திங்கள், 13 ஏப்ரல், 2026

நினைவலைகள்

சின்னச்‌ சின்னப் பூக்கள் போல

சிறகடிக்கும் சிட்டுக்கள் போல

வண்ண வண்ண வானவில் போல

வானில் தவழும் மேகங்கள் போல

எண்ண எண்ண நினைவுகள் எல்லாம் 

உள்ளூற ஊருதே

உண்மையான அன்பினில் நெஞ்சம் உருகுதே கரையுதே


அழுது கொண்டே பள்ளிக்கு வந்தோம் 

முதல் முதலாய் அன்னையைப் பிரிந்தோம் 

யாரோ எவரோ அறியாமல் விழித்தோம்

அன்புக்காக ஏங்கிக் தவித்தோம்

இலக்கணமின்றி உரையாடல் நிகழ

கலக்கம் வந்து நம்மை அலைக்க

ஒருவரை ஒருவர் நண்பராய் ஏற்றோம் 


மணக்கும் மஞ்சப்பையே நமது

ஸ்கூல் பேக்காய் ஆனது.

உள்ளே ஒரே ஒரு அட்டை சிலேடு.

அப்பா வாங்கி கொடுத்த 

சில மாதங்களிலே

சுற்றி இருந்த பிளாஸ்டிக் கழன்றது.

ஸ்கூல்ல தந்த கல்லு சிலேட்டை 

உடையாமல் வச்சுக்கப் பார்த்தோம். 

அதையும் மீறி சக்கைக் கட்டை 

உடைஞ்சி போனதுதான் மிச்சம்.


சிலேட்டுக் குச்சியைக் கடனாய்க் கேட்டோம் 

சின்னச் சின்னதாய் உடைத்துத் தின்போம் 

சாக்பீஸ் தூளே திருநீரு ஆனது

கத்தாளைப் பழமே லிப் ஸ்டிக் ஆனது

பேப்பர் சுருளே பந்தாய் ஆனது

மக்காளச் சோளக் கட்டையும்

சிலேடும் 

பேட்டும் பந்தும் ஆயின.

கண்ணாடிப் பாட்டிலே 

தண்ணீர்ப் பாட்டில் ஆனது.

குலை குலையா முந்திரிக் காய், 

குளம் கரை, 

ஓடிப் பிடிச்சு, 

திருடன் போலிஸ், 

படமா எழுத்தா, 

கல்லா மண்ணா, 

கொட்டான் கொண்டான், 

துவால் கம்பு, 

கொட்டை போடுதல், 

நாடு வாங்கி, 

கண்டுபிடிச்சு, 

கண்ணாமுச்சி, 

புள்ளி வச்சு விளையாடுறது, 

மடை கட்டி விளையாடுறது, 

கோலிக்குண்டு, 

பம்பரம் இதெல்லாம் விளையாடினோம்.


ஒன்றாம் வகுப்பு லட்சுமி டீச்சரு...

கம்பால அடிச்சு மண்டை வீங்குனது 

இன்னும் ஞாபகம் இருக்கு...

ரெண்டாம் வகுப்பு கணேசன் வாத்தியாரு

ஓட்டை போடுற வாத்தியாரு 

காதுலயே நகத்தால ஓட்டை போடுவாரு...

மூன்றாம் வகுப்பு இராமையா சாரு 

சட்டை காலரை எப்பவும் தூக்கி விடுவாரு...

நாலாம் வகுப்பு கணபதி டீச்சரு...

ரெம்ப ஸட்ரிக்ட்டு...

நல்லா நடத்துவாங்க...

ஆனால் எனக்கு புரியாது...

அடி நல்லா பிண்ணி எடுப்பாங்க...

அதுபோக மூனு டீச்சரும்

மத்தியானம் மீத கொளம்ப 

கூப்பிட்டு தருவாங்க 

அதுக்காகவே அவங்க சாப்புடுற

இடத்துக்கு பக்கத்துல சன்னல்

ஓரமா உக்காருவோம்.

பள்ளிக்கூடத்து குழம்புல

எப்போதும் புழு மிதக்கும்.

அத பாத்து வாந்தி எடுப்பேன்

கனவெல்லாம் புழுவா மிதக்கும்.


அஞ்சாம் வகுப்பு அழகேசன் சாரு

..

அன்பு நிறைய காட்டினாரு...

காலையில ஸ்டடி வைப்பாரு...

வாய்ப்பாடு தினமும் சொல்ல வைப்பாரு...

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டாரு

சொல்லித் தந்தாரு...


ஆறாம் வகுப்பு தமிழ்ச் செல்வி டீச்சரு...

ரெம்ப கண்டிப்பானவரு...

அழகான லோலாக்கு தொங்கும்

நல்லா பாடம் நடத்துவாங்க...

நல்லா அடிப்பாங்க...

எங்க அப்பா மொத முறையா

பள்ளிக்கூடம் வந்தாங்க

அப்போ நான் நல்லா பிடிக்கிறதா

டீச்சரு எங்க அப்பாகிட்ட சொன்னாங்க

நிஜமாவே அப்போதான் நான் 

வாசிக்க கத்துக்கிட்டேன்.


சமூக அறிவியல் சண்முக ராஜேஸ்வரி டீச்சர் அமைதியானவங்க...ரெம்ப அன்பானவங்க...

எனக்கு ரெம்பப் பிடிக்கும்.

இப்ப வரைக்கும் என் மனசுல குடியிருக்காங்க...

ஆனால் அவங்க இப்ப

உயிரோட இல்லை...

எப்ப எந்த சந்தேகம் கேட்டாலும் 

திரும்ப திரும்ப சொல்லித் தருவாங்க...

நான் திரும்ப திரும்ப கேட்பேன்...

கொஞ்சம்கூட அவங்க மறுத்த தில்லை...


ஏழாம் வகுப்பு கோவிந்தராசன் சாரு,

வீட்டுப்பாடம் நிறைய தருவாரு...

பாடம் நடத்தி, உடனே கேள்வி கேப்பாரு

வரிவரியா கேள்வி எடுத்து எழுதச் சொல்லுவாரு...

கேள்வி கேட்கும் ஞானம் அவரால தான் வளர்ந்தது.

பதில் தெரியாதவங்கள

பதில் சொல்றவங்க தலையில கொட்டணும்...

அதுக்காகவே நான் நல்லா படிக்க ஆரம்பிச்சேன் 

இருக்குறதிலேயே நான் தான் சின்ன பையன். குட்டையா இருப்பேன்...

பதில் சொல்லி நல்லா கொட்டுவேன்.


சின்ராசு சாரு,

பேரக் கேட்டாலே ஸ்கூலே அதிரும்.

தமிழ் எடுத்தார்.

அக்கறை உள்ளவர்

அறிவுரை சொல்பவர் 


முருகானந்தம் சாரு 

அஞ்சாம் வகுப்பு கணக்கு எடுத்தவரு

ஏழாம் வகுப்புல அடி பிண்ணி எடுத்தாரு

அடி வாங்காம இருக்கணும்னு 

எல்லாரும் நல்லா படிச்சாங்க 

கம்பு ஒடிய ஒடிய அடிப்பாரு...

கூட்டல் கழித்தல் விதிகளை மனப்பாடம் செய்ய வைச்சாரு...

வகுத்தல் வர்க்கம் வர்க்க மூலம் 

எல்லா கடின கணக்கையும் சூப்பரா சொல்லி தருவாரு 

ஒரே கணக்க பல மெத்தேடுல

சொல்லித் தந்தாரு..

சார்ட் கட் கண்டிப்பாக இருக்கும்

ஃபார்முலா மறந்தா அடி விழும் 

மறதிக்கு மருந்து அடி, அடிதான் டானிக் என்பாரு.


சயின்ஸ் சார் 

அவர் பேரு மறந்திடுச்சு...

நல்லா நடத்துவாரு...

ஆனா அக்கறை காட்ட மாட்டாரு 

யாரு படிச்சா என்ன

படிக்கலன்னா என்ன என்று இருப்பாரு...


டீச்சரா இருந்தாலும் சாரா இருந்தாலும் பையங்கள மட்டும் தான் அடிப்பாங்க. கேள்ஸ அடிக்க மாட்டாங்க...


சத்திய நேசன் கெச்எம்...

தரமான கெச் எம்...

கெச்எம்மும் முருகானந்தம் சாரும் பள்ளிக்கூடத்தை பயங்கர ஸ்ட்ரிக்ட்டா வச்சிருந்தாங்க...

ஸ்டடி அமைதியாக நடக்கும். யாரும் லேட்டா வர முடியாது. மைக் ஸ்பீக்கர் வாங்கினாங்க.

தண்ணீர் தொட்டில முதல் முறையாக தண்ணீர் வர ஆரம்பிச்சது.


அதுக்கு முன்னாடி வரை 

நான் தட்டை நாக்காலேயே கழுவுவேன்

இல்லைனா பிள்ளையார் கோயில் முன்னாடி இருக்குற தண்ணீர் பைப்ல வாய் வச்சி உறிஞ்சி தண்ணீர் வர வச்சு கழுவுவேன்.

தட்டை கழுவ தெரு தெருவா அலைஞ்சேன்

இந்த விஷயத்துல அந்த ஊர்க்காரங்க

ரெம்ப மோசம்...

தண்ணியே தர மாட்டாங்க...

தண்ணிக்காக ரெம்ப கஷ்டப்பட்டேன்...

கீழ கெடந்த குவாட்டர் பாட்டில

கழுவி தண்ணி கொண்டு போவேன்.

பல தடவ அது உடைஞ்சு போயிருச்சு...

இத இங்க நிறுத்துறேன்.


இங்கிலீஷ் டீச்சர் தேவி டீச்சர்...

கிராமர் சூப்பரா நடத்துவாங்க...

பொறுமையானவங்க...

ரெம்ப அன்பானவங்க...

அக்கறையானவங்க...

புரியாத இங்கிலீஷ் இவங்களாலதான் 

புரிஞ்சது...

அறிவியலும் இவங்கதான் நடத்துவாங்க...

ரெம்ப நல்ல டீச்சர்...

எனக்கு ரெம்ப நேரம் உட்காந்திருந்து

திடீர்னு எழும்போது

சொளப்புன்னு விழுந்திடுவேன்...

எனக்கு சத்து குறைவுன்னு சொன்னார்...

நல்லா சாப்பிட சொன்னாங்க..

ஒருமுறை பச்சை பால குடிச்சிட்டு 

ஸ்கூலுக்கு போயிட்டேன்...

வயித்தால போயி அரை மணி நேரம் லேட்டா வந்தேன்...

அத பத்தி கேட்டாங்க

நான் சொன்னேன்...

பச்சைப் பால் குடிக்க கூடாதுன்னு 

சொன்னாங்க...

அப்போ லூயி பாஸ்டர் பத்தியும்

பாஸ்டுரைஷேசன் பத்தியும் சொல்லிக்

கொடுத்தாங்க...

வண்டில இருந்து வர்ற புகை மணத்துச்சுன்னா

அவுங்களுக்கு ரத்தம் கம்மியா இருக்கும் என்று சொன்னாங்க...

இப்படி வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பாடம் நடத்துவாங்க...

ஒன்பதாம் வகுப்பு வைதேகி டீச்சர்...

நல்லா நடத்துவாங்க..

அன்பா இருப்பாங்க...

ஆனால் மனசுல பதியிற மாதிரி எதுவும் இல்லை...

ஒன்பதாம் வகுப்பு இங்கிலீஷ் டீச்சர் மங்கையர்க்கரசி...

ஓவர் சீனு...

லைப்ப என்ஜாய் பண்ணணும்பாங்க...

அக்கறை இல்லாதவங்க...

நல்லா நடத்தமாட்டங்க...

டெஸ்ட் சும்மா பாத்து பாத்து எழுதலாம்...

இங்கிலீஷ் கொஸ்டீன் ஆன்சர் ஒப்பிக்கனும்...

அரைகுறையா சொல்லலாம்...

யாரு முதல்ல ஒப்பிக்கிறாங்களோ

அவங்ககிட்ட மத்தவங்க ஒப்பிக்கணும்...

அவ்வளவுதான்...

அந்த வருசம் வேஸ்ட்...

கணக்கு எடுத்தவங்க யாருன்னு மறந்து போச்சு...

அந்த அளவுக்கு நல்லா நடத்தல...

சமூக அறிவியலும் அப்படித்தான்...

ஒன்பதாம் வகுப்பு வைதேகி டீச்சர தவிர எல்லோரும் வேஸ்ட்...


பத்தாம் வகுப்பு தமிழ் ஐயா...

முதல் மாதத் தேர்வு...

அக்கறை கொஞ்சமும் இல்லாதவர்

நல்லா நடத்த மாட்டார்...

இப்பவும் இருக்கிறார்...

பேச்சு போட்டிக்கோ கட்டுரை போட்டிக்கோ எப்போதும் தயார் செய்தது கிடையாது.

ஒரு கசப்பான அனுபவம் உண்டு..

எட்டாம் வகுப்பு படிக்கும் போது 

முதல் முறையாக பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டேன்...

முன்னுரை மட்டுமே சொல்லி முடித்து தடுமாறிய போது

தட்டிக் கொடுப்பதாக நினைத்து 

வலிக்கும் அளவு முதுகில் அடித்து விட்டார். 

அன்று அவமானப்பட்ட நான் 

அதன் பிறகு எப்போதும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டதே இல்லை... இப்போது வரை...


இங்கிலீஷ் தேவி டீச்சர்...

பொற்காலம் மீண்டும் வந்தது..

அவர்கள் அறிவியலும் நடத்தினார்கள்...

கூடவே புதிதாக வயலட் டீச்சர் வந்தாங்க...

பொற்காலத்தின் உச்சம் அது...

நல்லா நடத்தினாங்க...

இலக்கணம் பிரிச்சு மேஞ்சாங்க...

ஈசியா புரிய வச்சாங்க...

சொல்லை பிரித்து பொருள் அறிவது

பகுபத உறுப்பிலக்கணம் இலக்கணக் குறிப்பு மொழித்திறன் எல்லாம் அத்துப்படி...

எக்ஸ்ட்ரா கிளாஸ் ஸ்டடி ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் வச்சாங்க...

ஞாயிற்றுக்கிழமை  கூட லீவு கிடையாது.

ஆனால் கலர் டிரஸ் போட்டுக்கலாம்...

ஸ்டடில நானும் முத்துராசும் பாடம் நடத்துவோம்...

இப்ப வரைக்கும் அக்கறை கொண்டவங்க...

பத்தாம் வகுப்பு முடிச்சதும் என்னை இங்க படிக்காத... என்று சொல்லி அன்னப்பராஜா ஸ்கூல்ல சேத்துவிட்டாங்க...

ஆனால் நான் பயந்துட்டு இருபதுநாள்ல அந்த பள்ளிக்கூடத்த விட்டுட்டு கிருஷ்ணாபுரம் நாடார் ஸ்கூல்ல சேந்துட்டேன்.

பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதுக்கு அப்புறம் எனக்கு வெட்னரி காலேஜ் அப்ளிகேஷன் டீச்சர் ட்ரெயினிங் அப்ளிகேஷன் வாங்கி போட வச்சாங்க...

அவுங்களால தான் நான் டீச்சர் ட்ரெயினிங் படிச்சேன்...

பெரியம்மா பையன் தர்மலிங்கம் அண்ணன் என்னை கவுன்சிலிங் கூட்டிட்டு போயி வானரமுட்டி டயட் செலக்ட் பண்ணினாங்க...

டீச்சரா வேற ஸ்கூல் போயிட்டிங்க..

அதுக்கு அப்புறம் டீச்சர் கிட்ட தொடர்பு கட் ஆயிடுச்சு...

அவங்கள தேடி போகல...

என் அண்ணன் ஜெயச்சந்திரன் மேரேஜ்க்கு வந்தாங்க... அப்புறம் தான் தொடர்பு கிடைச்சது...

அப்போ அப்போ பேசுவாங்க...

என் மேரேஜ்ஜுக்கு வந்தாங்க...

என் பாப்பா பிறந்ததுக்கு கொஞ்சம் நாள் கழிச்சு வந்தாங்க...

இப்போ நாங்க முன்னாள் ஆசிரியர்களை வரவழைச்சு விழா நடத்தப் போறோம்.


கணக்கு சாரு... பேரு ஞாபகமில்லை...ஊசி மூக்கு வாத்தியாரு... கண்ணாடி போட்டுருப்பாரு...

நோட்ஸ் வச்சுத்தான் கணக்கு நடத்துவாரு...

கணக்கு நோட்ஸ் வாங்க சொன்னாரு...

அவரு நடத்துறது புரியாது...

அவருக்கு நடத்த தெரியாது...


சமூக அறிவியல் டீச்சர் கலைச்செல்வி டீச்சரு...

அன்பானவர்

அக்கறையானவர்...

படிக்கத் தெரியாத மாணவர்கள் தான் அவங்க டார்கெட்...

அவங்கள பக்கத்துல உட்கார வச்சு கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிக் கொடுப்பாங்க...

ஆனை முகனே

ஆதி முதல் ஆனவனே

மோனைப் பொருளே

மூத்தவனே

கணேசா ஏன் என்று கேளுமையா

இந்த ஏழை முகம் பாருமையா என்று 

விநாயகர் வாழ்த்து பாட வச்சவங்க...

தீவிர விநாயகர் பக்தை..

எக்ஸாம்க்கு முன்னாடி விநாயகர கும்பிட்டு வழி அனுப்பி வச்சாங்க...

கடின உழைப்பாளி...

ஆனால் மூட்டு வலியால அவதிப்பட்டாங்க...

தொடரும்...







ஓட்டு

நாயின் கண்களுக்கு 

கோழிகள் எப்போதும் 

எலும்பும் இறைச்சித் 

துண்டுகளுமாகத் தான் தெரியும் 

அரசியல் வாதியின் கண்களுக்கு 

மக்கள் எப்போதும் 

வெறும் ஓட்டுகளாகத் தான் தெரியும் 

கோடையே


தகிக்கும் கோடையே - இந்தச் 

சூட்டில் எரிந்து கருகும் 

இந்த ஏழையின் 

ஒடுங்கிய முகத்தைக் 

காண மாட்டாயோ!!!

ஒட்டிய வயிறும் 

சுருங்கிய தோலும்  கண்டுமா 

உன் மனம் இரங்கவில்லை...

கொஞ்சம் இளைப்பாறிவிட்டு வா...

நான் ...

அடுத்த கோடை வரை

ஆவியாகாமல் 

இருக்க வேண்டுமல்லவா?



ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

வெள்ளி விழா தொகுப்பாளர் உரை

தொகுப்பாளர் உரை :

சரியாக நேரம் 09.30 மு.ப.-க்கு

இரு பெருஞ் சுடர்போல் 
இரு திரு விழியால் 
வரம் தரும் திருமகள்போல் 
வரும் இரு தாய்மார் 
திரு அடிதனை நினைந்து, 
அரி நடை பயின்று 
அகம் மிக மகிழ்ந்து 
வரும் பெரும் குரு 
திரு அடிதனை 
மிக மிகப் பணிந்து, 
தொகுப்புரை வழங்க 
விருப்புடன் வந்திருக்கும்
நான் உங்கள் நண்பன்
முன்னாள் இப்பள்ளி மாணவன்
வீ.மகேந்திரன் M.A., B.Ed., பட்டதாரி ஆசிரியர்.

அடுத்ததாக,

சரியாக நேரம் 09.40 மு.ப.

குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு. 

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. S.வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phil., அவர்களையும்
இப்பள்ளியின் முன்னாள் தமிழாசிரியை திருமதி.C.வயலட் M.A., M.Ed., M.Phil., அவர்களையும்
இப்பள்ளியின் முன்னாள் சமூக அறிவியல் ஆசிரியை திருமதி.M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களையும் 
இப்பள்ளியின் முன்னாள் கணித ஆசிரியர் திரு. M.முருகானந்தம் அவர்களையும்
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.வீ.சமுத்திரக்கனி B.Lit., அவர்களையும் குத்துவிளக்கு ஏற்றி, நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வருமாறு அன்புடன் வேண்டுகிறோம். 
(திரு.தி.முத்துராஜ் B.Sc, DECE., தொடர்வண்டி மேலாளர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்)

சரியாக நேரம் 09.50 மு.ப.

வெள்ளி விழா நிகழ்ச்சியின் துவக்கமாக, 

தமிழ்த்தாய் வாழ்த்து 

அனைவரும் எழுந்து நின்று, சேர்ந்து பாடுக.

சரியாக நேரம் 09.55 மு.ப.

அன்பு- மூன்றெழுத்து  
அறிவு- மூன்றெழுத்து  
ஞானம்- மூன்றெழுத்து 
அதே வரிசையில் 
நன்றியும் மூன்றெழுத்து.
 
நன்றி செலுத்துதல் என்பது தமிழருக்கே உரிய உயரிய பண்பாடு
ஆதி காலம் தொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சங்க கால அறங்களில் ஒன்று நன்றி செலுத்துதல்.

தைப்பொங்கல் கொண்டாடுகிறோம். எதற்காக?
பயிர் விளைச்சலுக்கு உதவிய இயற்கைக்கு, கதிரவனுக்கு நன்றி செலுத்த...

மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். 
எதற்காக?
பயிர் விளைச்சலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்த...

இந்த வெள்ளிவிழா கொண்டாட்டம் எதற்காக?
எங்களின் அன்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களே!
நீங்கள் செய்த கைம்மாறு கருதாத உதவிக்கு நன்றி செலுத்தவே இந்த விழா!!!


நாங்கள் 25 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை எப்படி பார்த்தோமோ, அப்படியே தான் இன்றளவும் 
அதே அக்கறையோடு, அதே அன்போடு, அதே அர்ப்பணிப்போடு,
அதே பரிவோடு, அதே ஈடுபாட்டோடு,
அதே நம்பிக்கையோடு, அதே கனிவோடு, அதே பண்போடு இன்றளவும் காட்சி தருகிறீர்கள்!!!

நீங்கள் ஒழுக்கம் பற்றி எங்களுக்குக் கற்பித்தீர்கள்!!!
அவ்வாறே நீங்கள் வாழ்ந்தும் காட்டினீர்கள்...
பெரியவர்களை மதிக்க கற்றுத் தந்தீர்கள் 
பெரியவர்களுக்கு உதவி செய்ய கற்றுத் தந்தீர்கள்...
உங்களின் அடியை அப்படியே நாங்கள் பின்பற்றினோம்...
எங்களை அறியாமலே...
எங்களுக்கு ஒழுக்கம் கைவரப் பெற்றது.
எங்களின் வாழ்க்கையைச் சிறப்பு வாய்ந்ததாக வடிவமைத்துத் தந்திருக்கிறீர்கள்!!!
அதற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கவே இந்த வெள்ளி விழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.


சரியாக நேரம் 10.00 மு.ப.

வரவேற்புரை 1

1. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு S.வெங்கடேசன் M.Sc.,M.Ed., M.Phil., அவர்களுக்கு வரவேற்புரை வழங்க வருமாறு முனைவர் திருமதி K.ஆனந்த கனக ஜோதி M.Sc., M.Phil., Ph.D.,அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

பிரபஞ்சம் கதிரவனை அனுமதித்ததால்தான் 
இருள் விலகி 
வெளிச்சம் பரவி
இந்த வானம் விரிந்து கிடக்கிறது!!!

காற்று தண்ணீரை உறிஞ்சியதால்தான் 
மேகப் பொதிகளாய்த் திரண்டு எழுந்து 
வான்மழையாகப் பொழிந்து
உலக உயிர்களைக் காத்து நிற்கிறது!!!

மேகம் ஒளியை
அனுமதித்ததால்தான்
வண்ணங்கள் நிறைந்த 
'வானவில்' உருவாகி 
நம் கண்களைக் கவர்ந்து இழுக்கிறது!!!

அதுபோல
நீங்கள் எங்களுக்கு அனுமதி தந்ததாலேயே,
தோட்டத்தில் மலர்ந்த 
வாசனை மிகுந்த 
வண்ண மலர்கள் போல
இங்கு நாங்கள் மலர்ந்திருக்கிறோம்!!!
இந்த விழாவும் உங்களால்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது 

"பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்" என்னும் திருக்குறளுக்கு இலக்கணமாக திகழ்பவர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர். 

கடமை தவறாத செயல் வீரர் இவர்!!!
கண்ணியம் நிறைந்த பண்பாளர் இவர்!!!
நேர்மை நிறைந்த குணசீலர் இவர்!!!
உருள்பெருந் தேர்க்கு அச்சாணி இவர்!!!
உயர்ந்து நிற்கும் கோபுரத்திற்குக் கலசம் இவர்!!!
கூர்த்த சிந்தனையில் இவருக்கு நிகர் எவர்?
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் 
திரு.S.வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., அவர்களே !!!
வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு
உங்களை வருக வருக என வரவேற்பதில் 
மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்!

வரவேற்புரை 2

சரியாக நேரம் 10.05 மு.ப

2. எங்களின் தமிழ் ஆசிரியையும், தற்போது  வலசை அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையுமான திருமதி C.வயலட் M.A., B.Ed., M.Phil.,அவர்களுக்கு வரவேற்புரை வழங்க வருமாறு திருமதி. M.கடல்கனி M.A., M.Ed.,அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

மணியை ஈன்றதால் மாமலையும்
முத்தை ஈன்றதால் பெருங்கடலும்
அகிலை ஈன்றதால் அடர்வனமும்
வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும்
பெருமை அடைவது போல
உம்மைத் தமிழ் அன்னையாகப்
பெற்றதால் நாங்கள் பெருமை அடைகிறோம்!!!

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்" என்னும் திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர், எங்கள் தமிழ் அம்மா.

அன்னைத் தமிழின் உள்ளம் மகிழ
அருந்தமிழ்ச் சான்றோர் அகம் மகிழ
தமிழைத் தவம் போல் நின்று கற்பித்தவரே!!!
புரியாத இலக்கணத்தை புரிய வைத்த 
இலக்கண வித்தகரே!!!
தமிழ்ப் பாலூட்டி வளர்த்த 
எம் அன்னையே!!!
அர்ச்சுனனின் வில்லைப் போலவும்
கர்ணனின் கவசம் போலவும்
கம்பனின் கவிநயம் போலவும்
வள்ளுவனின் வாக்கு போலவும்
எமக்கு அருள் வாய்த்த தாயே!!!
எம் உயிரே
எம் நினைவே
எம் சுகந்தமே
எம்மை வாழ்வித்த தங்கமே
திருமதி C.வயலட் M.A., B.Ed., M.Phil.,வலசை அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே,
வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு
உம்மை வருக வருக என வரவேற்பதில் 
பேருவகை கொள்கிறோம்!!!

சரியாக நேரம் 10.10 மு.ப.

வரவேற்புரை 3

3. எங்களின் சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களுக்கு வரவேற்புரை - வழங்க வருமாறு திருமதி.L.இராஜேஸ்வரி DMLT., PCP., அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

"தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவர் கற்றறிந் தார்" என்பார் வள்ளுவப் பெருந்தகை. எங்களின் மகிழ்ச்சியை கண்டு மகிழ்ச்சி அடைபவர் இவர்.

வெள்ளை உள்ளம் கொண்ட 
அன்புத்தாய் இவர்!!
நேசமும் நெருக்கமும் காட்டுவதில் 
அன்னை தெரேசாவுக்கு நிகர் இவர்!!
முகத்தில் புன்னகை தவழும் மழலை இவர் !!
மூட்டு வலியோடு முழுத் தேர்ச்சிக்காக 
முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர்!!!
முழுமையான அன்பைக் காட்டி,
எங்களை வசிகரித்த நிரந்தரக் காந்தம் இவர்!!!
கடலில் விளைந்த முத்து போல 
வயலில் விளைந்த நெல்மணி போல
மதிப்புமிகு செல்வம் நீங்கள்!!!
எங்களைச் சுடச்சுட ஒளிரும் பசுந்தங்கமாக
வெட்ட வெட்ட மின்னும் வைரமாக மாற்றிய 
பெருமைக்கு உரியவர் நீங்கள்!!!
எங்கள் உயிருக்கு உயிரானவர்!!!
சமூக அறிவியல் ஆசிரியை 
திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களே 
வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு
உம்மை வருக வருக என வரவேற்பதில் 
பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!!!

சரியாக நேரம் 10.15 மு.ப.

வரவேற்புரை 4

4. எங்கள் கணித ஆசிரியர் திரு M.முருகானந்தம் அவர்களுக்கு வரவேற்புரை வழங்க வருமாறு திரு. M.மாரிமுத்து DME., Senior Engineer அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

"உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றதன் உள்ளியது உள்ளப் பெறின்" என்னும் திருக்குறளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்பவர் இவர். 
ஒரு முடிவை எடுத்து விட்டால் அதை முடிக்காமல் விடமாட்டார். 

"பாட்ஷா -ஒரு தடவ சொன்னா 
நூறு தடவை சொன்ன மாதிரி" 
என்ற ரஜினி ஸ்டைலோடு 
என்றும் பசுமை மாறாமல் 
எங்கள் நினைவில் நிற்பவரே!
அடிப்படைக் கணக்கை 
அக்கு அக்கா பிரித்து மேய்ந்தவரே!!
ஒரே கணக்கை ஒன்பது வழிமுறைகளில் 
போடக் கற்றுத் தந்த வித்தகரே!!!
குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் 
வித்தையை கற்றுத்தந்த வீரரே!!!
எப்போதும் இனிக்கிறதே உன் கணக்கு !
ஈடு இணை இல்லையே உமக்கு !
காட்டகத்தே நிமிர்ந்து நிற்கும் தேக்கு போல 
வள்ளல் கர்ணனின் கொடை போல 
தவமின்றி கிடைத்த வரமே 
எங்கள் சூப்பர் ஸ்டார் 
எங்களின் கணித ஆசிரியர் திரு முருகானந்தம் விடுதிக் காப்பாளர் அவர்களே 
வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உம்மை 
வருக வருக என வரவேற்பதில் 
உள்ளம் மகிழ்கிறோம்.

சரியாக நேரம் 10.20 மு.ப.

வரவேற்புரை 5

5. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி வீ.சமுத்திரக்கனி பி.லிட் அவர்களுக்கு வரவேற்புரை வழங்க வருமாறு திருமதி சீ.மகாலட்சுமி M.A., B.Ed., M.Phil., அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.
"பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மண்". இவர் போன்று பண்புடையவர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது. 

ஊருணி நீராய்
ஊர் நடுவே பழுத்த மரமாய் 
மருந்து மரமாய் 
ஒப்புரவு நெறி போற்றி 
வழுவா நெறி நின்று வழிகாட்டி
மனம் செலுத்திக் கற்பவர் வாழ்வில் ஒளியூட்டி
மாணவர் ஒழுக்க நடத்தைக்கோர் 
திசை காட்டி 
மாநிலம் வாழ்வுற மதியூட்டி 
மகிழ்வுறும் தன்மையைப் பாராட்டி 
பொறுமையும் விடாமுயற்சியும் நிறைந்த 
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை 
திருமதி வீ.சமுத்திரக்கனி பி லிட் அவர்களை வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்...

சரியாக நேரம் 10.25 மு.ப.

ஆசிரியர்களுக்கு மரியாதை செய்தல் 

1. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு S.வெங்கடேசன் M.Sc.,M.Ed., M.Phil., அவர்களுக்கு திரு.தி. முத்துராஜ் B.Sc., DECE., தொடர்வண்டி மேலாளர் பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பார்.

2. எங்களின் தமிழ் ஆசிரியையும், தற்போது வலசை அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையுமான திருமதி C.வயலட் M.A., B.Ed., M.Phil.,அவர்களுக்கு
திரு.இரா.இராஜேஸ்குமார் தெற்கு ரயில்வே அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

3. எங்களின் சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களுக்கு திரு.அ.முனியாண்டி அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

4. எங்கள் கணித ஆசிரியர் திரு M.முருகானந்தம் அவர்களுக்கு திரு.க.சங்கர் நீதித்துறை அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

5. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி வீ.சமுத்திரக்கனி பி.லிட் அவர்களுக்கு திருமதி து.கற்பகவள்ளி அவர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்வார்.

ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குதல்

1. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு S.வெங்கடேசன் M.Sc.,M.Ed., M.Phil., அவர்களுக்கு திரு.பெ.இலட்சுமணன் கணபதி எம்பிராய்டரி அவர்கள் நினைவுப்பரிசு வழங்குவார்.

2. எங்களின் தமிழ் ஆசிரியையும், தற்போது வலசை அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையுமான திருமதி C.வயலட் M.A., B.Ed., M.Phil.,அவர்களுக்கு திரு.மு.பாலசுந்தரம் துணை இராணுவம் அவர்கள் நினைவுப்பரிசு வழங்குவார்.

3. எங்களின் சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களுக்கு முனைவர் திருமதி K.ஆனந்த கனக ஜோதி M.Sc., M.Phil., Ph.D., அவர்கள் நினைவுப்பரிசு வழங்குவார்.

4. எங்கள் கணித ஆசிரியர் திரு M.முருகானந்தம் அவர்களுக்கு திரு.மா.மாடசாமி MINISTRY OF DEFENCE, ARMY (OEM DRIVER) அவர்கள் நினைவுப்பரிசு வழங்குவார்.

5. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி வீ.சமுத்திரக்கனி பி.லிட் அவர்களுக்கு திரு மு.கணேஷ்குமார் B.E., (Civil Engineer) அவர்கள் நினைவுப்பரிசு வழங்குவார்.

சரியாக நேரம் 10.30 மு.ப.

தலைமை ஆசிரியரின் தலைமை உரை 

குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை 
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை 
நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் மாட்சியும் 
உலகியல் அறிவோடு உயர்குணம் இணைந்த நல்லாசிரியர் 
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர்... 
காலைக் கதிரவன் இவர் 
மாலை நேரக் கார்மேகம் இவர் 
அதிகாலை, அந்திமாலை, பகல் வேளை என்று
பொழுதெல்லாம் பள்ளியிலே செலவிட்டவர். 
பள்ளியிலேயே இவர் வாசம் 
மரங்களெல்லாம் இவரிடம் பேசும் 
மாணவர்கள்பால் இவருக்கு நேசம்
பள்ளியைத் தவிர வேறு சிந்தனை அறியாதவர். 
பக்கவாட்டுச் சிந்தனைகள் நிரம்பியவர்.
அன்பால் அரவணைப்பால் அர்ப்பணிப்பால்
ஆளுமைத் திறத்தால்
இன்முகத்தால் ஈடுபாட்டால் 
உண்மைக் குணத்தால்
உழைப்பால் உறுதியால் 
மாணவர்களின் உள்ளங்களை வென்றவர்.
வெள்ளை உள்ளம் கொண்டவர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு S.வெங்கடேசன் M.Sc.,M.Ed., M.Phil., அவர்களை முன்னாள் ஆசிரியர்களும் மாணவர்களும் சந்திக்கும் இவ்விழாவிற்குத் தலைமையேற்று தலைமை உரை வழங்க வருமாறு அன்போடு அழைக்கிறோம்...

தலைமை உரை 

தன்னம்பிக்கையை விதைத்த
தனித்தன்மையான சிந்தனையாளர் 
தலைமை ஆசிரியர் திரு S.வெங்கடேசன் M.Sc.,M.Ed., M.Phil.,அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

சரியாக நேரம் 10.35 மு.ப.

ஒளிப்படம் எடுத்தல் 

இப்போது ஆசிரியர்களுடன் இணைந்து ஒளிப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. 
அதற்கு முன்னதாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்குவார்கள். 

1. த தங்கேஸ்வரி
2. மா இராஜ்கோகிலா
3. வீ மகேந்திரன்
4. தி முத்துராஜ்
5. க ஆனந்த கனகஜோதி
6. இரா முத்துராஜ்
7. மு பாலசுந்தரம்
8. சீ மகாலட்சுமி
9. லி இராஜேஸ்வரி
10. பெ இலட்சுமணன்
11. து கற்பக வள்ளி
12. மா செந்தில் குமார்
13. அ முனியாண்டி
14. மா விஜயராணி
15. மா மாடசாமி இராணுவம்
16. பா பவுல் ராஜ்
17. மா மாடசாமி
18. து இராஜேந்திர பிரசாத்
19. இரா இராஜேஷ்குமார்
20. மா ஷோகினா
21. வை இராமர்
22. மா முருகேஸ்வரி
23. கா சங்கர்
24. மா இராஜ குரு
25. மு கணேஷ் குமார்
26. மு கமலாதேவி
27. வெ சீனியம்மாள்
28. மா மகேஷ் ராணி
29. மா காளீஸ்வரி
30. இ இராமலட்சுமி
31. ந அன்னலட்சுமி
32. பொ வன ராஜ்
33. க சங்கிலியம்மாள்
34. இரா பெருமாள்
35. ம மணிக்காளை
36. கா முத்துமாரி
37. சி ஜோதி
38. கா காளீஸ்வரி
39. க இசக்கிராணி
40. மு திலகராஜன்
41. மா மகாலட்சுமி
42. மா சந்தானம்
43. செ.வடிவேல் குமார் 
44. இரா.வனிதா
45.பா.பொன்னாத்தாள்
46.பொ.இராமர்
47.க.அழகுமுத்து
அடுத்ததாக நினைவு பரிசை பெற்றுக் கொண்ட அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களுடன் இணைந்து ஒளிப்படம் எடுத்துக் கொள்வார்கள்..

சரியாக நேரம் 10.50 மு.ப.

தேநீர் இடைவேளை 

சரியாக நேரம் 11.00 மு.ப.

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுரை 

சிறப்புரை 1

1. சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுரை வழங்க வருமாறு திரு. பெ. இலட்சுமணன் கணபதி எம்பிராய்டிங் அவர்களை அன்புடன் அழைக்கிறோம். 

அன்ன சாத்திரம் ஆயிரம் வைத்தல் 
ஆலயம் பதினாயிரம் நாட்டல் 
பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி 
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 
என்ற புண்ணிய புலவன் பாரதியின் 
எண்ணப்படி ஆசிரியர் பணியை 
அர்ப்பணிப்போடு ஆற்றிய 
என் மனம் கவர்ந்த 
ஆசிரியர் பெருமக்களை வணங்கி 
என் சிறப்புரையைத் தொடங்குகிறேன்...

எம் தமிழ் அம்மா... 
அம்மம்மா...
சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைன்னு 
பாக்க மாட்டாங்க...
அடிச்சு புடிச்சு லீவு நாள்ல 
ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க....
அப்போ கலர் டிரஸ் போட்டுக்கலாம்...
ஒரே கலர் கலரா இருக்கும்!!!
அக்கறையோடு நடத்துவாங்க...
திரும்பத் திரும்ப மொழிப்பயிற்சி தான்...
கை வலிக்க வலிக்க கரும்பலகை முழுக்க 
இலக்கணப் பயிற்சிதான்...!
அப்போ தமிழ் ஃபர்ஸ்ட் பேப்பர், 
செகண்ட் பேப்பர்ன்னு 
ரெண்டு பேப்பர் உண்டு...
கடின உழைப்பாளி..!
அதனால நாங்க நல்லா படிக்கணும்னு ஆசைப்படுவாங்க...
எழுத்துப்பிழை இருக்கான்னு 
-வரி வரியா பார்ப்பாங்க...
பேப்பர் ஃபுல்லா சிவப்புமை கோடு தான் இருக்கும்...
எழுத்து மணி மணியா எழுதணும்பாங்க...
நாங்களும் குண்டு குண்டா எழுதுவோம்...
இவர்கிட்ட படிச்சவன் 
மெல்ல படிக்கிறவனா இருந்தாலும்.
70 மார்க் எடுத்திருவான்...
டீச்சிங்கும் கோச்சிங்கும் அப்படி இருக்கும்...
எங்க வாய் சும்மா கிடக்காது...
அரட்டை அடிச்சுகிட்டே இருப்போம்.
அந்த நேரம் எங்க மேல உள்ள அக்கறையினால
உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்க...
சில நேரம் அழுதுருக்காங்க...
அதெல்லாம் அப்ப புரியல...
இப்பதான் அவரோட அருமை புரியுது...
இவருகிட்ட தமிழ் படிச்சதனாலேயே 
நிறைய பேரு
டிஎன்பிஎஸ்சி பாஸ் பண்ணி வேலைக்கு போயிருக்காங்க...
அடிக்கடி வெட்டிப்பேச்சு பேசுறதுனால 
நிறைகுடம் தழும்பாது குறைகுடம் தான் கூத்தாடும் 
என்ற பழமொழியைச் சொல்லுவாங்க...
எப்பொழுதும் எங்கள் மனசுல நிற்பவர் நீங்கள்....
நன்றி மா ... தமிழம்மா...!!!

அப்புறம் சமூக அறிவியல் டீச்சர்...
எப்பவும் சிரிச்ச முகம்...
அன்பாலேதான் திருத்தணும்றது 
இவரோட பாலிசி....
எப்பவுமே படிக்காமல் திரியுற 
10, 20 பிள்ளைகளை தத்தெடுத்துப்பாங்க...
அதாவது எப்பவுமே பக்கத்துலயே 
உட்கார வைத்துக்கொள்வார்கள்...
சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வைப்பாங்க...
கிளிப்பிள்ளை மாதிரி...
நல்லா படிக்கிற மாணவர்களை 
பெருசா கண்டுக்க மாட்டாங்க...
அவங்களுக்கு ஏதாவது படிக்க கொடுத்திடுவாங்க...

அதிக ரசிகர் படை இவருக்கு தான்...
நாங்க சாப்பிடறது எதுவா இருந்தாலும் வாங்கிக்குவாங்க...
அது சுத்தம் இல்லன்னு தெரியும்...
இருந்தாலும்...
குகனோட தேனையும் மீனையும் ராமன் வாங்கின மாதிரி...
பாசத்துல கொடுக்கிறத வாங்கிக்குவாங்க...

எங்க டீச்சருக்கு விநாயகர்தான் பிடித்த கடவுள்...
பப்ளிக் எக்ஸாம் வரைக்குமே 
எங்க டீச்சரு...
ஆனைமுகனே 
ஆதி முதல் ஆனவனே
மோனைப் பொருளே 
மூத்தவனே
கணேசா ஏன் என்று கேளுமையா 
இந்த ஏழை முகம் பாருமையா 
அப்படிங்கற விநாயகர் வணக்கத்தை 
எல்லாரையும் சொல்ல வச்சு 
பாஸ் பண்ண வச்சவங்க...

ஒரு இடத்தில் உட்காராம 
அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு 
திரியுற பசங்கள செல்லமா அடிப்பாங்க...
யாருக்குமே வலிக்காது...
வாய் பேசி அடி வாங்குற பசங்கள பாத்து...
நுணலும் தன் வாயால் கெடும் 
அப்படின்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவாங்க...
எப்பவுமே... பெத்த தாய் மாதிரி தான்...
நலம் விசாரிப்பாங்க...
எல்லாம் அந்தக் கடவுள் கொடுத்த வரம்...

அப்புறம்...
எங்க பாட்ஷா வாத்தியார்...
முருகானந்தம் சாரு..
ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு கணக்கு எடுத்தவர்...
கூட்டல் விதி, கழித்தல் விதியை 
தினமும் மனப்பாடம் செய்ய வைப்பார்...
அருமையா நடத்துவார்...

முதல்ல ...
ஸ்டெப் பை ஸ்டெப்பா நடத்துவாரு...
அப்புறம் ...
ஷார்ட் கட் சொல்லி நடத்துவாரு...
அப்புறம் ...
ஒரு குழப்பு குழப்பி விட்டு
எல்லா டவுட்டையும் கிளியர் பண்ணி 
நடத்துவாரு...

ஒரே கணக்க குறைஞ்சது 
மூணு மெத்தட்ல நடத்துவாரு...
இதனால எங்களோட டவுட் எல்லாம் கிளியர் ஆயிடும்...
கணக்குக்கு சரியான பேஸ்மண்ட் அமைச்சு தந்ததே இவர்தான்...
ஏதாவது மறந்து போச்சுன்னா...
அடி விழும்...
நிறைய கம்பு ஒடியும்...
வேற கம்பு கொண்டுவர சொல்லி...
அடிப்பார்....

நோய்க்கு மருந்து டானிக்...
மறதிக்கு மருந்து ...அடிதான்ம்பாரு...
நாங்க நிறைய டானிக் வாங்கி இருக்கிறோம்...
அந்த டானிக்கு தான் ...
அந்த அக்கறை தான்...
எங்களுக்கு கிடைச்ச இந்த வாழ்க்கை...
எப்பவும் நீங்க எங்க மனசுல தான் இருப்பீங்க...
தேங்க்யூ சார்....
சிறப்புரை வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் 
நன்றி ...!
சிறப்புரை வழங்கிய திரு. பெ. இலட்சுமணன் கணபதி எம்பிராய்டிங் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

சரியாக நேரம் 11.10மு.ப.

சிறப்புரை 2

2.சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுரை வழங்க திரு.இராஜேந்திர பிரசாத் B.E(Civil Engineer) அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

நம் வாழ்நாளில் ...
மிகவும் இனிப்பான தருணம் இது...
25 ஆண்டுகளுக்கு பின்னர் நாம்
எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம்! 

காலம் பற்பல மாற்றங்களை
நமக்கு தந்து விட்டது.
ஆனாலும், 
நம் மனம் மட்டும் 
டைம் ட்ராவல் பண்ணி, 
25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த,
பத்தாம் வகுப்பு மாணவனாக... மாணவியாக... 
நட்புணர்வுடன்... 
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து... 
மலர்ந்த நினைவுகளுடன் நாம்...
மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
மீண்டும் நாமெல்லாம் சந்திப்போம் என்று 
ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. ஏன்....
நம்மில் பலருக்குச் சிந்திக்கவே நேரமில்லை...
வாழ்க்கை பயணத்தின் அருமையான தருணத்தை...
மீட்டுக் கொண்டு வர முயற்சி செய்த...
ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி, 
என் உரையைத் தொடங்குகிறேன். 

வாழ்க்கைக் கணக்கு விசித்திரமானது !
வாழும் வாழ்க்கை அற்புதமானது !
அன்பான ஆசிரியர் பெருந்தகையீர்!!!
அறியாமைத் துயரில் ஆழ்ந்திருந்த எம்மை
ஆற்றுவித்தவர் நீங்கள் ...
கிணற்றுத் தவளையாய்க் கிடந்த எமக்கு...
எட்டுத்திசையைக் காட்டி நின்று,
ஏற்றமிகு வாழ்வளித்தவர் தாங்கள் ...
ஊர்ந்து வந்த நத்தை எமக்குச்
சிறகு தந்து பறக்கச் செய்தவர் தாங்கள் ...
இவை எவையும் மறந்ததில்லை நாங்கள்...
மனக் கோவில் உமக்கே கட்டி...
வழிபடுகிறோம் நாங்கள்...
எம்மால், உமக்குப் பட்ட கடனை...
எப்படித் திருப்பித் தர முடியும்? 
நன்றியைத் தவிர...

எத்தனை எத்தனையோ சவால்களை ...
இன்ப துன்பங்களை ...
ஏற்ற இறக்கங்களை...
ஏமாற்றங்களை ...
விருப்பு வெறுப்புகளை....
வினோதங்களை ....வியப்புகளை ...
இந்த வாழ்க்கை எமக்குத் தந்திருக்கிறது.
இவை அத்தனையையும் கடந்து வந்ததில்... 
நீங்கள் தந்த தெம்பிருக்கிறது.

நீங்கள் தந்தது ஏட்டுக்கல்வியல்ல...
எப்படி வாழ வேண்டும் என்ற கல்வி...

பால் புகட்டும் தாய்போல ...
பாடம் சொல்லித் தந்தவர் நீங்கள் ...

நாங்கள் கண்ட நல்லாசிரியர்கள் நீங்கள்...
எதை எதிர்பார்த்து நல்வழி காட்டினீர்கள்?
யாரும் காட்டாத அக்கறையை ஏன் காட்டினீர்கள்...?
ஈகோ இல்லாமல் இறங்கி வந்து ...
இரக்கம் காட்டி...
அன்பைக் குழைத்து ...
அறிவைப் புகட்டிய...
பெருமை மிகுந்த சான்றோர் நீங்கள் ...
ஆசிரியர்களில் நீங்கள் முதல் தரம்...
உங்களிடத்தில் மாணவனாய் வாய்த்தது,
நாங்கள் பெற்ற வரம்...

மதிப்புமிகு தமிழம்மா அவர்களே..!
கருப்பு வைரம் நீங்கள் !!!
கண்டிப்புக் காட்டி,
புரியாத பகுபத உறுப்பிலக்கணத்தை ...
மீண்டும் மீண்டும் விளக்கி...
சொல்லையும் பொருளையும்
ஐயமறப் பொருத்தி...
நேர்க்கூற்று அயற்கூற்றை
நிதானமாக நடத்தி...
இலக்கணக் குறிப்பை 
இலகுவாகச் செதுக்கி...
அலகீட்டு வாய்ப்பாட்டை 
அற்புதமாக நடத்தி...
இலக்கணப் பாடத்தைத் 
இனிக்க இனிக்க நடத்தி...
திணை பால் எண் இடம் காலம் என்று ...
பிழையற்ற தொடர் அமைக்க...
பயிற்சி பயிற்சி என்று...
கல்லாய் இருந்த எங்களை
அருந்தமிழ்ச் சொல்லால்...
செதுக்கிச் செதுக்கி...
அழகுச் சிலையாக்கினீர்கள்...
மாலைதோறும் சிறப்பு வகுப்பு ...
வாரவிடுமுறைதோறும் சிறப்பு வகுப்பு ...
என்று வைத்து...
எங்கள் வாழ்க்கையில் 
ஒளி ஏற்றிய அம்மா...
தமிழ் அம்மா...
எங்கள் அம்மா...
உங்கள் பாதம் தொட்டே...
வணங்கி நிற்கிறோம் அம்மா...

சமூக அறிவியல் ஆசிரியை திருமதி மு.கலைச்செல்வி அம்மா அன்பின் வடிவம்...
இந்தப் பிள்ளைகள்
இன்னும் படிக்காமல் இருக்கிறார்களே...
என்று நீங்கள் ஏங்கியதைப் 
பார்த்திருக்கிறோம் நாங்கள்...
அன்று புரியவில்லை 
உங்கள் ஏக்கம்...
இன்றுவரை இருக்கிறது 
உங்களின் தாக்கம்...

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நீங்கள் ...
அவசியத்திற்கும் மேலே 
எங்கள்மீது அக்கறை காட்டினீர்கள்...
அலட்சியமாய் இருந்தோம்
அறியாமையில் உழன்றோம் 
அனாவசியமாய்ச் சுற்றித் திரிந்தோம் 
அடித்தீர்கள்... வலிக்கவில்லை...
திட்டினீர்கள்... உறைக்கவில்லை...
அன்பு காட்டி, அரவணைத்து,
தகரமாய்க் கிடந்த எங்களை 
தங்கமாய்ப் பார்க்க நினைத்தீர்கள்...

கணித ஆசிரியர் முருகானந்தம் சார்...
"பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு இரங்கலும் 
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம் 
மக்கள் யாக்கை இது என உணர்ந்து 
மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்" என்று மணிமேகலை கூறுவது போல் நல்ல அறத்தையே இன்று வரை செய்து வருகிறார் எங்கள் கணித ஆசிரியர்...
இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் 
எங்கள் மனதில் என்றும் நீங்கள் 
தங்கம்தான்...
நான் பிறந்த கருவறைக்கு 
இணையானது உங்கள் வகுப்பறை...
கருவறை கவசம் தந்தது என்றால்...
உங்கள் வகுப்பறை 
கல்வி என்னும் ஆயுதம் தந்தது..
உங்களுக்கு என்னுடைய நன்றியை
உங்கள் பாதம் தொட்டு சமர்ப்பிக்கிறேன்.

சிறப்புரை வழங்க வாய்ப்பு வழங்கிய அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம் 
சிறப்புரை வழங்கிய திரு.இராஜேந்திர பிரசாத் B.E(Civil Engineer) அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

சரியாக நேரம் 11.20

சிறப்புரை 3

3. திரு.மு.திலகராஜ் CISF துணை இராணுவப் படை அவர்களை சிறப்புரை மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேச வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மலையிலே பிறந்தாலும் 
சந்தனம் ...
மலைக்கு என்ன செய்யும்? 
கடலிலே பிறந்தாலும் 
முத்து ...
கடலுக்கு என்ன செய்யும்? 
வீணையிலே பிறந்தாலும் 
இசை ...
வீணைக்கு என்ன செய்யும்? 
நீங்கள் வரைந்த 
வண்ண ஓவியம் நாங்கள் ...
நீங்கள் செதுக்கிய 
அழகுச்சிலைகள் நாங்கள் ...
நிஜ உலகின் பிரம்மாக்கள் நீங்கள்...
உளியின் வலியைப் 
பொறுத்துக் கொள்ளும் கற்களை...
நீங்கள்...
பல்துறை வித்தகராக மாற்றி விடுகிறீர்கள்...
உங்களிடம் பட்ட கடனை 
எங்களால் எப்படித் திருப்பி தர முடியும்???
பாரபட்சம் பாராமல் பெய்யும் மழைத்துளி நீங்கள்..
வேறுபாடு பாராமல் குடிசையிலும் நுழையும் இளம் தென்றல் நீங்கள்...
பள்ளத்தை நோக்கியே பாயும் ஆற்று நீர் நீங்கள்...
ஏதுமில்லாத எங்களின் உள்ளங்களை 
கொள்ளை கொண்டீர்கள்...!

பூவில் சுரந்த தேன் போல...
நாவில் தவழும் தமிழ் போல...
புள்ளிகள் நிறைந்த கலைமான் போல...
புன்னகை தவழும் மழலை போல...
உணவில் கரைந்த உப்பு போல...
கனவில் தோன்றும் தேவதை போல...
எங்கள் வாழ்க்கையைச் 
சுவை மிக்கதாக மாற்றினீர்கள்...

தமிழ் அம்மா திருமதி C. வயலட் அவர்கள்
"கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்து இவ்வுலகு" என்று வள்ளுவர் சொல்லுவது போல கடமையைக் கண்ணும் கருத்துமாகச் செய்து வருபவர்.  எங்களின் உலகிற்கு உரிமை கொண்டவர்.
எங்க மேல ரொம்ப பாசமா இருப்பாங்க 
அக்கறையா நடத்துவாங்க 
தப்பு பண்ணா கோவப்படுவாங்க 
அடிப்பாங்க...
எங்க எல்லாரையும் நல்லா படிக்க வச்சிடனும்னு ரொம்ப கஷ்டப்பட்டாங்க...
நாங்க இன்னைக்கு நல்லா இருக்குறோம்ன்னா
அதுக்கு நீங்க தான் காரணம்...
வணங்குகிறேன் அம்மா🙏

சமூக அறிவியல் அம்மா திருமதி M. கலைச்செல்வி அவர்கள்
"குளம் தனக்காக நீரைத் தேக்குவதில்லை 
பழம் தனக்காகச் சுவைப்பதில்லை 
மழை தனக்காகப் பொழிவதில்லை 
மரம் செடி கொடி இவை எல்லாம் தனக்காக விளைவது இல்லை 
எங்கும் நிறைந்திருக்கிறது மனிதம்"
மனிதம் நிறைந்த ஆசிரியை இவர்...
நாங்க ஒரே ஒரு டீச்சருக்கு மட்டும்தான் பயப்பட மாட்டோம். அது கலைச்செல்வி டீச்சருக்குத்தான்.
இவங்க அடிச்சா மட்டும் எங்களுக்கு வலிக்கவே வலிக்காது...
மெல்லதான் அடிப்பாங்க...
க்ளோஸ் பிரண்ட் மாதிரி பழகுவாங்க...
அன்பான மொகத்த தவிர 
வேற முகத்தை எங்க கிட்ட காட்டியதே இல்லை...
வகுப்பில் ஒருத்தன காணும்னா கூட ஈசியா கண்டுபிடிச்சுடுவாங்க...
அவன் எங்க இருக்கான் அவனை கூட்டிட்டு வா அப்படிம்பாங்க.
வெறுப்பையோ கோபத்தையோ காட்டத் தெரியாத முகம் கலைச்செல்வி டீச்சருடைய முகம் தான்.
எல்லாரையும் என் புள்ள என் புள்ள என்றுதான் சொல்லுவாங்க...
அன்புக் கடல் அம்மா திருமதி M. கலைச்செல்வி டீச்சருக்கு என் பணிவான வணக்கங்கள். 

கணித ஆசிரியர் திரு M.முருகானந்தம் அவர்கள்
"சாந்து பொட்டும்... சந்தன பொட்டும்...
தல தளக்குற சரிகை பட்டும்...
எம்மனசுல கொக்கி போடுது... நாகரத்தினமே..."என்ற பாடலை அடிக்கடி பாடுவார்..
ஒரே கணக்கை பல மெத்தேடுல சொல்லி கொடுப்பார்
ஈஸியா சொல்லிக் கொடுப்பார் 
புரியாதவங்களுக்கு கூட கணக்கு புரியும்.
கணக்குல நிறைய பேரு செண்டம் எடுப்பாங்க...
அடி பிண்ணி எடுத்திருவார்...
நிறைய பேரு அரசு வேலைக்கு போயிருக்காங்க...
அதுக்கு இவர்தான் முக்கிய காரணம்...
அதற்காக என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சிறப்புரை வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்...

சிறப்புரை வழங்கிய திரு.மு.திலகராஜ் CISF துணை இராணுவப் படை அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

சரியாக நேரம் 11.30 மு.ப.

சிறப்புரை 4

4. சிறப்புரை வழங்க வருமாறு திரு மு.கணேஷ்குமார் B.E(Civil engineer) அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

"வெள்ளத்தால் அழியாது 
வெந்தணலால் வேகாது 
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது 
கொடுத்தாலும் நிறைவன்றி குறைவுறாது 
கள்ளர்க்கோ பயமில்லை 
காவலுக்கோ மிக எளிது 
கல்வியென்னும் உள்ள பொருள் 
உள்ளிருக்க 
புறத்தே ஓர் பொருள் தேடி உழல்கின்றீரே"
என்று அவ்வையார் கேட்கிறார். கற்ற கல்வியை யாராலும் அழிக்க முடியாது. பிறரிடம் கொடுத்தால் கூடுமே ஒழிய குறையாது. உண்மையான பொருள் கல்வியே. அப்படிப்பட்ட கல்வியை எங்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களை வணங்கி என் சிறப்புரையைத் துவங்குகிறேன்.

"எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப்பெறின்" என்னும் திருக்குறளுக்கு இலக்கணமாக திகழ்ந்தவர் எங்கள் தமிழ் அம்மா திருமதி வயலட் அவர்கள்...
மனதில் எப்போதும் ஒரு லட்சியத்தோடு வாழ்பவர். 
எங்களையும் ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும் என்று வழிகாட்டியவர். சில நேரங்களில் எங்களைக் கடிந்து கொள்வார். அதுவும் எங்கள் மீது கொண்ட அக்கறையினால்தான்...

இவருடைய இதயம் எப்போதும் "என் பிள்ளைங்க எல்லாரும் நல்லா படிச்சுடனும்; நிறைய மார்க் வாங்கிடனும்" ன்னு துடித்துக் கொண்டே இருக்கும்.
"அவங்க பெத்த பிள்ளையைப் பற்றி நினைக்கிறார்களோ இல்லையோ...
எங்களப் பத்தி தான் நிறைய நினைப்பாங்க"
"ஒல்லும் வாயெல்லாம் வினை நன்றாக முடிக்கும்" ஆசிரியை எங்கள் தமிழ் அம்மா தான்...

அடுத்ததா கலைச்செல்வி டீச்சர்...
"மனதில் உறுதி வேண்டும் 
வாக்கினிலே இனிமை வேண்டும் 
நினைவு நல்லது வேண்டும் 
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் 
கனவு மெய்ப்பட வேண்டும் 
கைவசமாவது விரைவில் வேண்டும் 
தனமும் இன்பமும் வேண்டும் 
தரணியிலே பெருமை வேண்டும்" என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, எங்களின் கனவு மெய்ப்பட உழைத்தவர்; எங்களின் பெருமைக்கு உரியவர்; சமூக அறிவியல் ஆசிரியை திருமதி கலைச்செல்வி அவர்கள்...

எங்களின் கண்களுக்கு வண்ணங்கள் நிறைந்த வானவில் இவர் 
எங்களின் அறிவுப் பசிக்கு அமுதம் இவர் 
எங்களின் வழுக்குப் பாதைக்கு ஊன்றுகோல் இவர்...
எங்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு கலங்கரை விளக்கம் இவர் ...
இவரை நினைத்த உடனே மகிழ்ச்சியான நினைவுகள் பொங்கும்...
எங்களைப் பெற்று எடுக்காத தாய் இவர்...
அன்பால் எங்கள் உள்ளங்களை மெல்ல மெல்லக் கரைத்து எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்... நன்றி அம்மா...

அடுத்ததா கணக்கு சார்...
"அன்பினில் இனிமை காண்போம் 
அறத்தினில் நேர்மை காண்போம் 
துன்புறும் உயிர்கள் கண்டால் 
துரிசறு துணிவு காண்போம் 
வண்புகழ் கொடையில் காண்போம் 
வலிமையைப் போரில் காண்போம்" என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப மாணவர்கள் பால் அன்பு காட்டியவர். நேர்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். மாணவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் உடனே ஓடிச் சென்று உதவி செய்பவர். துணிச்சல் மிக்கவர். எங்களின் ஹீரோ. 
கணக்கில் பல மாய வித்தைகளைச் செய்து காட்டியவர். மாயச் சதுரங்களை அமைத்து வேடிக்கை காட்டியவர். கணிதத்தை விளையாட்டாகக் கற்றுக் கொடுத்தவர்.
"வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல; மற்றவர் மனதில் நீ வாழும் வரை" என்று அன்னை தெரசா சொல்லியது போல, நீங்கள் எப்போதும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள். மிகவும் நன்றி சார்...
அன்பை கடன் கொடு; அது அதிக வட்டியுடன் திருப்பித் தரும் என்பார்கள்... நீங்கள் எங்கள் மீது காட்டி அன்பைத் திருப்பித் தரும் நேரம் இது. சிறப்புரை ஆற்ற வாய்ப்புத் தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.

"குலுக்கென்று சிரித்த முல்லை மலர்க்கொடி கண்டேன்; மகிழ்ச்சி கொண்டேனே" என்னும் வகையில் சிறப்புரை ஆற்றிய திரு மு.கணேஷ்குமார் B.E(Civil engineer) அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்...

சரியாக நேரம் 11.40 மு.ப.

சிறப்புரை 5

5. சிறப்புரை வழங்க வருமாறு திரு மா.மாடசாமி மகா பிராய்லர்ஸ் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்...

"சலசலக்கும் நீரோடை ...
சிலிர்க்க வைக்கும் குளிர்காற்று ...
புன்னகைக்கும் வண்ணப் பூக்கள் ...
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி..."
உங்க எல்லாரையும் பார்க்கும்போது எனக்கு அப்படிதான் தோணுது...
"கடிச்சா தான் கரும்பு இனிக்கும்...
உழைச்சா தான் பூமி செழிக்கும் ...
படிச்சா தான் உலகம் நம்ம மதிக்கும்"... என்று சொல்லிக் கொடுத்தவர் நீங்கள்...
"செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது" என்று திருவள்ளுவர் சொல்லுவது போல, நீங்கள் செய்த உதவிக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் அது ஈடாகாது.

"வண்ணங்களில் இல்லை வாழ்க்கை நல்ல எண்ணங்களில் தான் இருக்கிறது" என்று கற்றுக் கொடுத்த தமிழ் அம்மா அவர்களே...
ஒழுக்கத்தை விடச் சிறந்த உடை உலகத்தில் இல்லை என்பார்கள். ஒழுக்கத்தை மிக உயர்வாகக் கற்றுக் கொடுத்த தமிழ் அம்மா திருமதி வயலட் அவர்களே...
"இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்" என்கிறார் வள்ளுவர். உங்களுடைய வாய்ச்சொல் எங்களுக்கு ஊன்றுகோல் போன்றது. நாங்கள் வாழ்க்கையில் வழுக்கி விழப் போகின்ற சூழல்களில் எல்லாம், உங்களின் வார்த்தைகள் எங்களைக் காப்பாற்றி இருக்கின்றன.
"பிறர் அஞ்சுவது அஞ்சி 
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் 
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்"
என்ற உயர்வான வாழ்க்கைக் கோட்பாட்டை எங்களுக்குப் பயிற்றுவித்தவர் நீங்கள்...
கடின உழைப்பிற்கு இலக்கணமாக திகழ்பவரே...
உங்களுக்கு எனது நன்றியை காணிக்கையாகச் செலுத்துகிறேன்...

அடுத்ததாக சமூக அறிவியல் ஆசிரியர் திருமதி கலைச்செல்வி அவர்கள்...
"களர்நிலத்துப் பிறந்த உப்பினை சான்றோர் 
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வார் 
கடை நிலத்தோர் ஆயினும் கற்றறிந்தோரை 
தலை நிலத்து வைக்கப்படும்"
என்று கடை நிலத்தோரான எங்களை தலைநிலத்து வைக்கப் பாடுபட்டவர் நீங்கள்...
சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை... 
காலம் சோம்பேறியை மதிப்பதில்லை...
எங்களைச் சோம்பல் இல்லாமல் படித்து வாழ்க்கையில் முன்னேற வழிகாட்டியவர் நீங்கள்...
"கடவுள் நூலைத்தான் கொடுப்பார்... மனிதன் தான் நெய்ய வேண்டும்..." என்று உழைப்பின் அருமையை எங்களுக்கு எடுத்துக் காட்டியவர் நீங்கள்...
"தாளாற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு" என்று வள்ளுவர் சொல்வது போல, நீங்கள் கற்ற கல்வி எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்கள்... மிக்க நன்றி டீச்சர்...

அடுத்ததாக கணித ஆசிரியர் திரு முருகானந்தம் அவர்கள்...
"முதுகுக்குப் பின்னால் செய்ய வேண்டிய ஒரே வேலை தட்டிக் கொடுப்பதுதான்" என்பார்கள். எங்களை தட்டிக் கொடுத்து எங்கள் வாழ்க்கையில் ஒளியூட்டிய கணித ஆசிரியர் அவர்களே...
"இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம் காணோம் கல்வி போல் 
மம்மர் அறுக்கும் மருந்து" .
ஆம். கல்வி மம்மர் அறுக்கும் மருந்து... மயக்கத்திலிருந்து எங்களை தெளிவிக்கும் மருந்து...
நல்லது எது கெட்டது எது என்பதை காட்டும் மருந்து...கல்வி.
அத்தகைய கல்வியை எங்களுக்குப் புகட்டிய உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
நீங்கள் சத்தியநேசன் தலைமை ஆசிரியருடன் சேர்ந்து
பள்ளியில் குடிநீர் தொட்டியைப் பழுது பார்த்துத் தந்தீர்கள்;
காலை இறைவணக்கக் கூட்டத்திற்காக ஒலிபெருக்கி வசதி செய்து கொடுத்தீர்கள்; 
காலை மாலை ஸ்டடி வகுப்புகளை கவனித்தீர்கள்.;
எங்களை சாஸ்தா கோவிலுக்கும் அய்யனார் கோவிலுக்கும் அழைத்துச் சென்றீர்கள்.
மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளுக்கு எங்களை அழைத்துச் சென்று இருக்கிறீர்கள்.
பள்ளி முழுவதும் உங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது...
எந்த நேரமும் பள்ளி நலனுக்காகவும் மாணவர்கள் நலனுக்காகவும் பாடுபட்டு இருக்கிறீர்கள்...
"மின்னல் ஒளியே, விலைமதியா ரத்தினமே 
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாரே"
உம்மை வணங்குகிறேன்...
சிறப்புரை வழங்க வாய்ப்பளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகிறேன். 

சிறப்புரை வழங்கிய திரு.மா.மாடசாமி மகா பிராய்லர்ஸ் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

சரியாக நேரம் 11.50 மு.ப.

ஏற்புரை வழங்குதல்

1. "கனியிடை ஏறிய சுவையும் 
முற்றல் கழையிடை ஏறிய சாறும் 
பனிமலர் ஏறிய தேனும் 
காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் 
நனிபசு பொழியும் பாலும் 
தென்னை நல்கிய குளிரிள நீரும் 
இனியன என்பேன்- எனினும் தமிழ் அம்மாவை எங்கள் உயிர் என்போம் கண்டீர்"
எங்களின் தமிழ் ஆசிரியையும், தற்போது வலசை அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையுமான திருமதி C.வயலட் M.A., B.Ed., M.Phil., அவர்களை ஏற்புரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

ஏற்புரை1

ஏற்புரை வழங்கிய எங்களின் தமிழ் ஆசிரியையும், தற்போது வலசை அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையுமான திருமதி C.வயலட் M.A., B.Ed., M.Phil., அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

2."ஆக்குவது யாதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது யாதெனில் வெகுளி போக்குக 
நோக்குவது யாதெனில் ஞானம் நோக்குக 
காக்குவது யாதெனில் விரதம் காக்கவே" என்ற யசோதர காவிய பாடல் வரிகளுக்கு இலக்கணமாக திகழும் எங்களின் சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களை ஏற்புரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்...

சரியாக நேரம் நண்பகல் 12.00 மணி

ஏற்புரை 2

ஏற்புரை வழங்கிய எங்களின் சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்....

சரியாக நேரம் 12.10 பி.ப.

3. "உண்டால் அம்ம இவ்வுலகம் - இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்; 
துஞ்சலும் இலர்; அயர்விலர்;
தமக்கென முயலா நோன்தாள் 
பிறர்க்கென முயலுநர் உண்மையானே" என்ற புறநானூற்றுப் பாடலுக்கு இலக்கணமாகத் திகழும் எங்கள் கணித ஆசிரியர் திரு M.முருகானந்தம் அவர்களை ஏற்புரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம். 

ஏற்புரை 3

ஏற்புரை வழங்கிய எங்கள் கணித ஆசிரியர் திரு M.முருகானந்தம் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்....

சரியாக நேரம் 12.20 பி.ப.

முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த இந்த பள்ளிக்கு பீரோல் மற்றும் நினைவுப் பரிசை வழங்குகிறார்கள். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு S.வெங்கடேசன் M.Sc.,M.Ed., M.Phil., அவர்கள் இந்த நினைவுப் பரிசைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்...
(தி.முத்துராஜ் பெ.இலட்சுமணன் மா.மாடசாமி மகா பிராய்லர்ஸ் த.சங்கர் ஆகியோர் இதனைப் பொறுப்பேற்று செயலாற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்) 

சரியாக நேரம் 12.25 பி.ப.

நன்றியுரை வழங்குதல் 

ஆசிரியர்கள் மாணவர்கள் சந்திக்கும் இவ்விழாவிற்கு காரணகர்த்தா... இவ்விழா குறித்து ஒவ்வொருவரிடமும் கலந்து ஆலோசித்து, இந்த விழா சீரும் சிறப்புமாக நடைபெறக் காரணமாக இருப்பவர்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"என்னும் கொள்கையைக் கடைப்பிடிப்பவர். "தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றிற் தோன்றாமை நன்று" என்னும் திருக்குறளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர். எங்கள் பள்ளியின் முதல் மாணவன் திரு.தி.முத்துராஜ் B.Sc, DECE., தொடர்வண்டி மேலாளர் அவர்களை நன்றியுரை வழங்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நன்றியுரை 

நன்றியுரை வழங்கிய திரு.தி.முத்துராஜ் B.Sc, DECE., தொடர்வண்டி மேலாளர் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்...

சரியாக நேரம் 12.35 பி.ப.

இது உணவு இடைவேளை நேரம் 

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கலந்துரையாடல் நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

சரியாக நேரம் 02.00 பி.ப.

கலந்துரையாடல் நிகழ்வு 

சரியாக நேரம் 03.00 பி.ப.

தேநீர் இடைவேளை

சரியாக நேரம் 3.20 பி.ப.

தற்படம் மற்றும் விரும்பிய வண்ணம் ஒளிப்படம் எடுத்துக்கொள்ளுதல்

சரியாக நேரம் 04.00 பி.ப.

பிரியா விடை பெறுதல்



செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

பகுத்தறிவு

எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல எல்லை தாண்டி நீண்டிருக்கிறது தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சிகளும் பகுத்தறிவும். விளைவு, வெட்ட முடியாத அளவிற்கு சுயநலமும் இறுமாப்பும் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் கிளைகளாய்ப் பரவியிருக்கின்றன.

தலைவன்

யார் தலைவன் தெரியுமா?

அதிகாரம் இல்லாதவர்களுக்கு அதிகாரத்தையும் 

உரிமைகள் இல்லாதவர்களுக்கு உரிமைகளையும் 

பெற்றுத் தருபவனே 

உண்மையான தலைவன். 

சிங்கம் சிங்கம்தான்

எத்தனை காலம் 

தந்திரம் செய்து 

பிழைத்து வந்தாலும்

நரியால் ஒருநாளும் 

சிங்கமாகிட முடியாது 

வியாழன், 12 பிப்ரவரி, 2026

மனைவி

அன்பே அன்பே 

அழகே ஒளியே

அமுதே நீயே

இன்ப ஊற்றே 

இளந் தென்றல் காற்றே 

இளமை விருந்தே

இசையின் உருவே

நான் வரமாய்ப் பெற்ற

வாழ்வே நீயே

உன்னை வருணிக்கவே

வார்த்தை இல்லையே


அன்பே அன்பே 

அழகே நீயே

வெகுளிப் பெண்ணே

வெள்ளை மனமே

கொள்கை கொண்ட

குழந்தைத் தனமே

என்னை வாழ்விக்கவே 

வந்த வாழ்க்கைத் துணையே


அன்பே அன்பே 

அழகே ஒளியே 

தங்க நிறமே

எந்தன் உயிரே 

தாரமாய் வந்தாய் 

தளிர்நடை பயின்றாய் 

தாயாய் மலர்ந்தாய்

உன் தாய்மை அன்பில்

உருகிப் போனேன்

உனக்கே உனக்கே

என்றும் வாழ்வேன் 


அன்பே அன்பே 

அழகே அமுதே

வரமே நீயே

உன்னைப் பெறவே

என் புண்ணியம் என்னவோ

உன் பாசத்தாலே 

நான் நெகிந்தே நெகிழ்ந்தே

உருகிப் போனேன் 

உன் அக்கறை கண்டு 

நான் அசந்து போனேன் 

உன் அழகைக் கண்டு 

நான் சொக்கிப் போனேன் 


அன்பே அன்பே 

அழகை ஒளியே

தங்கச் சிலையே

தாமரை இதழே

மல்லிகை மணம் நீ

தேனின் சுவை நீ

வானின் மழை நீ

மாலைத் தென்றல் நீ

திகட்டாத இன்பம் நீ

எந்தன் உயிரே நீ

எந்தன் உலகம் நீ

எந்தன் வாழ்வே நீ

எந்தன் வசந்தம் நீ

எந்தன் சுகமே நீ

எந்தன் சொர்க்கம் நீ

அன்பே அன்பே 

அழகே ஒளியே 

என்னை வாழ்விக்கவே 

வந்தவள் நீயே

அன்பே அன்பே 

அழகே ஒளியே

வெள்ளி விழா விழிப்புணர்வு பாடல்

நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


நல்லது கெட்டது அறிந்தவன் நீ

நாலு விவரம் தெரிந்தவன் நீ

நாற்பது வயதைக் கடந்தவன் நீ

நாசூக்காக சொல்லுறேன் கேட்டுக்க நீ


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


அழகான குடும்பம் உனக்கிருக்கு

பழகிய சமூகத்தில் மதிப்பிருக்கு

நீ செய்வ தெல்லாம் உன் குடும்பம் பார்த்திருக்கு

வேண்டாத வம்பிருந்தால் நீ விலக்கு


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


பொறுப்புகள் கடமைகள் நிறைந்தவன் நீ

வெறுப்புகள் இருந்தால் விலக்கிடு நீ

தாழ்வான எண்ணத்தைத் தவிர்த்திடு நீ

பள்ளிக்காலக் காதலை நீ

அழகான கனவென்று கடந்து வா நீ

அழகான கனவென்று கடந்து வா நீ 

தனிமரம் இல்லை நீ

தலைமுறை நீயே

உன் பொறுப்பை உணர்ந்து செயல்படு நீ


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


உணர்ச்சி நெருப்புக்கு உருவம் கொடாதே 

கடந்த காதலைக் காயப்படுத்தாதே 

அழகான வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே

அர்த்தமுள்ள வாழ்வைக் கெடுத்துவிடாதே

நல்லது சொல்லுறவன் உன் நண்பன் 

நல்லபடி கேட்டுக்கிட்டா நீயே என் நண்பன் 


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே

அதிரத்னா

அதி அதி அதி அதிரத்னா 

ஒளி ஒளி ஒளி ஒளிரத்னா 

ரத்தினம் நீ

மாணிக்கம் நீ

வைரம் நீ

உன் அங்கமெல்லாம் தங்கம்

நீ இருக்குமிடமெல்லாம் மகிழ்ச்சி தங்கும்

நீ வளர்ந்து வரும் சிங்கம்

உன் பெருமை விளங்கும் எங்கும்

நீ இமயம் தீண்டி உயர வேண்டும் 

நீ வானம் தாண்டி பறக்க வேண்டும் 

உனக்கே தனி உலகம் படைக்க வேண்டும் 

தரணியை நீயே காக்க வேண்டும் 

அதி அதி அதி அதிரத்தினம்

ஒளி ஒளி ஒளி ஒளிரத்தினம்

மனைவி

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே 

உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே 

உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே 

உன் அன்பை காட்டி நீ

என்னைத் தின்றவளே 


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன் அக்கறை என்னையே 

என்னவோ பண்ணுதே 

என்னவோ பண்ணுதே 

உயிரையே தின்னுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ 

என் உள்ளம் தடுமாறுதே 

உன் அளவுக்கு என்னால் 

உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே 

குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்

உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்

உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன் 

உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன்னைத் துணையாகப் பெறவே நான்

என்ன தவம் செய்தேனோ

உன் அன்பைப் பெறவே நான் 

என்ன கொடுத்து வைத்தேனோ


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


வண்ணம் தீட்டாத ஓவியமே

இன்பம் கூட்டும் அமுதக் கலசமே

தேன்மழைச் சாரலே 

பூமணத் தென்றலே

அழகொளிரும் அலங்காரத் தேரே

உன்னை துணையாகப் பெறவே

என்ன தவம் செய்தேனோ 

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே

தமிழே

அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உணர்ச்சித் தீப்பிழம்பே

ஊக்கம்தரும் நற்றமிழே

எழில்மிகுந்த இயற்றமிழே

ஏற்றமுள்ள நாடகமே


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உன் உதிரத்திலே உதித்தேன்

உன் மடியினிலே தவழ்ந்தேன்

உன் அருகினிலே நடந்தேன்

உன் ஆற்றல்தனை வியந்தேன் 

உன் அரவணைப்பில் வளர்ந்தேன்

நீ சுவை குன்றாத தேன்

உன்னால் தானே தலைநிமிர்ந்தேனே

தாயே தமிழே உன்னை மறவேனே


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


கட்டிக் கரும்பே நீ

கதிர் தரும் ஒளியே நீ

கன்னித் தமிழே நீ

கணினித் தமிழே நீ தானே 

சங்கத் தமிழே நீ

தங்கத் தமிழே நீ

நீதி நூலாய் நிமிர்ந்தாய் நீ

நெற்றிக் கண்களைத் திறந்தாய் நீ

பக்தித் தமிழாய் நீ

பாகுபாடு களைந்தாய் நீ


காப்பியப் பொருள்கள் தந்தாய் நீ

கவிச் சுவை இன்பம் தந்தாய் நீ

தனித்தனிப் பாடல்கள் தந்தாய் நீ 

தனித்தன்மை கொண்டு வளர்ந்தாய் நீ


புதுப்புது யாப்பு தந்தாய் நீ

புதுப்புது இலக்கியங்கள் தந்தாய் நீ

புதுப்பொலிவே நீ புத்துணர்வே நீ

கடலைத் தாண்டி வானம் தீண்டி வளர்ந்தாய் நீயே 


உலகினில் மூத்த முத்தமிழே

உலகம் முழுவதும் உன் ஆட்சியே

உள்ளம் மகிழும் அமுதக் காட்சியே

உயிரில் கலந்த அருள்மிகு மாட்சியே 


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உன் பெருமை கண்டு வியக்கிறேன்

உன் அருமை கண்டு மயங்குகிறேன்

உன் ஆற்றல் கண்டு பிரமிக்கிறேன்

உன் காலடியில் என்னைச் சமர்ப்பிக்கிறேன்


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே

சுயபரிசோதனை

இதுவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் எதுவாக இருந்தாலும் அவற்றை சுயபரிசோதனை மற்றும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். எல்லா நற்பண்புகளும் ஒழுக்கமும் பகுத்தறிவும் சமத்துவ சகோதரத்துவ சிந்தனைகளும் இவற்றிலிருந்தே பிறக்கின்றன.

காலம்

நல்ல படிப்பினையைத் (அனுபவத்தை)

தந்த இறந்த காலம் 

உண்மையில் இறந்த காலமல்ல... 

அதுவும் நம் எதிர்காலமே...

அரசியல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பவர்கள் 

அறியாமையை ஒரு பெருங்குற்றமாகக் கருதுவதில்லை...

உண்மையில், 

அறியாமையே தீண்டாமைக்கு மூலகாரணம்...

அறியாமல் இருப்போரை அப்பாவி என்கிறோம்...

அப்பாவியாக இருப்பதால்தான் ஏமாற்றப்படுகிறார்கள்...

ஆகையால்,

அப்பாவியாக இருப்பதே பெருங்குற்றம்...

சமூக விலங்காகிய மனிதன் 

எனக்கென்ன என்று இருப்பது பெருங்குற்றம்தான்...

இப்படிப் பட்ட அப்பாவிகளை வைத்து தான் அரசியலே பிழைத்துக் கொண்டிருக்கிறது...

அப்பாவிகளை வைத்து தான் எல்லாப் பித்தாலாட்டங்களிலும் ஈடுபட்டு ஆட்சியை நடத்திக் கொள்கிறார்கள்...

அப்பாவிகள்தான் மோசமான மனிதர்களுக்கும் ஓட்டுப் போட்டு நாட்டின் எஜமானர்களாக்கி விடுகிறார்கள்...

அறிவுடைய மனிதர்கள் குறைவு...

அவர்களின் வாக்குகள் குறைவு...

அவர்களின் வாக்குகள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கப் போதுமானதாக இல்லை...

ஆக,

அப்பாவியாக இருப்பதுதான் பெருங்குற்றம்...

மிஸ்டர் பொதுஜனத்திற்கு 

யார் நல்லது செய்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு

யார் காசை திருடித் தருகிறார்கள் என்று அறிந்து வைத்திருப்பது இல்லை...

நிலவின் ஒருபக்கம் மட்டுமே நமக்கு தெரிவது போல...

ஆட்சியாளர்களின் நல்ல முகத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் அப்பாவியாக இருப்பது பெருங்குற்றம்தான்...


அரசியல் பேசுவோம்; அரசியல் படுத்துவோம். 

வெறுப்பு

நெருப்பு விளக்கிலோ அடுப்பிலோ இருந்தால்தான் நல்லது. 

மற்ற இடங்களில் இருந்தால் அழிவு நிச்சயம். 

ஆனால் வெறுப்பு எங்கிருந்தாலும் அழிவு தான்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

வெள்ளி விழா அழைப்பிதழ்

 அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி 
சுந்தரராஜபுரம் 

2000-2001இல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர்களைக் கொண்டாடும்

வெள்ளி விழா அழைப்பிதழ் 

நாள்: .04.2026 நேரம்:காலை 9.00 மணி

இடம்: பள்ளிக் கலையரங்கம், சுந்தரராஜபுரம் 

வரவேற்புரை: திருமதி. முனைவர் K.ஆனந்த கனக ஜோதி, உதவிப் பேராசிரியர், திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம் 

தலைமை :

திரு. S. வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., தலைமை ஆசிரியர், அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் 

சிறப்பு விருந்தினர்கள் 

1) திருமதி. வயலட் அவர்கள், தலைமை ஆசிரியர் , அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளி, வலசை.

2) திருமதி. கலைச்செல்வி அவர்கள்,சமூக அறிவியல் ஆசிரியை (ஓய்வு)

3) திரு.முருகானந்தம் அவர்கள், விடுதிக் காப்பாளர், சுந்தரராஜபுரம்.

4) திருமதி.               அவர்கள், தலைமை ஆசிரியர் அரசு ஆதிந தொடக்கப்பள்ளி, சுந்தரராஜபுரம்.

சிறப்புரை & ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசும் மாணவர்கள் 

முன்னாள் மாணவர்கள் 

1.திரு.பெ.இலட்சுமணன்  

கணபதி எம்பிராய்டிங் உரிமையாளர்

2.திரு.து.இராஜேந்திர பிரசாத் B.E.(Civil Engineer)

கட்டடப் பொறியாளர்

3.திரு.மு.திலகராஜன் 

மத்திய தொழிலக பாதுகாப்பு படை

4.திரு.கணேஷ் குமார் B.E.(Civil Engineer)

கட்டடப் பொறியாளர் 

5.திரு.மா.மாடசாமி 

மகா பிராய்லர்ஸ் உரிமையாளர் 

நன்றியுரை:

திரு.தி.முத்துராஜ் Trains Manager, 

திருநெல்வேலி 

நிகழ்ச்சித் தொகுப்பாளர் 

திரு. வீ.மகேந்திரன் தமிழாசிரியர் 

GHSS சங்கரலிங்கபுரம்


தலைமை ஆசிரியர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவண் 

முன்னாள் மாணவர்கள் 

வரவேற்புரை வழங்குபவர் திரு மாரிமுத்து

எங்கள் கணித ஆசிரியர் திரு முருகானந்தம் அவர்களுக்கு வரவேற்புரை வழங்குபவர் திரு. மாரிமுத்து அவர்கள்...


"பாட்ஷா -ஒரு தடவ சொன்னா 

நூறு தடவை சொன்ன மாதிரி" 

என்ற ரஜினி ஸ்டைலோடு 

என்றும் பசுமை மாறாமல் 

எங்கள் நினைவில் நிற்பவரே!

அடிப்படைக் கணக்கை 

அக்கு அக்கா பிரித்து மேய்ந்தவரே!!

ஒரே கணக்கை ஒன்பது வழிமுறைகளில் 

போடக் கற்றுத் தந்த வித்தகரே!!!

குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் 

வித்தையை கற்றுத்தந்த வீரரே!!!

எப்போதும் இனிக்கிறதே உன் கணக்கு !

ஈடு இணை இல்லையே உமக்கு !

காட்டகத்தே நிமிர்ந்து நிற்கும் தேக்கு போல 

வள்ளல் கர்ணனின் கொடை போல 

தவமின்றி கிடைத்த வரமே 

எமது சூப்பர் ஸ்டார் 

கணித ஆசிரியர் திரு முருகானந்தம் விடுதி காப்பாளர் அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உம்மை 

வருக வருக என வரவேற்பதில் 

உள்ளம் மகிழ்கிறோம்.

வரவேற்புரை வழங்குபவர் திருமதி இராஜேஸ்வரி

சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி.L.இராஜேஸ்வரி DMLT., PCP., அவர்கள்

வெள்ளை உள்ளம் கொண்ட 

அன்புத்தாய் இவர்!!

நேசமும் நெருக்கமும் காட்டுவதில் 

அன்னை தெரேசாவுக்கு நிகர் இவர்!!

முகத்தில் புன்னகை தவழும் மழலை இவர் !!

மூட்டு வலியோடு முழுத் தேர்ச்சிக்காக 

முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர்!!!

முழுமையான அன்பைக் காட்டி,

எங்களை வசிகரித்த நிரந்தரக் காந்தம் இவர்!!!

கடலில் விளைந்த முத்து போல 

வயலில் விளைந்த நெல்மணி போல

மதிப்புமிகு செல்வம் நீங்கள்!!!

எங்களைச் சுடச்சுட ஒளிரும் பசுந்தங்கமாக

வெட்ட வெட்ட மின்னும் வைரமாக மாற்றிய 

பெருமைக்கு உரியவர் நீங்கள்!!!

எங்கள் உயிருக்கு உயிரானவர்!!!

சமூக அறிவியல் ஆசிரியை 

திருமதி. M.கலைச்செல்வி M.A., B.Ed., அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!!!

வரவேற்புரை வழங்குபவர் திருமதி மு.கடல்கனி

தமிழ் ஆசிரியை திருமதி வயலட் அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி. மு.கடல்கனி அவர்கள்

மணியை ஈன்றதால் மாமலையும்

முத்தை ஈன்றதால் பெருங்கடலும்

அகிலை ஈன்றதால் அடர்வனமும்

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும்

பெருமை அடைவது போல

உம்மைத் தமிழ் அன்னையாகப்

பெற்றதால் நாங்கள் பெருமை அடைகிறோம்!!!


அன்னைத் தமிழின் உள்ளம் மகிழ

அருந்தமிழ்ச் சான்றோர் அகம் மகிழ

தமிழைத் தவம் போல் நின்று கற்பித்தவரே!!!

புரியாத இலக்கணத்தை புரிய வைத்த 

இலக்கண வித்தகரே!!!

தமிழ்ப் பாலூட்டி வளர்த்த 

எம் அன்னையே!!!

அர்ச்சுனனின் வில்லைப் போலவும்

கர்ணனின் கவசம் போலவும்

கம்பனின் கவிநயம் போலவும்

வள்ளுவனின் வாக்கு போலவும்

எமக்கு அருள் வாய்த்த தாயே!!!

எம் உயிரே

எம் நினைவே

எம் சுகந்தமே

எம்மை வாழ்வித்த தங்கமே


திருமதி. வயலட் வலசை அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே,

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பேருவகை கொள்கிறோம்!!!

வெள்ளி விழா நிகழ்ச்சி நேர அட்டவணை

 அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி சுந்தரராஜபுரம் 

2000-2001-ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ-மாணவிகளும் கல்வியமுது ஊட்டிய ஆசிரியர்களும் சந்திக்கும் வெள்ளிவிழா 

இடம்:அரசு(ஆ.தி.ந)மேல்நிலைப்பள்ளி,சுந்தரராஜபுரம்                          நாள்: -05-2026

நேரம்: காலை 9.00-4.00 மணி

நிகழ்ச்சி நிரல் 

  1. முன்னாள் மாணவர்கள் வருகை-நேரம்: காலை 9 மணி
  2. ஆசிரியர்களை வரவேற்றல்-நேரம் :காலை 9.30 மணி
  3. குத்துவிளக்கு ஏற்றுதல் -நேரம்:காலை 9.40 மணி
  4. தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுதல்- நேரம்:காலை 9.50 மணி
  5. வரவேற்புரை -காலை 9.55 முதல் - 10.20 வரை( சிறப்பு விருந்தினர்கள் 5 பேருக்கு தலா 5 நிமிடங்கள் வீதம் 25 நிமிடங்கள்)
  6. ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தல் நேரம்: காலை 10.20 முதல் 10.25 வரை
  7. தலைமை உரை: தலைமை ஆசிரியர் -நேரம்: காலை 10.25 மணி முதல் 10.35 வரை
  8. ஆசிரியர்களுடன் வகுப்பு வாரியாக ஒளிப்படம் எடுத்தல் நேரம்: காலை 10.35 முதல் 10.45 வரை
  9. தேநீர் இடைவேளை நேரம்:காலை 10.45மணி முதல்-11.00மணி வரை
  10. சிறப்புரை நேரம்: காலை 11.00மணி முதல் 11.50 மணி வரை(முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிய நினைவலைகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துதல்)  (5 மாணவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் மொத்தம் 50 மணித்துளிகள்)
  11. ஆசிரியர்கள் ஏற்புரை-பிற்பகல் 11.50 மணி முதல்.- 12.10மணி வரை (திருமதி. வயலட், திருமதி. கலைச்செல்வி, திரு. முருகானந்தம் அவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் 30 நிமிடங்கள்)
  12. நினைவுப்பரிசு வழங்குதல் (தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்) நேரம்:நண்பகல் 12.10 முதல்.-12.30 வரை
  13. மதிய உணவு விருந்து- நேரம்: நண்பகல் 12.30 மணி முதல்.- 2.15 மணி வரை 
  14. மாணவர்கள் கலந்துரையாடல் நேரம்: 02.15 பி.ப.- 03.15 பி.ப.
  15. தேநீர் இடைவேளை நேரம்: பிற்பகல் 03.15 முதல்-3.25 வரை
  16. மாணவர்கள் விரும்பிய வண்ணம் ஒளிப்படம் எடுத்தல் நேரம்: பிற்பகல் 03.25 முதல் 04.00 வரை. 2000-2001 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்!. 

சனி, 7 பிப்ரவரி, 2026

மேன்மக்கள்

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளவாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

மாந்தர் இயல்பு

எதிர்வரும் துன்பங்களைக் கண்டு கலங்காதீர்


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றால் போகா இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து 

துஞ்சுவதே மாந்தர் இயல்பு

வாழ்க்கை

இவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்! 


வைததனை இன்சொலாக் கொள்வானும் 

நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் 

ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும் 

இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்


கைப்பு - கசப்பு

கட்டி-இனிப்பு

வாழ்க்கை

வைரக்கல் போன்ற வாழ்க்கை இது. பார்வையிழந்தவன் "கருங்கல்" என்று எண்ணித் தூக்கி எறிவது போல் எறிந்துவிடலாகாது.

சுதந்திரம்

இனிய காலை வணக்கம் 


சுயக் கட்டுப்பாடே உண்மையான சுதந்திரம்!

மற்றவை யெல்லாம் 

மாயை தரும் போதை.

தெளிவு

தெளிந்த வானம்

காட்சிக்குச் சிறந்தது

தெளிந்த நீர் 

பருக ஏற்றது

தெளிந்த மனம்

வாழ்க்கைக்கு நல்லது

நான் பெற்ற இன்பம்

இறையின்பம் வேண்ட 

வேண்ட கிட்டும்!!!


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 

நான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே

-திருமந்திரம்

துன்பமே இன்பம்


இனிய காலை வணக்கம் 

அஞ்சத் தகுந்த கடலே

அதிசயங்கள் நிறைந்தது!

ஆர்ப்பரிக்கும் அருவியே

அழகு நிறைந்தது!!

கடப்பதற்கரிய நெடுங்காடே

பசுஞ்சோலைகள் நிறைந்தது !!!

ஏறுதற்கரிய பெருமலையே 

எழிற்காட்சி தருவது!!!

எனில்,

துன்பத்தைக் கடந்த பின்னே

இன்பமே வந்தெய்தாதோ?

உழவு

இனிய காலை வணக்கம் 

அகல உழுவதை விட

ஆழ உழுவது நன்று

நிலத்திற்குப் பொருந்தும்

பொன் மொழி

மனத்திற்கும் பொருந்தும்.