ஞாயிறு, 29 டிசம்பர், 2024
புதன், 11 டிசம்பர், 2024
பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
அன்பு மகளே... மது ஸ்ரீ...
எப்போதும் சுறுசுறுப்பாக இரு.
சுற்றி இருப்பவற்றை உற்றுக் கவனி...
ஏன்? எதற்கு? என்று யோசி.
கேள்விகளைத் தூக்கித் திரி.
பரவாயில்லை ...
கேள்விகளுக்கு விடை எங்கு கிடைக்குமோ?
அங்கே தேடிப்பார்.
உனக்கு எது கிடைத்தாலும்
அது உன்னுடைய முயற்சியால்...
உன்னுடைய உழைப்பால் ...
கிடைத்ததாக இருக்க வேண்டும்
உழைப்பைப் பெரிது என
உணர்ந்து கொள்.
உழைப்பை நேசி !
உழைப்பு உன் உடலை வலுவாக்கும் !
உழைப்பு உனக்கு வலியைத் தருவதாக எண்ணாதே !
உழைப்பு உனக்கு வலிமையைத் தரும்.
உழைப்பு ஏற்படுத்தும் உடல் வலியோ,
சலிப்போ, சோர்வோ
எதுவாகினும் கலங்காதே !
சிறிது ஓய்வெடு.
மீண்டும் உழை.
உன் நெற்றி வியர்வை
மண்ணில் விழ வேண்டும் !
அது, நீ பிறந்த பூமிக்குத்
திருப்பி தரும் பரிசு.
நீ முயன்று முயன்று
படிப்பதும் உழைப்புதான்
நீ உன்னை
மதிக்க கற்றுக்கொள் !
நீ உன்னை
நம்பக் கற்றுக்கொள் !
நீ உன்னை நேசி !
நீ உன் உடலை நேசி !
நீ உன் உள்ளத்தை நேசி !
நீ உன்னைக் கடவுளின்
குழந்தையாகக் கருதிக்கொள்
ஆம்.
பூமியில் உள்ள அனைவருமே
கடவுளின் குழந்தைகள்தான்.
கடவுளின் குழந்தைகளுக்கு
கடவுளின் சக்தி அனைத்தும் உண்டு!
உன்னிடம் சக்தி இருக்கிறது
அதைக் கண்டுபிடி
உனக்கு என்ன செய்ய பிடித்திருக்கிறது
என்று கண்டுபிடி.
அது, உனக்கு நன்மை செய்கிறதா?
என்று யோசி!
உனக்கு மட்டுமல்ல...
உன் உடன் இருப்பவருக்கும்
நன்மை தருமானால்
அதையே திரும்பத் திரும்பச் செய்
கஷ்டப்பட்டு பிறருக்காகப்
பிடிக்காததைச் செய்யாதே!
இஷ்டப்பட்டதால் பிறருக்குப்
பிடிக்காததை செய்யாதே!
நீ செய்வது உனக்கும் பிடிக்க வேண்டும்
உன் உடன் இருப்பவருக்கும் பிடிக்க வேண்டும்
உன்னால் உன்னைச் சுற்றிருப்பவருக்கு
நன்மை இருக்க வேண்டும் !
பிறருக்குத் தீங்கு செய்யாதே !
முடிந்தவரை நன்மையே செய் !
நன்மை செய்ய முடியாதபோது
அமைதியாய் இருந்து விடு.
எப்போதும் அமைதியை விரும்பு.
ஆனால், அமைதியாக இருந்து விடாதே!
அனைவரிடமும் அன்பாகப் பேசு
உன்னை அனைவருக்கும் பிடிக்கும்
என்று சொல்லுமாறு நடந்து கொள் !
ஆனால், சிலர் உன்மீது
பொறாமைப் படலாம்.
அவர்களைக் கண்டுகொள்ளாதே!
சிலர் நீ எது செய்தாலும்
உன்னைக் குற்றம் சொல்லலாம் !
காது கேட்காததுபோல் நடந்துகொள்!
வருத்தப்படாதே!
எது நடந்தாலும் கலங்காதே!
வெற்றி பெறவேண்டும் என்று ஆசைப்படு!
ஆனால், தோல்வி கிடைத்தால்
வருந்தாதே! கலங்காதே!
மீண்டும் முயற்சி செய்!
எத்தனை முறை தோற்றாலும்
கவலை கொள்ளாதே!
உன் முயற்சியைக் கைவிடாதே!
முயற்சி செய்வது மட்டும்தான் உன் கடமை.
வெற்றி கிடைக்க வேண்டும்
என்பது அவசியமில்லை!
தோல்வியும் சில நேரம் நன்மை தரும்.
பல முயற்சிக்குப் பிறகும் தோற்றால்
அதற்கு நீ காரணம் இல்லை
என்று எண்ணிக் கொள்!
எப்போதும் தெளிவான சிந்தனையுடனே இரு !
நல்ல நூல்களை வாசி.
முடிந்தால்... நேரம் இருந்தால் ...
மீண்டும் மீண்டும் வாசி !
வாசித்ததைப் பற்றி
கண்களை மூடிக்கொண்டு யோசி.
இதுவரை யாரும் கண்டுபிடிக்காத அதிசயத்தை
நீ கண்டுபிடிக்கலாம் !
கற்பனையாக எதையாவது சிந்தித்துப் பார்.
பல கண்டுபிடிப்புகள்
கற்பனையிலிருந்து பிறந்தவைதான் ...
நல்ல நண்பர்களோடு பழகு
தீய நண்பன் என்று தெரிந்துவிட்டால்
அவர்களின் முகத்துக்கு நேரே சொல்லிவிடு...
உன் நட்பு வேண்டாம் என்று.
என்றும் எப்போதும் துணிவுடன் இரு!
துணிவே துணை! என்பார்கள்
நீ தவறு செய்துவிட்டால்
பயப்படாதே!
தாமதிக்காதே!
ஆமாம். நான்தான் செய்தேன்.
தெரியாமல் நடந்து விட்டது,
இனிமேல் செய்யமாட்டேன்
என்று சொல்லக் கற்றுக்கொள்.
அதற்காகத் தவறு செய்யலாம்
என்று சொல்லவில்லை!
முடிந்தவரை தவறு செய்யாதே !
அவ்வாறு செய்தாலும்
அதை மறைக்காதே!
மறைப்பதுதான் பெரிய தவறு !
பொய் சொல்வது
அதைவிடப் பெரிய தவறு !
எதைப் பற்றி வேண்டுமானாலும்
அம்மாவிடம் பேசு
அம்மா என்ன நினைப்பார்கள்?
என்று தயங்காதே
உன்னை முழுவதுமாகச் சுமந்தவள் !
உயிர் இருக்கும் வரை
உன்னைப் பற்றியே நினைப்பவள்!
உன்னைப்பற்றி
எல்லாம் தெரிந்தாலும்,
நீயாகச் சொல்லாமல்
அம்மாவால் உனக்கு வழிகாட்ட முடியாது.
உன் மனதில் தோன்றும்
எதுவாக இருந்தாலும் ...
உன் அம்மாவிடம் பேசு.
உனக்கும் உன் அப்பாவாகிய எனக்கும்
முப்பது ஆண்டுகள் இடைவெளி
ஒரு தலைமுறை இடைவெளி
உன் உலகம் எனக்குத் தெரியாது !
சில நேரம் உன் மீது கோவப்படுவேன்.
எல்லாம் உன் நன்மைக்காகவே !
அது உனக்கு கெடுதல் தந்தால்,
என்னை மன்னித்துவிடு!
நான் தெரிந்தே
உனக்குத் தீமை செய்ய மாட்டேன்!
உன் ஆசைகள் எனக்குத் தெரியாது.
உன் தேவைகள் எனக்குத் தெரியாது.
எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் சொல்லி,
என்னிடம் கேட்டுக் கொள் !
நம்மைப் பிறர் மதிக்க வேண்டும் என்றால்,
நம்முடைய அறிவை
வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வளவு படித்தால் போதுமா?
அவ்வளவு படித்தால் போதுமா?
என்று எண்ணாதே !
உன் மனம் விரும்பும்வரை படி.
உன் படிப்பு
உனக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்.
உன் படிப்பு
உனக்கு வலிமையைத் தர வேண்டும்
உன் படிப்பு
உனக்கு நண்பர்களைத் தேடித் தர வேண்டும்
அதனால், நன்றாகப் படி !
உனக்கு தன்னம்பிக்கை இருக்கும்வரை
எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பு மகளே!
வியாழன், 7 நவம்பர், 2024
பல்வகை
அரிது அரிது
அரிதினும் அரிது மானிடப் பிறப்பு
அதனினும் அரிது குறையின்றிப் பிறத்தல்
அதனினும் அரிது நல்லோர்சொல் கேட்டல்
அதனினும் அரிது தேர்ந்து கற்றல்
அதனினும் அரிது நல்லோர் நட்பு
அதனினும் அரிது அன்பைச் சேர்தல்
அதனினும் அரிது கவலை ஒழித்தல்
அதனினும் அரிது ஞானம் பெறுதல்
அதனினும் அரிது தாய்மை யாமே!
உண்மை
அரிச்சந்திரன் வாழ்வு
அஸ்தமனம்
அடையும் வேளையிலும்
அவனுள்ளம்
அசுத்தமடைய வில்லை.
கடமையே பெரிதாய்
வாய்மையே வாழ்வாய்
வாழ்வுக்கு இலக்கணமாய்
வாழ்ந்தவன்
காந்திக்கு மட்டுமல்ல
யாவர்க்கும் வழிகாட்டி.
நிறைகுறை
இருள் அதிகம், ஒளி குறைவு
மருள் அதிகம், மதி குறைவு
பொய் அதிகம், மெய் குறைவு
மண் அதிகம், பொன் குறைவு
கரி அதிகம், வைரம் குறைவு
அதிகமெல்லாம் பெருமையல்ல!
குறைவெல்லாம் சிறுமையல்ல!
சிந்தனை
கோடி நினைப்பு
ஓர் நொடிக்குள்
ஓடிப் பாய்ந்து
மாய்ந் திடினும்
வாடி நிற்கும்
வாழ்வு செழிக்க
தேடிப் பார்க்கும்
நினைப் பில்லையே !
தவம்அது
வேண்ட வேண்ட வரம்தரும் !
தண்ணீர்அது
தோண்டத் தோண்ட ஊறும்!
வைரம்அது
வெட்ட வெட்ட மின்னும்!
பொன்அது
சுடச்சுட ஒளிரும் !
வாழ்வுஅது
துன்பம் வருத்தும் அளவிற்கே!
உதவி
மழை மறுபயன் கருதாமல் பொழிகிறது !
மரம் மறுபயன் கருதாமல் காய்க்கிறது !
நிலம் மறுபயன் கருதாமல் சுமக்கிறது !
மனிதா!
மறுபயன் கருதாமல் மானிடர்க்கு உதவு
மனக்கவலை ஒழியும்!
மாண்புகழ் பெறுவாய்!
இன்றேல்
துரோகம்,
ஏமாற்றம், மனச்சோர்வு, விரக்தி
யாவும் குடிபுகுமே!
மாறாமை
தாமரைக் குளத்துள்ளே பிறப்பினும்
தவளையின் குணமது மாறிடுமோ?
அமிர்தமழை ஆயிரமாயிரம் ஆண்டுகள் பெய்திடினும்
ஆழ்கடல் நீர்தான் தித்திக்குமோ?
பாலோடு தேனூற்றி வார்த்தாலும் இலவம்
பஞ்சேயன்றி பழுத்தகனி தந்திடுமோ?
கயமாணாக்கர் மனங்கோணும் செய்கையன்றி
கடுகளவும் அன்பில் ஒழுக மாட்டாரே!
திருமண வாழ்த்து
செல்லம் நீ!
ஜோதிலிங்கராஜீன் செல்வம் நீ!
கோடித் தொலைவில் இருப்பினும்
சூரியனைக் கண்டு மலரும்
தாமரை நீ!
மண்ணில் விளைந்த பொன்னாய்
கடலில் விளைந்த முத்தாய்
மலையிடைப் பிறந்த மணியாய்
காட்டிடை வளர்ந்த அகிலாய்
சந்தனத்தின் நறுமணமாய்
கதிர் ஒளியாய்
ஒளியும் மணமும் நிறைந்து,
கடலில் கலக்கும் நதியாய்
உடலில் ஓடும் உயிராய்
தாமரை மலரின் இதழாய்
கண்ணைக் காக்கும் இமையாய்
அணுவின் பிணைப்பாய்
என்றும் இணைந்து
உள்ளம் கனிந்து
தேன்போல் சிறந்து
நீடுழி நீடுழி வாழிய வாழிய
எனவே வாழ்த்துகின்றேன் !!!
புதன், 30 அக்டோபர், 2024
தீபாவளி வாழ்த்துக்கள்
திங்கள், 28 அக்டோபர், 2024
தீபாவளி வாழ்த்துக்கள்
பேதங்கள் ஒழிந்து
நல்லிணக்கம் மலர்ந்து
கீழ்மை அகன்று
அறத்தின்பால் நின்று
அன்பால் கட்டி
அகிலத்தை நடத்தும்
அறிவொளி பரவட்டும்
திக்கெட்டும்.
தமிழன் என்றோ
திராவிடன் என்றோ
பாகுபாடு காட்டும் எண்ணம்
பழந்தமிழர் மரபில் கிடையாது.
சாதிய மத இன பிராந்திய
பாகுபாடு
தமிழர் பண்பாட்டிற்கு
எதிரானது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்பதே தமிழர் பண்பாடு.
அந்த எண்ணம் மேலிட
நம் முன்னோர்களின்
கடல் ஆளுமையே காரணம்.
திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்.
ஒன்றே குலம்
என்னும் கருத்துடையவர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்
என்பது தமிழர் பண்பாட்டின் உச்சம்.
அயலாரை பிறமொழி தேயத்தார்
என்றே அழைத்தனர்.
பாகுபாடு காட்டுவது தமிழர்
மரபன்று. அது
அரசியல் சொல்லாடல்.
மக்களைப் பிரித்தாள்பவரின்
முயற்சிகளே
ஆரியர் திராவிடர் தமிழர்
இஸ்லாமியர் கிறித்துவர்
மேட்டுக்குடி தலித் என்பன.
பாகுபாடு அகலட்டும்
தீப ஒளியில்!
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
காலம் மாறி கரியளவு மாறி
கால நிலைமாறி மேக நிலைமாறி
மாரி நிலைமாறி மிகக்கன மழையிடர்
மாறக் காண்பீர் காலநிலை பேணும்வழி.
நீரறிவாண்மை
ஆரிமழை யமிழ்தமாய்ப் பெய்திடினும் -எம்மவர்
ஏரிகுளங்கால் வாயடைத்துத் தேங்கிய நீர்கண்டு
தேம்பியழுதார் அழுவார்ப்பின் காலிக்குடங்க ளோடு
தேவரீர் தருவீர் நிலத்தடிநீர் தேரும் ஞானம்!
நீரறிவு
புயலில்லை சூறா வளியில்லை - கொட்டிப்
பெய்தநீ ரோடவில்லை வெள்ளமே யெங்கும்
வெளிநாட்டின் காட்சிபோல் தென்னாடு திகைப்புறும்
நிலையொழிய நீரறிவு வேண்டும்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இலக்கு என்னும் வயலைத் தேர்ந்தெடுத்து
உழைப்பு என்னும் ஏரால் உழவுசெய்து
நேர்மை என்னும் விதைவிதைத்து
விடாமுயற்சி என்னும் நீர்பாய்ச்சி
தன்னம்பிக்கை என்னும் உரமிட்டு
சோம்பல் என்னும் களைபறித்து
கவனம் என்னும் வேலியிட்டு
வெற்றி என்னும் கனிபறிக்க
2024 அருள்புரியட்டும்!
பொங்கல் வாழ்த்து
கசந்த காலங்கள் கடந்து செல்ல
வசந்த காலங்கள் வந்து வாழ்த்த
நித்திரை கண்டது போதும் - நீ
வெல்லும் காலமே இனி எப்போதும்!
கரும்பு போலவே வாழ்க்கை இனிக்கட்டும்
பொங்கல் போலவே மகிழ்ச்சி பொங்கட்டும்
மஞ்சள் போலவே அழகு பெருகட்டும்
வாழை போலவே வம்சம் தழைக்கட்டும்
மாவிலைத் தோரணமாய் மங்களம் சேரட்டும்.
ஆசிரியர் தினம்
தந்தையின் அக்கறையும்
தாயின் அன்பும்
இறைவனின் அருளும்
ஓருருவாய் வாய்த்த
என் ஆசிரியர் சமூகத்திற்கு
அன்பு வணக்கம்!
உள்ளத் தூய்மையும்
நன்னெறி வாழ்க்கையும் பூண்ட
நீங்கள் நீடுழி நீடுழி
நலம்வாழ இறைவனை வேண்டுகிறேன்!
உண்மை
கண்ணால் காண்பதெல்லாம்
காட்சி அல்ல- அகக்
கண்கொண்டு காண்பதே காட்சி.
காதால் கேட்பதெல்லாம்
கேள்வி அல்ல -மனக்
காதால் கேட்பதே ஞானம்
வாயால் பேசுவதெல்லாம்
பேச்சல்ல -மனத்தில்
இருந்து பேசுவதே பேச்சு
திருமண நாள்
வாழ்க்கைத் துணையாய் வந்து வாய்த்தவளே!
வராத வரமாய்த் துணை நின்றவளே!!
வாழும் காலமெல்லாம் விருந்து சமைத்தவளே !!!
இடைவந்த பிணியறுத்த அருமருந்தே !!!
கடைவந்து கவலை தீர்ப்பாய் ஆரமுதே !!!
அன்பே ! அழகே ! தேவதையே !
பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தீந்தமிழே!
!!
ஆன்மீகம்
இந்துக்களுக்கு முஸ்லீம்களுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை.
யானைகளுக்கு எறும்புகளுக்கு என்று தனித்தனியே கடவுள் இல்லை.
இறைவன் எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் பொதுவானவர். அழிவற்றவர். மேலானவர். ஒருவர். பலர். வடிவினர். வடிவற்றவர்.
இறைவனைத் தன் உள்ளுணர்வால் கண்டுபிடித்தவன் மனிதன். இறைவனைப் பலவாறாகச் சித்தரித்தவன் மனிதன்.
மனத்தால் வழிபடப்பட வேண்டிய இறைவனுக்குச் சடங்குகள் சம்பிரதாயங்கள் தோற்றுவித்து, கட்டுக்கதைகளை விதைத்து மனிதரில் பிரிவினை செய்தவன் மனிதன். இறைவனையே பலகூறாக்கிப் பிரித்தவனும் மனிதனே. மனிதரில் மனிதரைப் பிரித்துப் பகைமை வளர்த்தவனும் மனிதனே.
அறிவியல் கலவாத ஆன்மீகம் பயனற்றது. ஆன்மீகம் இல்லாத அறிவியலும் பயனற்றது.
விருப்பு வெறுப்பு இல்லாதவர் இறைவன். அவர் நல்லவர்களுக்கு வாரி வழங்குவதும் இல்லை. தீயோரைத் தண்டிப்பதும் இல்லை. இருவகைத்தார்க்கும் ஒன்றே செய்வார். நல்லவர்கள் எல்லாம் நன்றாக வாழ்வதும் இல்லை. கெடுதல் செய்வோர் எல்லாம் கெடுவதும் இல்லை. எவர் மனவலிமை உடையவரோ அவரே வசதியுடன் வாழ்வார். நல்ல மனம் இருந்தும் மனத் திட்பம் இல்லாமல் இருந்தால் அவர் நல்லவராய் மட்டுமே வாழ்வார். நன்றாக வாழ மாட்டார்.
தீய மனம் கொண்டவர் மன உறுதியுடன் வாழ்ந்தால் அவர் கெட்டவராய் (மனம் போன போக்கில் கொடுமைகள் செய்து) இருந்தாலும் வசதியுடன் வாழ்வார். வாழ்வதற்கு மனத் திடம் முக்கியம். அதற்கு இறை நம்பிக்கை உதவலாம். இறை நம்பிக்கை இல்லை என்றால் நுண்ணறிவும் நூலறிவும் வேண்டும்.
மணற்கிணறு
கடிக்கும் போதுதான் தெரிகிறது
கரும்பு எவ்வளவு இனிக்கும் என்று!
உழைக்கும் போதுதான் தெரிகிறது
வியர்வையின் மதிப்பு என்னவென்று!
தோல்விக்குப் பின்தான் தெரிகிறது
வெற்றிக்கு என்ன வேண்டும் என்று!
படிக்கும் போதுதான் தெரிகிறது
கற்றது கைம்மண்ணளவு தானென்று!
நீரளவே ஆகும் நீர் ஆம்பல்
தோண்டும் அளவே சுரக்கும் மணற்கிணறு
வியர்வையின் அளவே விளைச்சல்
படிக்கும் அளவே நூற்பயன் ஆகுமப்பா!
தன்னம்பிக்கை கவிதை
ஓடுகிற நீரில்
பாசி படியாது.
உழைப்பாளி உள்ளமதில்
கபடம் கலவாது.
சமூகமே சாக்கடை ஆனாலும்
தாமரை போல் மலருங்கள்.
நாற்றமெடுத்த சிப்பிக்குள்ளும்
முத்துப்போலே ஒளிருங்கள்.
கவலைவிடு
தலையிலிருந்து இழிந்த மயிரை எண்ணி கோபமோ வருத்தமோ அடைய வேண்டியதில்லை. அதுபோலவே உணர்வு மாறுபட்டு, கருத்து வேறுபட்டு விலகிச் செல்லும் உறவுகளை எண்ணி விசனம் அடைய வேண்டியதில்லை. வழுக்கையே விழுந்தாலும், வழுக்கி விழுந்தாலும் கவலை வேண்டாம்
தத்துவம்
வாழ்க்கையின் தத்துவத்தை
மதி கற்பிக்கிறது.
வளர்வதும் தேய்வதும்
மதி(நிலா)யும் அறிவும்
மதிப்பும் மரியாதையும்
என்று உணர்ந்து
உணர்வுகட்கு ஆட்படாது
இன்பத்தையும் துன்பத்தையும்
சரிசமமாகப் பாவிக்கும்
பக்குவம் பெறுவோம்.
ஞானம்
தீமை வேறு, தீமை செய்தவர் வேறு என்று உணரும் ஞானம் ஞானிகளுக்கே உரிதாம்.
திருமண நாள் வாழ்த்து - கவிதை
கடல் வானைச் சேர்வதும்
வான் கடலைச் சேர்வதும்,
பரிதியை மதி தொடர்வதும்
மதியைப் பரிதி தொடர்வதும்,
கடலைக் காற்று தழுவுவதும்
காற்றைக் கடல்தழுவுவது போல
உருவைத் தொடரும் நிழல்போல
உடலில் கலந்த உயிர்போல
ஒன்றின் ஒன்றாய்க் கலந்து
பல்லாண்டு பல்லாண்டு
கூடி மகிழ்ந்திருக்க வாழ்த்துகிறேன்!
பிறந்தநாள் வாழ்த்து கவிதை -மாதிரி
இருபெருஞ்சுடரும்
உனக்கு வழிகாட்ட,
இன்னமுத மழை
உன் வேருக்கு நீரூற்ற,
இருகடல் எழுந்து
உன் செவிக்கு இசையூட்ட,
இருநிலம் ஏந்தி
உன்னைத் தாலாட்ட,
இசைகொண்டு
தமிழ்த்தாய் பாலூட்ட,
வான்மிசை தொட்டு
வளர்வாய் நீ!
ஆரமுதாய் விளைவாய் நீ!
அன்பிற்கினிய கபிஷ் நாத்
உனக்கு என் இனிய
அகவைத்திருநாள் வாழ்த்துக்கள்!
வியாழன், 10 அக்டோபர், 2024
சரஸ்வதி பூஜை
வைகறையில் துயிலெழுந்து,
ஓடி முடித்து, களித்து, குளித்து,
அமுதுண்டு, புத்தகங்களை அடுக்கி,
சந்தனம் குங்குமமிட்டு
வழிபட்டு வாஞ்சையுடன் முகத்தில் ஒற்றி
சரஸ்வதியை வரவேற்று வணங்கி
அடக்கமாகச் சம்மனம் இட்டு உட்கார்ந்து
ஆசையுடன் படித்த பிள்ளைப்பருவ நாட்கள்
வாஞ்சையுடன் வருடிச் செல்கின்றன என்னை இந்நாளில்...
தங்கமகளே
என் உள்ளத்தை கொள்ளை கொண்ட
வெள்ளை அழகே !
கமகமக்கும் சந்தனமே!
மணமணக்கும் மரிக்கொழுந்தே !
என் வாழ்வின் நம்பிக்கைக் கீற்றே !
என் சிம்மாசனத்தின் மணிமகுடமே !
என் சிங்கமே !
தகதகக்கும் தங்கமே !
வீரத்தின் விளைநிலமே !
விவேகப் பேச்சே !
தெளிந்த மதியே !
பொருந்திய குணவதியே !
தாங்கி நிற்கும் தூணே!
துள்ளி குதிக்கும் மீனே!
துயர் துடைக்கும் மானே!
கட்டிக் கரும்பே! வெட்டி வேரே!
புதன், 9 அக்டோபர், 2024
வரவேற்புரை ஏஆர்ஆர் சீனிவாசன் எம்எல்ஏ
அரசியலில் ஆழங்கால்பட்டவரே
அலைகடல் கூட்டத்தின் நாயகரே
ஆர்ப்பரிக்கும் கடலாய்
இடையறாது மக்கள் பணியாற்றும் கடமை வீரரே
உண்மை நேர்மை உழைப்பின் உறைவிடமே
ஊரெங்கும் சுற்றி வரும் தேரே
எண்ணம் சிதையாமல்
எடுத்த காரியம் குறையாமல்
ஏழையவர் குறைதீர்க்கும் மாமருந்தே
விருதுநகர் பெற்றெடுத்த தங்கமே-மும்முறை
வெற்றியை ருசித்த சிங்கமே
வாழ்நாளெல்லாம் மக்கள் பணியாற்றி வரும் மாமணியே-உம்மை
வருக வருக என வரவேற்பதில் இப்பள்ளி பெருமைகொள்கிறது.
அன்பு மகளே
என் உயிரே! ஆயிரங் காலத்துப் பயிரே!
என் கனவே! என்றென்றும் உன் நினைவே!
நீ பிறந்த போது நானும் புதிதாய்ப் பிறந்தேன்! உள்ளம் மகிழ்ந்தேன்! நீ முழுதும் தேன்! என உணர்ந்தேன்.
உன்னை நினைத்தேன்!
நினைத்தபொழுதெல்லாம்,
தேன் மழையில் நனைந்தேன்!
உன் பொக்கை வாய்ச்சிரிப்பில், பூ மலர்வதைக் கண்டேன்!
நீ தவழ்கையில், உலகமே தவழ்ந்து கொண்டுதான் இருந்தது.
உன் குறுகுறு நடைக்கு ஈடு இணை ஏது?
உன் குடுகுடு ஓட்டம், முயலினை நினைவூட்டும்!
உண்ண மறுக்கும் உனக்கு
வித்தை காட்டி ஊட்டினேன்!
செல்லும் இடந்தோறும் உன்னை மறக்காமல் அழைத்துச் சென்று வந்தேன்.
எனக்கு உற்ற துணையாக வந்தாய்!
நாள்தோறும் வளர்ந்தாய்!
ஊரெல்லாம் சுற்றினோம்
உண்டோம், குளித்தோம், களித்தோம்.
கிளியைப் போல மொழியைக் கற்றாய் !
எழுத்துக்களை உச்சரித்தாய் !
எழுத்துக்களைக் கூட்டி உயிரளித்தாய் !
அன்னை மொழியின் அமுதமொழி இனித்தது.
வாசித்தாய், வளர்ந்தாய், உயர்ந்தாய்!
அது கண்டு நிமிர்ந்தேன். பயிற்சிகள் பல தந்தேன். அதில் உனது வெற்றியைக் கண்டேன். உள்ளம் மகிழ்ச்சி கொண்டேன்.
சனி, 14 செப்டம்பர், 2024
வாகை சூடி
- அச்சம் அகற்று
- ஆர்வம் கொள்
- இளமையை உணர்.
- ஈட்டி போல் பாய்
- உலகம் சுற்று
- ஊரோடு இணங்கு
- எளிமையாய் வாழ்
- ஏறிச் செல்
- ஐயம் விலக்கு
- ஒன்றே உலகம்
- ஓது ஓது
- ஔவை சொல் கேள்
- கவலை ஒழி
- காது கொடு
- கிழக்கு உனக்கே
- கீழ் மேலாகும்
- குறட்பா படி
- கூடி வாழ்
- கெட்டோர் விலக்கு
- கேட்டது கிடைக்கும்
- கையை நம்பு
- கொடுத்து வாழ்
- கோணல் வேண்டாம்
- சபதம் எடு
- சாதித்துக் காட்டு
- சிந்தனையை விரிவாக்கு
- சீற்றம் வேண்டாம்
- சும்மா இருக்காதே
- சூடு சொரணை வேண்டும்
- செருக்கு வேண்டாம்
- சேமித்துப் பழகு
- சைவம் நன்று
- சொற்படி நட
- சோற்றுக்கு உழை
- தமரைப் பெருக்கு
- தாமதம் வேண்டாம்
- திடமாயிரு
- தீர விசாரி
- துணிவுகொள்
- தூரம் இல்லை
- தெரிந்து கொள்
- தேடிப்பார்
- தைரியம் வேண்டும்
- தொட்டது விடாதே
- தோகை விரி
- பண்பை வளர்
- பாட்டி சொல் கேள்
- பிதற்றல் வேண்டாம்
- பீடை மற
- புண்ணியம் செய்
- பூமி உனக்கே
- பெருமை கொள்
- பேறு பெறு
- பைசா சேர்
- பொய் சொல்லாதே
- போக்கிடம் தேடாதே
- நன்மை செய்
- நாட்டம் கொள்
- நிலம் தொழு
- நீர் சேமி
- நுட்பம் அறி
- நூல் உருவாக்கு
- நெகிழ்ச்சி வேண்டும்
- நேசம் காட்டு
- நைந்து விடாதே
- நொடியிலும் வாழ்
- நோன்பு பழகு
- மனசாட்சிப்படி வாழ்
- மானம் பெரிது
- மிரண்டு விடாதே
- மீட்சி உண்டு
- முயற்சி வெல்லும்
- மூளையைச் சுத்தமாக்கு
- மெல்லப் பேசு
- மேற்கிலும் உதி
- மொழி அறி
- மோதிப்பார்
- வலிமையை உணர்
- வாய்ப்பைத் தவறவிடாதே
- விடுதலை விரும்பு
- வீறு கொள்
- வெற்றி உனதே
- வேடிக்கை வேண்டாம்
- வையம் வாழ்த்தும்.
வெள்ளி, 6 செப்டம்பர், 2024
வரவேற்புரை
மணியை ஈன்றதால் மாமலையும்
முத்தை ஈன்றதால் சிப்பியும்
பவளத்தை ஈன்றதால் கடலும்
அகிலை ஈன்றதால் காடும்
வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும்
பெருமை அடைவது போல
நகைச்சுவை மருத்துவர் ஞான சம்பந்தனை ஈன்றதால் முத்தமிழும் தமிழ்வளர்த்த மதுரையும் பெருமை கொள்கிறது.
தீராத வானத்தில் ஓடும்
முடிவில்லாத கதிர்கள் போல...
அடங்காத பெருங்கடலில் தாவும்
ஓயாத அலைகள் போல...
அழிவில்லாத மானுடத்திற்கு உள்ளொளி பாய்ச்சுகின்ற உத்தமரே, வருக!
அமிர்தம் வேண்டிப் பாற்கடல் கடைந்தவர்கள் தேவர்கள்
அடைக்கலம் வேண்டிக் கடுந்தவம் புரிந்தவர்கள் முனிவர்கள்
அருந்தமிழோங்கச் சங்கம் சமைத்தவர்கள் பாண்டியர்கள்
அதுபோல,
அன்னைத்தமிழின் உள்ளம் மகிழ,
ஆற்றாமக்கள் சிந்தை மகிழ,
அருந்தமிழ்ச் சான்றோர் அகமகிழ,
நகைச்சுவை இலக்கியத்தின் நாயகராய்
வருகை தந்திருக்கும்,
இயற்றமிழ் வித்தகரே,
முதற்சுவை தீங்கனியே,
மூன்றாம்தமிழ் நாயகரே!
வருக! வருக!
நற்றமிழ் நாவலரே!
தமிழ் மரபுக் காவலரே!
வருக! வருக!
உவகை கவிஞரே!
தமிழ் இலக்கியத்தின் சிற்றரசே!
வருக! வருக!
பண்டித மணியே!
கலை மாமணியே!
விருதுக்கு விருதானவரே!
பேராசிரியர்,
மேடைப்பேச்சாளர்,
நூலாசிரியர்,
நேர்முக வர்ணனையாளர்,
தன்னம்பிக்கைப் பேச்சாளர்,
திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர்
கலைமாமணி திரு. கு. ஞானசம்பந்தன் அவர்களை
வருக! வருக! என வரவேற்பதில்
மாமதுரைப் புத்தகத் திருவிழா பெருமை கொள்கிறது.
சனி, 2 டிசம்பர், 2023
நான் இந்தியாவின் பிரதமராக இருந்தால்-கவிதைப் போட்டி
உலகின் தலைசிறந்த பண்பாடு - நமது
உயர்ந்த கலாச்சாரத்தைக் கொண்டாடு
இனம் மொழி மத வேறுபாடு - நம்மில்
இடர்பல வரும்போது ஒன்றுபடு
என் இதயம் துடிக்கும் இந்தியன் என்று
எமது பாரதம் நிலைக்கும் உலகை வென்று
இளைய பாரதம் புதிய பாரதம் என் முன்னே
எண்பது கோடி உழைக்கும் மக்களே
எமது பாரதத்தின் பலம்
வலுவான அடிப்படைக் கல்வி - உடன்
திறன்மிக்க தொழிற்கல்வி
வேளாண்மை அதில் தொழில்நுட்ப மேலாண்மை
விரைவுப் போக்குவரத்து அதில் விரிவான பாதுகாப்பு
தொழில் பெருக்கம் அதில் இயற்கைப் பாதுகாப்பு
சீர்திருத்த நிர்வாகம் அதில் ஊழல் ஒழிப்பு
ஏற்றத்தாழ்வு அகல சமவாய்ப்பு சம பகிர்வு
இறையாண்மைக்கு கேடு இல்லாத சுதந்திரம்
ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு நல்லிணக்கம்
திட்டமிட்ட பொருளாதாரம் அதில் கடன் இல்லாத வளர்ச்சி
நாட்டின் வளர்ச்சிக்காகவே அரசியல்
அரசியலாகாத நாட்டின் பாதுகாப்பு
ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பாதுகாப்பு
வீடு குடிநீர் சுகாதாரம்
கல்வி மருத்துவம் அனைவருக்கும்
எங்கும் எதிலும் எண்மத் தொழில்நுட்பம்
எங்கும் யாவர் முகத்திலும் மகிழ்ச்சிதான் பொங்கும்.
யாதும் ஊராய் யாவரும் கேளிராய்
உலகிற்கே ஒளியாய் வழியாய் பிரதமராய் நான்.
திங்கள், 13 நவம்பர், 2023
தூண்டிலில் மாட்டிய குருட்டு மீன்
தூண்டிலில் மாட்டிய குருட்டு மீன்
நானும் நண்பரும் தூண்டில் போட்டோம்
மீன்கள் வரிசையாக வந்து மாட்டின
அதில் ஒன்று குருட்டு மீன். பாவம் அதை விட்டுவிடு என்றார் நண்பர்.
நானும் பாவம் என்றேன். இதுநாள் வரையிலும் இந்த மீன் வாழ்க்கையோடு போராடியுள்ளது. இனிமேலும் இந்த மீன் கஷ்டப்படக் கூடாது. மீன் தனக்காகப் பிறக்கவில்லை. யாரோ ஒருவருக்கு உணவாகத்தான் பிறந்தது. எனவே இதை விடக்கூடாது. சமைத்து உண்ண வேண்டும் என்றேன். இந்த சிந்தனைக்கிடையே, கடவுளும் என்னைப்போல் சிந்தித்துத்தான் வாழ்க்கையின் விளிம்பில் வாழ்பவர்களின் உயிர்களைப் பறித்துக் கொள்கிறாரா? என்று தோன்றியது. இதயம் கனத்தது.
செவ்வாய், 7 நவம்பர், 2023
சிறந்ததில் சிறந்தவை
மலேசியக் கவிஞர் அ.முத்தரையனார்
கவிமணி தேசிக விநாயகனார்
புறநானூறு-கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
வள்ளலார்
அன்னை தெரசா
தாராபாரதி
கலீல் கிப்ரான்
பாரதிதாசன்
நாலடியார்
தனிப்பாடல் திரட்டு
பாரதியார்
ராஜ மார்த்தாண்டன்
கலாப்ரியா
காவற்பெண்டு
திருமந்திரம்
தொல்காப்பியம்
ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023
விடுதலை
ஞாயிறு, 7 மே, 2023
உழை
கஷ்டப்படாமல் வாழ வேண்டுமென்றால் முதலில் கஷ்டப்படு.
ஆயிரம் அண்டா சோற்றை ஒரே நாளில் தின்றுவிட முடியாது. ஆயிரம் நாட்களில் உழைக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் முடித்து விட முடியாது.
வெற்றி என்பது ஒரே நாளில் கிடைத்து விடாது. ஆனால், என்றாவது ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும். .
நல்ல நேரம் வரட்டும் என்று காத்திராதே!
நல்ல நேரம் என்று ஒன்று உண்டு என்றால் அது இந்த வினாடி மட்டுமே!
ஏதாவது செய்ய நினைத்தால் அதை இந்த வினாடியே செய்துவிடு!!
வெள்ளி, 24 பிப்ரவரி, 2023
வியாழன், 23 பிப்ரவரி, 2023
அறிவும் உறுதியும் உழைப்பும்
வறட்சிக் காலத்தில்
தன்னைத் தாங்கிப் பிடிக்கத்
தன் இலைகள் உதிர்க்கும் மரம்
தன் அழகு
குலைவது குறித்துக்
கவலை கொள்வதில்லை!
கடுகினும் சிறுவிதை
காகம் குருவியினம் விதைத்த விதை
கரும்பாறையில் விழுந்தாலும்
கருத்துடனே உறுதியாய்
கருமுளையைப் பாய்ச்சிட்டே
கற்பாறையைப் பிளந்திடும்!
எதிர்வரும் மழையில்
தன் இனம் பிழைக்க
முன்னதாகவே இரைசேகரிக்கும்
எறும்புக் கூட்டம்
முன்புத்தியின் அடையாளம்!
புதன், 22 பிப்ரவரி, 2023
உணவகம்
உணவகங்களின் பெருக்கம்
நாகரிகத்தின் குறியீடு அல்ல!
பண்பாட்டுச் சிதைவு!
உடல்நலனுக்கு ஒவ்வாத
முற்றிலும் சூழலுக்கு மாறுபட்ட
உணவு ...உணவல்ல...விஷம்!
ஒரு வாழிடச் சூழலில்
வாழும் மரம்கூட
வேறிடச் சூழலில் வாழ முடிவதில்லை...
காலநிலைக்கும்
வாழும் சூழலுக்கும்
ஏற்ற உணவே உணவு...
வீட்டுச் சமையலில்
பால் வேறுபாடு கூடாது.
அது அவரவர்
வீட்டுச் சூழலைப் பொறுத்தது.
உழைப்பு
உழைப்பவருக்குத்தான்
உழைப்பை மதிக்கத் தெரியும்!
தேரின் மேல் அமர்ந்து இருப்பவருக்குக்
குதிரையின் கால்வலி எப்படித் தெரியும்?
பிரசவத்தைப் பார்ப்பவரின் வலியும்
பிரசவித்த தாயின் வலியும் ஒன்றாகாது.
உழைப்பவரே உயர்ந்தவர்! - பிறர்
உழைப்பைத் திருடிப் பிழைப்பவர்
சிவிகையில் சிங்காரமாய் இருந்தாலும்
இழிந்தவரிலும் இழிந்தவரே!
தேனின் சுவையில் தேனீக்களின்
தெவிட்டாத தேடல் தெரிய வேண்டும்!
வெள்ளியென மின்னும் அன்னத்தின் சுவையில்
உழவனின் உழைப்பு ஒளிர வேண்டும்!!
செவ்வாய், 21 பிப்ரவரி, 2023
இலவசமும் கட்டணமும்
அரசு வழங்கும்
இலவசப் பொருள்களுக்கு எல்லாம் அதிகாரிகள்
குறிப்பிடாத கட்டணங்களை
பெற்றுக் கொண்டுதான்
தருகிறார்கள்.
பெரு நிறுவனங்கள்
விற்பனைப் பொருள்களுக்கெல்லாம்
குறிப்பிட்ட இலவசங்களை
அள்ளித் தருகின்றன.
இலவசங்களில் எல்லாம் கட்டணங்கள்.
கட்டணங்களில் எல்லாம் இலவசங்கள்.
மதிப்புள்ள பொருளை எல்லாம்
மதிப்பற்ற முறையில் வழங்கினால்,
அது அரசாங்கம்.
மதிப்பற்ற பொருளை எல்லாம்
மதிப்புள்ள முறையில் வழங்கினால்,
அது பெருநிறுவனம்.
நாட்டை நல்லவர் ஆள்வதில்லை. ஏன்?
பல நேரங்களில் ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்ற நல்லவற்றைப் பற்றிய சிந்தனைகளில் நான் ஆழ்வதுண்டு. நாட்டை ஆளும் தலைவர்களில் ஏன் நல்லவர்களைக் காண முடிவதில்லை என்று பல வேளைகளில் ஐயப்பட்டிருக்கிறேன். என்னுடைய சிந்தனைகளால், “கிணற்றுக்குள் தொலைத்த மோதிரத்தைத் தேடுவது” போல ஆழ்ந்து தேடி இருக்கிறேன்.
அப்போதெல்லாம் "இது கலிகாலம், தீயவர்களின் ஆதிக்க காலம், மக்களின் அறியாமைக் காலம்" என்று நினைத்திருக்கிறேன்.
"நல்லவர்கள் அரசியலுக்கு வர அஞ்சுகிறார்கள், அரசியல் ஒரு சாக்கடை என்று எண்ணுகிறார்கள்" என்றெல்லாம் சிந்தித்திருக்கிறேன்.
"அனைவரும் ஓட்டுப் போட்டால் தானே நல்லவர்கள் ஆட்சிக்கு வர முடியும்" என்று கூட சிந்தித்து இருக்கிறேன்.
"காசு வாங்கிட்டு அறியாமையால் அல்லது விசுவாசத்தால் ஓட்டு போட்டு தீயவர்களைத் தலைவராக்குகிறார்களே" என்று எண்ணி இருக்கிறேன்.
"மக்கள் அனைவரும் நல்லவர்கள் தான். தனித்திருக்கும் போது மிகவும் நல்லவர்கள்".
"தலைவர்கள் தான் மக்களைத் தவறாக வழி நடத்துகிறார்கள். அறியாமைக்கு ஆட்படுத்துகிறார்கள். மக்களைத் திசை திருப்புகிறார்கள். குழப்புகிறார்கள். ஆசையைக் காட்டி, ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்" என்றுதான் இதுவரை எண்ணியிருக்கிறேன்.
ஒழுக்கம், நேர்மை, உண்மை போன்ற நல்ல குணங்களோடு கட்டுப்பாட்டோடு நல்லவனாய் எல்லா மனிதராலும் இருக்க முடிவதில்லை. நல்ல குணங்களை விரும்பி ஏற்றுக் கொண்டு மனக்கட்டுப்பாடு, சுயக் கட்டுப்பாடுடன் வாழ்பவர்கள் சிலரே. பெரும்பாலானோரால் அப்படி வாழ முடிவதில்லை.
தன்னால்தான் சுயக் கட்டுப்பாடு, ஒழுக்கம் நேர்மையோடு வாழ முடியவில்லை என்று எண்ணும் பெரும்பான்மையானோர் தன்னைச் சூழ்ந்து இருப்பவர்கள் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
ஆனால், அவர்கள் தன்னை ஆளத் தகுதியுள்ள நபரைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். அதில் விஞ்சி நிற்பது தற்காப்பு.
தன்னை விட நேர்மையானவரிடம் தன்னை ஆளும் தகுதியை ஒப்படைத்தால், தான் தவறிழைக்கும் போது நேர்மையாளன் தன்னைத் தண்டித்து விடுவான் என்கின்ற அச்ச உணர்வு மிகுதியால்தான், சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நபரை அல்லது அரைகுறை அறிவுள்ளவனை அல்லது தவறுகளை மன்னிப்பவனை அல்லது அனுசரித்துச் செல்பவனை அல்லது தலையாட்டிப் பொம்மையைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறான். இத்தகைய சுயநலப் போக்கால்தான் நல்லவர்கள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட முடிவதில்லை.
யார் தலைவனாக வேண்டும்? என்பதை விட, நல்லவர்கள் தலைவனாக வரக்கூடாது என்பதில் பெரும்பான்மையோர் மிகவும் கவனமாகச் செயல்படுகின்றனர்.
நல்லவன் தலைவனானால் என்ன நடக்கும்? குறைந்த ஒழுக்கம், குறைந்த கட்டுப்பாடு, குறைந்த நேர்மையை உடையவர்களுக்குத் திண்டாட்டம் தானே! அவர்களின் குற்றங்கள் கண்டிக்கப்படும் அல்லவா!! தண்டிக்கப்படும் அல்லவா!!! அந்த அச்ச உணர்வால் தான் நல்லவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை?!
வியாழன், 16 பிப்ரவரி, 2023
பொன்னான பொன்மொழிகள்
இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உழைப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.
உன் உழைப்பு ஒவ்வொன்றும் வெறும் வியர்வை அன்று. ஒவ்வொன்றும் வைரக்கல்.
உனக்கு நீயே நீதிபதியாக இரு. அப்போது தான் உன் தவறுகளுக்கு நீ தண்டனை தர முடியும்.
உன் மனச்சாட்சியே கடவுள். உன் கடவுளுக்கு எப்போதும் உண்மையாக இரு.
சிறகுகளை விரித்தால் பறக்கலாம். சிந்தையை அடக்கினால் செய்கையில் சிறக்கலாம்.
ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்.
பலவீனத்திற்கான பரிகாரம் பலவீனத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பதல்ல. பலத்தைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டும்.
அஞ்சாமை தான் அறியாமை என்னும் மலையைத் தகர்த்து உடைக்கும் அணுகுண்டு
எந்தச் செயல் உன்னை வலிமையானவனாக உணர வைக்கிறதோ அச்செயலைத் திரும்பத் திரும்பச் செய்
வலிமை தான் வாழ்வு. வலிமைதான் மகிழ்ச்சி. பலவீனம் இடைவிடாத சித்திரவதை ஆகவும் துன்பமாகவும் அமையும் என்பதால், உனது வலிமையைப் பெருக்குவதிலேயே உன்னுடைய வாழ்க்கையைச் செலவிடு.
மலைகளைத் தகர்க்கும் மன உறுதி வேண்டும். தோல்வியுற்ற வாழ்க்கை வாழ்வதைவிட போர்க்களத்திலே போரிட்டு மடிவதே மேல். தோல்வியுற்ற வாழ்க்கை துயரமானது. வென்றே ஆக வேண்டும்.
ஒவ்வொருவரும் தனது அதிகபட்ச ஆற்றலை மிச்சம் மீதியின்றிச் செலுத்தி உழைக்காவிட்டால் எதையும் சாதிக்க இயலாது.
அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவு கடந்த அஞ்சாமை, அளவற்ற பொறுமை இவை நான்கும் அவசியம்.
எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேதான் இருக்கின்றன. அதை நீ உணர வேண்டும் என்றால், நீ உன் மீது அளவற்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.
மரணம் என்பது உடையை மாற்றுவது போலதான். அதனால் மரணத்திற்கு அஞ்சாதே.
புதன், 8 பிப்ரவரி, 2023
சுற்றுப்புறத்தைச் சுவாசி
ஆபத்துக் காலத்தில் துண்டான பல்லியின் வால் முளைப்பது எப்படி?
மின்மினி பூச்சியின் வால் பகுதி ஒளிரும் ரகசியம் என்ன?
பருவகாலத்தை முன்னரே அறியும் கட்டெறும்பின் மூளைத்திறன் என்ன?
வசந்த காலத்திற்காக இலையை உதிர்த்து தளிர்த்துக் காத்திருக்கும் மரத்தின் அறிவாற்றல் என்ன? என்பன போன்ற வினாக்களை எழுப்பி விடைதேடும் சித்தராய் சிந்தனையைச் சீர்திருத்தி வை.
சுற்றுப்புறத்தை உற்றுநோக்கி சிந்தனையில் கரைந்து போ.
அது உன்னை ஞானி ஆக்கும்.
விஞ்ஞானி ஆக்கும்.
வியாழன், 26 ஜனவரி, 2023
சோம்பல் விலக்கு!
சோம்பல் விலக்கு!
வெட்டுப்படாமல்
வைரம் மின்னுமா?
கசக்கும் மருந்தின்றி
நோய் குணமாகுமா?
உளி படாமல்
கல் சிலையாகுமா?
முத்துக்குளிக்காமல்
முத்தெடுக்க முடியுமா?
முடியாதல்லவா?
நீ சோம்பி இருந்து
என்ன பயன்?
துன்பத்தை வேண்டு
துன்பத்தை வேண்டு
இருட்டைக் காணாதவன்
விடியலை உணர மாட்டான்..!
வெயிலில் வாடாதவன்
நிழலை விரும்ப மாட்டான்..!
துன்பத்தை அறியாதவன்
இன்பத்தில் மகிழ மாட்டான்...!
துன்பமே இன்பத்திற்கான வித்து!
முதலில் துன்பம்...
அதன்பின் பேரின்பம்!
துன்பம் வரின்
கவலை வேண்டாம்...
கலங்காதிரு...
பூட்டைக் கொடுத்தவனிடம்
சாவி நிச்சயம் இருக்கும் ...!
எதிர்கொள் மனமே..!
எதிர்கொள் மனமே..!
உன்னால் முடியும் என்று
நம்பிதான்
கடவுள் எனக்கு
நிறைய துன்பம் தருகிறார்.
கடவுள் என்மீது வைத்த
நம்பிக்கையை
வீணாக்க மாட்டேன்...
புதன், 21 டிசம்பர், 2022
அசைவம்
அசைவம் விரும்பிகள்
பாதகச் செயல்களில்
சமரசம் செய்து கொள்வார்கள்
கசாப்பு கடைக்காரர் எதற்கு அஞ்சுவார்?
சனி, 17 டிசம்பர், 2022
எங்கே செல்கிறது மனித இனம்?- எங்கே செல்ல வேண்டும் புனித இனம்?
யுகம் யுகமாய் மனித உடல்கள்...
குவியல் குவியலாய்த் தோன்றி அழிந்தன.
ஒவ்வொரு சிதையிலும் வரலாறு நீள்கிறது.
உடல்கள் உருவாக்கி விட்டுச் சென்ற எச்சங்கள்
மலை மலையாய் நீண்டு போகின்றன...
வசதிகளைப் பெருக்கிப் பெருக்கி
வாழிடச் சூழலைச் சிதைத்துச் சிதைத்து
என்ன செய்யப் போகிறான்?
குப்பை கொட்டி அதில் குடியிருக்கவா?
மண்ணை விஷமாக்கி மரம் நட்டு
நச்சுக்கனி பறித்து உண்ணவா?
வாழும் நெறியை விட்டுச் சென்றான் பாட்டன்
வாழும் வழியை அடைத்துச் செல்கிறானே எங்கப்பன்!
இயற்கையோடு கொஞ்சி விளையாடினானே என் பாட்டன்!
இயற்கைக்கு நஞ்சு புகட்டுகிறானே எங்கப்பன்!
உல்லாச வாழ்க்கையால் உருக்குலைந்த கருவறை!
எப்படிப் பிழைக்கும் எங்கள் தலைமுறை?!
நீ தலைவனா? தொண்டனா?
நீ தலைவனா? தொண்டனா?
ஒப்பு உயர்வில்லாத ஒன்றைத் தேடும் மனம், கடைசித் தோல்வியிலிருந்து தப்புவதற்காக, “அதனோடு நான், அதுதான் நான்” என்று நிழலையும் பிரதி எடுக்கிறது. எல்லா முயற்சிகளையும் கைவிட்டு சாதனையுடன் சமரசம் கொள்கிறது. இறந்த காலத்தின் ஏற்ற இறக்கங்களையும் எதிர்காலத்தின் இலக்குப் பயணத்தையும் அது பொருட்படுத்துவதில்லை. அற்ப வெற்றிகளைக் கொண்டாடித் தீர்க்கும் அதே வேளையில், அற்ப தோல்விகளுக்குக் கூட ஆண்டவனையே காரணமாகச் சுட்டும். குழப்பமான தெளிவையும் தெளிவான குழப்பத்தையும் மாறி மாறி கொண்டிருக்கும். அது சாதனையாளனைத் தனது தலைவனாக ஏற்கும். தன்னைத் தொண்டனாகக் கருதும். தலைவனது பாதையை, அருஞ்செயல்களைப் புகழும். ஆனால் தலைவனது முயற்சியைச் பரிட்சித்துப் பார்க்காது. “தலைவனால்தான் முடியும், தன்னால் முடியாது” என்று ஒதுங்கிக் கொள்ளும். யாவரிடமும் தன்னுடைய தலைவன், ‘அவர்’ என்று அறிமுகம் செய்வதைப் பெருமையாகக் கருதும். பகட்டுக்காக பால்குடம், காவடி எல்லாம் கூட எடுக்கும். ஆனால் கிஞ்சித்தும் கூட தலைவனது வழியில் நடவாது.
அப்துல் கலாம் காந்தி, நேரு, தெரேசா, கென்னடி, ஆபிரகாம் லிங்கன், அலெக்சாண்டர், மாவீரன் நெப்போலியன், விவேகானந்தர், நேதாஜி என்று பெயர் வைப்பார். நிறுவனங்கள் வைப்பார். தொண்டு என்பார். உதவி செய்கிறேன் என்பார். ஆனால் தலைவர்களின் நேர்மை இராது. உண்மை இராது. அன்பு இராது. உதவி செய்கிறேன் என்பார்- அருள் இராது. தலைவனின் சொல்லை, செயலைப் பின்பற்றாதவன் தொண்டன் இல்லை. வெறும் பகட்டுக்காக தலைவனின் பெயரைக் கூறிக் கொள்பவன், பச்சை குத்துபவன், வாகனத்தில் உருவம் பொறிப்பவன் எல்லாம் வாழும்போதே கோழைகள். அடிமைகள். கட்சிக்குத் தொண்டன் என்பான்- கொள்கை அறிய மாட்டான். நடிகனைத் தலைவன் என்பான்- நடிகனின் குணமோ பிறவோ அறிய மாட்டான். காந்திய வழி என்பான்- அகிம்சை அறியமாட்டான்.
காணும் பிறவிகள் அனைத்தும் தனித்துவமானவை. ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடுவது அபத்தமானது. சிந்திக்கும் திறன் படைத்த மனித இனம் பகுத்து, ஆராய்ந்து தன்னைத் தானே பண்படுத்திக் கொள்ள முடியும். தன்னை- தன்னுடையதை அடையாளம் கண்டு ஒருமுகப்படுத்தி, சுற்றுப்புறத்தில் இருந்து அறிந்து கொண்டு பெருமுயற்சியுடன் பயிற்சி செய்து ஆற்றலைப் பெருக்கி, மனித இனம் வளமடைய அருஞ்செயல்களை ஒவ்வொருவராலும் ஆற்ற முடியும். ஒருமுகப்படுத்தலிலும் முயற்சியிலும் பயிற்சியிலும் காணப்படும் வேறுபாடுகளே தலைவன்- தொண்டனைத் தீர்மானிக்கின்றன. ஆற்றலில் குறைந்தவன் தொண்டனாக அடையாளப்படுத்தப்படும்படி ஆகிவிடக்கூடாது.
காந்தி மட்டுமே காந்தியாக இருக்க முடியும். நேதாஜி மட்டுமே நேதாஜியாக இருக்க முடியும். கலாம் மட்டுமே கலாமாக இருக்க முடியும். விவேகானந்தர் மட்டுமே விவேகானந்தராக இருக்க முடியும். மற்றவர்களால் காந்தியாகவோ நேதாஜியாகவோ இருக்க முடியாது. இருக்கவும் கூடாது ஆனால் மனிதப் பண்புகள் அனைவருக்கும் உரியவை. அனைவராலும் பின்பற்ற முடியும். அன்பு, நேர்மை, உண்மை, அகிம்சை, வீரம், இரக்கம், ஒப்புரவு, பக்தி, பகுத்தறிவு, அறிவாற்றல், செயல்திட்பம் போன்றவற்றை அனைவரும் பெற்றிருப்பதே சிறந்தது. அல்லது அவற்றைப் பெறுவதற்கான முயற்சிகளில் சிரத்தையுடன் ஈடுபட்டு இருப்பதே சிறந்தது. அப்படிப்பட்ட மனித வாழ்க்கையைத்தான் மனம் நாட வேண்டும். தலைவனைத் தேடி அல்ல. தலைவன் என்பவர் யார்? மனிதப் பண்புகளில் சிறந்தவன் தானே! நாம் பின்பற்ற வேண்டியது தலைவனை அல்ல! தலைமைப் பண்பை! மனிதப் பண்பை! இளம் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க வேண்டியவை தலைவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அல்ல. கொண்டாடப்பட வேண்டியவர்கள் சாதித்தலைவர்கள் அல்லர். அவர்கள் கடைபிடித்த மனிதப் பண்புகளைத்தான் கொண்டாட வேண்டும். அப்பண்புகளைத்தான் வளர்க்க வேண்டும். அதுதான் நம்முடைய கடமை. அதை விட்டுவிட்டு சல்லிப் பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லாத நடிகனையோ, கட்சித் தலைவனையோ தன்னுடைய தலைவனாக ஏற்பது என்பது மனித குணமே இல்லை. அது மூடத்தனம். உலகத்தை ஓர்மைச் சிந்தனையுடன் பார்ப்பதே மனிதப் பண்பு. தொண்டன் தன்னைத் தனித்துப்பார்ப்பான். நீ தலைவனா? தொண்டனா?
புதன், 14 டிசம்பர், 2022
அனைத்தும் அவன்
உருவ கேலி செய்பவன்
இறைவனைக் கேலிசெய்கிறான்...
இழிசொல்லால் இகழ்பவன்
இறைவனை இகழ்கிறான்...
மனிதனை வதைப்பவன்
இறைவனை வதைக்கிறான்...
அனைத்துமாய் அவன் இருக்கிறான்.
அனைத்துமாய் அவனைக் காண்பவன் தவறிழைக்க மாட்டான்.
செவ்வாய், 13 டிசம்பர், 2022
வெள்ளி, 9 டிசம்பர், 2022
சனி, 13 ஆகஸ்ட், 2022
கொடிப்பாடல்
சனி, 6 ஆகஸ்ட், 2022
பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்போம்
ஞாயிறு, 31 ஜூலை, 2022
சுதந்திரத்தை போற்றுவோம் கவிதை
சனி, 30 ஜூலை, 2022
நான் விரும்பும் தலைவர் அப்துல் கலாம் பேச்சு போட்டி
அவையோர்க்கும் இங்கே கூடியிருக்கும் சபையோருக்கும் என் அன்பு வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.
அவர் மகான் இல்லை- ஆனால்
உத்தம மனிதர் (2)
அவர் அதிசயம் செய்தாரில்லை -ஆனால்
ஆளுமை மனிதர் (2)
அவர் வசீகர மனிதரில்லை- ஆனால்
கனவுகளைத் துரத்தியவர்(2)
ஆம்.வல்லரசு இந்தியா
வளமான இந்தியா
வறுமை இல்லா இந்தியா
என்ற கனவுகளைத் துரத்திய என் கனவு நாயகன்.
ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தின் அப்துல் கலாம்.
நான் விரும்பும் தலைவர் அவரே!
மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாகச் சேவை ஆற்றிய போதும் எளிமையாகவே வாழ்ந்தவர்.
இரண்டு சூட்கேசுகளுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் நுழைந்தவர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே திரும்பினார். கறை ஏதுமில்லாத வெள்ளை மனிதர்
நாட்டின் கடைக்கோடியில் பிறந்தவர். நாட்டின் முதல் குடிமகனாக மலர்ந்தவர்.
"இளமையில் வறுமை கொடிது" என்பார்கள். வறுமை அவருக்குக் கற்றுத் தந்த பாடம், அவரை,
ஒழுக்க சீலராக்கியது
உயர்ந்த பண்பாளராக்கியது
கடின உழைப்பாளராக்கியது.
அவர் அசைவம் விரும்பாதவர்
வல்லரசு இந்தியாவை விரும்பியவர்(2)
அவர் திருமணம் புரியாதவர்
எவருக்கும் தீமை புரியாதவர்.(2)
அக்னி, ஆகாஷ், பிருத்திவி என்று ஏவுகணைகளில் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ஏவுகணை நாயகன்.
அணு வெடிப்புச் சோதனை நடத்திய பொக்ரான் நாயகன்.
எதிர்கால இந்தியா இளைஞர்களின் கைகளில் உள்ளது என்று கருதியவர்.
இளைஞர்களை அரசியலுக்கு அழைத்தவர்.
இளைஞர்களைத் தேடிச் சென்று அவர்களிடையே இந்தியா பற்றிய கனவுகளை விதைத்தவர்.
இளைஞர்களை ஊக்கப்படுத்துவதிலேயே தன் இறுதிக்காலத்தைச் செலவிட்டவர்.
அவரது இறுதி மூச்சிலும் பேச்சிலும் வல்லரசு இந்தியாவின் தீப்பொறி கலந்திருந்தது.
அவர் பழகுவதில் குழந்தை
சிந்திப்பதில் ஞானி
மாணவர்களுக்கு நண்பன்
நாட்டு மக்களுக்கு எளிய வழிகாட்டி
விமர்சனம் செய்ய முடியாத தலைவர் அவர்
அவரே நான் விரும்பும் தலைவர் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!
திங்கள், 11 ஜூலை, 2022
கல்விப் பணியில் காமராசர் பேச்சுப்போட்டி வகுப்பு 5
இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டினி கிடப்பவருக்கே பசியின் கொடுமை புரியும்.
வெயிலில் கிடப்பவருக்கே நிழலின் அருமை தெரியும்.
அதைப்போல,
படிக்க வாய்ப்பு இல்லாத காமராசர் படிப்பின் அவசியம் அறிந்தவர்.
- வெள்ளத்தால் போகாது
- வெந்தணலால் வேகாது
- வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
- கள்ளர்க்கோ பயமில்லை
- காவலுக்கு மிக எளிது
- கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைபடாது.- கல்வி.
பசியோடு இருப்பவனுக்கு மீன்பிடித்துத் தருவதை விட, மீன்பிடிக்கக் கற்றுத் தருவதே சாலச் சிறந்தது.
அதுபோல,
ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து விட்டால் அவர்களுடைய வாழ்வு மலரும் என்று சிந்தித்தார் காமராசர்.
காமராசர் 9 ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்தபோது கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
- மூடப்பட இருந்த 6000 பள்ளிகளைத் திறந்தார்
- ஒரு மைல் தூரத்தில் தொடக்கப்பள்ளி
- மூன்று மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி
- ஐந்து மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி என்று திட்டம் வகுத்து பட்டி தொட்டி எங்கும் 17 ஆயிரம் புதிய பள்ளிகளைத் திறந்தார்.
- கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்கினார்.
- மாணவர்களின் மதியவேளை பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
- மாணவர்களுக்கு முறையான தரமான கல்வி கிடைக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளைத் திறந்தார்.
- மாணவர்கள் இடையே ஏழை-பணக்காரர் வேறுபாடுகளை நீக்க இலவசச் சீருடைத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
- பள்ளி வளர்ச்சிக்காக அரசிடம் போதிய நிதி இல்லாத போது, பள்ளிச் சீரமைப்பு மாநாடுகளை நடத்தி செல்வந்தர்களின் உதவியோடு பள்ளிக்கு வேண்டிய வசதிகளை ஏற்படுத்தினார்.
- தொழிற்பயிற்சி நிறுவனங்கள், செவிலியர் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை நிறுவினார்.
- கல்வி கற்ற சமுதாயமே மேம்படும் என்று உறுதியாக நம்பினார்.
- கல்வி கற்றோர் சதவீதத்தை ஏழிலிருந்து 37 ஆக உயர்த்தினார்.
- காமராசர் அமைத்த அடித்தளத்தில், இன்று வானளாவிய கட்டங்களாக கல்வித்துறை நிமிர்ந்து நிற்கிறது.
அவரின் சீரிய பணிக்குத் தலை வணங்குவோம். அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம். வாரீர்!
நன்றி, வணக்கம்.
காமராசர் பேச்சுப்போட்டி- வகுப்பு 2
இங்கே கூடியிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுபோல,
- ஒருபுறம் வறுமை வாட்ட வாட்ட,
- மறுபுறம் விடுதலை வேட்கை மேலே ஏழ ஏழ,
- இன்னொரு புறம் சிறையில் துன்பம் வருத்த வருத்த,
- தியாகச் சுடராய், வேள்வித்தீயாய்,
- நம் தேசத்திற்கு அழியாத விளக்காய் ஒளி தந்தவர் காமராசர்.
- தமிழகத்தின் தவப் புதல்வர்
- தாயகம் காத்த புனிதர்
- கருப்புக் காந்தி
- ஏழைப் பங்காளர் என்று பாராட்டப்பட்டவர்
- அரசியலைச் சுத்தப்படுத்தியவர்
- ஆட்சியில் நேர்மை செலுத்தியவர்
- பள்ளிக்கூடங்கள் பல திறந்தவர்
- மாணவர்களுக்கு மதிய உணவு தந்தவர்
- வளர்ச்சித் திட்டங்கள் பல தீட்டி, நாட்டை வளப்படுத்தியவர்
- ஏழை எளியோர் வாழ்வில் நல்லொளி பாய்ச்சிய நம்பிக்கை நட்சத்திரம்.
- கர்மவீரர் காமராசரின் பிறந்தநாளில், அவரின் சீரிய வழியில் வீரநடை போடுவோம், வாரீர்.
வியாழன், 30 ஜூன், 2022
காமராஜர் கவிதை
விருதுநகரில் பிறந்தவர்
விருதுகளின் நாயகர்
விடுதலைப் போராட்ட வீரர்
தீரர் சத்தியமூர்த்தியின் சீடர்
படிப்பின் அருமை உணர்ந்தவர்
பல்லாயிரம் பள்ளிகள் திறந்தவர்
காந்தியத்தின் பாதை கண்டவர்
கடமையில் நேர்மை கொண்டவர்
பொதுத்துறை நிறுவனம் கண்டவர்
பொதுநல வாழ்க்கை கொண்டவர்
மும்முறை முதல்வரான உத்தமர்
பிரதமர்களை உருவாக்கிய பிதாமகர்
காமராஜர் திட்டம் தீட்டியவர்
கட்சிப் பணி ஆற்றியவர்
காட்சிக்கு மிக எளியவர்
கடமைக்கு உரியவர்
சனி, 25 ஜூன், 2022
கால்நடை மேய்ப்போர் நலச்சங்கம்
வெள்ளி, 24 ஜூன், 2022
வாழ்த்துரை
- நீதித் தராசின் நடுமுள்ளே ...! நேர்மையின் சுகம் விரும்பியே ...! (2 முறை)
- பள்ளத்தை நோக்கிப் பாய்ந்த ஜீவநதியே-நல்லோர் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட நாயகரே...!(2)
- கேள்விகளால் வேள்வி பல செய்த வித்தகரே...! குரலற்ற மக்களின் குரலாய் ஒலித்தவரே..! (2)
- விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளியே...! அநீதிக்குக் கிருபை காட்டாத கிருபாகரரே...! (2)
- தாயிடம் முரண்படும் குழந்தை போல நீதியிடம் சட்டம் முரண்படும்போதெல்லாம் நீதியின் பக்கம் நின்ற சட்டகர்த்தாவே...!(1)
- 7.5% இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களின் இன்னல் தீர்த்தவரே...!(1)
- தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தமிழ் மாணவர்களின் நலன் காத்தவரே...!
- வியர்வையின் மதிப்பை உணர்ந்தவரே..!-ஏழையின் உயர்வை உள்ளத்தில் இருத்தியவரே..!(2)
- இயற்கை ஆர்வலரே... சூழல் காவலரே...!(2)
- வாய்மையைக் கடைப்பிடிக்கும் ஒளிர் தங்கமே...! ஒப்பற்ற உம்புகழ் பரவும் எங்குமே!!! (2)
நீர் வாழ்க... உம் குலம் வாழ்க... என்று வாழ்த்தி, இவ்விழாவிற்கு வருக... வருக...என வரவேற்று என் வரவேற்புரையை நிறைவு செய்கிறேன். நன்றி..!
ஞாயிறு, 15 மே, 2022
அநீதி
அநீதி கண்டு அமைதி காப்பது குற்றம்.
வேடிக்கை பார்த்துப் பழகிவிட்டால் நிமிர முடியாது.
'இளையதாக முள்மரம் கொல்க' என்பதை நினைவில் கொள்
துணைக்கு யாரையும் தேடாதே. அவனும் அப்படித்தான்.
உன்நலம் விரும்பிகள் உன்னைத் தடுப்பார்கள்.
அவர்களுக்குப் புரிய வைத்துவிட்டால் அநீதியைத் துரத்தலாம்.
சனி, 14 மே, 2022
ஊக்கம்
மனிதா!
எதைத் தேடுகிறாய்?
யாரைத் தேடுகிறாய்?
அவசர உலகில்
அனாவசியமாக
நீ உனக்காக உருவாக்கித்
தூக்கிச் சுமக்கின்ற
கவலைகளை, வலிகளை, வேதனைகளை, துன்பதுயரங்களைத்
தீர்த்துவைக்க தீர்க்கதரிசி வருவாரென்று தேடுகிறாயா?
இறைவனிடம்
இறக்கி வைத்து விட்டு
இளைப்பாற எண்ணுகிறாயா?
அரசனோ ஆண்டவனோ
உனக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமோ?
ஊக்கம் கொண்டு
உழைத்தாலே
உறுதுயர் அழியுமே!
உண்மையை உணராது
பொய்யில் மயங்கித் திரியாதே!
தமக்கென முயலா
பிறர்க்கென வாழுநர் உண்மையானே எனும்
பழந்தமிழர் வாழ்முறை அறிக
கவலை விடுக
ஊக்கம் உடைமை ஆக்கத்தில் முடியும்!!
உறவுகளின் வாழ்க்கை விடியும்!!!
எழுகதிர் விடியலை
வரவேற்கத் தயாராயிரு.