செவ்வாய், 9 டிசம்பர், 2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுஸ்ரீ

 

நீ பிறந்ததும் 

உன் உலகிற்குள் நுழைந்தேன்.

என் தூக்கத்தைப் 

பல இரவுகளில் இழந்தேன்.

எந்நேரமும் உன் 

நினைவினில் கழித்தேன்.

உன்னை அள்ளி 

அரவணைத்து மகிழ்ந்தேன்.

உன்னைத் தாலாட்டி 

அமுதூட்டிக் குளிப்பாட்டி 

ஊர்சுற்றி உலகைக் காட்டி 

உனக்குள்ளே கிடந்தேன்.

உன் வாழ்நாளெல்லாம் 

தித்திப்பாகட்டும் என்று எண்ணி 

உனக்கு "மது" என்று 

பெயரிட்டு அழைத்தேன்.


நீ வாழும் உலகம் விசித்திரமானது! 

மந்தை புத்தியுடையது !

மதி மயக்கத்தில் உலழக் கூடியது.!

இவர்களிடமிருந்து விலகி நில்.! 



அறிவார்ந்த செயல்களை மட்டுமே செய் !

மந்தையோடு மந்தையாகக் கலந்து விடாதே! 

மந்தையை மேய்ப்போனாக மாறிவிடு!

அறிவால் மந்தையைத் திருத்து!


வீணர்களிடம் விவாதம் செய்யாதே!

நற்சொல்லைக் கேளாதவனுக்கு 

உபதேசம் பண்ணாதே!


மனக்கவலை தீர்க்கும் மாமருந்து 

'நீதி நூல்களே" என்பதை உணர்!

நூல்களை வாசி! 

உன் கவலைகளெல்லாம் தூசி! 


எடுத்த செயலை முடிக்கும் வரை ஓயாதே! 

பிடித்த செயலை,

ஊர் போற்றும் செயலை 

ஒருபோதும் விலக்கி விடாதே!

ஒத்தி போடாதே! 


வெற்றியை நோக்கி ஓடாதே! 

வெற்றி ஒரு போதை! 

வெற்றி பெற்றால் துள்ளி மகிழாதே! 

தோல்வி கிடைத்தால் துவளாதே!


உன் கடமையைச் செய்!

அது போதும்! 

அதன் பலனை எதிர்பாராதே! 

அதைக் கடவுள் பார்த்துக் கொள்வார்!

கடமையை மட்டும் செய்! 

கடமையைச் செய்வதிலே கண்ணும்கருத்துமாக இரு! 


கடமை தவறியவர்களே 

வாழ்க்கை முழுவதும் கலங்கி நிற்பார்கள்!

கடமையை ஒத்தி போட்டவர்களே 

துன்பத்தை அனுபவிப்பார்கள்!


எந்தக் கடமையையும் 

நாளை பார்த்துக் கொள்ளலாம் 

என்று நினைக்காதே! 

இப்போதே செய்து முடி! 

இன்பமே தேடி வரும்! 

ஓடி வரும்!


எப்போதும் 

உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்!

வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்! 

மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்!

ஏனெனில், 

சுத்தமான இடத்தில் தான் 

கடவுள் குடியிருப்பார்! 


நீ கண்களால் காணும் 

காட்சிகள் எவையும் உண்மையல்ல...

அத்தனையும் போலியானவை!

உண்மைக் காட்சியைக் காண

உன் அகக்கண் கொண்டு பார்!

உன் அறிவுக்கண் கொண்டு பார்!!


போலியானவை எப்போதும் 

உன்னை ஈர்க்கும்!

உன் மனதை மயக்கும் !

நம்பிவிடாதே!

மயங்கி விடாதே!

விட்டில் பூச்சிகள் எல்லாம் 

விளக்கின் ஒளியில் மயங்கி

இறந்து விடுகின்றனவே!.


என்ன செய்தாலும் 

உன் மனச்சாட்சியிடம்

கேட்டுவிட்டுச் செய்.!

மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடு.!


பிறருக்காக யார் நடித்தாலும்

நீ நடிக்காதே !

எப்போதும் நீ உண்மையாகவே இரு!!

அதனால் வரும் துன்பத்தைத்

தாங்கிக் கொள்!


உண்மையானவர்களுக்குக் கடவுள்

அதிக துன்பத்தைத் தருவார்!

உனக்கு அதிக துன்பம் வந்தால் 

அதை எதிர்கொள்ளும் மனவலிமையையும் 

கடவுள் உனக்குத் தருவார்.

கடவுளிடம் நம்பிக்கை வை.


உன் மனவலிமையை வளர்த்துக்கொள்!

மனவலிமையை விடச் சிறந்தது எதுவுமில்லை!

மனவலிமை இருந்தால் 

எதையும் வெல்லலாம்!


உள்ளத்தின் அழகே

உண்மையான அழகு!

புறத் தோற்ற அழகு எல்லாம் 

அழியக் கூடியது.!


அதனால், புறத்தோற்ற 

அழகில் மயங்காதே!

அழகுக்கு அதிக முக்கியத்துவம் 

கொடுக்காதே!


மனதைக் கட்டுப்படுத்த 

பயிற்சி எடு!

மனதைக் கட்டுப்படுத்த முடிந்தால்

உலகத்தையே கட்டுப்படுத்தலாம்!


உணவை ருசித்து உண்!

ஆனால், பசித்த பின் உண்!

உணவின் மீது அதிக பிரியம்

வைக்காதே!

பெரிய பெரிய முனிவர்கள் 

எல்லாம் 

செய்கிற தவத்தில்

பசியை மறந்தவர்கள்!


உன்னதமான செயல்களைத்

தவம்போல் செய்!

கவனத்தை குவி!

காரியத்தில் மனதை நிறுத்து!

அச்சு பிசகாமல் 

குற்றங்குறை எதுவும் இல்லாமல் 

செய்து முடி!!


மனதை அமைதிப்படுத்து! 

கலங்கிய குட்டை நீர் 

குடிநீர் ஆகாது! 

காத்திரு! 

மனம் அமைதியாகும்! 

மனம் தெளிவாகும்! 

குழப்பத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

அவசரத்தில் எந்த முடிவையும் எடுக்காதே! 

சிறிது நேரம் ஒத்தி போடு! 

கோபத்தை அடக்கக் கற்றுக்கொள்!

நிதானமாகப் பேசு!


நாளை என்ன நடக்கும் என்பதை 

இப்போதே கணித்து விடு! 

நாளைக்கு ஏற்பத் திட்டமிடு!

சூழலுக்கு ஏற்ப உன்னைத் தகவமைத்துக்கொள்! 


பெரிய இலக்குகளை 

திட்டமிட்டால் தான் செய்ய முடியும்! 

திட்டமிடு-பாதிவேலை முடியும்! 

செயல்படு-மீதி வேலை முடியும்! 


பொருத்தமற்ற ஆசைகளைத் துரத்தி விடு!

நல்லதொரு இலட்சியத்தை உருவாக்கு! 

நாளும் அதை அடைய செயல்படு!

வெற்றி எப்போதும் உன் வசமே!

மகிழ்வோடும் மன நிறைவோடும் 

நெடுங்காலம் வாழ்வாயாக! 

உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மது ஸ்ரீ!!!

திங்கள், 8 டிசம்பர், 2025

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகளே, மது ஸ்ரீ

 

ஆருயிர் மகளே! 

என் அன்பு சித்திரமே! 

உன் வருகைக்கு முன்பு 

எனக்கு ஒரு தனி உலகம் இருந்தது. 

நீ பிறந்த பிறகு 

உனக்கான உலகத்தில் 

உனக்காகவே வாழ்வதன்று 

முடிவெடுத்து விட்டேன். 

என் ஒட்டுமொத்த உலகமும் நீதான். 


எது சரி? எது தவறு? என்று 

மற்றவர்களை விட எனக்கு நன்றாக தெரியும் மகளே! 

வாழ்க்கையில் பொழுதுபோக்கு அவசியம்தான்! 

ஆனால், வாழ்க்கையையே 

பொழுதுபோக்காக போக்கி விடக்கூடாது. 

குழந்தையாய் இருக்கும்போதே 

படிக்கும் திறனை வளர்த்துக் கொள்! 

வளர்ந்த பிறகு 

உலக விவரம் அறிந்த பிறகு 

படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே! 

வளர்ந்த பிறகு 

கவலைப்பட மட்டுமே நேரம் இருக்கும்! 

கண்களை மூடிக்கொண்டு சிந்தித்துப் பார்! 

உன்னையும் உலகத்தையும் தொடர்பு படுத்திப்பார்! 

உன்னை உன் நண்பர்களுடனோ 

உன் ஊராருடனோ தொடர்பு படுத்தாதே!. 

உலக அளவில் 

உன் வயது குழந்தைகள் 

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்று 

ஒப்பீடு செய்து பார்! 

அவர்களுக்கு தலைவியாக 

அவர்களுள் சிறந்தவளாக 

அவர்களோடு இணைந்து வாழ 

அவர்களைப்போல திறன்களை 

ஆற்றல்களை 

சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டாமா? 

அவர்கள் சொல்வதை 

நீ கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்கள் உன் சொல்லைக் 

கேட்டு நடக்க வேண்டுமா? 

அவர்களெல்லாம் இடைவிடாது படிக்கும்போது 

விளையாட்டுத் திறன்களை வளர்த்துக் கொள்ளும் போது 

நீ சோம்பி இருக்கலாமா? 

சோம்பல் ஒரு கொடிய விஷம்! 

சோம்பல் நம் எதிர்காலத்தை கொல்லும்! 

உழைப்பே உன்னதம்! 

உயிருள்ளவரை உழைப்பை நேசி! 

உழைக்கும் போது மகிழ்ச்சி பெருகும். 

ஏனெனில், உழைப்பு வெற்றியைத் தரும் 

உழைப்பு நம்பிக்கையைத் தரும் 

உழைப்பு பெருமையைத் தரும் 

உழைப்பு பெருமித உணர்வைத் தரும் 

உழைத்தால் வாழ்நாளும் அதிகரிக்கும் 


ஆனால், சோம்பல் நோயைத் தரும் 

சோம்பல் வெறுப்பை விதைக்கும் 

சோம்பல் அவநம்பிக்கையைத் தரும் 

சோம்பல் வாழ்க்கையைச் சிதைக்கும் 

சோம்பித் திரியாதே! 

சோம்பல் இருந்தால் 

பொழுதை வீணாகக் கழிக்க தோன்றும் 

கவலையை அதிகரிக்கும் 

உன்னால் முடிகிற 

சாதாரண வேலையைக் கூட 

"செய்ய முடியாது போல" 

என்று எண்ண வைக்கும் 


எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக படிக்கிறாயோ? 

அவ்வளவுக்கு அவ்வளவு 

உனக்கு மதிப்புக்கூடும். 

உனக்கு ஆற்றல் அதிகரிக்கும் 

உனக்கு நீ நினைத்தது 

எல்லாம் கிடைக்கும் 

படிப்பே உனக்கு எல்லாப் பண்புகளையும் தரும் 

அன்பு, நேர்மை, உண்மை, நம்பிக்கை, முயற்சி 

எல்லாமே உன் படிப்பில் தான் இருக்கிறது 

ஆனால், உன் படிப்போ 

உன் சுறுசுறுப்பில் தான் இருக்கிறது! 

உன்னையே நீ சுறுசுறுப்பாக்கிக் கொள். 

மனிதரைச் சுறுசுறுப்பாகும் எந்திரம் 

இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 

ஆனால், உனக்குள் எப்போதும் ஓர் எண்ணம் 

இருந்து கொண்டே இருக்க வேண்டும் 

அது "நான் சாதாரண குழந்தை அல்ல 

நான் சாதாரண பெண்ணல்ல 

நான் சாதிக்க பிறந்தவள் 

எனக்குள் அந்த சக்தி இருக்கிறது 

சாதிக்க பிறந்த நான் 

சோம்பேறியாக இருக்கக் கூடாது 

உலகத்தையே ஆள வேண்டிய நான் 

ஓய்வு எடுக்கக்கூடாது 

நான் ஓய்வு எடுத்தால் 

உலகத்தை யார் காப்பாற்றுவது? 

காற்று மழை கதிரவன் நிலா 

என்றாவது ஓய்வெடுத்ததுண்டா? 

ஏன் என் இதயம் கூட 

ஓய்வெடுத்ததில்லையே !

நான் ஓய்வு எடுக்கக்கூடாது !

கடவுள் என்னைப் படைத்தது 

ஓய்வு எடுக்க அல்ல !

கடவுள் என்னிடம் 

உலகத்தை பார்த்துக்கொள்ள அனுப்பி இருக்கிறார் 

இந்த உலகத்தில் 

நான் சும்மா பிறக்கவில்லை 

நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் !

அதனால் நான் சோம்பலை 

விட்டு விட வேண்டும் 

எல்லாருக்கும் முன்மாதிரியாக 

நான் இருக்க வேண்டும் !

உலகத்திற்கு புதிய வழியைக் 

கண்டுபிடித்து தர வேண்டும் 

உலகத்திற்கே வழிகாட்டியாக 

இருக்க வேண்டிய நான் 

முயற்சி இன்றி 

நம்பிக்கையின்றி இருக்கலாமா? கூடாது! 

நான் இப்போது இருப்பது போன்று 

இருக்கலாமா? கூடாது!" 

என்று அடிக்கடி மனதிற்குள் எண்ணிக் கொள்! 


எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் நம்பிக்கையில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் செயல்களில் தான் இருக்கிறது 

எல்லாம் உன் முயற்சிகளில் தான் இருக்கிறது 


இதையெல்லாம் 

என்னுடைய ஆசைகளை 

கனவுகளை 

உன்னிடம் திணிப்பதற்காகச் சொல்கிறேன் 

என்று தவறாக எண்ணி விடாதே! 

நீ யாரிடத்தும் 

எப்போதும் தலைகுனிந்து நடக்கக்கூடாது 

என்பதற்காகச் சொல்கிறேன். 

நீ எப்போதும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் 

அதற்காக நீ எப்போதும் தலைகுனிந்து 

"படித்துக் கொண்டே இரு" 

அம்பேத்கரைப் போல....


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், மகளே!

வரவேற்புரை

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தரும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு ஏ ஆர் ஆர் சீனிவாசன் அவர்களுக்கு வரவேற்புரை 

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல் 

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணியப் புலவன் பாரதியின் 

பாடல் வரிகளுக்கு ஏற்ப 

கல்விப் பணியை முதற்பணியாக கொண்டு 

அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்ற 

நமது தமிழக முதல்வரின் கனவுகளை நினைவாக்க 

பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு 

விலையில்லா மிதிவண்டி வழங்க வருகை தந்திருக்கும் 

முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்கள் நீங்கள் 

கழகத்தின் மணிமுடியில் பதிக்கப்பெற்ற 

ஒளிமிக்க வைரக்கல் நீங்கள்

அறுபத்தெட்டு வயதிலும் இளைஞர் இவர் 

அயராது இடையறாது மக்கள் பணி ஆற்றும் மாணிக்கம் இவர் 

அழகாபுரியில் அவதரித்த சூரியன் 

நான்காம் முறையாக மணிமுடிசூடக் காத்திருக்கும் நாயகன்

அப்பழுக்கற்ற உன்னதமான தலைவர்

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்

திரு. ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் அவர்களை 

வருக வருக என வரவேற்பதில் 

எமது பள்ளி பெருமை கொள்கிறது.