்ளிக்குச் சிறப்புரை வழங்க வருமாறு சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_________________________________________________________________________

வட்டாட்சியர் திரு. ச.ராஜகுமார் அவர்கள் சிறப்புரை வழங்கியமைக்கு நன்றி கூறல்...

சிந்தனையைச் செறிவூட்டி

செயல்களைச் சீர்தூக்கி

தெவிட்டாத தேன்புகட்டி 

கருத்துடனே உரையாற்றி

விருப்புடனே சிறப்புச் சேர்த்த சிறப்பு விருந்தினர் திரு. ச. ராஜகுமார், வட்டாட்சியர், விருதுநகர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்!!!

_________________________________________________________________________

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களை சிறப்புரை வழங்க வரவேற்றல்...

படகு என்றால் துடுப்பு வேண்டும் 

பறவை என்றால் சிறகு வேண்டும் 

புன்செய் என்றால் மழை வேண்டும் 

பூக்கள் என்றால் நறுமணம் வேண்டும் 

விடுதலை என்றால் போராட்டம் வேண்டும் 

விளக்கு என்றால் தூண்டுகோல் வேண்டும் 

அதுபோல மாணவர்கள் என்றால் வழிகாட்டி வேண்டும்

அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் 

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களை சிறப்புரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_______________________________________________________________________

சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்கள் சிறப்புரை வழங்கியமைக்கு நன்றி கூறல்...

பாலும் தேனும் கலந்து

நற்கருப்பஞ்சாற்றிலே விழுந்து

மா பலா வாழை என்னும் 

முதிர்ந்த முக்கனிகளைச் சேர்த்து 

முத்தான கருத்துக்களை 

மூத்தோர்தம் வாழ்த்துக்களை

வழங்கிய சிறப்பு விருந்தினர், AAA கல்லூரியின் முதல்வர், பேராசிரியர், டாக்டர்.சேகர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________________________________


அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைத்தல்..

நுட்பமான சிந்தனையாளர் 

திட்பமான கொள்கையாளர் 

கூர்த்த அறிவாளர்

தேர்ந்த செயல்வீரர்

மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களை வாழ்த்துரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


வாழ்த்துரை 

அருந்தமிழ்ச் சொல்லே

ஆரொழுகும் பேரணங்கே

அருந்தமிழ்ப் புலவர்க்கு அட்சய பாத்திரம் நீ

ஆய்வியல் மாணவர்க்கு அறநெறி சூத்திரம் நீ

உன் புகழைப் பாடும் நாவெல்லாம் இனிக்கும்

உன் புகழைப் பேசும் வாயெல்லாம் மணக்கும் 

உன் புகழைப் பாடும் நாடெல்லாம் செழிக்கும் 

என்றுமுள தென் தமிழை வணங்கி

வாழ்த்துகிறேன் சற்றுத் தயங்கி...

ஏன் தெரியுமா? ...

அது ஒரு காடு. 

'சோ'வென்று மழை பொழிந்து கொண்டிருந்தது.

அப்போது குரங்கு ஒன்று மழையில் நனைந்து கொண்டிருந்தது. 

அதைக் கண்ட தூக்கணாங்குருவி, குரங்கிடம் போய், என்னைப்போல் வீடு கட்டிக் கொண்டால், மழையில் நனையாமல் இருக்கலாம் அல்லவா? என்று புத்திமதி சொன்னது.

இதைக் கேட்ட குரங்கிற்கு கோபம் வந்தது. விறுவிறு என்று மரத்தில் ஏறி தூக்கணாங்குருவியின் கூட்டை பிரித்து எறிந்தது. 

இன்றைய இளைஞர்களிடம் நல்லதை கூறுவதற்கே தயங்க வேண்டி இருக்கிறது. 


வேகமாக ஓடுது பார் உலகம் 

ஆங்காங்கே வெடிக்குது பார் கலகம் 


சீழ்ப் பிடித்த சமுதாயத்திற்கு

சிகிச்சை அளிப்பது யார்?

அன்றாடம் இங்கு நடந்தேறும்

அவலங்களைப் பார்.


காலில்தானே காயம் என்று 

கை இருந்துவிட்டால் காயம்

உயிருக்கே உலை ஆகும்.


ஒருவரைத் தாழ்த்தி விட்டு 

இன்னொருவர் உயர்ந்துவிட முடியாது.

இன்னொருவர் இருந்த அதே இடத்தில்தான் இருப்பார். 

வேற்றுமைகளை விலக்கு.

வேண்டாததை ஒதுக்கு.


உன்னை நினைத்துப் பார் 

அடிப்படையில் நீ ஓர் மாணவன் 

ஓர் இளைஞன் 

வளரும் பருவத்தில் வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவன். 

நீ கற்ற திறன்களை உன் சந்ததிக்கு மறக்காமல் கொடுக்க வேண்டியவன். 

நீ பசுவாக இருந்திருந்தால் பால் தருவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ காளையாக இருந்திருந்தால் வயலில் உழுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ குதிரையாக இருந்திருந்தால் ஓடுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ கழுதையாக இருந்திருந்தால் சுமப்பது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ மனிதனாக பிறந்து விட்டாய். 

மட்டற்ற மகிழ்ச்சி கொள்.

உன் கடமைகள் விசாலமானது. உணர்ந்து கொள்.

உன் பார்வையும் விசாலமாகட்டும். நலம் கிட்டும்.


எதன் மீதும் விருப்பு வெறுப்பின்றி

தராசு போல

நடுநிலையோடு சிந்தித்துப் பார். 


ஒரு பக்கச் சார்பைக் கைவிடு.

உன்னை ஆட்டுவிப்பார் கையில் பொம்மையாக இருக்காதே!


உனக்கு எல்லோரையும் தெரியும். ஆனால் 

உனக்கு உன்னைப் பற்றி மட்டும் எதுவுமே தெரியாது.

உனக்கு எல்லாமே தெரியும் 

ஆனால் 

உனக்கு நல்ல நண்பனை மட்டும் தேர்ந்தெடுக்கவே தெரியாது.


உனக்கு கெடுதல் நினைப்பவருக்கு எல்லாம் நன்மை செய்வாய்.

உனக்கு நன்மை செய்பவருக்கு மட்டும் கெடுதல் செய்வாய்.


உன் இளமை உன் மடமைக்கு தீனி போடுவதை அனுமதிக்கலாமோ?. 

ஏனோதானோ என்று வாழ்வைக் கழிக்கலாமோ?


எதற்கும் நீ கட்டுப்பட மாட்டாய்?

உனக்கு எல்லாமே கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பாய்.


கட்டுப்படுத்தப்பட்ட நெருப்புதான் சமைக்க உதவும். 

அவிழ்த்து விடப்பட்ட நெருப்பு நாட்டையே அழிக்கும். 

உண்மையை உணரும்வரை நீயும் நெருப்பு தான். 

உன்னை எவனோ பற்ற வைப்பான். பற்றி எரிவது நீயும் உன் குடும்பமும் தான். விழிப்புணர்வு கொள்.


படைக்கு தளபதி ஆவதற்கு முன் ஒருவன் படைவீரனாக இருக்க வேண்டும். 

தலைவன் ஆவதற்கு முன் ஒருவன் தொண்டனாக இருக்க வேண்டும். 


கடமையை செய்யாத ஒருவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. கண்டுகொள்.

கீழ்படியாதவனுக்கு கட்டளையிட உரிமை இல்லை. புரிந்துகொள்.


கீழ்படிய கற்றுக்கொள். 

நல்ல நண்பனைச் சேர்த்துக்கொள். 

அந்த நண்பன் நல்ல புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது.


நண்பன் என்பவன் உனக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும். 

நடப்பது உனது கால்களாக இருக்கட்டும்.


நேர்மறை எண்ணத்தை வளர்த்துக்கொள் 

நேர்மையை என்றும் துணையாகக் கொள்.


அழுக்கைத் தேக்கி வைக்கும் சல்லடையாக இராதே!

இனிய இசையைத் தேக்கி வைக்கும் புல்லாங்குழலாய் இரு.


அழுத்தமாகப் பேசு. திருத்தமாக எழுது.

நாளைய வரலாறு உனது. இதுவே எனது வாழ்த்து என்று கருது.

வாழ்த்துரை வழங்கிய

அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு 

தராசின் நடுமுள்ளாய் நின்று

தாய்மை அன்போடு எண்ணி

குறைகளைச் சுட்டி 

நிறைகளைக் காட்டி

நிறைவாக நம்பிக்கை ஊட்டி

வாழ்த்துரை வழங்கிய

அறிவியல் ஆசிரியர் திரு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள்...

________________________________________________________________________

சிறப்புரை வழங்கும் மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களை வரவேற்றல்...

இவள் முயற்சிகள் தவறியதுண்டு. 

ஆனால் 

இவள் முயற்சிக்கத் தவறியதில்லை...

ஊக்கத்திற்கு இவள் வித்து 

ஆழ்கடலில் விளைந்த முத்து -இவள்

நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து.

ஆம். மாணவி ஜெ. மிதுனா ஸ்ரீ நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து. 

மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களைப் பேச வருமாறு மேடைக்கு அழைக்கிறோம்.

சிறப்புரை வழங்கிய மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றி கூறல்

பத்தாயிரம் பஞ்ச்சுகளைப் பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.

ஒரே ஒரு பஞ்ச்சை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சுவேன் என்கிறார் புரூஸ் லீ. 

பயிற்சிக்கு அப்படி ஒரு பலம்.

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனை கண்டு அஞ்சாமல் இருக்க முடியுமா? 

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தால் நாம் வெல்லாமல் இருக்க முடியுமா? 

தங்கத்தாமரைப் பெண் மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

________________________________________________________________________

பரிசளிப்பு விழா 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் நிகழ்வு இது.

முதலாவதாக,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர் எம். யஷ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று அரசுப்பள்ளிகள் அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, நம் பள்ளிக்கு பெருமைதேடித் தந்துள்ளார். மேலும் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். "தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்ந்த மாணவர் யஸ்வந்தாமன் அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.


அடுத்ததாக, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மாணவி பி.சர்மிளா பாண்டி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 500க்கு 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார் மாணவி எஸ்.சோபியா. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 544 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவி எஸ்.ஹேமலதா. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு 534 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர் எஸ்.கருப்பசாமி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு 513 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார் மாணவர் ஏ.அரிச்செல்வம். அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.


கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு 

கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற ஐந்து மாணவர்களுக்கு தலா ரூபாய் 2000 பரிசு வழங்கிப்பாராட்டுகிறார் கணித ஆசிரியர் திரு பி.சுப்பிரமணியன் அவர்கள்.

கணிதப்பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எஸ்.பிரியதர்ஷினி, பி.சர்மிளா பாண்டி, எஸ்.விஜயசத்தியா, என்.ரிஷிகுமரன், எம்.பிரபு ஆகியோரை மேடைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறோம்.






அரையாண்டுத் தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு


ஆறாம் வகுப்பு அ பிரிவு

ஆறாம் வகுப்பு ஆ பிரிவு

ஏழாம் வகுப்பு அ பிரிவு

ஏழாம் வகுப்பு ஆ பிரிவு 

ஏழாம் வகுப்பு இ பிரிவு

எட்டாம் வகுப்பு அ பிரிவு

எட்டாம் வகுப்பு ஆ பிரிவு 

எட்டாம் வகுப்பு இ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு

பத்தாம் வகுப்பு அ பிரிவு

பத்தாம் வகுப்பு ஆ பிரிவு

பத்தாம் வகுப்பு இ பிரிவு

பதினோராம் வகுப்பு A பிரிவு

பதினோராம் வகுப்பு B பிரிவு

பதினோராம் வகுப்பு C பிரிவு

பதினோராம் வகுப்பு D பிரிவு

பதினோராம் வகுப்பு E பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு A பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு B பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு C பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு D பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு E பிரிவு

_________________________________________________________________________

நன்றியுரை வழங்க வரும் தாவரவியல் ஆசிரியரை வரவேற்றல்...

அடிக்கரும்பே இனிக்கும் 

முதிர்கனியே சுவைக்கும்

நாடகத்தின் இறுதியிலே உச்சநிலை இருக்கும் 

இந்தநாள் என்றும் நினைவிலே தங்கியிருக்கும்.

நன்றியுரை வழங்க வருமாறு தாவரவியல் ஆசிரியர் திரு.ஆனந்த கேசவன் அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நன்றி உரை வழங்கிய தாவரவியல் ஆசிரியருக்கு நன்றி கூறுதல்

அரச மரத்திற்கு பெரிய கிளைகள் பலம் 

ஆலமரத்திற்கு நீண்ட விழுதுகள் பலம் 

ஆளும் அரசுக்கு அஷ்டதிக்கஜங்கள் பலம்

இப்பள்ளிக்கு இங்குள்ளோர் ஒவ்வொருவரும் பலம்.

நன்றியுரை வழங்கிய தாவரவியல் ஆசிரியர் திரு.ஆனந்த கேசவன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________________________________


கலை நிகழ்ச்சிகள்:

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.

"உண்மை ஒளி" நாடகக் குழுவினரை வரவேற்றல்

குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை...

பழம் தனக்காக இனிப்பதில்லை...

மழை தனக்காகப் பெய்வதில்லை...

மரம் செடி கொடி எல்லாம் தனக்காகக் காய்ப்பதில்லை...

எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்...

மனிதம் நிறைந்த கதை ஒன்றை நாடகமாக நடித்துக் காட்ட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள். 

நாடகக் குழுவினருக்கு நன்றி பாராட்டுதல்

உண்மை ஒளி...

நம் இதயத்தில் உள்ளொளி...

மனிதத்தை விதைத்த ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

________________________________________________________________________

நடன நிகழ்ச்சிகள் 

ஆறாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல்...

சலசலக்கும் நீரோடை

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று 

புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி 

இங்கு உங்கள் முன்னே பட்டாம்பூச்சிகளாய் ஆறாம் வகுப்பு மாணவிகள்...

ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல்...

மான் போலத் துள்ளி 

மயில்போல நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...

ஆறாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல் 

அன்பைக் கடன் கொடு. அது அதிக வட்டியுடன் திரும்பி வரும் என்பார்கள். அன்பு நிறைந்த ஆறாம் வகுப்பு மாணவர்களை நடனமாட வருமாறு அன்போடு அழைக்கிறோம்.

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

முதுகுக்குப் பின்னால் செய்ய வேண்டிய ஒரே காரியம், அது முதுகைத் தட்டிக் கொடுப்பதாக இருக்கட்டும் என்பார்கள். அழகாக நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுகள்.


ஏழாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

மண்ணில் விளைந்த பொன்னாய்

மலையிடைப் பிறந்த மணியாய்

கடலில் விளைந்த முத்தாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

அழகுமிகு ஒயிலாய் நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள்...

ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

குலுக்கென்று சிரித்த முல்லை 

மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சி கொண்டேனே -என்ற பாரதிதாசனின் 'சிரித்த முல்லை' கவிதையை நினைவூட்டும் ஏழாம் வகுப்பு மாணவிகளின் நடனத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

ஏழாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல்

உற்சாகத்துடன் வேலையைத் தொடங்கு. பாதி வேலை உடனே முடியும் என்பார்கள். உற்சாகத்தோடு நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள்.

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல்

கடவுள் நூலைத்தான் கொடுப்பார். மனிதன் தான் ஆடையை நெய்ய வேண்டும் என்பார்கள். கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சிறப்பாக நடனமாடிய ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுகள்.


எட்டாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - நல்ல

எண்ணங்களில்தான் இருக்கிறது.

வசந்தத்தைக் கொண்டாட

வருகிறார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள்.



எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

மின்னல் ஒளியே விலைமதியா ரத்தினமே 

கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாரே -போல் நடனமாடிய எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

எட்டாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல்

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை 

காலம் சோம்பேறியை மதிப்பதில்லை. சோம்பல் இன்றி நடனமாட வருகைதரும் எட்டாம்வகுப்பு மாணவர்களை வரவேற்கிறோம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

ஒழுக்கத்தை விடச் சிறந்த உடை உலகத்தில் இல்லை என்பார்கள். 

ஒழுக்கமுள்ள எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.


ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை வரவேற்றல் 

கடிக்கும் போதுதான் கரும்புகூட இனிக்கும் 

உழைக்கும்போதுதான் வியர்வைகூட மணக்கும்.

படிக்கும் போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவிகளை நடனமாட அழைக்கிறோம்...

ஒன்பதாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றி கூறல் 

பரந்த உலகம்...

அதைத் தாண்டியும்

நிறைந்த வெளி...

பேரண்டம் தாண்டியும்

எங்கும் இல்லை தடுக்கும் சுவர்...

எவர் உண்டு இங்கு உனக்கு நிகர்?

சிறப்பாக நடனமாடிய ஒன்பதாம் வகு

ப்பு மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்...

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை வரவேற்றல் 

ரோஜா செடியில் முள் இருக்கிறதே என்று முறையிட வேண்டாம். முள் செடியில் ரோஜா இருக்கிறது என்று மகிழ வேண்டும். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நடனமாட வருமாறு அன்புடன் அழைக்கிறோம். 

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நன்றி கூறல் 

சுயமாக சிந்திக்காத மனிதன் ஒரு அடிமை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டுக்கள்.


நாட்டுப் பண் சேர்ந்து பாடுதல்


அனைவரும் கலைந்து செல்லுதல்





புதன், 12 பிப்ரவரி, 2025

ஆண்டுவிழா2025

 ஆண்டு விழா வரவேற்புரை

வெயிலிலும் குளிர்தரும் நிழலாய், 

வெள்ளிக்கிழமை வந்தது!

ஆர்வமும் ஆரவாரமும் பொங்க, 

ஆண்டுவிழா வந்தது!

மாணவர்கள் மகிழ்ச்சி கொள்ள, 

மதியவேளை வந்தது!

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

ஆர்வத்தால் விளைந்த நடனமும் நாடகமும் இருக்கு.

அதைக் கண்டுமகிழக் கோடிக்கண்கள் வேண்டும் நமக்கு. 

வேண்டாத செய்கைகள் இருந்தால் இப்போதே விலக்கு.

வெற்றிமேடை ஒன்று காத்திருக்கு உனக்கு.

வீணில் உண்டு நீ தயங்கி நிற்பது எதற்கு?

____________________________________

தன்முனைப்புடன் 

தான்தொடங்கிச் செயலாற்றும் 

தலைமைப் பண்பாளர்!

தனித்துவமான செயல்வீரர்!

தன்னிகரற்ற நிர்வாகி!

இருளை விலக்கும் ஒளிச்சுடர் !

இன்றைய விழாவின்நாயகர்!

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே! வருக! வருக!

_____________________________________

ஊருணி நீராய்

ஊர்நடுவே பழுத்த மரமாய்

மருந்து மரமாய் 

ஒப்புரவுநெறி போற்றி,

நுண்மான் நுழைபுலம் கண்டு,

அருவினை தன்னை, 

கருவியால் முடிக்கும், 

சிறப்பு விருந்தினர் அவர்களே! 

வருக! வருக!

_____________________________________

வழுவா நெறிநின்று வழிகாட்டி

மனம்செலுத்திக் கற்பவர் 

வாழ்வில் ஒளியூட்டி 

மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் திசைகாட்டி 

மாநிலம் வாழ்வுற மதியூட்டி

மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 

பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் கடலும் 

அகிலை ஈன்றதால் காடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

மாணவர் யஷ்வந்தாமனைப் பெற்றதால் இப்பள்ளியும் பெருமையடைகிறது. மாணவர் யஷ்வந்தாமனை வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

பெரும் கனவுகளைச் சுமந்து 

புதிய பாதையை வகுத்து 

புதிய ரத்தத்தைப் பாய்ச்சி

புதிய பாரதத்தை படைக்க 

புதிய நடைபோட்டு வந்திருக்கும் 

சிறகுகள் இல்லாத பறவைகளே

காட்டில் வாழாத சிங்கங்களே

மண்ணில் புதையாத தங்கங்களே

எனதருமை மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்! 

_____________________________________

ஆண்டறிக்கை 

காலங்கள் நில்லாது

கடமைகள் தவறாது

காரியம் சிதறாது

கடந்து வந்த பாதைகள்

அவற்றிலோ சில தடைகள்

இருப்பினும் சில சாதனைகள்...

நடுநிலை தவறாத

நிதிநிலை அறிக்கை போல்

ஆண்டறிக்கை சமர்ப்பிக்க 

பெருமைமிகு தலைமை ஆசிரியர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்!

---------------------------------------------------

ஆண்டறிக்கை 

நமது பள்ளியின் வெள்ளை அறிக்கை 

நமது பங்களிப்பை

நமக்கு உணர்த்தும் அறிக்கை 

நமது இலக்கின் அறிக்கை ...

நமது பள்ளிவளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் அறிக்கை...

அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

---------------------------------------------------

சிறப்புரை

அமிர்தம் வேண்டிப் 

பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்!

அடைக்கலம் வேண்டிக் 

கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்!

அருந்தமிழோங்கச் 

சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்!

அதுபோல,

சிறப்புரை வேண்டி 

ஆவலாய்க் காத்திருக்கும் எம் பள்ளிக்குச் சிறப்புரை வழங்க வருமாறு சிறப்பு விருந்தினர் __________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

சிந்தனையைச் செறிவூட்டி

செயல்களைச் சீர்தூக்கி

தெவிட்டாத தேன்புகட்டி 

கருத்துடனே உரையாற்றி

விருப்புடனே சிறப்புச் சேர்த்த சிறப்பு விருந்தினர்_______________ அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்!!!

_____________________________________

வாழ்த்துரை

படகு என்றால் துடுப்பு வேண்டும் 

பறவை என்றால் சிறகு வேண்டும் 

புன்செய் என்றால் மழை வேண்டும் 

பூக்கள் என்றால் நறுமணம் வேண்டும் 

விடுதலை என்றால் போராட்டம் வேண்டும் 

விளக்கு என்றால் தூண்டுகோல் வேண்டும் 

அதுபோல மாணவர்கள் என்றால் வழிகாட்டி வேண்டும்

அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் 

வாழ்த்துரை வழங்க வருமாறு___________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பாலும் தேனும் கலந்து

நற்கருப்பஞ்சாற்றிலே விழுந்து

மா பலா வாழை என்னும் 

முதிர்ந்த முக்கனிகளைச் சேர்த்து 

முத்தான கருத்துக்களை 

மூத்தோர்தம் வாழ்த்துக்களை

வழங்கிய___________அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்...

________________________________

பரிசளிப்பு விழா 

கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் நிகழ்வு இது.

முதலாவதாக,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் எம். யஷ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று நம் பள்ளிக்கு பெருமைதேடித் தந்துள்ளார். சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மாணவி பி.சர்மிளா பாண்டி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 

நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முதலிடம் பிடித்தவர்களைப் பெருமைப்படுத்தும் நிகழ்வு.

ஆறாம் வகுப்பு அ பிரிவு_________

ஆறாம் வகுப்பு ஆ பிரிவு_________

ஏழாம் வகுப்பு அ பிரிவு__________

ஏழாம் வகுப்பு ஆ பிரிவு _________

ஏழாம் வகுப்பு இ பிரிவு__________

எட்டாம் வகுப்பு அ பிரிவு_________

எட்டாம் வகுப்பு ஆ பிரிவு _______

எட்டாம் வகுப்பு இ பிரிவு________

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு_____

பத்தாம் வகுப்பு அ பிரிவு_______

பத்தாம் வகுப்பு ஆ பிரிவு ______

பத்தாம் வகுப்பு இ பிரிவு________

பதினோராம் வகுப்பு அ பிரிவு___

பதினோராம் வகுப்பு ஆ பிரிவு__

பதினோராம் வகுப்பு இ பிரிவு__

பதினோராம் வகுப்பு ஈ பிரிவு___

பதினோராம் வகுப்பு உ பிரிவு___

பன்னிரண்டாம் வகுப்பு அ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஆ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு இ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஈ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு உ பிரிவு

_______________________________

பேச்சு

இவள் முயற்சிகள் தவறியதுண்டு. 

ஆனால் 

இவள் முயற்சிக்கத் தவறியதில்லை...

ஊக்கத்திற்கு இவள் வித்து 

ஆழ்கடலில் விளைந்த முத்து -இவள்

நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து.

ஆம். மாணவி ஜெ. மிதுனா ஸ்ரீ நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து. 

மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களைப் பேச வருமாறு மேடைக்கு அழைக்கிறோம்.

__________________________________________________

பத்தாயிரம் பஞ்ச்சுகளைப் பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.

ஒரே ஒரு பஞ்ச்சை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சுவேன் என்கிறார் புரூஸ் லீ. 

பயிற்சிக்கு அப்படி ஒரு பலம்.

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனை கண்டு அஞ்சாமல் இருக்க முடியுமா? 

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தால் நாம் வெல்லாமல் இருக்க முடியுமா? 

தங்கத்தாமரைப் பெண் மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

நாடகம் 

குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை...

பழம் தனக்காக இனிப்பதில்லை...

மழை தனக்காகப் பெய்வதில்லை...

மரம் செடி கொடி எல்லாம் தனக்காகக் காய்ப்பதில்லை...

எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்...

மனிதம் நிறைந்த கதை ஒன்றை நாடகமாக நடித்துக் காட்ட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள். 

_____________________________________

உண்மை ஒளி...

நம் இதயத்தில் உள்ளொளி...

மனிதத்தை விதைத்த ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_____________________________________

நடனம்

சலசலக்கும் நீரோடை

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று 

புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி 

இங்கு உங்கள் முன்னே பட்டாம்பூச்சிகளாய் ஆறாம் வகுப்பு மாணவர்கள்...

மான் போலத் துள்ளி 

மயில்போல நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

மண்ணில் விளைந்த பொன்னாய்

மலையிடைப் பிறந்த மணியாய்

கடலில் விளைந்த முத்தாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

அழகுமிகு ஒயிலாய் நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள்...

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - நல்ல

எண்ணங்களில்தான் இருக்கிறது.

வசந்தத்தைக் கொண்டாட

வருகிறார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

_______________________________

கடிக்கும் போதுதான் கரும்புகூட இனிக்கும் 

உழைக்கும்போதுதான் வியர்வைகூட மணக்கும்.

படிக்கும் போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நடனமாட அழைக்கிறோம்...

பரந்த உலகம்...

அதைத் தாண்டியும்

நிறைந்த வெளி...

பேரண்டம் தாண்டியும்

எங்கும் இல்லை தடுக்கும் சுவர்...

எவர் உண்டு இங்கு உனக்கு நிகர்?

சிறப்பாக நடனமாடிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

நன்றியுரை

அடிக்கரும்பே இனிக்கும் 

முதிர்கனியே சுவைக்கும்

நாடகத்தின் இறுதியிலே உச்சநிலை இருக்கும் 

இந்தநாள் என்றும் நினைவிலே தங்கியிருக்கும்.

நன்றியுரை வழங்க வருமாறு__________அவர்களை வரவேற்கிறோம்.

அரச மரத்திற்கு பெரிய கிளைகள் பலம் 

ஆலமரத்திற்கு நீண்ட விழுதுகள் பலம் 

ஆளும் அரசுக்கு அஷ்டதிக்கஜங்கள் பலம்

இப்பள்ளிக்கு இங்குள்ளோர் ஒவ்வொருவரும் பலம்.

நன்றியுரை வழங்கிய______அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________

வாழ்த்துரை

அருந்தமிழ்ச் சொல்லே

ஆரொழுகும் பேரணங்கே

அருந்தமிழ்ப் புலவர்க்கு அட்சய பாத்திரம் நீ

ஆய்வியல் மாணவர்க்கு அறநெறி சூத்திரம் நீ

உன் புகழைப் பாடும் நாவெல்லாம் இனிக்கும்

உன் புகழைப் பேசும் வாயெல்லாம் மணக்கும் 

உன் புகழைப் பாடும் நாடெல்லாம் செழிக்கும் 

என்றுமுள தென் தமிழை வணங்கி

வாழ்த்துகிறேன் சற்றுத் தயங்கி...

வேகமாக ஓடுது பார் உலகம் 

ஆங்காங்கே வெடிக்குது பார் கலகம் 

சீழ்ப் பிடித்த சமுதாயத்திற்கு

சிகிச்சை அளிப்பது யார்?

அன்றாடம் இங்கு நடந்தேறும்

அவலங்களைப் பார்.

காலில்தானே காயம் என்று 

கை இருந்துவிட்டால் காயம்

உயிருக்கே உலை ஆகும்.

ஒருவரைத் தாழ்த்தி விட்டு 

இன்னொருவர் உயர்ந்துவிட முடியாது.

இன்னொருவர் அதே உயரத்தில்தான் இருப்பார்.

உன்னை நினைத்துப் பார் 

அடிப்படையில் நீ ஓர் மாணவன் 

ஓர் இளைஞன் 

வளரும் பருவத்தில் வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவன். 

நீ கற்ற திறன்களை உன் சந்ததிக்கு மறக்காமல் கொடுக்க வேண்டியவன். 

நீ பசுவாக இருந்தால் பால் தருவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ காளையாக இருந்தால் வயலில் உழுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ குதிரையாக இருந்தால் ஓடுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ கழுதையாக இருந்தால் சுமப்பது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ மனிதனாக பிறந்து விட்டாய். 

மட்டற்ற மகிழ்ச்சி கொள்.

உன் கடமைகள் விசாலமானது. 

உன் பார்வை விசாலமாகட்டும். 

எதன் மீதும் விருப்பு வெறுப்பின்றி

தராசு போல

நடுநிலையோடு சிந்தித்துப் பார். 

ஒரு பக்கச் சார்பைக் கைவிடு.

உன்னை ஆட்டுவிப்பார் கையில் பொம்மையாக இருக்காதே!

உனக்கு எல்லோரையும் தெரியும். ஆனால் 

உனக்கு உன்னைப் பற்றி எதுவுமே தெரியாது.

உனக்கு எல்லாமே தெரியும் 

ஆனால் 

உனக்கு நல்ல நண்பனை மட்டும் தேர்ந்தெடுக்கவே தெரியாது.

உனக்கு கெடுதல் நினைப்பவருக்கு எல்லாம் நன்மை செய்வாய்.

உனக்கு நன்மை செய்பவருக்கு மட்டும் கெடுதல் செய்வாய்.

உன் இளமை உன் மடமைக்கு தீனி போடுகிறது. 

எதற்கும் கட்டுப்பட மாட்டாய்?

உனக்கு எல்லாமே கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பாய்.

கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பு சமைக்க உதவும். 

அவிழ்த்து விடப்பட்ட நெருப்பு நாட்டை அழிக்கும். 

உண்மையை உணரும்வரை நீயும் நெருப்பு தான். 

உன்னை எவனோ பற்ற வைப்பான். பற்றி எரிவது நீயும் உன் குடும்பமும் தான்.

படைக்கு தளபதி ஆவதற்கு முன் ஒருவன் படைவீரனாக இருக்க வேண்டும். தலைவன் ஆவதற்கு முன் ஒருவன் தொண்டனாக இருக்க வேண்டும். 

கடமையை செய்யாத ஒருவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

கீழ்படியாதவனுக்கு கட்டளையிட உரிமை இல்லை. 

கீழ்படிய கற்றுக்கொள். 

நல்ல நண்பனைச் சேர்த்துக்கொள். 

அந்த நண்பன் நல்ல புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது.

நண்பன் என்பவன் உனக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும். 

நடப்பது உனது கால்களாக இருக்கட்டும்.

அழுத்தமாகப் பேசு. திருத்தமாக எழுது.

நாளைய வரலாறு உனது. இதுவே எனது வாழ்த்து என்று கருது.

ஆண்டறிக்கை 2024-2025

 அரசு மேல்நிலைப்பள்ளி சங்கரலிங்கபுரம்

ஆண்டறிக்கை 2024-2025

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 

எழுமையும் ஏமாப்பு உடைத்து


இப்பள்ளி 1956ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பாரம்பரியமிக்க பள்ளி இது. பல சாதனையாளர்களை உருவாக்கிய பள்ளி இது. 

இப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட முன்னாள் தலைமை ஆசிரியர்களை வணங்கும் நேரமிது.


இப்பள்ளியில் தற்போது 587 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். 31 ஆசிரியர்கள், 2 பகுதிநேர ஆசிரியர்கள், 1 ஆய்வக உதவியாளர், 1 இளநிலை உதவியாளர், 1 பதிவறை எழுத்தர் ஆகியோருடன் செயல்பட்டு வருகிறது.


கடந்த 2023- 24ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பொதுத்தேர்வில் 12 ஆம் வகுப்பில்____சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவி எஸ்.ஹேமலதா 600க்கு 544 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். 

மாணவன் எஸ்.கருப்பசாமி 534 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் 

மாணவன் ஏ.அரிச்செல்வம் 513 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.


பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில்____சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 

மாணவர் எம்.யஸ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததோடு சமூக அறிவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை படைத்தார். 

மாணவி பி.ஷர்மிளா பாண்டி 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும் 

மாணவி எஸ்.சோபியா 474 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

கணிதப்பாடத்தில் மாணவர்கள் எஸ்.பிரியதர்ஷினி, பி.சர்மிளா பாண்டி, எஸ்.விஜயசத்தியா, என்.ரிஷிகுமரன், எம்.பிரபு ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்தனர்.


7.5% உள்இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தோர் விவரம்.

மாணவர் கே.கார்த்தீஸ்வரன் கோவை SNS கல்லூரியிலும், 

எல்.சஞ்ஜித் திண்டுக்கல் NPR கல்லூரியிலும், 

மாணவர்கள் எஸ்.கே.சூரியபிரகாஷ், ஏ.அரிச்செல்வம், எஸ்.ஹேமலதா, எம்.முத்துபிரியா ஆகியோர் மெப்கோ பொறியியல் கல்லூரியிலும் 

மாணவிகள் எஸ்.முத்துபிரியா, வி.வினோதினி ஆகியோர் AAA பொறியியல் கல்லூரியிலும் 

மாணவி எம்.நந்தீஸ்வரி கோவை குமரகுரு கல்லூரியிலும் 

மாணவி எஸ்.நிவேதா, ரத்னம் ஸ்கூல் ஆர்கிடெக்சர் கல்லூரியிலும் பயின்று வருகின்றனர்.


7th A மாணவி ஜெ.மிதுனா ஸ்ரீ மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசு பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்தார்.


அரசு புதிதாக நான்கு வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டித் தந்துள்ளது.


நன்கொடையாளர்கள் விவரம்: 

சமர்த்தனம் அறக்கட்டளை நம் பள்ளிக்குக் கழிவறைக் கட்டிடம் கட்டித் தந்துள்ளது.

1983-1985ஆம் ஆண்டுகளில் 12ஆம் படித்த முன்னாள் மாணவர்கள் நான்கு வகுப்பறைக் கட்டடத்தைச் செப்பனிட்டு வண்ணப்பூச்சு அடித்துத் தந்தனர்.

2004-2005 கல்வியாண்டில் படித்த முன்னாள் 12th B மாணவர்கள் அலுவலகக் கட்டடத்தைப் பழுதுநீக்கி, உள்பூச்சு அடித்துத் தந்தனர்.

1993-1999 ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் அலுவலகக் கட்டிடத்திற்கு வெளிப்பூச்சு அடித்துத் தந்தனர்.

2004-2005ஆம் ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் புத்தகங்களை அன்பளிப்பு செய்து நூலகக் கட்டடத்தைச் செப்பனிட்டுத் தந்தனர்.

அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


வாழ்வில் அணியாகவும் தாழ்வில் துணையாகவும் அமைவது கல்வி. வாழ்வின் சுவையாக அமைவது கல்வி. அனுபவப்புதையலாக அமைவது கல்வி. நம்மை அடையாளம் காட்டுவது கல்வி. அத்தகு கல்வியை நேசி; நாள்தோறும் புதியவற்றை வாசி; வாசித்தவை பற்றி யோசி; புதிய பொருண்மைகளைக் கூட்டு; நாளை உனது என்பதை நிலைநாட்டு.


மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 

என்னோற்றான் கொல்எனுஞ் சொல். - என்னும் வகையில் தந்தைக்கும்


ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் 

சான்றோன் எனக்கேட்ட தாய்- என்னும் வகையில் தாய்க்கும் பெருமை தேடி, பொருள் தேடி, அறம் நாடி, வாழ்வாங்கு வாழ்வீர் என வாழ்த்தி, ஆண்டறிக்கையை நிறைவு செய்கிறேன். நன்றி!

வியாழன், 2 ஜனவரி, 2025

சிறுவினா

சிறுவினா

1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்கள்:

தமிழன்னை, அழகு நிறைந்தவள்; 

செம்மொழியாக விளங்குபவள்;

பழமைக்கும் பழமையாய்த் தோன்றியவள்;

குமரிக்கண்டத்தில் நிலையான ஆட்சி செய்தவள்;

பாண்டிய மன்னனின் மகளாக விளங்குபவள்;

திருக்குறளின் பெரும் பெருமைக்கு உரியவள்;

பத்துப்பாட்டாக, எட்டுத்தொகையாக, பதினெண்கீழ்க்கணக்காக, நிலைத்த சிலப்பதிகாரமாக, அழகான மணிமேகலையாக விளங்குபள்.


2.'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.' 

இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

இளம் பயிர்வகை:

பாட்டி நெல்நாற்று நடவுசெய்தார்.

தாத்தா மாங்கன்று நட்டார்.

அப்பா தென்னம்பிள்ளை நட்டார்.

அம்மா வாழைக்குருத்து நட்டார்.

வயலில் சோளப்பைங்கூழ் வளர்ந்துள்ளது.


3.'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறிவோம், அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை. எல்லாம் எமக்குத் தெரியும். 

இக்கூற்றில் வண்ண எழுத்துக்களில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.

வினைமுற்றுகள்

தொழிற்பெயர்கள்


அறிந்தது

அறிதல்


அறியாதது

அறியாமை


புரிந்தது

புரிதல்


புரியாதது

புரியாமை


தெரிந்தது

தெரிதல்


தெரியாதது

தெரியாமை


பிறந்தது

பிறத்தல்


பிறவாதது

பிறவாமை



4.தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்கு.

பாடல்

தமிழுக்கு

கடலுக்கு


முத்தமிழ்

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்

முத்தினை அமிழ்ந்து எடுத்தல்


முச்சங்கம்

முதல், இடை, கடை ஆகிய முச்சங்கம்

மூன்று வகையான சங்குகள் தருதல்


மெத்த வணிகலன்

ஐம்பெரும் காப்பியங்கள்

மிகுதியான வணிகக்கப்பல்கள்


சங்கத்தவர் காக்க

சங்கப் பலகையிலிருந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தமை

நீரலையைத் தடுத்து நிறுத்தி, சங்கினைக் காத்தல்



5.உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்.... முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால்....உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

நீர் (தன் வரலாறு) -தலைப்புகள்:

அமிழ்தமாக நான்...

ஆற்றலாக நான்...

இலக்கியத்தில் நான்...

உருமாறும் நான்...

சடங்குகளில் நான்...

பல பெயர்களில் நான்...


6.சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

சோலைக்காற்று

நண்பா, எப்படி இருக்கிறாய்?


மின்விசிறிக்காற்று

நலமாக இருக்கிறேன் நண்பா. உழைத்துக் களைத்துவரும் மனிதர்களின் வியர்வையைப் போக்கி மகிழ்ச்சி தருகிறேன் நண்பா. நீ எப்படி இருக்கிறாய்?


சோலைக்காற்று

ஊரெல்லாம் சுற்றிவருகிறேன் நண்பா. மனிதர்கள் சுற்றுச்சூழலைச் மிகவும் மாசுபடுத்தி வருகிறார்கள். எனக்கே மூச்சுமுட்டுகிறது நண்பா!


மின்விசிறிக்காற்று

நாம் மட்டும் இல்லையென்றால், இங்கு யாருமே உயிருடன் வாழமுடியாது. இதனை மனிதர்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ?


சோலைக்காற்று

நம்மை விலைகொடுத்தும் வாங்க முடியாத ஒருகாலம் வரும் நண்பா. அப்போதுதான் இந்த மனிதர்களுக்குப் புத்தி வரும்!


மின்விசிறிக்காற்று

ஆமாம், நண்பா! மீண்டும் சந்திப்போம்! போய் வருகிறேன்.



7.தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும்வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள். 

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளை எழுதுக.

தொகைநிலைத் தொடர்கள்:

மல்லிகைப்பூ -இருபெயரொட்டுப் பண்புத்தொகை

பூங்கொடி-அன்மொழித்தொகை

ஆடுமாடுகள்-உம்மைத்தொகை

தண்ணீர்த்தொட்டி-இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை

குடிநீர்-வினைத்தொகை

சுவர்க்கடிகாரம்-ஏழாம் வேற்றுமைத்தொகை 



8.மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக.

குறிப்பு: இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர்- தேங்கிய குட்டையில் 'சளப் தளப்' என்று குதிக்கும் குழந்தைகள் -ஓடும் நீரில் காகிதக் கப்பல்.

மழை நின்றவுடன் புலப்படும் காட்சி 

இலைகளில் இருந்து 'சொட் சொட்' என்று நீர் சொட்டுகிறது.

உடலில் மெல்லிய குளிர் ஓடுகிறது.

தேங்கிய குட்டையில் 'சளப் தளப்' என்று குழந்தைகள் குதிக்கின்றனர்;

ஓடும்நீரில் காகிதக் கப்பல் விடுகின்றனர்.


9.கண்ணே கண்ணுறங்கு 

காலையில் நீயெழும்பு 

மாமழை பேய்கையிலே 

மாம்பூவே கண்ணுறங்கு 

பாடினேன் தாலாட்டு 

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு.-இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

தொடர் வகைகள்:

கண்ணே கண்ணுறங்கு! -விளித்தொடர் 

காலையில் நீயெழும்பு!- வேற்றுமைத்தொடர் 

மாமழை பெய்கையிலே- உரிச்சொற்றொடர் 

மாம்பூவே கண்ணுறங்கு! -விளித்தொடர் 

பாடினேன் தாலாட்டு! -வினைமுற்றுத் தொடர் 

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!- அடுக்குத்தொடர்


10."பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ"- வினவுவது ஏன்?

விருந்தோம்பல் -குறுந்தொகை:

இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, 

"பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ?"

என்று குறுந்தொகை அடிகள் பலப்படுத்துகின்றன. 


11.புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்க திண்டும் அமைத்தனர். 

திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காண முடிகிறது. 

இப்படியாகக் காலமாற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துக்களை எழுது.

விருந்தோம்பல் இன்றும்...

இன்று வீட்டுக்குத் திண்ணை வைத்துக் கட்டுவதுமில்லை; அறிமுகமில்லாத புதியவர்களை விருந்தினர்களாக ஏற்பதுவும் இல்லை.

வீட்டில் நடைபெற்ற விழாக்கள் திருமணக்கூடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டன. 

பண்பாட்டு மாற்றமாக இன்று சில இடங்களில் விருந்தினர்களை வரவேற்பதுமுதல் பந்தியில் உபசரித்து வழியனுப்பும் வரை 'திருமண ஏற்பாட்டாளர்'களே செய்யும் விருந்தோம்பல் நடைபெறுவதைக் காணமுடிகிறது.


12.கூத்தனைக் கூத்தன் ஆற்று ப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

கூத்தராற்றுப்படை: 

பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்;

இரவில் சேர்ந்து தங்குங்கள்; 

எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்;

சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்;

அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றுரை அடையுங்கள்.

அங்குள்ளவர்களிடம், "நன்னனின் கூத்தர்கள்" என்று சொல்லுங்கள்.

உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். 

அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச்சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.


13.வேலோடு நின்றான் இடுஎன்றது போலும் 

கோலோடு நின்றான் இரவு -குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

இக்குறளில் 'உவமையணி' பயின்று வந்துள்ளது.

அணி இலக்கணம்: உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்பட வருவது உவமையணி ஆகும்.

அணி விளக்கம்: 

உவமை: வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வது

உவமேயம்: ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது

உவம உருபு: போல 

இக்குறளில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்பட வந்துள்ளமையால், இஃது 'உவமையணி' ஆயிற்று.


14.கவிதையைத் தொடர்க.

தண்ணீர் நிறைந்த குளம் 

தவித்தபடி வெளிநீட்டும் கை 

கரையில் கைபேசி படமெடுத்தபடி

_______________________

_______________________

விடை:

தண்ணீர் நிறைந்த குளம் 

தவித்தபடி வெளிநீட்டும் கை 

கரையில் கைபேசி படமெடுத்தபடி

கண்ணோட்டம் இல்லாத காட்சி இது!

மனிதம் இல்லாதவன் மானிடன் அல்லன்!

பொய்மை வாழ்வை விடுத்து 

அன்பாய் வாழ்வோம்; அகிலம் ஆள்வோம்!


15."மாளாத காதல் நோயாளன் போல்" என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

மாளாத காதல் நோயாளன் போல்-உவமை சுட்டும் செய்தி:

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார். 

வித்துவக்கோட்டில் எழுந்தருளியிருக்கும் அன்னையே! 

அதுபோன்று நீ உனது விளையாட்டால் நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அடியவனாகிய நான் உன் அருளையை எப்பொழுதும் எதிர்பார்த்து வாழ்கின்றேன். 


16.இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக. 

ஆனாலும் முன்னேற்றமே!

உயிரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! 

அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. 

மனிதர்கள் செய்யும் வேலைகளான மொழிபெயர்ப்பு, இசையமைப்பு, மகிழ்ந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்ய கணினிக்கரங்கள் நீள்கின்றன! 

கட்டுரை எழுதும் மென்பொருள்கள், கவிதைபாடும் ரோபோக்கள், மனிதனால் இயலாத செயல்களைச் செய்யும் ரோபோக்கள், ஆள்கள் இல்லாமலே நடத்தப்படும் வணிகக்கடைகள் எனப் புதிதுபுதிதான வழிகளில் மனிதப் பணித்திறனை கூட்டுகின்றது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்.


17.மனிதர்களின் மூளையைப் போன்றது செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு 'எதிர்காலத்தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில்நுட்பம்:

வேலைவாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரப்போகிறது 

எதிர்காலத்தில் 'ரோபோ'விடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக அலுவலகம் செல்லும் பெற்றோர்களை நாம் பார்க்க போகிறோம். 

வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும் அவர்களுக்கு உற்ற தோழனாய்ப் பேச்சுப்கொடுத்தும் பேணும் ரோபோக்களை நாம் பார்க்கப்போகிறோம்! 

செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்களால் மனிதர் செய்ய இயலாத, அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களைச் செய்ய முடியும். மனித முயற்சியில் பேராபத்தை விளைவிக்கக்கூடிய செயல்களைச் செய்ய முடியும். 

புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு வழங்குகிறது. பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. 

விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதர் அளிக்கும் சேவைகளை ரோபோக்கள் அளிக்கும். 



18.நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது. தந்தை என்னிடம் "இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார். "இதோ சென்றுவிட்டேன்" என்றவாறே அங்குச்சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, "என்னடா விளையாட வேண்டுமா?" என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவளிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்" என்று கூறினேன். அவிழ்த்து விடப்பட்ட இலச்சுமி தொட்டியில் இருந்த நீரைக் குடித்தாள். 

இப்பத்தியில் உள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

வழுவமைதிகள்

தொடர்கள்


மரபு வழுவமைதி

வாழைத்தோப்பு

குட்டியுடன் நின்றிருந்த மாடு

இலட்சுமி கூப்பிடுகிறாள்


கால வழுவமைதி

இதோ சென்றுவிட்டேன்


திணை வழுவமைதி

அவனை அவிழ்த்து விட்டேன்.


இட வழுவமைதி

நீயும் இவனும் விளையாடுங்கள்



19.மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்:

பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த குலேச பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.

கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர், தாம் இயற்றிய கவிதையினை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் புலவரை அவமதித்தான். 

மனம் வருந்திய இடைக்காடனார், இறைவனிடம் முறையிட்டார். 

மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வடதிரு ஆலவாயில் சென்று தங்கினார். 

இதை அறிந்த மன்னன் தன்பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக்காடனாருக்குச் சிறப்புச் செய்தான். 

இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார் 


20.உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

கற்பதன் இன்றியமையாமை:

அருளினைப் பெருக்கி, அறிவைச் சீராக்கி, மயக்கம் அகற்றி, அறிவுக்குத் தெளிவு தந்து, உயிருக்கு அரிய துணையாய் இன்பம்சேர்ப்பது கல்வியே ஆகும். எனவே, அதைப்போற்றிக் கற்க வேண்டும். 

கற்றவர்வழி அரசுசெல்லும் என்கிறது சங்க இலக்கியம். தோண்டும் அளவு ஊறும் நீர்போலக் கற்கும் அளவு அறிவுசுரக்கும் என்கிறது திருக்குறள். பூக்களை நாடிச்சென்று தேன்பருகும் வண்டுகளைப் போல, நூல்களை நாடிச் சென்று அறிவுபெற வேண்டும்.

'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. இவ்வாறு கூறி கற்பதன் இன்றியமையாமையை எடுத்துரைப்பேன்.


21.ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு 

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிக் கேட்பியில் (Headphone)கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிக் கேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார். 

இப்பகுதியில் இருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

வினாக்கள்:

மொழிபெயர்ப்பு என்றால் என்ன? 

விளக்குவது என்றால் என்ன? 

ஐ.நா.அவையில் மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பார்?

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறதா?

ஐ.நா.அவையில் மொழிபெயர்ப்பாளரின் பணி யாது?


22.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 

இன்மை புகுத்தி விடும் 

இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்களின் வகையைச் சுட்டி விளக்குக.

இக்குறட்பாவில் 'ஆற்றுநீர்ப் பொருள்கோள்' அமைந்துள்ளது. 

ஆற்றுநீர்ப்பொருள்கோள்:

பாடல்:

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 

இன்மை புகுத்தி விடும்.

பொருள்:

முயற்சி செய்தால் ஒருவர்க்குச் செல்வம் பெருகும். முயற்சி இல்லாவிட்டால் அவருக்கு வறுமையே வந்து சேரும்.

விளக்கம்:

இக்குறட்பாவின் தொடக்கம்முதல் முடிவுவரை ஆற்றுநீரின் போக்கைப்போல நேராகவே பொருள் கொள்ளுமாறு அமைந்ததால் இது 'ஆற்றுநீர்ப் பொருள்கோள்' ஆகும்.


23.வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக. 

ஆடுக செங்கீரை! 

திருவடியில் அணிந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும்.

இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும் 

பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும் 

பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டுடன் வட்டவடிவான சுட்டி பதிந்தாடட்டும் 

கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குலைகளும் அசைந்தாடட்டும் 

உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளிமிக்க முத்துகளோடு ஆடட்டும் 

தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க! 

இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட செங்கீரை ஆடுக. 


24.நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம் பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.

இறுக்கி முடிச்சிட்டால் 

காம்புகளின் கழுத்து முறியும் 

தளரப் பிணைத்தால் 

மலர்கள் தரையில் நழுவும் 

வாசலில் மரணம் நிற்பதறிந்தும் 

வருந்தாமல் சிரிக்கும் 

இந்தந் பூவை 

எப்படித் தொடுக்க நான் 

-நவீன கவிதை

கையாலே பூவெடுத்தா -மாரிக்கு 

காம்பழுகிப் போகுமின்னு 

விரலாலே பூவெடுத்தா -மாரிக்கு 

வெம்பி விடுமென்று சொல்லி 

தங்கத் துரட்டி கொண்டு -மாரிக்கு 

தாங்கி மலரெடுத்தார் 


-நாட்டுப்புற பாடல்


விடை:

நவீன கவிதை

நாட்டுப்புறப் பாடல்


மலர் தொடுக்கும்போது, தளரப் பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்;

இறுக்கி முடிச்சிட்டால் காம்புகளின் கழுத்து முறியும்.

ஆதலால், மலரை நுட்பமாகத் தொடுக்க வேண்டும்.

மாரியம்மனுக்குக் கையாலே பூவெடுத்தால் காம்பழுகிப் போகும்; 

விரலாலே பூவெடுத்தா வெம்பி விடும். 

அதனால், அழுக்குப் படாமல் தங்கத் துரட்டிகொண்டு கவனமாக மலரெடுத்தார்.



25.'கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது. மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.'- காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக. 

இன்றளவும் தொடரும் திணைநிலைத் தொழில்கள்:

குறிஞ்சியில் தேனெடுத்தலும் கிழங்கு அதழ்தலும் இன்றளவும் தொடர்கின்றன.

முல்லையில் இன்றளவும் ஆநிரைமேய்த்தல் நடைபெறுகிறது. ஏறுதழுவுதல் மருதநிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளது.

மருதத்தில் நவீன கருவிகளுடன் வேளாண்மை நடைபெறுகிறது.

நெய்தலில் மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல் ஆகிய தொழில்களுடன் பெரிய அளவில் கடல்வணிகமும் தொடர்கிறது.

பாலையில் நடைபெற்றுவந்த வழிப்பறி, இன்று பல இடங்களிலும் பரவியுள்ளது.


26.தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.

செம்மொழிக் கலைஞர்:

மனோன்மணியம் சுந்தரனாரின் 'நீராரும் கடலுடுத்த' என்னும் பாடலை அரசு விழாக்கள் அனைத்திலும் தொடக்கப் பாடலாகப் பாடுவதற்கு வழிவகுத்தார். 

கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்ததோடு தமிழ் வளர்ச்சித்துறை எனப் புதிதாக ஒரு துறையை உருவாக்கி அதற்குத் தமிழறிஞர் ஒருவரையே அமைச்சராக்கி அழகு பார்த்தார். 

2010ஆம் ஆண்டு கோவையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கலைஞர், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியபோது தமிழின் பெருமிதங்களை விளக்கிச் 'செம்மொழியான தமிழ்மொழியாம்' எனத் தொடங்கும் பாடலையும் இயற்றினார். 


27.வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குக.

அமைச்சு:

தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சராவார்.

மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார்.

இயற்கையான நுண்ணறிவும் நூலறிவும் உடைய அமைச்சர்களுக்கு முன், எந்த நுட்பமான சூழ்ச்சிகள் நிற்க முடியும்? எந்தச் சூழ்ச்சியும் நிற்க இயலாது. 

ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும். 

மேற்கூறிய சிறந்த அமைச்சருக்குரிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துகின்றன. 


28.பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

பகை மாட்சி: 

குறள்:

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் 

என்பரியும் ஏதிலான் துப்பு 

பொருள்:

சுற்றத்தாரிடம் ஒருவர் அன்பு இல்லாமலும் பொருந்திய துணை இல்லாமலும், வலிமையில்லாமலும் இருந்தால் அவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்? அவரால் எதிர்கொள்ள இயலாது என்பதாம்.


29.'முதல்மழை விழுந்ததும்' என்னவெல்லாம் நிகழ்வதாகக் கு.ப.ரா. கவிபாடுகிறார்?

ஏர் புதிதா?

முதல்மழை விழுந்ததும் மேல்மண் பதமாகிவிட்டது.

வெள்ளி முளைத்திடுது. 

காளைகளை ஓட்டிக் கடுகிச்செல். 

மாட்டைத் தூண்டி, கொழுவை அமுத்து. 

மண்புரளும்; மழை பொழியும். 

நிலம் சிலிர்க்கும். பிறகு நாற்று நிமிரும்.

எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும். 

இவ்வாறு கு.ப.ராஜகோபாலன் கவி பாடுகிறார்.


30.அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான். அப்போர் நிகழ்வைபா புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

புறப்பொருள் வெண்பாமாலை:

அவந்தி நாட்டு மன்னன், மருதநாட்டு மன்னனுடன் போர்புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான். இது வஞ்சித்திணையாகும்.

வஞ்சித்திணை:

 மண் சொத்தாக மாறிய காலத்தில் மண்ணைக் கவர்தல் போராயிற்று. மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது வஞ்சித்திணையாகும்.


31."தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்:

இடம்: 

ம.பொ.சி. எழுதிய 'எனது போராட்டம்' என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

பொருள் விளக்கம்:

சென்னை மாகாணத்திலிருந்து பிரித்து ஆந்திரம் அமைவதற்காக ஏற்படுத்தப்பட்டிருந்த நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வேண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கள் நிலவின. 

இதையொட்டி மாநகராட்சியின் சிறப்புக்கூட்டம் ஒன்றை அப்போதைய மாநகரத்தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டி சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து, "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார். 


32."பகர்வனர் திரிதரு நகரவீதியும்; 

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்; 

தூசு துகிரும் ஆரமும் அகிலும்"

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது? 

ஆ) பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக. 

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக. 

ஈ) காருகர்- பொருள் தருக.

உ) இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப் பொருட்கள் யாவை?

விடை:

அ) இவ்வடிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் ஆகும்.

ஆ) மோனை:

பகர்வனர்

பட்டினும்

இ) எதுகை:

பட்டினும்

கட்டு

ஈ)காருகர்-நெய்பவர்

உ) இப்பாடலில் குறிப்பிடப்படும் நறுமணப்பொருட்கள்: சந்தனம், அகில்


33.பின்வரும் பத்தியைப் படித்து மையக்கருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவாக இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்து அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகு சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில்தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும் இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்கீர்த்திகளின் வமிச பரம்பரையை மிகவும் விரித்துக் கூறியுள்ளன.

மையக்கருத்து:

மெய்க்கீர்த்தி:

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. இது அரசனுடைய ஆட்சிக்காலம், போர்வெற்றி, வரலாறு, வாழ்த்துப்பகுதி, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவற்றை முறைப்படக் குறிப்பிடும். சோழர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் வழக்கம் தொடக்கத்தில் இல்லை. முதலாம் இராசராசனுடைய மெய்க்கீர்த்தி சுருக்கமாக உள்ளது. பின்வந்த மெய்க்கீர்த்திகள் வமிச பரம்பரையை விரிவாகக் கூறுகின்றன.


34.சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

இன்றைக்கும் தேவையான அறங்கள்

அரசியல் அறம் 

அறங்கூறவையம் 

போர் அறம் 

கொடை அறம் 

உதவி அறம் 

வாய்மை அறம் 


35.ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக. 

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்:

அகவல் ஓசை பெற்று வரும் 

ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.

ஆசிரியத்தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.

மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும். 

ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு. 


36.'சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு- சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

சுற்றுச்சூழல் பேணுதல் (உரைக்குறிப்பு)

சுற்றுச்சூழல் -வரையறை

சுற்றுச்சூழல் மாசுபாட்டின் வகைகள் 

நிலம் மாசுபடுதல்

நீர் மாசுபடுதல்

காற்று மாசுபடுதல்

ஒலி மாசுபடுதல்

ஒளி மாசுபடுதல்

அணுக்கதிர்வீச்சு மாசு 

சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் ஏற்படும் தீமைகள்

சுற்றுச்சூழல் மாசுபாட்டினைக் குறைப்பதற்கான வழிகள் 

சுற்றுச்சூழல் மாசுபாட்டினைத் தடுப்பதற்கான சட்டங்கள் 

நமது கடமை 


37.வாளித்தண்ணீர், சாயக்குவளை, கரந்தைத் துணி, கட்டைத் தூரிகை- இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.

ஞானம்:

சாளரத்தின் கதவுகள், சட்டம் ஆகியவற்றில் தெருப்புழுதி வந்தொட்டும்.

கரையான் மண்வீடு கட்டும். 

அன்று துடைத்தேன்; சாயம் அடித்தேன்; புதுக்கொக்கி பொருத்தினேன். 

காலக்கழுதை கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் சாளரத்தைச் சுத்தம் செய்யும் அறப்பணிகள் ஓய்வதில்லை; 

ஓய்ந்திடில் உலகமில்லை. 


38.'சித்தாளின் மனச்சுமைகள் 

செங்கற்கள் அறியாது"- இடஞ்சுட்டிப் பொருள் தருக.

சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது:

இடம்: நாகூர்ரூமி எழுதிய 'சித்தாளு' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளது.

பொருள்: அடுத்த வேளை உணவுக்காகச் சித்தாள் அலுக்காமல் கல் சுமக்கிறாள். அவள் செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும். அவளின் மனத்துயரங்களைச் செங்கற்கள் அறியாது.


39.ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் 'தர்க்கத்திற்கு அப்பால்' கதை மாந்தர் வாயிலாக விளக்குக.

தர்க்கத்திற்கு அப்பால்:

அவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது. 

அதைக் கொண்டாட விரும்பினார்.

கையில் இருந்த ஒரு ரூபாயில் ஊர் திரும்ப முக்கால் ரூபாய் ஒதுக்கினார். 

இரண்டு அணாவில் காபி அருந்தினார்.

இரண்டனாவைப் பிச்சையிட்டு மகிழ்ந்தார்.

தொடர்வண்டி நிலையத்தில் சொந்த கிராமத்தின் பெயரைச் சொல்லி டிக்கெட் கேட்டார்.

டிக்கெட் விலை ஓரணா கூடியிருந்தது.

பிச்சைப்பாத்திரத்தில் ஒளிவிடும் இரண்டணா என்னுடையது. அது எப்படி என்னுடையதாகும்? நான் கொடுத்துவிட்டேன்; அவன் வாழ்த்திவிட்டான்.

பிச்சைப்பாத்திரத்தில் ஓரணாவைப் போட்டுவிட்டு தான் தர்மம் புரிந்த இரண்டு அணாவை எடுத்துக் கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் திருட்டு அல்லவா? எப்படியும் என்சார்பாக ஓரணா தர்மமாகக் கிடைக்கும் அல்லவா?

இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிடம் ஆகவில்லை... அதற்குள் ஓரணாவுக்கு யாசிக்கும்நிலை வந்ததை எண்ணி அவரின் மனம் தர்க்கம் புரிந்தது.


40.எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்? 

எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறியவை:

நான் உயிர் பிழைக்கும் வழி அறியேன்; 

நினைந்து கண்ட அறிவினுக்குப் பொருந்தியவாறு உறுப்புகள் இயங்குதல் இல்லாத இந்த உடலின் தன்மையை அறியேன்; 

உடலுக்கு வேண்டிய உணவைத் தேடிக் கொணரும் வழிவகைகளை அறியேன்;

காட்டில் செல்வதற்கான வழிகளையும் அறியேன்; 

என் தாய் தன் கையால் காட்டிய முறைகளை மட்டுமே அறிவேன். 


41.கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.

தற்குறிப்பேற்ற அணி: 

இலக்கணம்: இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்றணி எனப்படும்.

எடுத்துக்காட்டு: 

'போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி 

'வாரல்' என்பனபோல் மறித்துக்கைகாட்ட'

அணிப்பொருத்தம்:

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குள் சென்றபோது மதில் மேலிருந்த கொடிகள் காற்றில் இயற்கையாக அசைந்தன. ஆனால் இளங்கோவடிகள், கோவலன் மதுரையில் கொலை செய்யப்படுவான் எனக்கருதி அக்கொடிகள் கையை அசைத்து, 'இம்மதுரைக்குள் வரவேண்டா' என்று தெரிவிப்பது போலக் காற்றில் அசைவதாகத் தம் குறிப்பைக் கொடியின் மீது ஏற்றிக் கூறுகிறார். இவ்வாறு இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படும்.

புதன், 1 ஜனவரி, 2025

குறுவினா

குறுவினா

1.'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

தனிமொழி

தொடர்மொழி

பொதுமொழி


வேங்கை-ஒருவகை மரம்

வேங்கை=வேகின்ற கை

'வேங்கை' என்னும் சொல் தனிமொழியாக நின்று மரத்தையும், தொடர்மொழியாக நின்று வேகின்ற கையையும் குறிப்பதால் இது 'பொதுமொழி' ஆகிறது



2."மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிந்தாழ வாழ்த்துவமே!" -இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்கள்

சீவக சிந்தாமணி 

வளையாபதி

குண்டலகேசி


3.ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

சரியான தொடர்கள்: 

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 

       பிழையான தொடர்:

       தாற்றில்தான் சீப்புகள் இருக்கும். எனவே, "ஒரு சீப்பில் பல தாறு   

       வாழைப்பழங்கள் உள்ளன" என்னும் தொடர் தவறானதாகும்.


4."உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

இன்னிசை அளபெடை:

உடுப்பதூஉம்

உண்பதூஉம்

இலக்கணம்: 

செய்யுளில் ஓசை குறையாதபோதும், இனிய ஓசைக்காக உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.


5.தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

சிலேடை நயம்:தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப்பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது "இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார்!

6.'நமக்கு உயிர் காற்று 

காற்றுக்கு வரம் மரம்- மரங்களை 

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்'- இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

உலகக் காற்று நாள் முழக்கத்தொடர்:

கடவுளின்றி உலகமில்லை... 

காற்றின்றி உயிர்களில்லை!

மரம் வளர்ப்போம்... 

மாசு குறைப்போம்!


7.வசன கவிதை- குறிப்பு வரைக.

வசன கவிதை:

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. 

இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.


8.தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

தண்ணீர் குடி-தண்ணீரைக் குடி

தினமும் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தயிர்க்குடம்-தயிரை உடைய குடம்

தயிர்க்குடத்தை எடுத்து வா


9.பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

அழும் தம்பிக்கு ஆறுதல் சொற்கள்:

அழாதே! செல்லம் அழாதே!

அம்மா வரும்போது, தின்பண்டம் வாங்கி வருவார்கள்.

உருட்டி விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள்.

அழாதே! தங்கம் அழாதே!


10.மாஅல் -பொருளும் இலக்கண குறிப்பும் தருக.

பொருள்: மாஅல்-திருமால் 

இலக்கணக்குறிப்பு: மாஅல்-செய்யுளிசை அளபெடை.


11.விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

முகமன் சொற்கள்:

வாருங்கள்! வாருங்கள்!

உட்காருங்கள்! சிறிது மோர் பருகுங்கள்! 

வீட்டில் எல்லோரும் நலமா? 

உங்களைக் கண்டது, நான் பெற்ற பெரும்பேறு.


12.'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டு குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

விருந்தோம்பல்:

விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றிமையாததில்லை.

"அகனமர்ந்து ஈதலின் நன்றே, முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்" என்கிறார் வள்ளுவர். 

விருந்தோம்பலுக்குச் செல்வத்தைவிட, அன்பும் இனிய சொற்களுமே இன்றியமையாதவை.


13.'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

அடுக்குத்தொடர்:

சிரித்துப் பேசினார்-சிரித்துச் சிரித்துப் பேசினார்.


14.'இறடிப்பொம்மல் பெறுகுவிர்'- இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

இறடிப்பொம்மல் பெறுகுவிர்:

தினைச்சோற்றை உணவாகப் பெறுவீர்கள்!


15.பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

பாரதியார் கவிஞர்-பெயர்ப் பயனிலை

நூலகம் சென்றார்-வினைப் பயனிலை

அவர் யார்?-வினாப் பயனிலை


16.'நச்சப் படாதவன்' செல்வம்- இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப்படாதவன் செல்வம்:

பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விருப்பப்படாதவர்


17.கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடக்கிய 

கோடி உண்டாயினும் இல் -இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

இன்னிசை அளபெடை:

கொடுப்பதூஉம் 

துய்ப்பதூஉம் 


18.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்-ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை 

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது-உயிரினும் ஓம்பப் படும்

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்-நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

பொருத்தம்:

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்-உயிரினும் ஓம்பப் படும் 

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது-நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்-ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை  




19.எய்துவர் எய்தாப் பழி-இக்குறளுக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்

ஆ) கூவிளம் புளிமா நாள் 

இ) தேமா புளிமா காசு 

ஈ) புளிமா தேமா பிறப்பு

விடை:அ) கூவிளம் தேமா மலர்


20.வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்

செயற்கை நுண்ணறிவு பொதிந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்:

வங்கிச் சேவைகளை வழங்கும் செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்கள்

வயதானவர்களுக்கு உதவிகள் செய்யும் மெய்நிகர் உதவியாளர்


21.வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்.- இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

கால வழுவமைதி:

'வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்' என்பது திட்டமிடப்பட்ட உறுதியான நிகழ்ச்சி ஆகும்.

எனவே, இத்தொடர் காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.


22.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவத்தில் அன்பும் நம்பிக்கையும்:

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.

மருத்துவர் நோயாளியிடம் காட்டும் அன்பும், நோயாளி மருத்துவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் நோயாளியை விரைவில் குணமடையச் செய்யும்.


23.உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

பூமியில் உயிர்கள் உருவான சூழல்:

பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்தது. 

தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது 

மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.


24."சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.- இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

திணைவழுக்கள்-திருத்தம்

"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.


25."கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல் மிக கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" 

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

கழிந்த பெரும் கேள்வியினான் -மன்னன் குலேச பாண்டியன்

காதல் மிகு கேண்மையினான்-புலவர் இடைக்காடனார் 


26.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

கல்வி -முழக்கத் தொடர்கள்:

அருளைப் பெருக்கு! 

அறிவைத் திருத்து! 

மருளை அகற்று!

கல்வியைப் போற்று!


27.அமர்ந்தான்-பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பகுபத உறுப்பிலக்கணம்: 

அமர்ந்தான்=அமர்+த்(ந்)+த்+ஆன்

அமர்-பகுதி 

த்-சந்தி 

ந்-ஆனது விகாரம் 

த்-இறந்தகால இடைநிலை 

ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி 


28.இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? 

இதோ... இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? 

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

வினா வகைகள்

மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? -அறியா வினா

மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? -ஐய வினா


29.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற்பொருள்:

நிலம்: காடு (முல்லை)

பொழுது:

சிறுபொழுது : மாலை

பெரும்பொழுது: மழைக்காலம் (கார்காலம்)

       ii) கருப்பொருள்: வரகு



30."கலைஞர், பழுமரக்கனி பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்- பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

அயற்கூற்று:

கலைஞர் பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளராகவும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளராகவும் திகழ்ந்ததாகப் பேராசிரியர் அன்பழகனார் குறிப்பிடுகிறார்.


31.உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்' 

காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்' 

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

எழுந்திராய் எழுந்திராய்- உறங்குவாய் உறங்குவாய்:

"உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!" என்று சொல்லி எழுப்புகிறார்கள். 

காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் படுத்து உறங்கச் செல்கிறார்கள். 


32.சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் 

சுமக்கின் ஒல்லித் தண்டுகள் -இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

ஒல்லித்தண்டுகள்:

ஒல்லித்தண்டுகளே பெரிய மலர்களைத் தாங்குகின்றன.

அதுபோல, மென்மையான பெண்மையே மிகப்பெரிய இப்பிரபஞ்சத்தைச் சுமக்கிறது.


33.கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

பொருத்தமான கருப்பொருள்கள்:

உழவர்கள் வயலில் உழுதனர்.

நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.


34.கரப்பிடும்பை இல்லார் -இத்தொடரின் பொருள் கூறுக.

கரப்பிடும்பை இல்லார்:

தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லார்


35.தஞ்சம் எளியர் பகைக்கு -இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

சீர்

அசை

வாய்ப்பாடு


தஞ்/சம்

நேர் நேர்

தேமா


எளி/யர்

நிரை நேர்

புளிமா


பகைக்/கு

(நிரை நேர்) நிரைபு

பிறப்பு




36.வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

இரவு:

இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும். 


37.'பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக?

பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

கூரான ஆயுதம்:

உழைத்ததால் கிடைத்த ஊதியம் 

காரணம்:

ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும்; அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை. 


38.பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் -சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்கள்:

பாசவர்-வெற்றிலை விற்போர்

வாசவர் -ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள் விற்போர்

பல்நிண விலைஞர்-பல வகையான இறைச்சிகள் விற்போர்

உமணர் -உப்பு விற்போர்


39.மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம்:

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; 

அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.


40.வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி.:

நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, தனக்கு விருப்பமான புத்தகங்களை மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.


41.புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

எதிரெதிர்த்திணைகள்:

வெட்சி × கரந்தை 

வஞ்சி × காஞ்சி 

நொச்சி × உழிஞை

தும்பை × வாகை

பாடாண்× பொதுவியல்

கைக்கிளை ×பெருந்திணை


42.பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறியீடுக.

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்-ம.பொ.சி.

நிறுத்தற்குறியிடுதல்:

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். -ம.பொ.சி.


43.'கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! 

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது'

அ) அடியெதுகையை எடுத்தெழுதுக.

ஆ) இலக்கணக்குறிப்பு எழுதுக-கொள்க, குரைக்க

அ) அடியெதுகை

கொள்வோர்

உள்வாய் 

ஆ) இலக்கணக்குறிப்பு

கொள்க, குரைக்க-வியங்கோள் வினைமுற்று 


குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

குறள் வெண்பா:

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். 

முதலடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

       எடுத்துக்காட்டு: 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு


44.குறிப்பு வரைக- அவையம்.

அவையம்:

அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன.

அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு.

மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.


45.காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது? 

காலக்கழுதை

காலக்கழுதை கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை ஆகியவற்றைக் கொண்டு சாளரத்தைச் சுத்தம் செய்யும் பணியை கவிஞர் ஓய்வின்றிச் செய்கிறார்.


46.வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. 

இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசையும் கலிப்பாவிற்குத் துள்ளலோசையும் உரியன.


47.தீவக அணியின் வகைகள் யாவை?

தீவக அணியின் வகைகள்:

முதல்நிலைத் தீவகம் 

இடைநிலைத் தீவகம் 

கடைநிலைத் தீவகம்


48.நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு.- இத்தொடரை இரு தொடர்களாக்குக.

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு;

அதற்குரிய காரணம் உண்டு. 


49."காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்"- உவமை உணர்த்தும் கருத்து யாது?

காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்

இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்ணிகளை காணும் முன்னே, தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டதைப்போல, கருணையனும் தன் தாயை இழந்து வாடுகின்றான். 


50.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது -இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

நிரல்நிறையணி:

சொல்லையும் பொருளையும்

 வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள்கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.


51.'வாழ்வில் தலைக்கனம்', 'தலைக்கனமே வாழ்வு' என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

வாழ்வில் தலைக்கனம்:

பணம்பதவிகளால் தலைக்கனம் பிடித்தவர்

தலைக்கனமே வாழ்வு:

அடுத்தவேளை உணவுக்காகத் தலையில் செங்கற்கள் சுமக்கும் சித்தாள்



பலவுள் தெரிக

பலவுள் தெரிக.

1.'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும் 

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும் 

ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும் 

விடை:அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்


2.'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது-

அ) இலையும் சருகும்

ஆ) தோகையும் சண்டும்

இ) தாளும் ஓலையும்

ஈ) சருகும் சண்டும்

விடை:ஈ) சருகும் சண்டும்


3.எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-

அ) எந் +தமிழ்+நா

ஆ) எந்த+தமிழ்+நா

இ) எம்+தமிழ்+நா

ஈ) எந்தம் +தமிழ்+நா

விடை:இ) எம்+தமிழ்+நா


4.'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'-தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

அ) பாடிய; கேட்டவர்

ஆ) பாடல்; பாடிய

இ) கேட்டவர்; பாடிய

ஈ) பாடல்; கேட்டவர்

விடை:ஈ) பாடல்; கேட்டவர்


5.வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை-

அ) குலைவகை 

ஆ) மணிவகை 

இ) கொழுந்து வகை 

ஈ) இலை வகை

விடை:ஆ) மணிவகை 


6.'உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம், 

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்'- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ) உருவகம், எதுகை

ஆ) மோனை, எதுகை

இ) முரண், இயைபு

ஈ) உவமை, எதுகை

விடை:ஆ) மோனை, எதுகை


7.செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றியை கண்டவர்கள் தமிழர்கள்!

அ) செய்தி 1 மட்டும் சரி

ஆ) செய்தி 1,2 ஆகியன சரி 

இ) செய்தி 3 மட்டும் சரி

ஈ) செய்தி 1,3 ஆகியன சரி 

விடை:ஈ) செய்தி 1,3 ஆகியன சரி 


8.'பாடுஇமிழ் பனிக்கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் 

ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல் 

இ) கடல் நீர் ஒலித்தல் 

ஈ) கடல் நீர் கொந்தளித்தல் 

விடை:அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் 


9.பெரிய மீசை சிரித்தார் -வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை 

ஆ) உவமைத்தொகை 

இ) அன்மொழித்தொகை 

ஈ) உம்மைத்தொகை 

விடை:இ) அன்மொழித்தொகை 


10.பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்-1. மேற்கு 

ஆ) கோடை-2. தெற்கு 

இ) வாடை-3. கிழக்கு 

ஈ) தென்றல்-4. வடக்கு 

அ)1,2,3,4

ஆ)3,1,4,2

இ)4,3,2,1

ஈ)3,4,1,2

விடை:ஆ)3,1,4,2


11.பின்வருவனவற்றுள் முறையான தொடர்-

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

விடை:இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு


12."சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது-

அ) புத்தூர் 

ஆ) மூதூர் 

இ) பேரூர் 

ஈ) சிற்றூர் 

விடை:ஈ) சிற்றூர் 


13.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது-

அ) வேற்றுமை உருபு 

ஆ) எழுவாய் 

இ) உவம உருபு 

ஈ) உரிச்சொல் 

விடை:அ) வேற்றுமை உருபு 


14.காசிக்காண்டம் என்பது-

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல் 

விடை:இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்


15.விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீரியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-

அ) நிலத்திற்கேற்ற விருந்து 

ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து

ஈ) உற்றாரின் விருந்து 

விடை:ஆ) இன்மையிலும் விருந்து


16.'உனதருளே பார்ப்பன் அடியேனே'-யாரிடம் யார் கூறியது? 

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் 

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி 

ஈ) நோயாளியிடம் மருத்துவர் 

விடை:ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்


17.தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க 

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு 

குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.

திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிக்கிறது

அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடை:அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன


18.பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும் 

ஆ) வானத்தையும் புகழையும் 

இ) வானத்தையும் பூமியையும் 

ஈ) வானத்தையும் பேரொலியையும்

விடை:ஈ) வானத்தையும் பேரொலியையும்


19.குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே-

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

விடை:இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி


20.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது? 

அ) துலா 

ஆ) சீலா

இ) குலா 

ஈ) இலா 

விடை:ஈ) இலா 


21.'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

அ) சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது 

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பத்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

விடை:அ) சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது 


22.அருந்துணை என்பதைப் பிரித்தால்

அ) அருமை+ துணை

ஆ) அரு +துணை

இ) அருமை+ இணை

ஈ) அரு +இணை

விடை:அ) அருமை+ துணை


23.'இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது_______ வினா

'அதோ, அங்கே நிற்கும்' என்று மற்றொருவர் கூறியது_____ விடை

அ) ஐய வினா, வினா எதிர் வினாதல்

ஆ) அறிவினா, மறைவிடை

இ) அறியா வினா, சுட்டு விடை

ஈ) கொளல் வினா, இனமொழி விடை

விடை:இ) அறியா வினா, சுட்டு விடை


24."அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி 

மருளை அகற்றி மதிக்கும் தெருளை" 

-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ் 

ஆ) அறிவியல் 

இ) கல்வி 

ஈ) இலக்கியம் 

விடை:இ) கல்வி 


25.இடைக்காடனாரின் பாடலை இழந்தவர்______. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்________.

அ) அமைச்சர், மன்னன்

ஆ) அமைச்சர், இறைவன்

இ) இறைவன், மன்னன்

ஈ) மன்னன், இறைவன்

விடை:ஈ) மன்னன், இறைவன்


26.குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்_____

அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடை:இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் 


27.கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர் 

கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது. 

அ) கூற்று 1 சரி 2 தவறு

ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு

இ) கூற்று 1 தவறு 2 சரி

ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

விடை:ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி


28.மலர்கள் தரையில் நழுவும், எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால்

ஆ) தளரப் பிணைத்தால் 

இ) இறுக்கி முடிச்சிட்டால் 

ஈ) காம்பு முறிந்தால் 

விடை:ஆ) தளரப் பிணைத்தால் 


29.தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது- இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

விடை:ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?


30.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? 

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் 

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால் 

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

ஈ) அங்கு வறுமை இல்லாததால் 

விடை:ஈ) அங்கு வறுமை இல்லாததால் 


31.சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க

அ) உழவு, மண், ஏர், மாடு 

ஆ) மண், மாடு, ஏர், உழவு 

இ) உழவு, ஏர், மண், மாடு 

ஈ) ஏர், உழவு, மாடு, மண்

விடை:இ) உழவு, ஏர், மண், மாடு 


32.'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

அ) திருப்பதியும் திருத்தணியும்

ஆ) திருத்தணியும் திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்

ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

விடை:அ) திருப்பதியும் திருத்தணியும்


33.'தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்திதா தொடர் உணர்த்தும் பொருள்-

அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்

ஆ) மிகுந்த செல்வம் உடையவர் 

இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர் 

ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர் 

விடை:ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர் 


34.இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்______

அ) நாட்டைக் கைப்பற்றல்

ஆ) ஆநிரை கவர்தல் 

இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல் 

விடை:இ) வலிமையை நிலைநாட்டல்


35.தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது______

அ) திருக்குறள் 

ஆ) புறநானூறு 

இ) கம்பராமாயணம் 

ஈ) சிலப்பதிகாரம் 

விடை:ஈ) சிலப்பதிகாரம் 


36.மேன்மை தரும் அறம் என்பது______

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது 

ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது

ஈ) பதில் உதவி பெறுவதற்காக அறம் செய்வது 

விடை:அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது 


37.'வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' இவ்வடி குறிப்பிடுவது______

அ) காலம் மாறுவதை 

ஆ) வீட்டைத் துடைப்பதை 

இ) இடையறாது அறப்பணி செய்தலை 

ஈ) வண்ணம் பூசுவதை

விடை:இ) இடையறாது அறப்பணி செய்தலை 


38.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதயன்; சேரலாதன்

ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

இ) பேகன்; கிள்ளிவளவன்

ஈ) நெடுஞ்செழியன், திருமுடிக்காரி

விடை:ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்


39.காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்______

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது

ஆ) என்மனம் திகழ்ந்தால் இறந்து விடாது

இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்

ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்

விடை:அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது


40.சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பா தினம்______

அ) அகவற்பா

ஆ) வெண்பா 

இ) வஞ்சிப்பா 

ஈ) கலிப்பா

விடை:அ) அகவற்பா


41.'பிரிந்தன புள்ளின் கானில் 

பெரிதழுது இரங்கித் தேம்ப' பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க.

அ) கிளை, துளை

ஆ) நிலம், வாட

இ) காடு, வாட

ஈ) காடு, நிலம்

விடை:இ) காடு, வாட


42.சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் 

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம் 

ஈ) வெளிநாட்டு முதலீடுகள் 

விடை:ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்


43.பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ______வேண்டினார்

அ) கருணையன், எலிசபெத்துக்காக

ஆ) எலிசபெத், தமக்காக

இ) கருணையன், பூக்களுக்காக

ஈ) எலிசபெத், பூமிக்காக

விடை:அ) கருணையன், எலிசபெத்துக்காக


44.வாய்மையே மழைநீராகி- இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை 

ஆ) தற்குறிப்பேற்றம் 

இ) உருவகம் 

ஈ) தீவகம் 

விடை:இ) உருவகம் 


45.கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் -இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது:

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலைக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார். 

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

விடை:ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்.