புதன், 1 ஜனவரி, 2025

குறுவினா

குறுவினா

1.'வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

தனிமொழி

தொடர்மொழி

பொதுமொழி


வேங்கை-ஒருவகை மரம்

வேங்கை=வேகின்ற கை

'வேங்கை' என்னும் சொல் தனிமொழியாக நின்று மரத்தையும், தொடர்மொழியாக நின்று வேகின்ற கையையும் குறிப்பதால் இது 'பொதுமொழி' ஆகிறது



2."மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிந்தாழ வாழ்த்துவமே!" -இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்கள்

சீவக சிந்தாமணி 

வளையாபதி

குண்டலகேசி


3.ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 

மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

சரியான தொடர்கள்: 

ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன. 

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன. 

       பிழையான தொடர்:

       தாற்றில்தான் சீப்புகள் இருக்கும். எனவே, "ஒரு சீப்பில் பல தாறு   

       வாழைப்பழங்கள் உள்ளன" என்னும் தொடர் தவறானதாகும்.


4."உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்- இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி, அதன் இலக்கணம் தருக.

இன்னிசை அளபெடை:

உடுப்பதூஉம்

உண்பதூஉம்

இலக்கணம்: 

செய்யுளில் ஓசை குறையாதபோதும், இனிய ஓசைக்காக உயிர்நெடில் எழுத்துக்கள் ஏழும் அளபெடுப்பது இன்னிசை அளபெடையாகும்.


5.தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

சிலேடை நயம்:தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் பல் மருத்துவத்தில் சிறப்புப்பட்டம் பெற்ற நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தபோது "இவர் பல்துறை வித்தகர்" என்று குறிப்பிட்டார்!

6.'நமக்கு உயிர் காற்று 

காற்றுக்கு வரம் மரம்- மரங்களை 

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்'- இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

உலகக் காற்று நாள் முழக்கத்தொடர்:

கடவுளின்றி உலகமில்லை... 

காற்றின்றி உயிர்களில்லை!

மரம் வளர்ப்போம்... 

மாசு குறைப்போம்!


7.வசன கவிதை- குறிப்பு வரைக.

வசன கவிதை:

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. 

இவ்வடிவம் தமிழில் பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது.


8.தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதுக; தொடரில் அமைக்க.

தண்ணீர் குடி-தண்ணீரைக் குடி

தினமும் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தயிர்க்குடம்-தயிரை உடைய குடம்

தயிர்க்குடத்தை எடுத்து வா


9.பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

அழும் தம்பிக்கு ஆறுதல் சொற்கள்:

அழாதே! செல்லம் அழாதே!

அம்மா வரும்போது, தின்பண்டம் வாங்கி வருவார்கள்.

உருட்டி விளையாடப் பொம்மை வாங்கி வருவார்கள்.

அழாதே! தங்கம் அழாதே!


10.மாஅல் -பொருளும் இலக்கண குறிப்பும் தருக.

பொருள்: மாஅல்-திருமால் 

இலக்கணக்குறிப்பு: மாஅல்-செய்யுளிசை அளபெடை.


11.விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

முகமன் சொற்கள்:

வாருங்கள்! வாருங்கள்!

உட்காருங்கள்! சிறிது மோர் பருகுங்கள்! 

வீட்டில் எல்லோரும் நலமா? 

உங்களைக் கண்டது, நான் பெற்ற பெரும்பேறு.


12.'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டு குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

விருந்தோம்பல்:

விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றிமையாததில்லை.

"அகனமர்ந்து ஈதலின் நன்றே, முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்" என்கிறார் வள்ளுவர். 

விருந்தோம்பலுக்குச் செல்வத்தைவிட, அன்பும் இனிய சொற்களுமே இன்றியமையாதவை.


13.'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத்தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

அடுக்குத்தொடர்:

சிரித்துப் பேசினார்-சிரித்துச் சிரித்துப் பேசினார்.


14.'இறடிப்பொம்மல் பெறுகுவிர்'- இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

இறடிப்பொம்மல் பெறுகுவிர்:

தினைச்சோற்றை உணவாகப் பெறுவீர்கள்!


15.பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

பாரதியார் கவிஞர்-பெயர்ப் பயனிலை

நூலகம் சென்றார்-வினைப் பயனிலை

அவர் யார்?-வினாப் பயனிலை


16.'நச்சப் படாதவன்' செல்வம்- இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப்படாதவன் செல்வம்:

பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விருப்பப்படாதவர்


17.கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடக்கிய 

கோடி உண்டாயினும் இல் -இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

இன்னிசை அளபெடை:

கொடுப்பதூஉம் 

துய்ப்பதூஉம் 


18.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்-ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை 

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது-உயிரினும் ஓம்பப் படும்

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்-நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

பொருத்தம்:

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்-உயிரினும் ஓம்பப் படும் 

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது-நடு ஊருள் நச்சு மரம் பழுத்தற்று

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்-ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை  




19.எய்துவர் எய்தாப் பழி-இக்குறளுக்கு பொருந்தும் வாய்ப்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்

ஆ) கூவிளம் புளிமா நாள் 

இ) தேமா புளிமா காசு 

ஈ) புளிமா தேமா பிறப்பு

விடை:அ) கூவிளம் தேமா மலர்


20.வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்

செயற்கை நுண்ணறிவு பொதிந்த அறிவியல் கண்டுபிடிப்புகள்:

வங்கிச் சேவைகளை வழங்கும் செயற்கை நுண்ணறிவுள்ள ரோபோக்கள்

வயதானவர்களுக்கு உதவிகள் செய்யும் மெய்நிகர் உதவியாளர்


21.வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்.- இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

கால வழுவமைதி:

'வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்' என்பது திட்டமிடப்பட்ட உறுதியான நிகழ்ச்சி ஆகும்.

எனவே, இத்தொடர் காலவழுமைதிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.


22.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

மருத்துவத்தில் அன்பும் நம்பிக்கையும்:

மருத்துவர் உடலில் ஏற்பட்ட புண்ணைக் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என்று உணர்ந்து நோயாளி அவரை நேசிப்பார்.

மருத்துவர் நோயாளியிடம் காட்டும் அன்பும், நோயாளி மருத்துவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் நோயாளியை விரைவில் குணமடையச் செய்யும்.


23.உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

பூமியில் உயிர்கள் உருவான சூழல்:

பூமி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்தது. 

தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது 

மீண்டும் மீண்டும் நிறை வெள்ளத்தால் நிறைந்த இப்பெரிய உலகத்தில் உயிர்கள் உருவாகி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தோன்றியது.


24."சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.- இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக.

திணைவழுக்கள்-திருத்தம்

"சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.


25."கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல் மிக கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" 

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

கழிந்த பெரும் கேள்வியினான் -மன்னன் குலேச பாண்டியன்

காதல் மிகு கேண்மையினான்-புலவர் இடைக்காடனார் 


26.செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

கல்வி -முழக்கத் தொடர்கள்:

அருளைப் பெருக்கு! 

அறிவைத் திருத்து! 

மருளை அகற்று!

கல்வியைப் போற்று!


27.அமர்ந்தான்-பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பகுபத உறுப்பிலக்கணம்: 

அமர்ந்தான்=அமர்+த்(ந்)+த்+ஆன்

அமர்-பகுதி 

த்-சந்தி 

ந்-ஆனது விகாரம் 

த்-இறந்தகால இடைநிலை 

ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி 


28.இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? 

இதோ... இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? 

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

வினா வகைகள்

மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? -அறியா வினா

மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? -ஐய வினா


29.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற்பொருள்:

நிலம்: காடு (முல்லை)

பொழுது:

சிறுபொழுது : மாலை

பெரும்பொழுது: மழைக்காலம் (கார்காலம்)

       ii) கருப்பொருள்: வரகு



30."கலைஞர், பழுமரக்கனி பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்- பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

அயற்கூற்று:

கலைஞர் பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளராகவும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளராகவும் திகழ்ந்ததாகப் பேராசிரியர் அன்பழகனார் குறிப்பிடுகிறார்.


31.உறங்குகின்ற கும்பகன்ன 'எழுந்திராய் எழுந்திராய்' 

காலதூதர் கையிலே 'உறங்குவாய் உறங்குவாய்' 

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

எழுந்திராய் எழுந்திராய்- உறங்குவாய் உறங்குவாய்:

"உறங்குகின்ற கும்பகருணனே! உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது. அதனைக் காண்பதற்காக எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்!" என்று சொல்லி எழுப்புகிறார்கள். 

காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில் படுத்து உறங்கச் செல்கிறார்கள். 


32.சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் 

சுமக்கின் ஒல்லித் தண்டுகள் -இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

ஒல்லித்தண்டுகள்:

ஒல்லித்தண்டுகளே பெரிய மலர்களைத் தாங்குகின்றன.

அதுபோல, மென்மையான பெண்மையே மிகப்பெரிய இப்பிரபஞ்சத்தைச் சுமக்கிறது.


33.கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

பொருத்தமான கருப்பொருள்கள்:

உழவர்கள் வயலில் உழுதனர்.

நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.


34.கரப்பிடும்பை இல்லார் -இத்தொடரின் பொருள் கூறுக.

கரப்பிடும்பை இல்லார்:

தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லார்


35.தஞ்சம் எளியர் பகைக்கு -இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

சீர்

அசை

வாய்ப்பாடு


தஞ்/சம்

நேர் நேர்

தேமா


எளி/யர்

நிரை நேர்

புளிமா


பகைக்/கு

(நிரை நேர்) நிரைபு

பிறப்பு




36.வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

இரவு:

இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும். 


37.'பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக?

பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

கூரான ஆயுதம்:

உழைத்ததால் கிடைத்த ஊதியம் 

காரணம்:

ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும்; அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை. 


38.பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் -சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்கள்:

பாசவர்-வெற்றிலை விற்போர்

வாசவர் -ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள் விற்போர்

பல்நிண விலைஞர்-பல வகையான இறைச்சிகள் விற்போர்

உமணர் -உப்பு விற்போர்


39.மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம்:

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்; 

அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.


40.வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி.:

நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, தனக்கு விருப்பமான புத்தகங்களை மிக மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.


41.புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

எதிரெதிர்த்திணைகள்:

வெட்சி × கரந்தை 

வஞ்சி × காஞ்சி 

நொச்சி × உழிஞை

தும்பை × வாகை

பாடாண்× பொதுவியல்

கைக்கிளை ×பெருந்திணை


42.பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறியீடுக.

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்-ம.பொ.சி.

நிறுத்தற்குறியிடுதல்:

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். -ம.பொ.சி.


43.'கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! 

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது'

அ) அடியெதுகையை எடுத்தெழுதுக.

ஆ) இலக்கணக்குறிப்பு எழுதுக-கொள்க, குரைக்க

அ) அடியெதுகை

கொள்வோர்

உள்வாய் 

ஆ) இலக்கணக்குறிப்பு

கொள்க, குரைக்க-வியங்கோள் வினைமுற்று 


குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

குறள் வெண்பா:

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். 

முதலடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

       எடுத்துக்காட்டு: 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு


44.குறிப்பு வரைக- அவையம்.

அவையம்:

அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன.

அறம் கூறு அவையம் பற்றி 'அறம் அறக்கண்ட நெறிமான் அவையம்' என்கிறது புறநானூறு.

மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.


45.காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது? 

காலக்கழுதை

காலக்கழுதை கட்டெறும்பான இன்றும் கையிலே வாளித்தண்ணீர், சாயக்குவளை, கந்தைத்துணி, கட்டைத் தூரிகை ஆகியவற்றைக் கொண்டு சாளரத்தைச் சுத்தம் செய்யும் பணியை கவிஞர் ஓய்வின்றிச் செய்கிறார்.


46.வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. 

இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசையும் கலிப்பாவிற்குத் துள்ளலோசையும் உரியன.


47.தீவக அணியின் வகைகள் யாவை?

தீவக அணியின் வகைகள்:

முதல்நிலைத் தீவகம் 

இடைநிலைத் தீவகம் 

கடைநிலைத் தீவகம்


48.நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு.- இத்தொடரை இரு தொடர்களாக்குக.

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு;

அதற்குரிய காரணம் உண்டு. 


49."காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்"- உவமை உணர்த்தும் கருத்து யாது?

காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்

இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்ணிகளை காணும் முன்னே, தூய மணிபோன்ற தூவும் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்துவிட்டதைப்போல, கருணையனும் தன் தாயை இழந்து வாடுகின்றான். 


50.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது -இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

நிரல்நிறையணி:

சொல்லையும் பொருளையும்

 வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள்கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.


51.'வாழ்வில் தலைக்கனம்', 'தலைக்கனமே வாழ்வு' என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

வாழ்வில் தலைக்கனம்:

பணம்பதவிகளால் தலைக்கனம் பிடித்தவர்

தலைக்கனமே வாழ்வு:

அடுத்தவேளை உணவுக்காகத் தலையில் செங்கற்கள் சுமக்கும் சித்தாள்



பலவுள் தெரிக

பலவுள் தெரிக.

1.'மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது-

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும் 

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும் 

ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும் 

விடை:அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்


2.'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது-

அ) இலையும் சருகும்

ஆ) தோகையும் சண்டும்

இ) தாளும் ஓலையும்

ஈ) சருகும் சண்டும்

விடை:ஈ) சருகும் சண்டும்


3.எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-

அ) எந் +தமிழ்+நா

ஆ) எந்த+தமிழ்+நா

இ) எம்+தமிழ்+நா

ஈ) எந்தம் +தமிழ்+நா

விடை:இ) எம்+தமிழ்+நா


4.'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'-தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

அ) பாடிய; கேட்டவர்

ஆ) பாடல்; பாடிய

இ) கேட்டவர்; பாடிய

ஈ) பாடல்; கேட்டவர்

விடை:ஈ) பாடல்; கேட்டவர்


5.வேர்க்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை-

அ) குலைவகை 

ஆ) மணிவகை 

இ) கொழுந்து வகை 

ஈ) இலை வகை

விடை:ஆ) மணிவகை 


6.'உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம், 

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்'- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

அ) உருவகம், எதுகை

ஆ) மோனை, எதுகை

இ) முரண், இயைபு

ஈ) உவமை, எதுகை

விடை:ஆ) மோனை, எதுகை


7.செய்தி 1: ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2: காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3: காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல் கடந்து வணிகம் செய்து அதில் வெற்றியை கண்டவர்கள் தமிழர்கள்!

அ) செய்தி 1 மட்டும் சரி

ஆ) செய்தி 1,2 ஆகியன சரி 

இ) செய்தி 3 மட்டும் சரி

ஈ) செய்தி 1,3 ஆகியன சரி 

விடை:ஈ) செய்தி 1,3 ஆகியன சரி 


8.'பாடுஇமிழ் பனிக்கடல் பருகி' என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் 

ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல் 

இ) கடல் நீர் ஒலித்தல் 

ஈ) கடல் நீர் கொந்தளித்தல் 

விடை:அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் 


9.பெரிய மீசை சிரித்தார் -வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

அ) பண்புத்தொகை 

ஆ) உவமைத்தொகை 

இ) அன்மொழித்தொகை 

ஈ) உம்மைத்தொகை 

விடை:இ) அன்மொழித்தொகை 


10.பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல்-1. மேற்கு 

ஆ) கோடை-2. தெற்கு 

இ) வாடை-3. கிழக்கு 

ஈ) தென்றல்-4. வடக்கு 

அ)1,2,3,4

ஆ)3,1,4,2

இ)4,3,2,1

ஈ)3,4,1,2

விடை:ஆ)3,1,4,2


11.பின்வருவனவற்றுள் முறையான தொடர்-

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

விடை:இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு


12."சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது-

அ) புத்தூர் 

ஆ) மூதூர் 

இ) பேரூர் 

ஈ) சிற்றூர் 

விடை:ஈ) சிற்றூர் 


13.அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது-

அ) வேற்றுமை உருபு 

ஆ) எழுவாய் 

இ) உவம உருபு 

ஈ) உரிச்சொல் 

விடை:அ) வேற்றுமை உருபு 


14.காசிக்காண்டம் என்பது-

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல் 

விடை:இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்


15.விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீரியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-

அ) நிலத்திற்கேற்ற விருந்து 

ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து

ஈ) உற்றாரின் விருந்து 

விடை:ஆ) இன்மையிலும் விருந்து


16.'உனதருளே பார்ப்பன் அடியேனே'-யாரிடம் யார் கூறியது? 

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் 

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி 

ஈ) நோயாளியிடம் மருத்துவர் 

விடை:ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்


17.தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க 

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு 

குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.

திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிக்கிறது

அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடை:அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன


18.பரிபாடல் அடியில் 'விசும்பும் இசையும்' என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும் 

ஆ) வானத்தையும் புகழையும் 

இ) வானத்தையும் பூமியையும் 

ஈ) வானத்தையும் பேரொலியையும்

விடை:ஈ) வானத்தையும் பேரொலியையும்


19.குலசேகர ஆழ்வார் 'வித்துவக்கோட்டம்மா' என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே-

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

விடை:இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி


20.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது? 

அ) துலா 

ஆ) சீலா

இ) குலா 

ஈ) இலா 

விடை:ஈ) இலா 


21.'மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

அ) சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது 

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பத்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

விடை:அ) சங்ககாலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது 


22.அருந்துணை என்பதைப் பிரித்தால்

அ) அருமை+ துணை

ஆ) அரு +துணை

இ) அருமை+ இணை

ஈ) அரு +இணை

விடை:அ) அருமை+ துணை


23.'இங்கு நகரப் பேருந்து நிற்குமா? என்று வழிப்போக்கர் கேட்டது_______ வினா

'அதோ, அங்கே நிற்கும்' என்று மற்றொருவர் கூறியது_____ விடை

அ) ஐய வினா, வினா எதிர் வினாதல்

ஆ) அறிவினா, மறைவிடை

இ) அறியா வினா, சுட்டு விடை

ஈ) கொளல் வினா, இனமொழி விடை

விடை:இ) அறியா வினா, சுட்டு விடை


24."அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி 

மருளை அகற்றி மதிக்கும் தெருளை" 

-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ் 

ஆ) அறிவியல் 

இ) கல்வி 

ஈ) இலக்கியம் 

விடை:இ) கல்வி 


25.இடைக்காடனாரின் பாடலை இழந்தவர்______. இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்________.

அ) அமைச்சர், மன்னன்

ஆ) அமைச்சர், இறைவன்

இ) இறைவன், மன்னன்

ஈ) மன்னன், இறைவன்

விடை:ஈ) மன்னன், இறைவன்


26.குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்_____

அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடை:இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் 


27.கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர் 

கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது. 

அ) கூற்று 1 சரி 2 தவறு

ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு

இ) கூற்று 1 தவறு 2 சரி

ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

விடை:ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி


28.மலர்கள் தரையில் நழுவும், எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால்

ஆ) தளரப் பிணைத்தால் 

இ) இறுக்கி முடிச்சிட்டால் 

ஈ) காம்பு முறிந்தால் 

விடை:ஆ) தளரப் பிணைத்தால் 


29.தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது- இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்குமேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்குமேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டுவிழா நடத்தப்பட்டது?

விடை:ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?


30.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன? 

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால் 

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால் 

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

ஈ) அங்கு வறுமை இல்லாததால் 

விடை:ஈ) அங்கு வறுமை இல்லாததால் 


31.சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க

அ) உழவு, மண், ஏர், மாடு 

ஆ) மண், மாடு, ஏர், உழவு 

இ) உழவு, ஏர், மண், மாடு 

ஈ) ஏர், உழவு, மாடு, மண்

விடை:இ) உழவு, ஏர், மண், மாடு 


32.'மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்' மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

அ) திருப்பதியும் திருத்தணியும்

ஆ) திருத்தணியும் திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்

ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

விடை:அ) திருப்பதியும் திருத்தணியும்


33.'தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன்' என்னும் மெய்க்கீர்த்திதா தொடர் உணர்த்தும் பொருள்-

அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்

ஆ) மிகுந்த செல்வம் உடையவர் 

இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர் 

ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர் 

விடை:ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர் 


34.இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்______

அ) நாட்டைக் கைப்பற்றல்

ஆ) ஆநிரை கவர்தல் 

இ) வலிமையை நிலைநாட்டல்

ஈ) கோட்டையை முற்றுகையிடல் 

விடை:இ) வலிமையை நிலைநாட்டல்


35.தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது______

அ) திருக்குறள் 

ஆ) புறநானூறு 

இ) கம்பராமாயணம் 

ஈ) சிலப்பதிகாரம் 

விடை:ஈ) சிலப்பதிகாரம் 


36.மேன்மை தரும் அறம் என்பது______

அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது 

ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது

ஈ) பதில் உதவி பெறுவதற்காக அறம் செய்வது 

விடை:அ) கைமாறு கருதாமல் அறம் செய்வது 


37.'வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்' இவ்வடி குறிப்பிடுவது______

அ) காலம் மாறுவதை 

ஆ) வீட்டைத் துடைப்பதை 

இ) இடையறாது அறப்பணி செய்தலை 

ஈ) வண்ணம் பூசுவதை

விடை:இ) இடையறாது அறப்பணி செய்தலை 


38.உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதயன்; சேரலாதன்

ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்

இ) பேகன்; கிள்ளிவளவன்

ஈ) நெடுஞ்செழியன், திருமுடிக்காரி

விடை:ஆ) அதியன்; பெருஞ்சாத்தன்


39.காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர்______

அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது

ஆ) என்மனம் திகழ்ந்தால் இறந்து விடாது

இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்

ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்

விடை:அ) இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது


40.சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பா தினம்______

அ) அகவற்பா

ஆ) வெண்பா 

இ) வஞ்சிப்பா 

ஈ) கலிப்பா

விடை:அ) அகவற்பா


41.'பிரிந்தன புள்ளின் கானில் 

பெரிதழுது இரங்கித் தேம்ப' பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க.

அ) கிளை, துளை

ஆ) நிலம், வாட

இ) காடு, வாட

ஈ) காடு, நிலம்

விடை:இ) காடு, வாட


42.சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் 

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம் 

ஈ) வெளிநாட்டு முதலீடுகள் 

விடை:ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்


43.பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ______வேண்டினார்

அ) கருணையன், எலிசபெத்துக்காக

ஆ) எலிசபெத், தமக்காக

இ) கருணையன், பூக்களுக்காக

ஈ) எலிசபெத், பூமிக்காக

விடை:அ) கருணையன், எலிசபெத்துக்காக


44.வாய்மையே மழைநீராகி- இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை 

ஆ) தற்குறிப்பேற்றம் 

இ) உருவகம் 

ஈ) தீவகம் 

விடை:இ) உருவகம் 


45.கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் -இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது:

அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலைக்கினார்

ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார். 

இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்

ஈ) அழகியலுடன் இலக்கியம் படைத்தார்.

விடை:ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார். 

புதன், 11 டிசம்பர், 2024

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

 


அன்பு மகளே... மது ஸ்ரீ...

எப்போதும் சுறுசுறுப்பாக இரு. 

சுற்றி இருப்பவற்றை உற்றுக் கவனி...

ஏன்? எதற்கு? என்று யோசி. 

கேள்விகளைத் தூக்கித் திரி. 

பரவாயில்லை ...

கேள்விகளுக்கு விடை எங்கு கிடைக்குமோ? 

அங்கே தேடிப்பார். 


உனக்கு எது கிடைத்தாலும் 

அது உன்னுடைய முயற்சியால்... 

உன்னுடைய உழைப்பால் ...

கிடைத்ததாக இருக்க வேண்டும் 

உழைப்பைப் பெரிது என 

உணர்ந்து கொள்.

உழைப்பை நேசி !

உழைப்பு உன் உடலை வலுவாக்கும் !

உழைப்பு உனக்கு வலியைத் தருவதாக எண்ணாதே !

உழைப்பு உனக்கு வலிமையைத் தரும். 

உழைப்பு ஏற்படுத்தும் உடல் வலியோ,

சலிப்போ, சோர்வோ 

எதுவாகினும் கலங்காதே !

சிறிது ஓய்வெடு. 

மீண்டும் உழை.

உன் நெற்றி வியர்வை 

மண்ணில் விழ வேண்டும் !

அது, நீ பிறந்த பூமிக்குத் 

திருப்பி தரும் பரிசு. 

நீ முயன்று முயன்று 

படிப்பதும் உழைப்புதான்  


நீ உன்னை 

மதிக்க கற்றுக்கொள் !

நீ உன்னை 

நம்பக் கற்றுக்கொள் !

நீ உன்னை நேசி !

நீ உன் உடலை நேசி !

நீ உன் உள்ளத்தை நேசி !

நீ உன்னைக் கடவுளின் 

குழந்தையாகக் கருதிக்கொள் 

ஆம். 

பூமியில் உள்ள அனைவருமே 

கடவுளின் குழந்தைகள்தான்.

கடவுளின் குழந்தைகளுக்கு 

கடவுளின் சக்தி அனைத்தும் உண்டு! 


உன்னிடம் சக்தி இருக்கிறது 

அதைக் கண்டுபிடி 

உனக்கு என்ன செய்ய பிடித்திருக்கிறது 

என்று கண்டுபிடி. 

அது, உனக்கு நன்மை செய்கிறதா? 

என்று யோசி! 

உனக்கு மட்டுமல்ல... 

உன் உடன் இருப்பவருக்கும் 

நன்மை தருமானால் 

அதையே திரும்பத் திரும்பச் செய் 

கஷ்டப்பட்டு பிறருக்காகப் 

பிடிக்காததைச் செய்யாதே! 

இஷ்டப்பட்டதால் பிறருக்குப் 

பிடிக்காததை செய்யாதே!

நீ செய்வது உனக்கும் பிடிக்க வேண்டும் 

உன் உடன் இருப்பவருக்கும் பிடிக்க வேண்டும் 

உன்னால் உன்னைச் சுற்றிருப்பவருக்கு 

நன்மை இருக்க வேண்டும் !

பிறருக்குத் தீங்கு செய்யாதே !

முடிந்தவரை நன்மையே செய் !

நன்மை செய்ய முடியாதபோது 

அமைதியாய் இருந்து விடு.

எப்போதும் அமைதியை விரும்பு. 

ஆனால், அமைதியாக இருந்து விடாதே! 


அனைவரிடமும் அன்பாகப் பேசு 

உன்னை அனைவருக்கும் பிடிக்கும் 

என்று சொல்லுமாறு நடந்து கொள் !

ஆனால், சிலர் உன்மீது 

பொறாமைப் படலாம்.

அவர்களைக் கண்டுகொள்ளாதே! 

சிலர் நீ எது செய்தாலும் 

உன்னைக் குற்றம் சொல்லலாம் !

காது கேட்காததுபோல் நடந்துகொள்! 

வருத்தப்படாதே! 

எது நடந்தாலும் கலங்காதே! 

வெற்றி பெறவேண்டும் என்று ஆசைப்படு!

ஆனால், தோல்வி கிடைத்தால் 

வருந்தாதே! கலங்காதே! 

மீண்டும் முயற்சி செய்! 

எத்தனை முறை தோற்றாலும் 

கவலை கொள்ளாதே! 

உன் முயற்சியைக் கைவிடாதே! 

முயற்சி செய்வது மட்டும்தான் உன் கடமை. 

வெற்றி கிடைக்க வேண்டும் 

என்பது அவசியமில்லை! 

தோல்வியும் சில நேரம் நன்மை தரும்.

பல முயற்சிக்குப் பிறகும் தோற்றால் 

அதற்கு நீ காரணம் இல்லை 

என்று எண்ணிக் கொள்! 

எப்போதும் தெளிவான சிந்தனையுடனே இரு !

நல்ல நூல்களை வாசி. 

முடிந்தால்... நேரம் இருந்தால் ...

மீண்டும் மீண்டும் வாசி !

வாசித்ததைப் பற்றி 

கண்களை மூடிக்கொண்டு யோசி. 

இதுவரை யாரும் கண்டுபிடிக்காத அதிசயத்தை 

நீ கண்டுபிடிக்கலாம் !

கற்பனையாக எதையாவது சிந்தித்துப் பார்.

பல கண்டுபிடிப்புகள் 

கற்பனையிலிருந்து பிறந்தவைதான் ...

நல்ல நண்பர்களோடு பழகு 

தீய நண்பன் என்று தெரிந்துவிட்டால் 

அவர்களின் முகத்துக்கு நேரே சொல்லிவிடு...

உன் நட்பு வேண்டாம் என்று.


என்றும் எப்போதும் துணிவுடன் இரு! 

துணிவே துணை! என்பார்கள் 


நீ தவறு செய்துவிட்டால் 

பயப்படாதே! 

தாமதிக்காதே! 

ஆமாம். நான்தான் செய்தேன். 

தெரியாமல் நடந்து விட்டது, 

இனிமேல் செய்யமாட்டேன் 

என்று சொல்லக் கற்றுக்கொள்.

அதற்காகத் தவறு செய்யலாம் 

என்று சொல்லவில்லை! 

முடிந்தவரை தவறு செய்யாதே !

அவ்வாறு செய்தாலும் 

அதை மறைக்காதே! 

மறைப்பதுதான் பெரிய தவறு !

பொய் சொல்வது 

அதைவிடப் பெரிய தவறு !


எதைப் பற்றி வேண்டுமானாலும் 

அம்மாவிடம் பேசு 

அம்மா என்ன நினைப்பார்கள்? 

என்று தயங்காதே 

உன்னை முழுவதுமாகச் சுமந்தவள் !

உயிர் இருக்கும் வரை 

உன்னைப் பற்றியே நினைப்பவள்! 

உன்னைப்பற்றி 

எல்லாம் தெரிந்தாலும்,

நீயாகச் சொல்லாமல் 

அம்மாவால் உனக்கு வழிகாட்ட முடியாது. 

உன் மனதில் தோன்றும் 

எதுவாக இருந்தாலும் ...

உன் அம்மாவிடம் பேசு. 

உனக்கும் உன் அப்பாவாகிய எனக்கும் 

முப்பது ஆண்டுகள் இடைவெளி 

ஒரு தலைமுறை இடைவெளி 

உன் உலகம் எனக்குத் தெரியாது !

சில நேரம் உன் மீது கோவப்படுவேன். 

எல்லாம் உன் நன்மைக்காகவே !

அது உனக்கு கெடுதல் தந்தால்,

என்னை மன்னித்துவிடு! 

நான் தெரிந்தே 

உனக்குத் தீமை செய்ய மாட்டேன்! 


உன் ஆசைகள் எனக்குத் தெரியாது.

உன் தேவைகள் எனக்குத் தெரியாது.

எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லி, 

என்னிடம் கேட்டுக் கொள் !


நம்மைப் பிறர் மதிக்க வேண்டும் என்றால், 

நம்முடைய அறிவை 

வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 

இவ்வளவு படித்தால் போதுமா? 

அவ்வளவு படித்தால் போதுமா? 

என்று எண்ணாதே !

உன் மனம் விரும்பும்வரை படி.

உன் படிப்பு 

உனக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும். 

உன் படிப்பு 

உனக்கு வலிமையைத் தர வேண்டும் 

உன் படிப்பு 

உனக்கு நண்பர்களைத் தேடித் தர வேண்டும் 

அதனால், நன்றாகப் படி !

உனக்கு தன்னம்பிக்கை இருக்கும்வரை 

எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு மகளே!

வியாழன், 7 நவம்பர், 2024

பல்வகை

அரிது அரிது 

அரிதினும் அரிது மானிடப் பிறப்பு 

அதனினும் அரிது குறையின்றிப் பிறத்தல் 

அதனினும் அரிது நல்லோர்சொல் கேட்டல் 

அதனினும் அரிது தேர்ந்து கற்றல் 

அதனினும் அரிது நல்லோர் நட்பு 

அதனினும் அரிது அன்பைச் சேர்தல் 

அதனினும் அரிது கவலை ஒழித்தல் 

அதனினும் அரிது ஞானம் பெறுதல் 

அதனினும் அரிது தாய்மை யாமே!

உண்மை

அரிச்சந்திரன் வாழ்வு

அஸ்தமனம் 

அடையும் வேளையிலும்

அவனுள்ளம் 

அசுத்தமடைய வில்லை. 

கடமையே பெரிதாய்

வாய்மையே வாழ்வாய்

வாழ்வுக்கு இலக்கணமாய்

வாழ்ந்தவன் 

காந்திக்கு மட்டுமல்ல 

யாவர்க்கும் வழிகாட்டி.

நிறைகுறை

இருள் அதிகம், ஒளி குறைவு

மருள் அதிகம், மதி குறைவு

பொய் அதிகம், மெய் குறைவு

மண் அதிகம், பொன் குறைவு

கரி அதிகம், வைரம் குறைவு

அதிகமெல்லாம் பெருமையல்ல!

குறைவெல்லாம் சிறுமையல்ல!

சிந்தனை 

கோடி நினைப்பு 

ஓர் நொடிக்குள் 

ஓடிப் பாய்ந்து 

மாய்ந் திடினும் 

வாடி நிற்கும் 

வாழ்வு செழிக்க 

தேடிப் பார்க்கும் 

நினைப் பில்லையே !

தவம்அது 

வேண்ட வேண்ட வரம்தரும் !

தண்ணீர்அது 

தோண்டத் தோண்ட ஊறும்!

வைரம்அது 

வெட்ட வெட்ட மின்னும்!

பொன்அது 

சுடச்சுட ஒளிரும் !

வாழ்வுஅது 

துன்பம் வருத்தும் அளவிற்கே!

உதவி

மழை மறுபயன் கருதாமல் பொழிகிறது !

மரம் மறுபயன் கருதாமல் காய்க்கிறது !

நிலம் மறுபயன் கருதாமல் சுமக்கிறது !

மனிதா! 

மறுபயன் கருதாமல் மானிடர்க்கு உதவு 

மனக்கவலை ஒழியும்! 

மாண்புகழ் பெறுவாய்! 

இன்றேல் 

துரோகம், 

ஏமாற்றம், மனச்சோர்வு, விரக்தி 

யாவும் குடிபுகுமே!

மாறாமை

தாமரைக் குளத்துள்ளே பிறப்பினும்

தவளையின் குணமது மாறிடுமோ?

அமிர்தமழை ஆயிரமாயிரம் ஆண்டுகள் பெய்திடினும்

ஆழ்கடல் நீர்தான் தித்திக்குமோ?

பாலோடு தேனூற்றி வார்த்தாலும் இலவம்

பஞ்சேயன்றி பழுத்தகனி தந்திடுமோ?

கயமாணாக்கர் மனங்கோணும் செய்கையன்றி

கடுகளவும் அன்பில் ஒழுக மாட்டாரே!

திருமண வாழ்த்து 

செல்லம் நீ! 

ஜோதிலிங்கராஜீன் செல்வம் நீ!

கோடித் தொலைவில் இருப்பினும்

சூரியனைக் கண்டு மலரும் 

தாமரை நீ!

மண்ணில் விளைந்த பொன்னாய்

கடலில் விளைந்த முத்தாய் 

மலையிடைப் பிறந்த மணியாய்

காட்டிடை வளர்ந்த அகிலாய்

சந்தனத்தின் நறுமணமாய்

கதிர் ஒளியாய்

ஒளியும் மணமும் நிறைந்து,

கடலில் கலக்கும் நதியாய் 

உடலில் ஓடும் உயிராய் 

தாமரை மலரின் இதழாய் 

கண்ணைக் காக்கும் இமையாய் 

அணுவின் பிணைப்பாய்

என்றும் இணைந்து 

உள்ளம் கனிந்து

தேன்போல் சிறந்து

நீடுழி நீடுழி வாழிய வாழிய 

எனவே வாழ்த்துகின்றேன் !!!




புதன், 30 அக்டோபர், 2024

தீபாவளி வாழ்த்துக்கள்

இவ்வினிய தீபத் 
திருநாள் முதல் 
அலட்சிய அசுரன் 
அடியோடு அழியட்டும்! 
சினமென்னும் அரக்கன் 
வெடித்துச் சிதறட்டும் !
பொல்லாத பொறாமை 
பொசுங்கி அழியட்டும் !
பேரிடரில் ஆழ்த்தும் 
பேராசை அழியட்டும் !
அலைபேசி அரக்கன் 
ஆழ்மண்ணில் புதையட்டும்!
வதந்தி அரக்கன் 
உடல்வற்றி அழியட்டும் !
படிப்பறிவின்மை, 
பகுத்தறிவின்மையால் 
விளைந்த 
மயக்கம் என்னும் அரக்கன் 
மண்ணோடு மடியட்டும்!
வெறுப்பு அரக்கன் 
வெந்து அழியட்டும் !
மனக்குழப்பம், அடிமை உணர்வு 
என்னும் அசுரர்களை 
திசையெட்டிலும் கொளுத்துவோம் !!
இல்லமெங்கும் 
மானிடர் உள்ளமெங்கும் 
உண்மை ஒளி பரவட்டும்!!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!

திங்கள், 28 அக்டோபர், 2024

தீபாவளி வாழ்த்துக்கள்

பேதங்கள் ஒழிந்து

நல்லிணக்கம் மலர்ந்து

கீழ்மை அகன்று

அறத்தின்பால் நின்று

அன்பால் கட்டி

அகிலத்தை நடத்தும்

அறிவொளி பரவட்டும்

திக்கெட்டும்.

தமிழன் என்றோ

திராவிடன் என்றோ

பாகுபாடு காட்டும் எண்ணம்

பழந்தமிழர் மரபில் கிடையாது.

சாதிய மத இன பிராந்திய

பாகுபாடு

தமிழர் பண்பாட்டிற்கு

எதிரானது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்பதே தமிழர் பண்பாடு.

அந்த எண்ணம் மேலிட

நம் முன்னோர்களின் 

கடல் ஆளுமையே காரணம்.

திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்.

ஒன்றே குலம்

என்னும் கருத்துடையவர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்

என்பது தமிழர் பண்பாட்டின் உச்சம்.

அயலாரை பிறமொழி தேயத்தார்

என்றே அழைத்தனர்.

பாகுபாடு காட்டுவது தமிழர்

மரபன்று. அது

அரசியல் சொல்லாடல்.

மக்களைப் பிரித்தாள்பவரின்

முயற்சிகளே 

ஆரியர் திராவிடர் தமிழர் 

இஸ்லாமியர் கிறித்துவர் 

மேட்டுக்குடி தலித் என்பன.

பாகுபாடு அகலட்டும்

தீப ஒளியில்!

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் 

காலம் மாறி கரியளவு மாறி

கால நிலைமாறி மேக நிலைமாறி 

மாரி நிலைமாறி மிகக்கன மழையிடர் 

மாறக் காண்பீர் காலநிலை பேணும்வழி.

நீரறிவாண்மை

ஆரிமழை யமிழ்தமாய்ப் பெய்திடினும் -எம்மவர் 

ஏரிகுளங்கால் வாயடைத்துத் தேங்கிய நீர்கண்டு 

தேம்பியழுதார் அழுவார்ப்பின் காலிக்குடங்க ளோடு

தேவரீர் தருவீர் நிலத்தடிநீர் தேரும் ஞானம்!

நீரறிவு

புயலில்லை சூறா வளியில்லை - கொட்டிப்

பெய்தநீ ரோடவில்லை வெள்ளமே யெங்கும் 

வெளிநாட்டின் காட்சிபோல் தென்னாடு திகைப்புறும்

நிலையொழிய நீரறிவு வேண்டும்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இலக்கு என்னும் வயலைத் தேர்ந்தெடுத்து

உழைப்பு என்னும் ஏரால் உழவுசெய்து

நேர்மை என்னும் விதைவிதைத்து

விடாமுயற்சி என்னும் நீர்பாய்ச்சி

தன்னம்பிக்கை என்னும் உரமிட்டு

சோம்பல் என்னும் களைபறித்து

கவனம் என்னும் வேலியிட்டு

வெற்றி என்னும் கனிபறிக்க

2024 அருள்புரியட்டும்!

பொங்கல் வாழ்த்து

கசந்த காலங்கள் கடந்து செல்ல

வசந்த காலங்கள் வந்து வாழ்த்த

நித்திரை கண்டது போதும் - நீ

வெல்லும் காலமே இனி எப்போதும்!

கரும்பு போலவே வாழ்க்கை இனிக்கட்டும்

பொங்கல் போலவே மகிழ்ச்சி பொங்கட்டும்

மஞ்சள் போலவே அழகு பெருகட்டும் 

வாழை போலவே வம்சம் தழைக்கட்டும்

மாவிலைத் தோரணமாய் மங்களம் சேரட்டும்.

ஆசிரியர் தினம்

தந்தையின் அக்கறையும்

தாயின் அன்பும்

இறைவனின் அருளும்

ஓருருவாய் வாய்த்த 

என் ஆசிரியர் சமூகத்திற்கு

அன்பு வணக்கம்!

உள்ளத் தூய்மையும் 

நன்னெறி வாழ்க்கையும் பூண்ட

நீங்கள் நீடுழி நீடுழி

நலம்வாழ இறைவனை வேண்டுகிறேன்!

உண்மை

கண்ணால் காண்பதெல்லாம் 

காட்சி அல்ல- அகக்

கண்கொண்டு காண்பதே காட்சி.

காதால் கேட்பதெல்லாம் 

கேள்வி அல்ல -மனக்

காதால் கேட்பதே ஞானம்

வாயால் பேசுவதெல்லாம் 

பேச்சல்ல -மனத்தில் 

இருந்து பேசுவதே பேச்சு 

திருமண நாள் 

வாழ்க்கைத் துணையாய் வந்து வாய்த்தவளே!

வராத வரமாய்த் துணை நின்றவளே!!

வாழும் காலமெல்லாம் விருந்து சமைத்தவளே !!!

இடைவந்த பிணியறுத்த அருமருந்தே !!!

கடைவந்து கவலை தீர்ப்பாய் ஆரமுதே !!!

அன்பே ! அழகே ! தேவதையே ! 

பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தீந்தமிழே!

!!

ஆன்மீகம் 

இந்துக்களுக்கு முஸ்லீம்களுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை. 

யானைகளுக்கு எறும்புகளுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை.

இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பொதுவானவர். அழிவற்றவர். மேலானவர். ஒருவர். பலர். வடிவினர். வடிவற்றவர். 

இறைவனைத் தன் உள்ளுணர்வால் கண்டுபிடித்தவன் மனிதன். இறைவனைப் பலவாறாகச் சித்தரித்தவன் மனிதன்.

மனத்தால் வழிபடப்பட வேண்டிய இறைவனுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் தோற்றுவித்து, கட்டுக்கதைகளை விதைத்து மனிதரில் பிரிவினை செய்தவன் மனிதன். இறைவனையே பலகூறாக்கிப் பிரித்தவனும் மனிதனே. மனிதரில் மனிதரைப் பிரித்துப் பகைமை வளர்த்தவனும் மனிதனே.

அறிவியல் கலவாத ஆன்மீகம் பயனற்றது. ஆன்மீகம் இல்லாத அறிவியலும் பயனற்றது.

விருப்பு வெறுப்பு இல்லாதவர் இறைவன். அவர் நல்லவர்களுக்கு வாரி வழங்குவதும் இல்லை. தீயோரைத் தண்டிப்பதும் இல்லை. இருவகைத்தார்க்கும் ஒன்றே செய்வார். நல்லவர்கள் எல்லாம் நன்றாக வாழ்வதும் இல்லை. கெடுதல் செய்வோர் எல்லாம் கெடுவதும் இல்லை. எவர் மனவலிமை உடையவரோ அவரே வசதியுடன் வாழ்வார். நல்ல மனம் இருந்தும் மனத் திட்பம் இல்லாமல் இருந்தால் அவர் நல்லவராய் மட்டுமே வாழ்வார். நன்றாக வாழ மாட்டார்.

தீய மனம் கொண்டவர் மன உறுதியுடன் வாழ்ந்தால் அவர் கெட்டவராய் (மனம் போன போக்கில் கொடுமைகள் செய்து) இருந்தாலும் வசதியுடன் வாழ்வார். வாழ்வதற்கு மனத் திடம் முக்கியம். அதற்கு இறை நம்பிக்கை உதவலாம். இறை நம்பிக்கை இல்லை என்றால் நுண்ணறிவும் நூலறிவும் வேண்டும்.

மணற்கிணறு

கடிக்கும் போதுதான் தெரிகிறது

கரும்பு எவ்வளவு இனிக்கும் என்று!

உழைக்கும் போதுதான் தெரிகிறது

வியர்வையின் மதிப்பு என்னவென்று!

தோல்விக்குப் பின்தான் தெரிகிறது

வெற்றிக்கு என்ன வேண்டும் என்று!

படிக்கும் போதுதான் தெரிகிறது

கற்றது கைம்மண்ணளவு தானென்று!


நீரளவே ஆகும் நீர் ஆம்பல்

தோண்டும் அளவே சுரக்கும் மணற்கிணறு

வியர்வையின் அளவே விளைச்சல்

படிக்கும் அளவே நூற்பயன் ஆகுமப்பா!

தன்னம்பிக்கை கவிதை

ஓடுகிற நீரில் 

பாசி படியாது. 

உழைப்பாளி உள்ளமதில் 

கபடம் கலவாது. 

சமூகமே சாக்கடை ஆனாலும் 

தாமரை போல் மலருங்கள். 

நாற்றமெடுத்த சிப்பிக்குள்ளும் 

முத்துப்போலே ஒளிருங்கள்.

கவலைவிடு

தலையிலிருந்து இழிந்த மயிரை எண்ணி கோபமோ வருத்தமோ அடைய வேண்டியதில்லை. அதுபோலவே உணர்வு மாறுபட்டு, கருத்து வேறுபட்டு விலகிச் செல்லும் உறவுகளை எண்ணி விசனம் அடைய வேண்டியதில்லை. வழுக்கையே விழுந்தாலும், வழுக்கி விழுந்தாலும் கவலை வேண்டாம் 

தத்துவம் 

வாழ்க்கையின் தத்துவத்தை 

மதி கற்பிக்கிறது. 

வளர்வதும் தேய்வதும் 

மதி(நிலா)யும் அறிவும் 

மதிப்பும் மரியாதையும் 

என்று உணர்ந்து 

உணர்வுகட்கு ஆட்படாது 

இன்பத்தையும் துன்பத்தையும் 

சரிசமமாகப் பாவிக்கும் 

பக்குவம் பெறுவோம்.

ஞானம்

தீமை வேறு, தீமை செய்தவர் வேறு என்று உணரும் ஞானம் ஞானிகளுக்கே உரிதாம். 

திருமண நாள் வாழ்த்து - கவிதை

கடல் வானைச் சேர்வதும்

வான் கடலைச் சேர்வதும்,

பரிதியை மதி தொடர்வதும்

மதியைப் பரிதி தொடர்வதும்,

கடலைக் காற்று தழுவுவதும்

காற்றைக் கடல்தழுவுவது போல

உருவைத் தொடரும் நிழல்போல

உடலில் கலந்த உயிர்போல

ஒன்றின் ஒன்றாய்க் கலந்து

பல்லாண்டு பல்லாண்டு 

கூடி மகிழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்!

பிறந்தநாள் வாழ்த்து கவிதை -மாதிரி

இருபெருஞ்சுடரும் 

உனக்கு வழிகாட்ட,

இன்னமுத மழை

உன் வேருக்கு நீரூற்ற,

இருகடல் எழுந்து

உன் செவிக்கு இசையூட்ட,

இருநிலம் ஏந்தி

உன்னைத் தாலாட்ட,

இசைகொண்டு 

தமிழ்த்தாய் பாலூட்ட,

வான்மிசை தொட்டு

வளர்வாய் நீ!

ஆரமுதாய் விளைவாய் நீ!

அன்பிற்கினிய கபிஷ் நாத் 

உனக்கு என் இனிய 

அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்!

வியாழன், 10 அக்டோபர், 2024

சரஸ்வதி பூஜை

வைகறையில் துயிலெழுந்து,

ஓடி முடித்து, களித்து, குளித்து,

அமுதுண்டு, புத்தகங்களை அடுக்கி, 

சந்தனம் குங்குமமிட்டு 

வழிபட்டு வாஞ்சையுடன் முகத்தில் ஒற்றி 

சரஸ்வதியை வரவேற்று வணங்கி 

அடக்கமாகச் சம்மனம் இட்டு உட்கார்ந்து 

ஆசையுடன் படித்த பிள்ளைப்பருவ நாட்கள் 

வாஞ்சையுடன் வருடிச் செல்கின்றன என்னை இந்நாளில்...

தங்கமகளே

என் உள்ளத்தை கொள்ளை கொண்ட 

வெள்ளை அழகே !

கமகமக்கும் சந்தனமே!

மணமணக்கும் மரிக்கொழுந்தே !

என் வாழ்வின் நம்பிக்கைக் கீற்றே !

என் சிம்மாசனத்தின் மணிமகுடமே !

என் சிங்கமே !

தகதகக்கும் தங்கமே !

வீரத்தின் விளைநிலமே !

விவேகப் பேச்சே !

தெளிந்த மதியே !

பொருந்திய குணவதியே !

தாங்கி நிற்கும் தூணே! 

துள்ளி குதிக்கும் மீனே!

துயர் துடைக்கும் மானே! 

கட்டிக் கரும்பே! வெட்டி வேரே!

புதன், 9 அக்டோபர், 2024

வரவேற்புரை ஏஆர்ஆர் சீனிவாசன் எம்எல்ஏ

அரசியலில் ஆழங்கால்பட்டவரே

அலைகடல் கூட்டத்தின் நாயகரே


ஆர்ப்பரிக்கும் கடலாய்

இடையறாது மக்கள் பணியாற்றும் கடமை வீரரே


உண்மை நேர்மை உழைப்பின் உறைவிடமே

ஊரெங்கும் சுற்றி வரும் தேரே


எண்ணம் சிதையாமல்

எடுத்த காரியம் குறையாமல்

ஏழையவர் குறைதீர்க்கும் மாமருந்தே


விருதுநகர் பெற்றெடுத்த தங்கமே-மும்முறை

வெற்றியை ருசித்த சிங்கமே


வாழ்நாளெல்லாம் மக்கள் பணியாற்றி வரும் மாமணியே-உம்மை

வருக வருக என வரவேற்பதில் இப்பள்ளி பெருமைகொள்கிறது.

அன்பு மகளே

என் உயிரே! ஆயிரங் காலத்துப் பயிரே!

என் கனவே! என்றென்றும் உன் நினைவே! 

நீ பிறந்த போது நானும் புதிதாய்ப் பிறந்தேன்! உள்ளம் மகிழ்ந்தேன்! நீ முழுதும் தேன்! என உணர்ந்தேன்.

உன்னை நினைத்தேன்! 

நினைத்தபொழுதெல்லாம்,

தேன் மழையில் நனைந்தேன்!

உன் பொக்கை வாய்ச்சிரிப்பில், பூ மலர்வதைக் கண்டேன்! 

நீ தவழ்கையில், உலகமே தவழ்ந்து கொண்டுதான் இருந்தது.

உன் குறுகுறு நடைக்கு ஈடு இணை ஏது?

உன் குடுகுடு ஓட்டம், முயலினை நினைவூட்டும்! 

உண்ண மறுக்கும் உனக்கு 

வித்தை காட்டி ஊட்டினேன்!

செல்லும் இடந்தோறும் உன்னை மறக்காமல் அழைத்துச் சென்று வந்தேன். 

எனக்கு உற்ற துணையாக வந்தாய்!

நாள்தோறும் வளர்ந்தாய்!

ஊரெல்லாம் சுற்றினோம் 

உண்டோம், குளித்தோம், களித்தோம்.

கிளியைப் போல மொழியைக் கற்றாய் !

எழுத்துக்களை உச்சரித்தாய் !

எழுத்துக்களைக் கூட்டி உயிரளித்தாய் !

அன்னை மொழியின் அமுதமொழி இனித்தது.

வாசித்தாய், வளர்ந்தாய், உயர்ந்தாய்!

அது கண்டு நிமிர்ந்தேன். பயிற்சிகள் பல தந்தேன். அதில் உனது வெற்றியைக் கண்டேன். உள்ளம் மகிழ்ச்சி கொண்டேன்.

சனி, 14 செப்டம்பர், 2024

வாகை சூடி

  1. அச்சம் அகற்று 
  2. ஆர்வம் கொள் 
  3. இளமையை உணர். 
  4. ஈட்டி போல் பாய் 
  5. உலகம் சுற்று 
  6. ஊரோடு இணங்கு 
  7. எளிமையாய் வாழ் 
  8. ஏறிச் செல் 
  9. ஐயம் விலக்கு 
  10. ஒன்றே உலகம் 
  11. ஓது ஓது 
  12. ஔவை சொல் கேள் 
  13. கவலை ஒழி 
  14. காது கொடு
  15. கிழக்கு உனக்கே 
  16. கீழ் மேலாகும் 
  17. குறட்பா படி 
  18. கூடி வாழ்   
  19. கெட்டோர் விலக்கு 
  20. கேட்டது கிடைக்கும் 
  21. கையை நம்பு 
  22. கொடுத்து வாழ் 
  23. கோணல் வேண்டாம் 
  24. சபதம் எடு 
  25. சாதித்துக் காட்டு 
  26. சிந்தனையை விரிவாக்கு 
  27. சீற்றம் வேண்டாம் 
  28. சும்மா இருக்காதே 
  29. சூடு சொரணை வேண்டும் 
  30. செருக்கு வேண்டாம் 
  31. சேமித்துப் பழகு 
  32. சைவம் நன்று 
  33. சொற்படி நட 
  34. சோற்றுக்கு உழை 
  35. தமரைப் பெருக்கு
  36. தாமதம் வேண்டாம் 
  37. திடமாயிரு 
  38. தீர விசாரி 
  39. துணிவுகொள் 
  40. தூரம் இல்லை 
  41. தெரிந்து கொள் 
  42. தேடிப்பார் 
  43. தைரியம் வேண்டும் 
  44. தொட்டது விடாதே 
  45. தோகை விரி 
  46. பண்பை வளர் 
  47. பாட்டி சொல் கேள் 
  48. பிதற்றல் வேண்டாம் 
  49. பீடை மற 
  50. புண்ணியம் செய் 
  51. பூமி உனக்கே 
  52. பெருமை கொள் 
  53. பேறு பெறு 
  54. பைசா சேர் 
  55. பொய் சொல்லாதே 
  56. போக்கிடம் தேடாதே 
  57. நன்மை செய் 
  58. நாட்டம் கொள் 
  59. நிலம் தொழு 
  60. நீர் சேமி 
  61. நுட்பம் அறி 
  62. நூல் உருவாக்கு 
  63. நெகிழ்ச்சி வேண்டும் 
  64. நேசம் காட்டு 
  65. நைந்து விடாதே 
  66. நொடியிலும் வாழ் 
  67. நோன்பு பழகு 
  68. மனசாட்சிப்படி வாழ் 
  69. மானம் பெரிது 
  70. மிரண்டு விடாதே 
  71. மீட்சி உண்டு 
  72. முயற்சி வெல்லும் 
  73. மூளையைச் சுத்தமாக்கு 
  74. மெல்லப் பேசு 
  75. மேற்கிலும் உதி 
  76. மொழி அறி 
  77. மோதிப்பார் 
  78. வலிமையை உணர் 
  79. வாய்ப்பைத் தவறவிடாதே 
  80. விடுதலை விரும்பு 
  81. வீறு கொள்
  82. வெற்றி உனதே 
  83. வேடிக்கை வேண்டாம் 
  84. வையம் வாழ்த்தும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

வரவேற்புரை

மணியை ஈன்றதால் மாமலையும் 

முத்தை ஈன்றதால் சிப்பியும்

பவளத்தை ஈன்றதால் கடலும் 

அகிலை ஈன்றதால் காடும் 

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும் 

பெருமை அடைவது போல 

நகைச்சுவை மருத்துவர் ஞான சம்பந்தனை ஈன்றதால் முத்தமிழும் தமிழ்வளர்த்த மதுரையும் பெருமை கொள்கிறது.

தீராத வானத்தில் ஓடும்

முடிவில்லாத கதிர்கள் போல...

அடங்காத பெருங்கடலில் தாவும்

ஓயாத அலைகள் போல...

அழிவில்லாத மானுடத்திற்கு உள்ளொளி பாய்ச்சுகின்ற உத்தமரே, வருக!


அமிர்தம் வேண்டிப் பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்

அடைக்கலம் வேண்டிக் கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள் 

அருந்தமிழோங்கச் சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்

அதுபோல,

அன்னைத்தமிழின் உள்ளம் மகிழ,

ஆற்றாமக்கள் சிந்தை மகிழ,

அருந்தமிழ்ச் சான்றோர் அகமகிழ,

நகைச்சுவை இலக்கியத்தின் நாயகராய்

வருகை தந்திருக்கும்,

இயற்றமிழ் வித்தகரே,

முதற்சுவை தீங்கனியே,

மூன்றாம்தமிழ் நாயகரே!

வருக! வருக!

நற்றமிழ் நாவலரே!

தமிழ் மரபுக் காவலரே!

வருக! வருக!

உவகை கவிஞரே! 

தமிழ் இலக்கியத்தின் சிற்றரசே!

வருக! வருக!

பண்டித மணியே!

கலை மாமணியே!

விருதுக்கு விருதானவரே!

பேராசிரியர்,

மேடைப்பேச்சாளர், 

நூலாசிரியர், 

நேர்முக வர்ணனையாளர், 

தன்னம்பிக்கைப் பேச்சாளர், 

திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் 

கலைமாமணி திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களை

வருக! வருக! என வரவேற்பதில் 

மாமதுரைப் புத்தகத் திருவிழா பெருமை கொள்கிறது.


சனி, 2 டிசம்பர், 2023

நான் இந்தியாவின் பிரதமராக இருந்தால்-கவிதைப் போட்டி

உலகின் தலைசிறந்த பண்பாடு - நமது 

உயர்ந்த கலாச்சாரத்தைக் கொண்டாடு 

இனம் மொழி மத வேறுபாடு - நம்மில் 

இடர்பல வரும்போது ஒன்றுபடு 

என் இதயம் துடிக்கும் இந்தியன் என்று 

எமது பாரதம் நிலைக்கும் உலகை வென்று 

இளைய பாரதம் புதிய பாரதம் என் முன்னே 

எண்பது கோடி உழைக்கும் மக்களே 

எமது பாரதத்தின் பலம் 

வலுவான அடிப்படைக் கல்வி - உடன் 

திறன்மிக்க தொழிற்கல்வி 

வேளாண்மை அதில் தொழில்நுட்ப மேலாண்மை 

விரைவுப் போக்குவரத்து அதில் விரிவான பாதுகாப்பு 

தொழில் பெருக்கம் அதில் இயற்கைப் பாதுகாப்பு 

சீர்திருத்த நிர்வாகம் அதில் ஊழல் ஒழிப்பு 

ஏற்றத்தாழ்வு அகல சமவாய்ப்பு சம பகிர்வு 

இறையாண்மைக்கு கேடு இல்லாத சுதந்திரம் 

ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு நல்லிணக்கம் 

திட்டமிட்ட பொருளாதாரம் அதில் கடன் இல்லாத வளர்ச்சி 

நாட்டின் வளர்ச்சிக்காகவே அரசியல் 

அரசியலாகாத நாட்டின் பாதுகாப்பு 

ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பாதுகாப்பு 

வீடு குடிநீர் சுகாதாரம் 

கல்வி மருத்துவம் அனைவருக்கும் 

எங்கும் எதிலும் எண்மத் தொழில்நுட்பம் 

எங்கும் யாவர் முகத்திலும் மகிழ்ச்சிதான் பொங்கும். 

யாதும் ஊராய் யாவரும் கேளிராய் 

உலகிற்கே ஒளியாய் வழியாய் பிரதமராய் நான்.

திங்கள், 13 நவம்பர், 2023

தூண்டிலில் மாட்டிய குருட்டு மீன்

 தூண்டிலில் மாட்டிய குருட்டு மீன்

நானும் நண்பரும் தூண்டில் போட்டோம்

மீன்கள் வரிசையாக வந்து மாட்டின

அதில் ஒன்று குருட்டு மீன்.  பாவம் அதை விட்டுவிடு என்றார் நண்பர்.

நானும் பாவம் என்றேன். இதுநாள் வரையிலும் இந்த மீன் வாழ்க்கையோடு போராடியுள்ளது. இனிமேலும் இந்த மீன் கஷ்டப்படக் கூடாது. மீன் தனக்காகப் பிறக்கவில்லை. யாரோ ஒருவருக்கு உணவாகத்தான் பிறந்தது. எனவே இதை விடக்கூடாது. சமைத்து உண்ண வேண்டும் என்றேன். இந்த சிந்தனைக்கிடையே, கடவுளும் என்னைப்போல் சிந்தித்துத்தான் வாழ்க்கையின் விளிம்பில் வாழ்பவர்களின் உயிர்களைப் பறித்துக் கொள்கிறாரா? என்று தோன்றியது. இதயம் கனத்தது.

செவ்வாய், 7 நவம்பர், 2023

சிறந்ததில் சிறந்தவை

மலேசியக் கவிஞர் அ.முத்தரையனார்

அன்பினில் இன்பம் காண்போம்
அறத்தினில் நேர்மை காண்போம் 
துன்புறும் உயிர்கள் கண்டால் 
துரிசறு கனிவு காண்போம் 
வன்புகழ் கொடையில் காண்போம் 
வலிமையைப் போரில் காண்போம் 
தன் பிறப்புரிமை யாகத் 
தமிழ்மொழி போற்றக் காண்போம்.

கவிமணி தேசிக விநாயகனார்

ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் -ஏழை 
ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? 
தீயவும் நல்லவும் செய்தவரை விட்டுச் 
செல்வது ஒரு நாளும் இல்லை ஐயா!


புறநானூறு-கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி

தமக்கென முயலா நோன்றாள்- பிறர்க்கென 
முயலுநர் உண்மையானே

முனிவிலர் துஞ்சலும் இலர்



வள்ளலார் 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்

எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே

அன்னை தெரசா 

வாழ்க்கை என்பது 
நீ சாகும் வரை அல்ல 
மற்றவர் மனதில் 
நீ வாழும் வரை

தாராபாரதி 

தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் 
தேசம் உடுத்திய நூலாடை

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி 
அறத்தின் ஊன்றுகோல்


கலீல் கிப்ரான் 

உழைக்கும் போது நீங்கள் 
புல்லாங் குழலாகிவிடுகிறீர்கள்

உங்கள் சுயத்துடன் 
நீங்கள் ஒருமைப்பாடு கொண்டிருக்கும் போது 
நீங்கள் நல்லவர்

பாரதிதாசன் 

இன்பத் தமிழ் கல்வி யாவரும் கற்றவர் 
என்று உரைக்கும் நிலை எய்தி விட்டால் 
துன்பங்கள் நீங்கும் சுகம் வரும் நெஞ்சினில் 
தூய்மை உண்டாகிடும் வீரம் வரும்!

நாலடியார்

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை 
மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார் 
எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன 
விச்சைமற்று அல்ல பிற

தனிப்பாடல் திரட்டு 

வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் 
வேகாது வேந்தராலும் 
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் 
நிறைவன்றிக் குறைவுறாது 
கள்ளர்க்கோ பயமில்லை காவலுக்கு 
மிக எளிது கல்வி என்னும் 
உள்ள பொருள் உள்ளிருக்கப் புறத்தேயோர் 
பொருள் தேடி உழல்கின்றீரே

பாரதியார் 

நெஞ்சில் ஈரம் இன்றி 
நேர்மைத் திறமுமின்றி 
வஞ்சனை சொல்வாரடி - கிளியே 
வாய்ச்சொல்லில் வீரரடி 
கூட்டத்தில் கூடி நின்று 
கூவிப் பிதற்றலின்றி 
நாட்டத்தில் கொள்ளாரடீ - கிளியே 
நாளில் மறப்பாரடீ.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்தி 
காட்சி கெடுத்திடலாமோ?

ராஜ மார்த்தாண்டன்

அப்படியே நிற்கட்டும் அந்த மரம் 
குன்றுகளின் நடுவே மாமலை போல

கலாப்ரியா

குழந்தை 
வரைந்தது 
பறவைகளை மட்டுமே 
வானம் 
தானாக உருவானது

காவற்பெண்டு

ஈன்ற வயிறோ இதுவே 
தோன்றுவன் மாதோபோர்க்களத் தானே

திருமந்திரம்

துணையாய் வருவது தூய நற்கல்வி

தொல்காப்பியம்

ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் 
பெருக நூலில் பிழைபாடிலனே

முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்

வழக்கின் இலக்கணம் இழுக்கின்று அறிதல் 
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் 
ஆசான் சார்ந்து அவை அமைவரக் கேட்டல் 
அம்மாண்புடையோர் தம்மொடு பயிறல் 
வினாதல் வினவியவை விடுத்தல் என்று இன்னவை
கடனாக் கொளினே மடம் நனி இகக்கும்


அவர்கள் மூளையில் 
விதையைப் போல 
தூவப்பட வேண்டிய அறிவு 
ஆணியைப் போல 
அறையப்படுகின்றது 

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

விடுதலை

ஏழைகள் விடுதலை அடைய வேண்டுமானால் கண்டிப்பாகப் படித்தே ஆக வேண்டும்.

ஏழைகளுக்குச் சாப விமோசனம் தருவது கல்வியே ஆகும்.

வாழ்க்கை அனுபவத்தோடு தொடர்புடையது மட்டுமே கல்வி. மற்றவை எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்.

உணர்ந்து கற்காத பாடம் எதுவும் பயன் தராது.  வாசிப்பதும் அது சார்ந்து யோசிப்பதும் கல்வியைப் பயனுள்ளதாக்கும்.

ஞாயிறு, 7 மே, 2023

உழை

 

கஷ்டப்படாமல் வாழ வேண்டுமென்றால் முதலில் கஷ்டப்படு.

ஆயிரம் அண்டா சோற்றை ஒரே நாளில் தின்றுவிட முடியாது. ஆயிரம் நாட்களில் உழைக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் முடித்து விட முடியாது.

வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்து விடாது. ஆனால், என்றாவது ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும். .

நல்ல நேரம் வரட்டும் என்று காத்திராதே!

நல்ல நேரம் என்று ஒன்று உண்டு என்றால் அது இந்த வினாடி மட்டுமே!

ஏதாவது செய்ய நினைத்தால் அதை இந்த வினாடியே செய்துவிடு!!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

பொது

தனித்து இருக்கும் போது

பொதுநலமும்

பொதுவில் இருக்கும் போது

சுயநலமும்

புகுந்து விடுகிறது 

வியாழன், 23 பிப்ரவரி, 2023

அறிவும் உறுதியும் உழைப்பும்

வறட்சிக் காலத்தில்

தன்னைத் தாங்கிப் பிடிக்கத்

தன் இலைகள் உதிர்க்கும் மரம்

தன் அழகு 

குலைவது குறித்துக்

கவலை கொள்வதில்லை!

கடுகினும் சிறுவிதை

காகம் குருவியினம் விதைத்த விதை

கரும்பாறையில் விழுந்தாலும்

கருத்துடனே உறுதியாய்

கருமுளையைப் பாய்ச்சிட்டே

கற்பாறையைப் பிளந்திடும்!

எதிர்வரும் மழையில்

தன் இனம் பிழைக்க

முன்னதாகவே இரைசேகரிக்கும் 

எறும்புக் கூட்டம்

முன்புத்தியின் அடையாளம்!


புதன், 22 பிப்ரவரி, 2023

உணவகம்

உணவகங்களின் பெருக்கம்

நாகரிகத்தின் குறியீடு அல்ல!

பண்பாட்டுச் சிதைவு!

உடல்நலனுக்கு ஒவ்வாத

முற்றிலும் சூழலுக்கு மாறுபட்ட

உணவு ...உணவல்ல...விஷம்!

ஒரு வாழிடச் சூழலில்

வாழும் மரம்கூட

வேறிடச் சூழலில் வாழ முடிவதில்லை...

காலநிலைக்கும் 

வாழும் சூழலுக்கும்

ஏற்ற உணவே உணவு...

வீட்டுச் சமையலில்

பால் வேறுபாடு கூடாது.

அது அவரவர் 

வீட்டுச் சூழலைப் பொறுத்தது.

உழைப்பு

உழைப்பவருக்குத்தான் 

உழைப்பை மதிக்கத் தெரியும்!

தேரின் மேல் அமர்ந்து இருப்பவருக்குக்

குதிரையின் கால்வலி எப்படித் தெரியும்?

பிரசவத்தைப் பார்ப்பவரின் வலியும்

பிரசவித்த தாயின் வலியும் ஒன்றாகாது.

உழைப்பவரே உயர்ந்தவர்! - பிறர்

உழைப்பைத் திருடிப் பிழைப்பவர்

சிவிகையில் சிங்காரமாய் இருந்தாலும்

இழிந்தவரிலும் இழிந்தவரே!

தேனின் சுவையில் தேனீக்களின்

தெவிட்டாத தேடல் தெரிய வேண்டும்!

வெள்ளியென மின்னும் அன்னத்தின் சுவையில்

உழவனின் உழைப்பு ஒளிர வேண்டும்!!



செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

இலவசமும் கட்டணமும்

அரசு வழங்கும் 

இலவசப் பொருள்களுக்கு எல்லாம் அதிகாரிகள் 

குறிப்பிடாத கட்டணங்களை 

பெற்றுக் கொண்டுதான் 

தருகிறார்கள். 

பெரு நிறுவனங்கள் 

விற்பனைப் பொருள்களுக்கெல்லாம் 

குறிப்பிட்ட இலவசங்களை 

அள்ளித் தருகின்றன. 

இலவசங்களில் எல்லாம் கட்டணங்கள். 

கட்டணங்களில் எல்லாம் இலவசங்கள். 


மதிப்புள்ள பொருளை எல்லாம் 

மதிப்பற்ற முறையில் வழங்கினால், 

அது அரசாங்கம். 

மதிப்பற்ற பொருளை எல்லாம் 

மதிப்புள்ள முறையில் வழங்கினால், 

அது பெருநிறுவனம்.

நாட்டை நல்லவர் ஆள்வதில்லை. ஏன்?

 பல நேரங்களில் ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்ற நல்லவற்றைப் பற்றிய சிந்தனைகளில் நான் ஆழ்வதுண்டு. நாட்டை ஆளும் தலைவர்களில் ஏன் நல்லவர்களைக் காண முடிவதில்லை என்று பல வேளைகளில் ஐயப்பட்டிருக்கிறேன். என்னுடைய சிந்தனைகளால், “கிணற்றுக்குள் தொலைத்த மோதிரத்தைத் தேடுவது” போல ஆழ்ந்து தேடி இருக்கிறேன். 

அப்போதெல்லாம் "இது கலிகாலம், தீயவர்களின் ஆதிக்க காலம், மக்களின் அறியாமைக் காலம்" என்று நினைத்திருக்கிறேன். 

"நல்லவர்கள் அரசியலுக்கு வர அஞ்சுகிறார்கள், அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணுகிறார்கள்" என்றெல்லாம் சிந்தித்திருக்கிறேன். 

"அனைவரும் ஓட்டுப் போட்டால் தானே நல்லவர்கள் ஆட்சிக்கு வர முடியும்" என்று கூட சிந்தித்து இருக்கிறேன். 

"காசு வாங்கிட்டு அறியாமையால் அல்லது விசுவாசத்தால் ஓட்டு போட்டு தீயவர்களைத் தலைவராக்குகிறார்களே" என்று எண்ணி இருக்கிறேன்.

 "மக்கள் அனைவரும் நல்லவர்கள் தான். தனித்திருக்கும் போது மிகவும் நல்லவர்கள்". 

"தலைவர்கள் தான் மக்களைத் தவறாக வழி நடத்துகிறார்கள். அறியாமைக்கு ஆட்படுத்துகிறார்கள். மக்களைத் திசை திருப்புகிறார்கள். குழப்புகிறார்கள். ஆசையைக் காட்டி, ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்" என்றுதான் இதுவரை எண்ணியிருக்கிறேன். 

ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்ற நல்ல குணங்களோடு கட்டுப்பாட்டோடு நல்லவனாய் எல்லா மனிதராலும் இருக்க முடிவதில்லை. நல்ல குணங்களை விரும்பி ஏற்றுக் கொண்டு மனக்கட்டுப்பாடு, சுயக் கட்டுப்பாடுடன் வாழ்பவர்கள் சிலரே. பெரும்பாலானோரால் அப்படி வாழ முடிவதில்லை. 

தன்னால்தான் சுயக் கட்டுப்பாடு, ஒழுக்கம் நேர்மையோடு வாழ முடியவில்லை என்று எண்ணும் பெரும்பான்மையானோர் தன்னைச் சூழ்ந்து இருப்பவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். 

ஆனால், அவர்கள் தன்னை ஆளத் தகுதியுள்ள நபரைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். அதில் விஞ்சி நிற்பது தற்காப்பு. 

தன்னை விட நேர்மையானவரிடம் தன்னை ஆளும் தகுதியை ஒப்படைத்தால், தான் தவறிழைக்கும் போது நேர்மையாளன் தன்னைத் தண்டித்து விடுவான் என்கின்ற அச்ச உணர்வு மிகுதியால்தான், சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நபரை அல்லது அரைகுறை அறிவுள்ளவனை அல்லது தவறுகளை மன்னிப்பவனை அல்லது அனுசரித்துச் செல்பவனை அல்லது தலையாட்டிப் பொம்மையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இத்தகைய சுயநலப் போக்கால்தான் நல்லவர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட முடிவதில்லை. 

யார் தலைவனாக வேண்டும்? என்பதை விட, நல்லவர்கள் தலைவனாக வரக்கூடாது என்பதில் பெரும்பான்மையோர் மிகவும் கவனமாகச் செயல்படுகின்றனர். 

நல்லவன் தலைவனானால் என்ன நடக்கும்? குறைந்த ஒழுக்கம், குறைந்த கட்டுப்பாடு, குறைந்த நேர்மையை உடையவர்களுக்குத் திண்டாட்டம் தானே! அவர்களின் குற்றங்கள் கண்டிக்கப்படும் அல்லவா!! தண்டிக்கப்படும் அல்லவா!!! அந்த அச்ச உணர்வால் தான் நல்லவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை?!


வியாழன், 16 பிப்ரவரி, 2023

பொன்னான பொன்மொழிகள்

இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உழைப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

உன் உழைப்பு ஒவ்வொன்றும் வெறும் வியர்வை அன்று. ஒவ்வொன்றும் வைரக்கல்.

உனக்கு நீயே நீதிபதியாக இரு. அப்போது தான் உன் தவறுகளுக்கு நீ தண்டனை தர முடியும்.

உன் மனச்சாட்சியே கடவுள். உன் கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இரு.

சிறகுகளை விரித்தால் பறக்கலாம். சிந்தையை அடக்கினால் செய்கையில் சிறக்கலாம்.

ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்.

பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பதல்ல. பலத்தைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.

அஞ்சாமை தான் அறியாமை என்னும் மலையைத் தகர்த்து உடைக்கும் அணுகுண்டு

எந்தச் செயல் உன்னை வலிமையானவனாக உணர வைக்கிறதோ அச்செயலைத் திரும்பத் திரும்பச் செய்

வலிமை தான் வாழ்வு. வலிமைதான் மகிழ்ச்சி. பலவீனம் இடைவிடாத சித்திரவதை ஆகவும் துன்பமாகவும் அமையும் என்பதால், உனது வலிமையைப் பெருக்குவதிலேயே உன்னுடைய வாழ்க்கையைச் செலவிடு.

மலைகளைத் தகர்க்கும் மன உறுதி வேண்டும். தோல்வியுற்ற வாழ்க்கை வாழ்வதைவிட போர்க்களத்திலே போரிட்டு மடிவதே மேல். தோல்வியுற்ற வாழ்க்கை துயரமானது. வென்றே ஆக வேண்டும்.

ஒவ்வொருவரும் தனது அதிகபட்ச ஆற்றலை மிச்சம் மீதியின்றிச் செலுத்தி உழைக்காவிட்டால் எதையும் சாதிக்க இயலாது.

அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவற்ற பொறுமை இவை நான்கும் அவசியம்.

எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேதான் இருக்கின்றன. அதை நீ உணர வேண்டும் என்றால், நீ உன் மீது அளவற்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.

மரணம் என்பது உடையை மாற்றுவது போலதான். அதனால் மரணத்திற்கு அஞ்சாதே.

புதன், 8 பிப்ரவரி, 2023

சுற்றுப்புறத்தைச் சுவாசி

ஆபத்துக் காலத்தில் துண்டான பல்லியின் வால் முளைப்பது எப்படி?

மின்மினி பூச்சியின் வால் பகுதி ஒளிரும் ரகசியம் என்ன?

பருவகாலத்தை முன்னரே அறியும் கட்டெறும்பின் மூளைத்திறன் என்ன?

வசந்த காலத்திற்காக இலையை உதிர்த்து தளிர்த்துக் காத்திருக்கும் மரத்தின் அறிவாற்றல் என்ன? என்பன போன்ற வினாக்களை எழுப்பி விடைதேடும் சித்தராய் சிந்தனையைச் சீர்திருத்தி வை.

சுற்றுப்புறத்தை உற்றுநோக்கி சிந்தனையில் கரைந்து போ.

அது உன்னை ஞானி ஆக்கும்.

விஞ்ஞானி ஆக்கும்.

வியாழன், 26 ஜனவரி, 2023

சோம்பல் விலக்கு!

சோம்பல் விலக்கு!

வெட்டுப்படாமல்

வைரம் மின்னுமா?

கசக்கும் மருந்தின்றி

நோய் குணமாகுமா?

உளி படாமல்

கல் சிலையாகுமா?

முத்துக்குளிக்காமல்

முத்தெடுக்க முடியுமா?

முடியாதல்லவா?

நீ சோம்பி இருந்து

என்ன பயன்?


துன்பத்தை வேண்டு

துன்பத்தை வேண்டு

இருட்டைக் காணாதவன்

விடியலை உணர மாட்டான்..!

வெயிலில் வாடாதவன்

நிழலை விரும்ப மாட்டான்..!

துன்பத்தை அறியாதவன்

இன்பத்தில் மகிழ மாட்டான்...!

துன்பமே இன்பத்திற்கான வித்து!

முதலில் துன்பம்...

அதன்பின் பேரின்பம்!

துன்பம் வரின்

கவலை வேண்டாம்...

கலங்காதிரு...

பூட்டைக் கொடுத்தவனிடம்

சாவி நிச்சயம் இருக்கும் ...!


எதிர்கொள் மனமே..!

 எதிர்கொள் மனமே..!

உன்னால் முடியும் என்று

நம்பிதான்

கடவுள் எனக்கு

நிறைய துன்பம் தருகிறார்.

கடவுள் என்மீது வைத்த

நம்பிக்கையை

வீணாக்க மாட்டேன்...

புதன், 21 டிசம்பர், 2022

அசைவம்

அசைவம் விரும்பிகள் 

பாதகச் செயல்களில் 

சமரசம் செய்து கொள்வார்கள்

கசாப்பு கடைக்காரர் எதற்கு அஞ்சுவார்?



சனி, 17 டிசம்பர், 2022

எங்கே செல்கிறது மனித இனம்?- எங்கே செல்ல வேண்டும் புனித இனம்?

 யுகம் யுகமாய் மனித உடல்கள்... 

குவியல் குவியலாய்த் தோன்றி அழிந்தன.

ஒவ்வொரு சிதையிலும் வரலாறு நீள்கிறது.

உடல்கள் உருவாக்கி விட்டுச் சென்ற எச்சங்கள் 

மலை மலையாய் நீண்டு போகின்றன...

வசதிகளைப் பெருக்கிப் பெருக்கி 

வாழிடச் சூழலைச் சிதைத்துச் சிதைத்து 

என்ன செய்யப் போகிறான்? 

குப்பை கொட்டி அதில் குடியிருக்கவா? 

மண்ணை விஷமாக்கி மரம் நட்டு 

நச்சுக்கனி பறித்து உண்ணவா? 

வாழும் நெறியை விட்டுச் சென்றான் பாட்டன் 

வாழும் வழியை அடைத்துச் செல்கிறானே எங்கப்பன்! 

இயற்கையோடு கொஞ்சி விளையாடினானே என் பாட்டன்! 

இயற்கைக்கு நஞ்சு புகட்டுகிறானே எங்கப்பன்!

உல்லாச வாழ்க்கையால் உருக்குலைந்த கருவறை! 

எப்படிப் பிழைக்கும் எங்கள் தலைமுறை?!

நீ தலைவனா? தொண்டனா?

 நீ தலைவனா? தொண்டனா?

ஒப்பு உயர்வில்லாத ஒன்றைத் தேடும் மனம், கடைசித் தோல்வியிலிருந்து தப்புவதற்காக, “அதனோடு நான், அதுதான் நான்” என்று நிழலையும் பிரதி எடுக்கிறது. எல்லா முயற்சிகளையும் கைவிட்டு சாதனையுடன் சமரசம் கொள்கிறது. இறந்த காலத்தின் ஏற்ற இறக்கங்களையும் எதிர்காலத்தின் இலக்குப் பயணத்தையும் அது பொருட்படுத்துவதில்லை. அற்ப வெற்றிகளைக் கொண்டாடித் தீர்க்கும் அதே வேளையில், அற்ப தோல்விகளுக்குக் கூட ஆண்டவனையே காரணமாகச் சுட்டும். குழப்பமான தெளிவையும் தெளிவான குழப்பத்தையும் மாறி மாறி கொண்டிருக்கும். அது சாதனையாளனைத் தனது தலைவனாக ஏற்கும். தன்னைத் தொண்டனாகக் கருதும். தலைவனது பாதையை, அருஞ்செயல்களைப் புகழும். ஆனால் தலைவனது முயற்சியைச் பரிட்சித்துப் பார்க்காது. “தலைவனால்தான் முடியும், தன்னால் முடியாது” என்று ஒதுங்கிக் கொள்ளும். யாவரிடமும் தன்னுடைய தலைவன், ‘அவர்’ என்று அறிமுகம் செய்வதைப் பெருமையாகக் கருதும். பகட்டுக்காக பால்குடம், காவடி எல்லாம் கூட எடுக்கும். ஆனால் கிஞ்சித்தும் கூட தலைவனது வழியில் நடவாது.

அப்துல் கலாம் காந்தி, நேரு, தெரேசா, கென்னடி, ஆபிரகாம் லிங்கன், அலெக்சாண்டர், மாவீரன் நெப்போலியன், விவேகானந்தர், நேதாஜி என்று பெயர் வைப்பார். நிறுவனங்கள் வைப்பார். தொண்டு என்பார். உதவி செய்கிறேன் என்பார். ஆனால் தலைவர்களின் நேர்மை இராது. உண்மை இராது. அன்பு இராது. உதவி செய்கிறேன் என்பார்- அருள் இராது. தலைவனின் சொல்லை, செயலைப் பின்பற்றாதவன் தொண்டன் இல்லை. வெறும் பகட்டுக்காக தலைவனின் பெயரைக் கூறிக் கொள்பவன், பச்சை குத்துபவன், வாகனத்தில் உருவம் பொறிப்பவன் எல்லாம் வாழும்போதே கோழைகள். அடிமைகள். கட்சிக்குத் தொண்டன் என்பான்- கொள்கை அறிய மாட்டான். நடிகனைத் தலைவன் என்பான்- நடிகனின் குணமோ பிறவோ அறிய மாட்டான். காந்திய வழி என்பான்- அகிம்சை அறியமாட்டான்.

காணும் பிறவிகள் அனைத்தும் தனித்துவமானவை. ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவது அபத்தமானது. சிந்திக்கும் திறன் படைத்த மனித இனம் பகுத்து, ஆராய்ந்து தன்னைத் தானே பண்படுத்திக் கொள்ள முடியும். தன்னை- தன்னுடையதை அடையாளம் கண்டு ஒருமுகப்படுத்தி, சுற்றுப்புறத்தில் இருந்து அறிந்து கொண்டு பெருமுயற்சியுடன் பயிற்சி செய்து ஆற்றலைப் பெருக்கி, மனித இனம் வளமடைய அருஞ்செயல்களை ஒவ்வொருவராலும் ஆற்ற முடியும். ஒருமுகப்படுத்தலிலும் முயற்சியிலும் பயிற்சியிலும் காணப்படும் வேறுபாடுகளே தலைவன்- தொண்டனைத் தீர்மானிக்கின்றன. ஆற்றலில் குறைந்தவன் தொண்டனாக அடையாளப்படுத்தப்படும்படி ஆகிவிடக்கூடாது.

காந்தி மட்டுமே காந்தியாக இருக்க முடியும். நேதாஜி மட்டுமே நேதாஜியாக இருக்க முடியும். கலாம் மட்டுமே கலாமாக இருக்க முடியும். விவேகானந்தர் மட்டுமே விவேகானந்தராக இருக்க முடியும். மற்றவர்களால் காந்தியாகவோ நேதாஜியாகவோ இருக்க முடியாது. இருக்கவும் கூடாது ஆனால் மனிதப் பண்புகள் அனைவருக்கும் உரியவை. அனைவராலும் பின்பற்ற முடியும். அன்பு, நேர்மை, உண்மை, அகிம்சை, வீரம், இரக்கம், ஒப்புரவு, பக்தி, பகுத்தறிவு, அறிவாற்றல், செயல்திட்பம் போன்றவற்றை அனைவரும் பெற்றிருப்பதே சிறந்தது. அல்லது அவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளில் சிரத்தையுடன் ஈடுபட்டு இருப்பதே சிறந்தது. அப்படிப்பட்ட மனித வாழ்க்கையைத்தான் மனம் நாட வேண்டும். தலைவனைத் தேடி அல்ல. தலைவன் என்பவர் யார்? மனிதப் பண்புகளில் சிறந்தவன் தானே! நாம் பின்பற்ற வேண்டியது தலைவனை அல்ல! தலைமைப் பண்பை! மனிதப் பண்பை! இளம் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவை தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அல்ல. கொண்டாடப்பட வேண்டியவர்கள் சாதித்தலைவர்கள் அல்லர். அவர்கள் கடைபிடித்த மனிதப் பண்புகளைத்தான் கொண்டாட வேண்டும். அப்பண்புகளைத்தான் வளர்க்க வேண்டும். அதுதான் நம்முடைய கடமை. அதை விட்டுவிட்டு சல்லிப் பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லாத நடிகனையோ, கட்சித் தலைவனையோ தன்னுடைய தலைவனாக ஏற்பது என்பது மனித குணமே இல்லை. அது மூடத்தனம். உலகத்தை ஓர்மைச் சிந்தனையுடன் பார்ப்பதே மனிதப் பண்பு. தொண்டன் தன்னைத் தனித்துப்பார்ப்பான். நீ தலைவனா? தொண்டனா?


புதன், 14 டிசம்பர், 2022

அனைத்தும் அவன்

உருவ கேலி செய்பவன் 

இறைவனைக் கேலிசெய்கிறான்...

இழிசொல்லால் இகழ்பவன் 

இறைவனை இகழ்கிறான்...

மனிதனை வதைப்பவன்

இறைவனை வதைக்கிறான்...

அனைத்துமாய் அவன் இருக்கிறான்.

அனைத்துமாய் அவனைக் காண்பவன் தவறிழைக்க மாட்டான்.


செவ்வாய், 13 டிசம்பர், 2022

கோவில்

கோவிலுக்குச் செல்லவும் அஞ்சுகிறேன்...

கணக்கற்ற காணிக்கைகள்...

கடவுளைக் காண ..!

வெள்ளி, 9 டிசம்பர், 2022

பணம்

அழுக்கு படிந்து காணப்படுவது
ஏழைகளின் பணம் மட்டுமே
குணம் அல்ல..

சனி, 13 ஆகஸ்ட், 2022

கொடிப்பாடல்

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தேமாதரம் என்றே 
பாங்கின் எழுதித் திகழும்- செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்- எங்கும் 
காண்அரும் வீரர் பெரும் திருக்கூட்டம் 
நம்பற்குஉரியர் அவ்வீரர் -தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்

தாயின் மணிக்கொடி பாரீர் - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
தாயின் மணிக்கொடி பாரீர்


சனி, 6 ஆகஸ்ட், 2022

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்

இன்று பொன்னான நாள் (2)
இன்று மகத்தான திருநாள்(2)-
ஆம்.
மகாத்மாக்கள் இன்னுயிர் ஈந்து விடுதலை பெற்றுத் தந்த விடுதலைத் திருநாள். 140 கோடி இந்தியர்களும் மகிழ்ந்திருக்கும் 75 ஆவது சுதந்திரப் பெருநாள்.

மேலைநாட்டுக் கல்வியும் சட்டமும் படித்த இளைஞர்கள், அரசியல் விடுதலை கோரிப் போராடினர். பாதிக்கப்பட்ட சிப்பாய்களும் பதவி இழந்த மன்னர்களும் மனம் கசந்தனர். வரிச் சுமையால் பசிபட்டினிக்கு ஆட்பட்ட விவசாயிகளும் நலிவடைந்த கைவினைக் கலைஞர்களும் பெருந்துயரம் அடைந்தனர்.

ஆங்காங்கே பற்றி எரிந்த விடுதலை வேள்வித்தீயை மகாத்மாக்கள் ஒருங்கிணைத்தனர். திட்டமிட்ட அகிம்சைப் போராட்டங்களால் ஆங்கிலேய அரசு திணறியது; இந்தியத் தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறியது.

சுதந்திர இந்தியா பிறந்தது (2).
வறுமையையும் வேலையின்மையையும் ஒழிக்கத் திட்டமிட்ட பாதையை அரசு தேர்ந்தெடுத்தது. கல்வி வளர்ச்சியை ஊக்குவித்தது. நேர்மையான தேர்தல்களை நடத்தி மக்களாட்சி ஜனநாயகத்தை வலுப்படுத்தியது. வேளாண்மைப் புரட்சி மூலம் வறுமையை ஒழித்தது. தொழிற்புரட்சி மூலம் வேலையின்மையைக் குறைத்தது. பொதுத்துறை நிறுவனங்கள் சமதர்ம பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தின.
உலகப் பொருளாதாரத்தோடு போட்டியிடும் வகையில் தனியார்மயமாதல், தாராளமயமாதல், உலகமயமாதல் போன்ற கொள்கைகளை அரசு பின்பற்றியது. இன்று தவிர்க்க முடியாத இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விண்வெளி, பாதுகாப்பு என்று அனைத்துத் துறைகளிலும் இந்தியா கோலோச்சி வருகிறது.

சமூக அமைதி மற்றும் ஒழுங்குடன் நிலையான வளர்ச்சியைப் பெற்றிருக்கும் இந்தியத் திருநாட்டில் ஊறுவிளைவிக்கும் வகையில் தீவிரவாதம், பிராந்தியவாதம், மதவாதம் ஆகியவை தலைதூக்கி வருவது சவாலானதாகவே இருக்கிறது.

'நாம் அனைவரும் இந்தியர்' என்ற உணர்வை மேலோங்கச் செய்வதன் மூலம் இவ்வகையான தீங்குகளை விரட்டலாம். "நாம் அனைவரும் உடன் பிறந்த சகோதரர்" என்ற உணர்வோடு பழகுவதன் மூலம் வேற்றுமைகளைக் களையலாம்.

இன்றும் இந்தியா அரசியல் சமூகப் பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. அரசியலில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்கள் விரைவான வளர்ச்சியை எட்டி வரும் சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் விரும்பத்தக்கதல்ல. கொரோனாப் பேரிடரை இந்தியா சிறப்பாக எதிர்கொண்டு வரும் வேளையில் கல்விநிறுவனங்களில் ஆங்காங்கே நடைபெறும் விரும்பத் தகாத நிகழ்வுகள் சமூகத் தலைக்குனிவை ஏற்படுத்துகின்றன.

சில அரசியல் கட்சிகள் இனவாதம், பிராந்தியவாதம் மற்றும் மொழிப் பிரச்சனைகளை மையப்படுத்தி பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்துவது தேசப்பற்றுக்கு குந்தகம் விளைவிக்கின்றன. தேசப்பற்றுக்கு ஊறு விளைவிக்காமல் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

இந்தியா பன்முகத்தன்மையும் பன்முகக் கலாச்சாரத்தையும் கொண்ட ஒரு பூந்தோட்டம். மணமுள்ள பூ, நிறமுள்ள பூ, மணமும் நிறமும் உள்ள பூக்கள் எனப்பலவகைகள் உண்டு. வேண்டாத பூ என்று எதுவும் இல்லை. அப்படிப்பட்ட இந்திய தேசத்தில், ஆளும் அரசியல் கட்சிகள் பன்முகத்தன்மைக்கு எதிரான சட்டங்கள் மற்றும் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த  முயல்வது அரசியல் அமைப்பின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

அரசியலில், சமூகத்தில், பொருளாதாரத்தில் சமத்துவத்தைப் பேண இடஒதுக்கீட்டு கொள்கை சீரான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எல்லாத் தருணங்களிலும் அரசியலமைப்பின் மாண்பு குலையாமல் பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை மட்டுமல்ல; நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.  இதை மனத்தில் கொண்டு வாழ்வதே சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும். அதுவே பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் வழியும் ஆகும்.

இந்த நல்ல தருணத்தில் எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்!

ஞாயிறு, 31 ஜூலை, 2022

சுதந்திரத்தை போற்றுவோம் கவிதை

போற்றுவோம் சுதந்திரத்தை... போற்றுவோம் சுதந்திரத்தை...

அனைவரும் கல்வி பெற்றோம்
அருமை உலகின் அறிவு பெற்றோம்(2)

ஆட்சி செய்யத் தேர்தல் வைத்தோம்
ஆளும் பொறுப்பைக் கொடுத்து வைத்தோம்(2)

எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டோம்
எழுத, பேச உரிமை கொண்டோம்(2)

சட்டத்தின் முன் சமமாய் நின்றோம்
சமத்துவமே நீதி என்றோம்(2)

தீமை தரும் தீண்டாமை ஒழித்தோம்
தீண்டாதோர்க்கு ஒதுக்கீடு தந்தோம்(2)

விடுதலை பெற்ற தாய்நாட்டில்,
விரும்பும் கல்வி கற்றிடலாம்
வேண்டிய உயரம் பறந்திடலாம்
விரும்பும் வேலை செய்திடலாம்
பிடித்த ஊரில் தங்கிடலாம்
விரும்பும் தெய்வம் வணங்கிடலாம்
நம்பும் மதத்தைப் பரப்பிடலாம்

தகுதிக்கேற்ற வேலையும் உழைப்புக்கேற்ற ஊதியமும் 
பணியிடத்தில் பாதுகாப்பும் சுதந்திரத்தால் உருவாக்கினோம்.

ஆண் பெண்ணில் வேறுபாடில்லை
சாதி மத பேதமுமில்லை(2)

சகோதரராய் 
சமத்துவ வழியில் சங்கமம் கொள்வோம், வாரீர்!(2)

சனி, 30 ஜூலை, 2022

நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பேச்சு போட்டி

அவையோர்க்கும் இங்கே கூடியிருக்கும் சபையோருக்கும் என் அன்பு வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.

அவர் மகான் இல்லை- ஆனால் 

உத்தம மனிதர் (2)

அவர் அதிசயம் செய்தாரில்லை -ஆனால்

ஆளுமை மனிதர் (2)

அவர் வசீகர மனிதரில்லை- ஆனால்

கனவுகளைத் துரத்தியவர்(2)


ஆம்.வல்லரசு இந்தியா 

வளமான இந்தியா 

வறுமை இல்லா இந்தியா 

என்ற கனவுகளைத் துரத்திய என் கனவு நாயகன்.

ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தின் அப்துல் கலாம். 

நான் விரும்பும் தலைவர் அவரே!

மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாகச் சேவை ஆற்றிய போதும் எளிமையாகவே வாழ்ந்தவர்.

இரண்டு சூட்கேசுகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்தவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே திரும்பினார். கறை ஏதுமில்லாத வெள்ளை மனிதர் 

நாட்டின் கடைக்கோடியில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாக மலர்ந்தவர்.

"இளமையில் வறுமை கொடிது" என்பார்கள். வறுமை அவருக்குக் கற்றுத் தந்த பாடம், அவரை,

ஒழுக்க சீலராக்கியது 

உயர்ந்த பண்பாளராக்கியது 

கடின உழைப்பாளராக்கியது. 

அவர் அசைவம் விரும்பாதவர் 

வல்லரசு இந்தியாவை விரும்பியவர்(2)

அவர் திருமணம் புரியாதவர்

எவருக்கும் தீமை புரியாதவர்.(2)

அக்னி, ஆகாஷ், பிருத்திவி என்று ஏவுகணைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஏவுகணை நாயகன்.

அணு வெடிப்புச் சோதனை நடத்திய பொக்ரான் நாயகன்.

எதிர்கால இந்தியா இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கருதியவர். 

இளைஞர்களை அரசியலுக்கு அழைத்தவர். 

இளைஞர்களைத் தேடிச் சென்று அவர்களிடையே இந்தியா பற்றிய கனவுகளை விதைத்தவர். 

இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலேயே தன் இறுதிக்காலத்தைச் செலவிட்டவர். 

அவரது இறுதி மூச்சிலும் பேச்சிலும் வல்லரசு இந்தியாவின் தீப்பொறி கலந்திருந்தது.

அவர் பழகுவதில் குழந்தை 

சிந்திப்பதில் ஞானி 

மாணவர்களுக்கு நண்பன் 

நாட்டு மக்களுக்கு எளிய வழிகாட்டி

 விமர்சனம் செய்ய முடியாத தலைவர் அவர் 

அவரே நான் விரும்பும் தலைவர் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

திங்கள், 11 ஜூலை, 2022

கல்விப் பணியில் காமராசர் பேச்சுப்போட்டி வகுப்பு 5

இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பட்டினி கிடப்பவருக்கே பசியின் கொடுமை புரியும்.

வெயிலில் கிடப்பவருக்கே நிழலின் அருமை தெரியும்.

அதைப்போல,

படிக்க வாய்ப்பு இல்லாத காமராசர் படிப்பின் அவசியம் அறிந்தவர்.

  1. வெள்ளத்தால் போகாது 
  2. வெந்தணலால் வேகாது 
  3. வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
  4. கள்ளர்க்கோ பயமில்லை 
  5. காவலுக்கு மிக எளிது 
  6. கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைபடாது.- கல்வி.

பசியோடு இருப்பவனுக்கு மீன்பிடித்துத் தருவதை விட, மீன்பிடிக்கக் கற்றுத் தருவதே சாலச் சிறந்தது.

அதுபோல,

ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து விட்டால் அவர்களுடைய வாழ்வு மலரும் என்று சிந்தித்தார் காமராசர்.

காமராசர் 9 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

  1. மூடப்பட இருந்த 6000 பள்ளிகளைத் திறந்தார்
  2. ஒரு மைல் தூரத்தில் தொடக்கப்பள்ளி
  3. மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி
  4. ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி என்று திட்டம் வகுத்து பட்டி தொட்டி எங்கும் 17 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்தார்.
  5. கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்கினார்.
  6. மாணவர்களின் மதியவேளை பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
  7. மாணவர்களுக்கு முறையான தரமான கல்வி கிடைக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் திறந்தார்.
  8. மாணவர்கள் இடையே ஏழை-பணக்காரர் வேறுபாடுகளை நீக்க இலவசச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
  9. பள்ளி வளர்ச்சிக்காக அரசிடம் போதிய நிதி இல்லாத போது, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை நடத்தி செல்வந்தர்களின் உதவியோடு பள்ளிக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தினார்.
  10. தொழிற்பயிற்சி நிறுவனங்கள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
  11. கல்வி கற்ற சமுதாயமே மேம்படும் என்று உறுதியாக நம்பினார்.
  12. கல்வி கற்றோர் சதவீதத்தை ஏழிலிருந்து 37 ஆக உயர்த்தினார்.
  13. காமராசர் அமைத்த அடித்தளத்தில், இன்று வானளாவிய கட்டங்களாக கல்வித்துறை நிமிர்ந்து நிற்கிறது.

அவரின் சீரிய பணிக்குத் தலை வணங்குவோம். அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம். வாரீர்!

நன்றி, வணக்கம்.

காமராசர் பேச்சுப்போட்டி- வகுப்பு 2

இங்கே கூடியிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மண்ணுக்குள் இருக்கின்ற கரி தான் வெட்ட வெட்ட வைரமாய் மின்னுது. 

அதுபோல, 

    1. ஒருபுறம் வறுமை வாட்ட வாட்ட, 
    2. மறுபுறம் விடுதலை வேட்கை மேலே ஏழ ஏழ, 
    3. இன்னொரு புறம் சிறையில் துன்பம் வருத்த வருத்த, 
    4. தியாகச் சுடராய், வேள்வித்தீயாய், 
    5. நம் தேசத்திற்கு அழியாத விளக்காய் ஒளி தந்தவர் காமராசர்.

  • தமிழகத்தின் தவப் புதல்வர்
  • தாயகம் காத்த புனிதர்
  • கருப்புக் காந்தி
  • ஏழைப் பங்காளர் என்று பாராட்டப்பட்டவர்
  1. அரசியலைச் சுத்தப்படுத்தியவர்
  2. ஆட்சியில் நேர்மை செலுத்தியவர்
  3. பள்ளிக்கூடங்கள் பல திறந்தவர்
  4. மாணவர்களுக்கு மதிய உணவு தந்தவர்
  5. வளர்ச்சித் திட்டங்கள் பல தீட்டி, நாட்டை வளப்படுத்தியவர்

  • ஏழை எளியோர் வாழ்வில்  நல்லொளி பாய்ச்சிய நம்பிக்கை நட்சத்திரம்.
  • கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளில், அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம், வாரீர்.
நன்றி! வணக்கம்.

வியாழன், 30 ஜூன், 2022

காமராஜர் கவிதை

விருதுநகரில் பிறந்தவர்
விருதுகளின் நாயகர்

விடுதலைப் போராட்ட வீரர்
தீரர் சத்தியமூர்த்தியின் சீடர் 

படிப்பின் அருமை உணர்ந்தவர்
பல்லாயிரம் பள்ளிகள் திறந்தவர்

காந்தியத்தின் பாதை கண்டவர்
கடமையில் நேர்மை கொண்டவர்

பொதுத்துறை நிறுவனம் கண்டவர்
பொதுநல வாழ்க்கை கொண்டவர்

மும்முறை முதல்வரான உத்தமர்
பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர்

காமராஜர் திட்டம் தீட்டியவர்
கட்சிப் பணி ஆற்றியவர்

காட்சிக்கு மிக எளியவர்
கடமைக்கு உரியவர்


சனி, 25 ஜூன், 2022

கால்நடை மேய்ப்போர் நலச்சங்கம்

முல்லை நிலக் காவலர்களே...
மூத்தகுடி மக்களே...(2)

வெள்ளாடு மேய்ப்பவர்களே...
வெள்ளை உள்ள வேந்தர்களே...(2)

கால்நடையின் பசி தீர்க்கும் ஆயர்குடியே...
கால்நடையாய்க் கானகம் சுற்றும் வீரர்குடியே...(2)

இயற்கை போற்றும் மனிதர்களே...
இயற்கை வேளாண்மை காக்கும் புனிதர்களே...(2)

உங்கள் வாழ்வும்
உங்கள் குலமும்
உலகம் உள்ளவரை
உயர்ந்து நிற்கட்டும்..! (2)


வெள்ளி, 24 ஜூன், 2022

வாழ்த்துரை

  1. நீதித் தராசின் நடுமுள்ளே ...! நேர்மையின் சுகம் விரும்பியே ...! (2 முறை)
  2. பள்ளத்தை நோக்கிப் பாய்ந்த ஜீவநதியே-நல்லோர் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நாயகரே...!(2)
  3. கேள்விகளால் வேள்வி பல செய்த வித்தகரே...! குரலற்ற மக்களின் குரலாய் ஒலித்தவரே..! (2)
  4. விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளியே...! அநீதிக்குக் கிருபை காட்டாத கிருபாகரரே...! (2)
  5. தாயிடம் முரண்படும் குழந்தை போல நீதியிடம் சட்டம் முரண்படும்போதெல்லாம் நீதியின் பக்கம் நின்ற சட்டகர்த்தாவே...!(1)
  6. 7.5% இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களின் இன்னல் தீர்த்தவரே...!(1)
  7. தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தமிழ் மாணவர்களின் நலன் காத்தவரே...!
  8. வியர்வையின் மதிப்பை உணர்ந்தவரே..!-ஏழையின் உயர்வை உள்ளத்தில் இருத்தியவரே..!(2)
  9. இயற்கை ஆர்வலரே... சூழல் காவலரே...!(2)
  10. வாய்மையைக் கடைப்பிடிக்கும் ஒளிர் தங்கமே...! ஒப்பற்ற உம்புகழ் பரவும் எங்குமே!!! (2)

நீர் வாழ்க... உம் குலம் வாழ்க... என்று வாழ்த்தி, இவ்விழாவிற்கு வருக... வருக...என வரவேற்று என்  வரவேற்புரையை நிறைவு செய்கிறேன். நன்றி..!

ஞாயிறு, 15 மே, 2022

அநீதி

அநீதி கண்டு அமைதி காப்பது குற்றம்.

வேடிக்கை பார்த்துப் பழகிவிட்டால் நிமிர முடியாது.

'இளையதாக முள்மரம் கொல்க' என்பதை நினைவில் கொள் 

துணைக்கு யாரையும் தேடாதே.  அவனும் அப்படித்தான். 

உன்நலம் விரும்பிகள் உன்னைத் தடுப்பார்கள்.

அவர்களுக்குப் புரிய வைத்துவிட்டால் அநீதியைத் துரத்தலாம்.


சனி, 14 மே, 2022

ஊக்கம்

மனிதா! 

எதைத் தேடுகிறாய்?

யாரைத் தேடுகிறாய்?

அவசர உலகில்

அனாவசியமாக

நீ உனக்காக உருவாக்கித்

தூக்கிச் சுமக்கின்ற

கவலைகளை, வலிகளை, வேதனைகளை, துன்பதுயரங்களைத் 

தீர்த்துவைக்க தீர்க்கதரிசி வருவாரென்று தேடுகிறாயா?

இறைவனிடம் 

இறக்கி வைத்து விட்டு

இளைப்பாற எண்ணுகிறாயா?

அரசனோ ஆண்டவனோ 

உனக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமோ?

ஊக்கம் கொண்டு

உழைத்தாலே 

உறுதுயர் அழியுமே!

உண்மையை உணராது 

பொய்யில் மயங்கித் திரியாதே!

தமக்கென முயலா 

பிறர்க்கென வாழுநர் உண்மையானே எனும்

பழந்தமிழர் வாழ்முறை அறிக 

கவலை விடுக 

ஊக்கம் உடைமை ஆக்கத்தில் முடியும்!!

உறவுகளின் வாழ்க்கை விடியும்!!!

எழுகதிர் விடியலை 

வரவேற்கத் தயாராயிரு.

புதன், 11 மே, 2022

உயிர்மெய்த் தத்துவம்

'அ'- உயிரெழுத்து
'க்' -மெய்யெழுத்து
அ-உயிர்வளி உள்ளிருந்து எழுவதால் பிறக்கும் எழுத்து-எனவே உயிர் எழுத்து எனப்படுகிறது.
க்-மெய் (உடம்பு) உதவியால் பிறக்கும் எழுத்து. எனவே மெய்யெழுத்து எனப்படுகிறது.
க்+அ=க-உயிர்மெய் எழுத்து. 
இது பிறக்கும் இடம் 'க்' என்ற மெய்யெழுத்தின் இடம்(மார்பு). அ பிறக்கும் இடமான கழுத்தில் பிறப்பதில்லை.

இதன் ஒலிப்பு முயற்சி,
'க்' பிறப்பதற்கான முயற்சியும்+ 'அ'பிறப்பதற்கான முயற்சியும் அடங்கும்.

இதன் வடிவம்,
'க்' மெய் எழுத்தின் வடிவத்தைப் (க) பெற்றிருக்கும்.(அதாவது நமது உடலில் உயிர் கலந்து இருந்தாலும், உயிர் கண்களுக்குத் தெரிவதில்லை. நமது உடல்தான் பிறரது கண்களுக்குத் தெரியும். அதுபோலதான் உயிர்மெய் எழுத்தின் வடிவம் மெய் எழுத்தின் வடிவத்தைப்
பெற்றிருக்கும்)

அ-ஒரு மாத்திரை
க்-அரை மாத்திரை
க-1+1/2=1.5 மாத்திரை வரவேண்டும். ஆனால் நீரில் சர்க்கரை கரைவது போல, உயிர்மெய் எழுத்து உயிரின் மாத்திரையைப் பெறுகிறது. அதாவது மெய்(உடம்பு எழுத்து) உயிரில் கரைகிறது. உயிர் நிலையானது. மெய் (உடம்பு) அழியக்கூடியது. 

தத்துவம்: நமது உடல் கண்ணுக்குத் தெரியும். நமது ஆத்மா அல்லது உயிர் கண்களுக்குத் தெரியாது. ஆனால் உடல் அழியும். உயிர் அல்லது ஆத்மாவுக்கு அழிவில்லை. இது தொல்காப்பியம் கூறும் மறைமுகமான செய்தி. 

அன்னையர் தினம்

When someone ask to me...
in my mind says...
Someone: what is your father?
Me: my father is ...  ...  ... 
(Actually acricultural coolly)
My father is Co-GOD.
Someone: what is your mother?
Me: My mother is the GOD

படிக்காத என் தாய் என்னை அதிகாரி ஆக்கி ஆசிரியர் ஆக்கி அழகு பார்த்தார். என்னை அப்படி இரு, இப்படி இரு என்று சொல்லி வளர்க்கவில்லை; என் முன் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழ்ந்து காட்டுகிறார்.

அன்னையர் தினத்தன்று வாழ்த்துவது வாழ்த்தல்ல.
அனுதினமும் அவரைப் பார்த்துக் கொள்வதே வாழ்த்து. 

வியாழன், 28 ஏப்ரல், 2022

பிரபஞ்சத்தில் நீ

சுயபுத்தியுள்ளவன்
சூரியனாவான்...
சொல்புத்தியுள்ளவன்
வளரும் தேயும் நிலவாவான்..!
புத்தியில்லாதவன்
விட்டில்பூச்சியாய்த்
தோன்றி மறைவான்..!

உழைப்பிற்கேற்ப வாழ்க்கை...!
ஊருக்கேற்ப பேர்!!
எண்ணம் செயல் சரியென்றால்...
எமனும் தூர ஓடிடுவான்.

பொருளற்ற சொல்லில்லை...
பொருளின்றி வாழ்வில்லை...-உன்
வாழ்வுக்கொரு பொருள் கொடு மனிதா!- நீயின்றி
இவ்வுலகு மிக இனிதா?!


ஆணுக்குப் பெண் இளைப்பில்லை

ஒரு கல்லூரிச் சுடிதார்
ஸ்கூட்டியில் 
தொண்ணூறில் பறந்ததா?
நூறில் பறந்ததா?
தெரியவில்லை...
ஒருவேளை நூற்றியெட்டாக இருக்கலாம்...
கடும் வேகம். 
காற்றைக் கிழித்து...
ஆணுக்குப் பெண் இளைப்பில்லை...
மரணத்தை நோக்கிய பயணத்திலும்!

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

மனக்கவலை

பேருந்துப் பயணத்தில்...
மடியில் இருக்கும் சுமையை
கவனமாக அருகில் இறக்கி வைக்கிறாய்...
பல நேரம் ஆளில்லா
இருக்கையில் வைக்கிறாய்...
மனக் கவலையை மட்டும்
இறக்கி வைக்காதது ஏன்?

நாய்

இன்று காலை 8.10 மணி அளவில் சாட்சியாபுரம் பெட்ரோல் பங்க் எதிரில் டாட்டா ஏசியை ஓட்டிவந்த நாய்,  விளையாடிக்கொண்டிருந்த நாய் மீது மோதிவிட்டது. நாயின் குடல் சரிந்து துடிப்பு நின்றது. அந்த நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு நாய்கள் செய்வதறியாது திகைத்து, குடல் சரிந்த நாயையும் டாட்டா ஏசியையும் மாறி மாறிப் பார்த்தவாறு லொள்...லொள்... என்று குரைத்தன.  அந்த "லொள்...லொள்..." குரைப்பின் பொருள் என்னவென்று எனக்குத் தெளிவாகவே புரிந்தது.
அடப்பாவி... நாங்கள் என்ன துரோகம் செய்தோம் உனக்கு?... ஏன் என் நண்பனைக் கொன்றாய்? இந்தப் பூமி நீ வாழ்வதற்கு மட்டுமா? இந்த நாய் ஜென்மம் உயிர் வாழக் கூடாதா? கடவுள் இந்தப் பூமியை உனக்காக மட்டும்தான் படைத்தாரா? காலங்காலமாய் நாங்கள் உங்களுக்கு நாயாய் இருந்து அடிமை வேலை செய்தோம் இல்லையா? இதற்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா? துக்கமும் அழுகையும் தொண்டையை அடைக்க அவை குரைத்தன.


சனி, 23 ஏப்ரல், 2022

இன்றைய சமுதாயம்

நாடு முழுவதும்
கொள்ளைக்காரர்கள்...

லஞ்சம் ஊழல் அதிகாரத் திமிர்
இல்லாத இடம் உண்டா?

சுயநலம் ஊர்தோறும்
பெருகிக் கிடக்கிறது...

ஒருத்தன் வயிற்றில் அடித்து இன்னொருவன் பிழைப்பு நடத்தும் காலத்தில் இருக்கிறோம்...

கொஞ்சம்நஞ்சம் இருந்த நல்லவர்களையும் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி கிண்டல் செய்து பொய்யும் ஏமாற்றுதலும் இருந்தால்தான் வாழவே முடியும் என்று கற்றுத் தந்து விட்டோம்.அவர்களில் ஓரிருவர் தவிர நாம் ஆசைப்பட்டதுபோல அயோக்கியர்களாகிவிட்டார்கள்...

'ஊரோடு ஒத்து வாழ்' என்பார்கள். 99 சதவீதம் பேர் பொய் புரட்டு வாழ்க்கை வாழும் போது இளைஞர் சமுதாயம் யாரைப் பின்பற்றும்? அவர்களும் வாழ வேண்டும் அல்லவா? 

முன்பு ஊருக்கு நாலுபேர் அயோக்கியன். இன்று ஊருக்கு நாலுபேர் தான் நல்லவன்.  

தாயைப் போல பிள்ளை. நூலைப் போல சேலை. சுரை விதைத்தால் சுரைதான் முளைக்கும். தினை விதைத்தால் தினைதான் முனைக்கும். இந்த சமுதாயம் வினை விதைத்திருக்கிறது. அந்த வினை இன்று முளைத்திருக்கிறது. இன்னும் ஆலமரமாய் விழுதுவிட்டு வளரும். வளருட்டும்.  

எந்தச் சினிமாவில் நல்லதைச் சொல்லியிருக்கிறார்கள்....
மாணவர்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்றால் அவனுடைய பெற்றோருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? தாயைப் போல்தான் பிள்ளை.

கரியைத் தீட்டத் தீட்ட வைரமாகும்.

ஆசிரியர் சமுதாயத்தை வசைபாட வசைபாட நல்ல ஆசிரியர்களும் கையைக் கட்டி வாயைப் பொத்தி வேடிக்கை பார்ப்பார்கள்.  

அப்புறம் எப்படி எல்லோரும் எதிர்பார்க்கும் நல்ல சமுதாயம் உருவாகும்?

மருமகளை வசைபாட வசைபாட மாமியார் அரக்கியாகத் தெரிவாள்.

திட்டித் திட்டி மாணவனையோ, பெற்ற குழந்தையையோ திருத்த இயலாது. அரவணைத்து, நல்வழி காட்டி, ஊக்கப்படுத்தி, ஆர்வமூட்டி, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சிறுசிறு தண்டனை வழங்கிதான் திருத்த முடியும்.

நாடு நாசமாய்ப் போவதும் நன்மைக்கே! எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும். 

குற்றவாளிகளே நீதிபதி ஆகிவிட்டால் இப்படிப்பட்ட சூழல்தான் இருக்கும். மாணவன் பள்ளி வகுப்பறையில் மது அருந்துகிறான். அவனைப் பெற்றவன் வீட்டில் மது அருந்துகிறான். "மாணவன் மீது தவறில்லை. பெற்றோர் மீதும் தவறில்லை. ஆசிரியர் மீதுதான் தவறு இருக்கிறது" என்று குற்றவாளியான பெற்றவன் நீதிபதிபோல் பிரச்சாரம் செய்கிறான்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

அமைதி

அமைதியான இடத்தில்
கடவுள் இருப்பார்...
அமைதியான உள்ளத்தில்
கடவுள் வசிப்பார்...
அமைதியாக இரு...
கடவுளைத் தொழு...
கடவுள் வருவார்...

வியாழன், 21 ஏப்ரல், 2022

மழை

வானம் வீதிக்கு வந்தது...
கோலம் அழிந்த 
இயற்கை ஓவியத்தை எழிலூட்ட...
மழையாய்..!

புதன், 20 ஏப்ரல், 2022

பச்சோந்தி

பச்சோந்தியை ரசித்தான்
பாமரன்...
பச்சோந்தியாகவே ஆனான்
படித்தவன்...!
படித்தவன் படித்தவன்தானே..!

ஒற்றுமையே பலம்

மாத நாட்காட்டிக்கு
மரணமில்லை...
அதன் ஒற்றுமையால்..!

தினசரி நாட்காட்டி
தினந்தோறும் கிழிபடும்...
தனித்து நிற்பதால்...!

நம்பிக்கை

வெள்ளைப் பூக்கள்
மணம் தரும்...
வண்ணப் பூக்கள்
நிறம் தரும்...

நிறமில்லை என்று 
வெள்ளைப் பூ
வாழ்வை வெறுப்பதில்லை...

மணமில்லை என்று
வண்ணப்பூ
வசைபாடுவதில்லை...

உன்னிடம் ஏதோ
ஒன்று உள்ளது...
நம்பிக்கை கொள்...

பூவாய்ப் பூக்கதான் பிறந்தாய்...
புன்னகையை ஏன் மறந்தாய்?

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

கருத்து சுதந்திரம்

கருத்து சுதந்திரம் என்பது
மற்றவர் கருத்தில்
தலையிடாமல் இருப்பது.

புன்னகை

மரணம் வாசலில்...
மலர்ந்த மல்லிகை...
பறிக்கும்போதும் பறித்தபின்னரும்
அதே புன்னகையில்..!

கடமை வீரர்

அடுத்த அலை வந்து 
அழித்துச் செல்லும்...
அறிந்தும் சிலர்
பாதச் சுவட்டைப்
பதித்துச் செல்கின்றனர்...




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

தவம்

கூட்டுப் புழுவின் தவம்
வண்ணச்சிறகிற்காக...
சிப்பியின் ரணம்
முத்திற்காக...
கரியின் செதுக்கல்
வைரத்திற்காக...
பொன்னின் உருகல்
சுடர் ஒளிக்காக...
உளியின் வலி
அழகு சிலைக்காக...
நீ மட்டும்
வலி பொறுக்காதது ஏன்???

வரவேற்பு

ஒவ்வொரு விடியலையும்
வரவேற்றுக் கொண்டாடிக் கழிக்கிறது-
கருங்குயில்!

முயற்சி

முயற்சியில் சிறந்த இனம்
மனிதனல்ல...மரம்!
பாறையிலும் ஆலின் ஆணிவேர்!

ஆறறிவு

ஆறறிவு உயிர்
மனிதனல்ல...மரம்!
இலையுதிர்க்காலம்

வலிமை

இருக்கும் ஒன்றைவிட
இல்லாத ஒன்றுக்கே
ஆற்றல் அதிகம்-
வெற்றிடம்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

தியாகம்

உளி படாத கல் ...
சிலை ஆவதில்லை!
வலி பொறுக்காத சிப்பி ...
முத்தை ஈனுவதில்லை!
ஆழப் புதையாத கரி...
வைரமாவதில்லை!
வாழப் படியாத குழந்தை ...
நல்ல மனிதன் ஆவதில்லை! தெருவில் போவோரும் ...
தேரில் பவனி வரலாம் !
உருவில் சிதைந்தோரும் ...
ஊர் போற்ற வாழ்ந்திடலாம் !
விதியை வெல்லும் கல்வியே ...
அது நம் பள்ளியே !
கருத்தாய் படிப்போமே ...
கவலை மறப்போமே!!!