புதன், 12 பிப்ரவரி, 2025

ஆண்டுவிழா2025

 ஆண்டு விழா வரவேற்புரை

வெயிலிலும் குளிர்தரும் நிழலாய், 

வெள்ளிக்கிழமை வந்தது!

ஆர்வமும் ஆரவாரமும் பொங்க, 

ஆண்டுவிழா வந்தது!

மாணவர்கள் மகிழ்ச்சி கொள்ள, 

மதியவேளை வந்தது!

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

ஆர்வத்தால் விளைந்த நடனமும் நாடகமும் இருக்கு.

அதைக் கண்டுமகிழக் கோடிக்கண்கள் வேண்டும் நமக்கு. 

வேண்டாத செய்கைகள் இருந்தால் இப்போதே விலக்கு.

வெற்றிமேடை ஒன்று காத்திருக்கு உனக்கு.

வீணில் உண்டு நீ தயங்கி நிற்பது எதற்கு?

____________________________________

தன்முனைப்புடன் 

தான்தொடங்கிச் செயலாற்றும் 

தலைமைப் பண்பாளர்!

தனித்துவமான செயல்வீரர்!

தன்னிகரற்ற நிர்வாகி!

இருளை விலக்கும் ஒளிச்சுடர் !

இன்றைய விழாவின்நாயகர்!

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களே! வருக! வருக!

_____________________________________

ஊருணி நீராய்

ஊர்நடுவே பழுத்த மரமாய்

மருந்து மரமாய் 

ஒப்புரவுநெறி போற்றி,

நுண்மான் நுழைபுலம் கண்டு,

அருவினை தன்னை, 

கருவியால் முடிக்கும், 

சிறப்பு விருந்தினர் அவர்களே! 

வருக! வருக!

_____________________________________

வழுவா நெறிநின்று வழிகாட்டி

மனம்செலுத்திக் கற்பவர் 

வாழ்வில் ஒளியூட்டி 

மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் திசைகாட்டி 

மாநிலம் வாழ்வுற மதியூட்டி

மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 

பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த இப்பள்ளியின் ஆசிரியர் பெருமக்களே... உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் கடலும் 

அகிலை ஈன்றதால் காடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

மாணவர் யஷ்வந்தாமனைப் பெற்றதால் இப்பள்ளியும் பெருமையடைகிறது. மாணவர் யஷ்வந்தாமனை வருக வருக என வரவேற்கிறோம்!

_____________________________________

பெரும் கனவுகளைச் சுமந்து 

புதிய பாதையை வகுத்து 

புதிய ரத்தத்தைப் பாய்ச்சி

புதிய பாரதத்தை படைக்க 

புதிய நடைபோட்டு வந்திருக்கும் 

சிறகுகள் இல்லாத பறவைகளே

காட்டில் வாழாத சிங்கங்களே

மண்ணில் புதையாத தங்கங்களே

எனதருமை மாணவச் செல்வங்களே!

உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்! 

_____________________________________

ஆண்டறிக்கை 

காலங்கள் நில்லாது

கடமைகள் தவறாது

காரியம் சிதறாது

கடந்து வந்த பாதைகள்

அவற்றிலோ சில தடைகள்

இருப்பினும் சில சாதனைகள்...

நடுநிலை தவறாத

நிதிநிலை அறிக்கை போல்

ஆண்டறிக்கை சமர்ப்பிக்க 

பெருமைமிகு தலைமை ஆசிரியர் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்!

---------------------------------------------------

ஆண்டறிக்கை 

நமது பள்ளியின் வெள்ளை அறிக்கை 

நமது பங்களிப்பை

நமக்கு உணர்த்தும் அறிக்கை 

நமது இலக்கின் அறிக்கை ...

நமது பள்ளிவளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சமர்ப்பிக்கும் அறிக்கை...

அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி பாராட்டுகிறோம்.

---------------------------------------------------

சிறப்புரை

அமிர்தம் வேண்டிப் 

பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்!

அடைக்கலம் வேண்டிக் 

கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்!

அருந்தமிழோங்கச் 

சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்!

அதுபோல,

சிறப்புரை வேண்டி 

ஆவலாய்க் காத்திருக்கும் எம் பள்ளிக்குச் சிறப்புரை வழங்க வருமாறு சிறப்பு விருந்தினர் __________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

சிந்தனையைச் செறிவூட்டி

செயல்களைச் சீர்தூக்கி

தெவிட்டாத தேன்புகட்டி 

கருத்துடனே உரையாற்றி

விருப்புடனே சிறப்புச் சேர்த்த சிறப்பு விருந்தினர்_______________ அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்!!!

_____________________________________

வாழ்த்துரை

படகு என்றால் துடுப்பு வேண்டும் 

பறவை என்றால் சிறகு வேண்டும் 

புன்செய் என்றால் மழை வேண்டும் 

பூக்கள் என்றால் நறுமணம் வேண்டும் 

விடுதலை என்றால் போராட்டம் வேண்டும் 

விளக்கு என்றால் தூண்டுகோல் வேண்டும் 

அதுபோல மாணவர்கள் என்றால் வழிகாட்டி வேண்டும்

அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் 

வாழ்த்துரை வழங்க வருமாறு___________ அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பாலும் தேனும் கலந்து

நற்கருப்பஞ்சாற்றிலே விழுந்து

மா பலா வாழை என்னும் 

முதிர்ந்த முக்கனிகளைச் சேர்த்து 

முத்தான கருத்துக்களை 

மூத்தோர்தம் வாழ்த்துக்களை

வழங்கிய___________அவர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும்...

________________________________

பரிசளிப்பு விழா 

கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் நிகழ்வு இது.

முதலாவதாக,

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் எம். யஷ்வந்தாமன் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று நம் பள்ளிக்கு பெருமைதேடித் தந்துள்ளார். சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மாணவி பி.சர்மிளா பாண்டி. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 600க்கு ____ மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்துள்ளார் மாணவர்__________. அவர்களை மேடைக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

_____________________________________

அடுத்ததாக, 

நடப்பு கல்வியாண்டில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முதலிடம் பிடித்தவர்களைப் பெருமைப்படுத்தும் நிகழ்வு.

ஆறாம் வகுப்பு அ பிரிவு_________

ஆறாம் வகுப்பு ஆ பிரிவு_________

ஏழாம் வகுப்பு அ பிரிவு__________

ஏழாம் வகுப்பு ஆ பிரிவு _________

ஏழாம் வகுப்பு இ பிரிவு__________

எட்டாம் வகுப்பு அ பிரிவு_________

எட்டாம் வகுப்பு ஆ பிரிவு _______

எட்டாம் வகுப்பு இ பிரிவு________

ஒன்பதாம் வகுப்பு அ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவு_____

ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு_____

பத்தாம் வகுப்பு அ பிரிவு_______

பத்தாம் வகுப்பு ஆ பிரிவு ______

பத்தாம் வகுப்பு இ பிரிவு________

பதினோராம் வகுப்பு அ பிரிவு___

பதினோராம் வகுப்பு ஆ பிரிவு__

பதினோராம் வகுப்பு இ பிரிவு__

பதினோராம் வகுப்பு ஈ பிரிவு___

பதினோராம் வகுப்பு உ பிரிவு___

பன்னிரண்டாம் வகுப்பு அ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஆ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு இ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு ஈ பிரிவு

பன்னிரண்டாம் வகுப்பு உ பிரிவு

_______________________________

பேச்சு

இவள் முயற்சிகள் தவறியதுண்டு. 

ஆனால் 

இவள் முயற்சிக்கத் தவறியதில்லை...

ஊக்கத்திற்கு இவள் வித்து 

ஆழ்கடலில் விளைந்த முத்து -இவள்

நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து.

ஆம். மாணவி ஜெ. மிதுனா ஸ்ரீ நம் பள்ளிக்கு கிடைத்த சொத்து. 

மாணவி மிதுனா ஸ்ரீ அவர்களைப் பேச வருமாறு மேடைக்கு அழைக்கிறோம்.

__________________________________________________

பத்தாயிரம் பஞ்ச்சுகளைப் பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்.

ஒரே ஒரு பஞ்ச்சை பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனைக் கண்டு நான் அஞ்சுவேன் என்கிறார் புரூஸ் லீ. 

பயிற்சிக்கு அப்படி ஒரு பலம்.

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தவனை கண்டு அஞ்சாமல் இருக்க முடியுமா? 

பத்தாயிரம் முறை பயிற்சி செய்தால் நாம் வெல்லாமல் இருக்க முடியுமா? 

தங்கத்தாமரைப் பெண் மிதுனா ஸ்ரீ அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

நாடகம் 

குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை...

பழம் தனக்காக இனிப்பதில்லை...

மழை தனக்காகப் பெய்வதில்லை...

மரம் செடி கொடி எல்லாம் தனக்காகக் காய்ப்பதில்லை...

எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்...

மனிதம் நிறைந்த கதை ஒன்றை நாடகமாக நடித்துக் காட்ட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவிகள். 

_____________________________________

உண்மை ஒளி...

நம் இதயத்தில் உள்ளொளி...

மனிதத்தை விதைத்த ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_____________________________________

நடனம்

சலசலக்கும் நீரோடை

சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று 

புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் 

சிறகடிக்கும் பட்டாம்பூச்சி 

இங்கு உங்கள் முன்னே பட்டாம்பூச்சிகளாய் ஆறாம் வகுப்பு மாணவர்கள்...

மான் போலத் துள்ளி 

மயில்போல நடனமாடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

மண்ணில் விளைந்த பொன்னாய்

மலையிடைப் பிறந்த மணியாய்

கடலில் விளைந்த முத்தாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

அழகுமிகு ஒயிலாய் நடனமாட வருகிறார்கள் ஏழாம் வகுப்பு மாணவர்கள்...

ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

வண்ணங்களில் இல்லை வாழ்க்கை - நல்ல

எண்ணங்களில்தான் இருக்கிறது.

வசந்தத்தைக் கொண்டாட

வருகிறார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள்.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

_______________________________

கடிக்கும் போதுதான் கரும்புகூட இனிக்கும் 

உழைக்கும்போதுதான் வியர்வைகூட மணக்கும்.

படிக்கும் போதுதான் உலகம் நம்மை மதிக்கும்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை நடனமாட அழைக்கிறோம்...

பரந்த உலகம்...

அதைத் தாண்டியும்

நிறைந்த வெளி...

பேரண்டம் தாண்டியும்

எங்கும் இல்லை தடுக்கும் சுவர்...

எவர் உண்டு இங்கு உனக்கு நிகர்?

சிறப்பாக நடனமாடிய ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...

________________________________

நன்றியுரை

அடிக்கரும்பே இனிக்கும் 

முதிர்கனியே சுவைக்கும்

நாடகத்தின் இறுதியிலே உச்சநிலை இருக்கும் 

இந்தநாள் என்றும் நினைவிலே தங்கியிருக்கும்.

நன்றியுரை வழங்க வருமாறு__________அவர்களை வரவேற்கிறோம்.

அரச மரத்திற்கு பெரிய கிளைகள் பலம் 

ஆலமரத்திற்கு நீண்ட விழுதுகள் பலம் 

ஆளும் அரசுக்கு அஷ்டதிக்கஜங்கள் பலம்

இப்பள்ளிக்கு இங்குள்ளோர் ஒவ்வொருவரும் பலம்.

நன்றியுரை வழங்கிய______அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

_________________________________________________

வாழ்த்துரை

அருந்தமிழ்ச் சொல்லே

ஆரொழுகும் பேரணங்கே

அருந்தமிழ்ப் புலவர்க்கு அட்சய பாத்திரம் நீ

ஆய்வியல் மாணவர்க்கு அறநெறி சூத்திரம் நீ

உன் புகழைப் பாடும் நாவெல்லாம் இனிக்கும்

உன் புகழைப் பேசும் வாயெல்லாம் மணக்கும் 

உன் புகழைப் பாடும் நாடெல்லாம் செழிக்கும் 

என்றுமுள தென் தமிழை வணங்கி

வாழ்த்துகிறேன் சற்றுத் தயங்கி...

வேகமாக ஓடுது பார் உலகம் 

ஆங்காங்கே வெடிக்குது பார் கலகம் 

சீழ்ப் பிடித்த சமுதாயத்திற்கு

சிகிச்சை அளிப்பது யார்?

அன்றாடம் இங்கு நடந்தேறும்

அவலங்களைப் பார்.

காலில்தானே காயம் என்று 

கை இருந்துவிட்டால் காயம்

உயிருக்கே உலை ஆகும்.

ஒருவரைத் தாழ்த்தி விட்டு 

இன்னொருவர் உயர்ந்துவிட முடியாது.

இன்னொருவர் அதே உயரத்தில்தான் இருப்பார்.

உன்னை நினைத்துப் பார் 

அடிப்படையில் நீ ஓர் மாணவன் 

ஓர் இளைஞன் 

வளரும் பருவத்தில் வாழ்க்கை திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியவன். 

நீ கற்ற திறன்களை உன் சந்ததிக்கு மறக்காமல் கொடுக்க வேண்டியவன். 

நீ பசுவாக இருந்தால் பால் தருவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ காளையாக இருந்தால் வயலில் உழுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். 

நீ குதிரையாக இருந்தால் ஓடுவது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ கழுதையாக இருந்தால் சுமப்பது மட்டுமே உன் கடமையாக இருந்திருக்கும். நீ மனிதனாக பிறந்து விட்டாய். 

மட்டற்ற மகிழ்ச்சி கொள்.

உன் கடமைகள் விசாலமானது. 

உன் பார்வை விசாலமாகட்டும். 

எதன் மீதும் விருப்பு வெறுப்பின்றி

தராசு போல

நடுநிலையோடு சிந்தித்துப் பார். 

ஒரு பக்கச் சார்பைக் கைவிடு.

உன்னை ஆட்டுவிப்பார் கையில் பொம்மையாக இருக்காதே!

உனக்கு எல்லோரையும் தெரியும். ஆனால் 

உனக்கு உன்னைப் பற்றி எதுவுமே தெரியாது.

உனக்கு எல்லாமே தெரியும் 

ஆனால் 

உனக்கு நல்ல நண்பனை மட்டும் தேர்ந்தெடுக்கவே தெரியாது.

உனக்கு கெடுதல் நினைப்பவருக்கு எல்லாம் நன்மை செய்வாய்.

உனக்கு நன்மை செய்பவருக்கு மட்டும் கெடுதல் செய்வாய்.

உன் இளமை உன் மடமைக்கு தீனி போடுகிறது. 

எதற்கும் கட்டுப்பட மாட்டாய்?

உனக்கு எல்லாமே கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பாய்.

கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பு சமைக்க உதவும். 

அவிழ்த்து விடப்பட்ட நெருப்பு நாட்டை அழிக்கும். 

உண்மையை உணரும்வரை நீயும் நெருப்பு தான். 

உன்னை எவனோ பற்ற வைப்பான். பற்றி எரிவது நீயும் உன் குடும்பமும் தான்.

படைக்கு தளபதி ஆவதற்கு முன் ஒருவன் படைவீரனாக இருக்க வேண்டும். தலைவன் ஆவதற்கு முன் ஒருவன் தொண்டனாக இருக்க வேண்டும். 

கடமையை செய்யாத ஒருவனுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

கீழ்படியாதவனுக்கு கட்டளையிட உரிமை இல்லை. 

கீழ்படிய கற்றுக்கொள். 

நல்ல நண்பனைச் சேர்த்துக்கொள். 

அந்த நண்பன் நல்ல புத்தகமாக இருந்தால் மிகவும் நல்லது.

நண்பன் என்பவன் உனக்கு ஊன்றுகோலாக இருக்கட்டும். 

நடப்பது உனது கால்களாக இருக்கட்டும்.

அழுத்தமாகப் பேசு. திருத்தமாக எழுது.

நாளைய வரலாறு உனது. இதுவே எனது வாழ்த்து என்று கருது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக