செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

பகுத்தறிவு

எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல எல்லை தாண்டி நீண்டிருக்கிறது தமிழர்களுக்குத் தன்மான உணர்ச்சிகளும் பகுத்தறிவும். விளைவு, வெட்ட முடியாத அளவிற்கு சுயநலமும் இறுமாப்பும் சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் கிளைகளாய்ப் பரவியிருக்கின்றன.

தலைவன்

யார் தலைவன் தெரியுமா?

அதிகாரம் இல்லாதவர்களுக்கு அதிகாரத்தையும் 

உரிமைகள் இல்லாதவர்களுக்கு உரிமைகளையும் 

பெற்றுத் தருபவனே 

உண்மையான தலைவன். 

சிங்கம் சிங்கம்தான்

எத்தனை காலம் 

தந்திரம் செய்து 

பிழைத்து வந்தாலும்

நரியால் ஒருநாளும் 

சிங்கமாகிட முடியாது 

வியாழன், 12 பிப்ரவரி, 2026

மனைவி

அன்பே அன்பே 

அழகே ஒளியே

அமுதே நீயே

இன்ப ஊற்றே 

இளந் தென்றல் காற்றே 

இளமை விருந்தே

இசையின் உருவே

நான் வரமாய்ப் பெற்ற

வாழ்வே நீயே

உன்னை வருணிக்கவே

வார்த்தை இல்லையே


அன்பே அன்பே 

அழகே நீயே

வெகுளிப் பெண்ணே

வெள்ளை மனமே

கொள்கை கொண்ட

குழந்தைத் தனமே

என்னை வாழ்விக்கவே 

வந்த வாழ்க்கைத் துணையே


அன்பே அன்பே 

அழகே ஒளியே 

தங்க நிறமே

எந்தன் உயிரே 

தாரமாய் வந்தாய் 

தளிர்நடை பயின்றாய் 

தாயாய் மலர்ந்தாய்

உன் தாய்மை அன்பில்

உருகிப் போனேன்

உனக்கே உனக்கே

என்றும் வாழ்வேன் 


அன்பே அன்பே 

அழகே அமுதே

வரமே நீயே

உன்னைப் பெறவே

என் புண்ணியம் என்னவோ

உன் பாசத்தாலே 

நான் நெகிந்தே நெகிழ்ந்தே

உருகிப் போனேன் 

உன் அக்கறை கண்டு 

நான் அசந்து போனேன் 

உன் அழகைக் கண்டு 

நான் சொக்கிப் போனேன் 


அன்பே அன்பே 

அழகை ஒளியே

தங்கச் சிலையே

தாமரை இதழே

மல்லிகை மணம் நீ

தேனின் சுவை நீ

வானின் மழை நீ

மாலைத் தென்றல் நீ

திகட்டாத இன்பம் நீ

எந்தன் உயிரே நீ

எந்தன் உலகம் நீ

எந்தன் வாழ்வே நீ

எந்தன் வசந்தம் நீ

எந்தன் சுகமே நீ

எந்தன் சொர்க்கம் நீ

அன்பே அன்பே 

அழகே ஒளியே 

என்னை வாழ்விக்கவே 

வந்தவள் நீயே

அன்பே அன்பே 

அழகே ஒளியே

வெள்ளி விழா விழிப்புணர்வு பாடல்

நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


நல்லது கெட்டது அறிந்தவன் நீ

நாலு விவரம் தெரிந்தவன் நீ

நாற்பது வயதைக் கடந்தவன் நீ

நாசூக்காக சொல்லுறேன் கேட்டுக்க நீ


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


அழகான குடும்பம் உனக்கிருக்கு

பழகிய சமூகத்தில் மதிப்பிருக்கு

நீ செய்வ தெல்லாம் உன் குடும்பம் பார்த்திருக்கு

வேண்டாத வம்பிருந்தால் நீ விலக்கு


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


பொறுப்புகள் கடமைகள் நிறைந்தவன் நீ

வெறுப்புகள் இருந்தால் விலக்கிடு நீ

தாழ்வான எண்ணத்தைத் தவிர்த்திடு நீ

பள்ளிக்காலக் காதலை நீ

அழகான கனவென்று கடந்து வா நீ

அழகான கனவென்று கடந்து வா நீ 

தனிமரம் இல்லை நீ

தலைமுறை நீயே

உன் பொறுப்பை உணர்ந்து செயல்படு நீ


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 


உணர்ச்சி நெருப்புக்கு உருவம் கொடாதே 

கடந்த காதலைக் காயப்படுத்தாதே 

அழகான வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே

அர்த்தமுள்ள வாழ்வைக் கெடுத்துவிடாதே

நல்லது சொல்லுறவன் உன் நண்பன் 

நல்லபடி கேட்டுக்கிட்டா நீயே என் நண்பன் 


நண்பனே நண்பியே 

உன்னையே நம்பியே 

நண்பனே நண்பியே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே 

இந்த வெள்ளிவிழா ஏற்பாடே

அதிரத்னா

அதி அதி அதி அதிரத்னா 

ஒளி ஒளி ஒளி ஒளிரத்னா 

ரத்தினம் நீ

மாணிக்கம் நீ

வைரம் நீ

உன் அங்கமெல்லாம் தங்கம்

நீ இருக்குமிடமெல்லாம் மகிழ்ச்சி தங்கும்

நீ வளர்ந்து வரும் சிங்கம்

உன் பெருமை விளங்கும் எங்கும்

நீ இமயம் தீண்டி உயர வேண்டும் 

நீ வானம் தாண்டி பறக்க வேண்டும் 

உனக்கே தனி உலகம் படைக்க வேண்டும் 

தரணியை நீயே காக்க வேண்டும் 

அதி அதி அதி அதிரத்தினம்

ஒளி ஒளி ஒளி ஒளிரத்தினம்

மனைவி

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே 

உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே 

உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே 

உன் அன்பை காட்டி நீ

என்னைத் தின்றவளே 


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன் அக்கறை என்னையே 

என்னவோ பண்ணுதே 

என்னவோ பண்ணுதே 

உயிரையே தின்னுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ 

என் உள்ளம் தடுமாறுதே 

உன் அளவுக்கு என்னால் 

உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே 

குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்

உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்

உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன் 

உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன்னைத் துணையாகப் பெறவே நான்

என்ன தவம் செய்தேனோ

உன் அன்பைப் பெறவே நான் 

என்ன கொடுத்து வைத்தேனோ


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


வண்ணம் தீட்டாத ஓவியமே

இன்பம் கூட்டும் அமுதக் கலசமே

தேன்மழைச் சாரலே 

பூமணத் தென்றலே

அழகொளிரும் அலங்காரத் தேரே

உன்னை துணையாகப் பெறவே

என்ன தவம் செய்தேனோ 

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே

தமிழே

அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உணர்ச்சித் தீப்பிழம்பே

ஊக்கம்தரும் நற்றமிழே

எழில்மிகுந்த இயற்றமிழே

ஏற்றமுள்ள நாடகமே


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உன் உதிரத்திலே உதித்தேன்

உன் மடியினிலே தவழ்ந்தேன்

உன் அருகினிலே நடந்தேன்

உன் ஆற்றல்தனை வியந்தேன் 

உன் அரவணைப்பில் வளர்ந்தேன்

நீ சுவை குன்றாத தேன்

உன்னால் தானே தலைநிமிர்ந்தேனே

தாயே தமிழே உன்னை மறவேனே


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


கட்டிக் கரும்பே நீ

கதிர் தரும் ஒளியே நீ

கன்னித் தமிழே நீ

கணினித் தமிழே நீ தானே 

சங்கத் தமிழே நீ

தங்கத் தமிழே நீ

நீதி நூலாய் நிமிர்ந்தாய் நீ

நெற்றிக் கண்களைத் திறந்தாய் நீ

பக்தித் தமிழாய் நீ

பாகுபாடு களைந்தாய் நீ


காப்பியப் பொருள்கள் தந்தாய் நீ

கவிச் சுவை இன்பம் தந்தாய் நீ

தனித்தனிப் பாடல்கள் தந்தாய் நீ 

தனித்தன்மை கொண்டு வளர்ந்தாய் நீ


புதுப்புது யாப்பு தந்தாய் நீ

புதுப்புது இலக்கியங்கள் தந்தாய் நீ

புதுப்பொலிவே நீ புத்துணர்வே நீ

கடலைத் தாண்டி வானம் தீண்டி வளர்ந்தாய் நீயே 


உலகினில் மூத்த முத்தமிழே

உலகம் முழுவதும் உன் ஆட்சியே

உள்ளம் மகிழும் அமுதக் காட்சியே

உயிரில் கலந்த அருள்மிகு மாட்சியே 


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே


உன் பெருமை கண்டு வியக்கிறேன்

உன் அருமை கண்டு மயங்குகிறேன்

உன் ஆற்றல் கண்டு பிரமிக்கிறேன்

உன் காலடியில் என்னைச் சமர்ப்பிக்கிறேன்


அன்னை மொழியே

அழகான செந்தமிழே

இன்சுவைத் தீந்தமிழே

ஈடில்லா முத்தமிழே

சுயபரிசோதனை

இதுவரை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கும் எதுவாக இருந்தாலும் அவற்றை சுயபரிசோதனை மற்றும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். எல்லா நற்பண்புகளும் ஒழுக்கமும் பகுத்தறிவும் சமத்துவ சகோதரத்துவ சிந்தனைகளும் இவற்றிலிருந்தே பிறக்கின்றன.

காலம்

நல்ல படிப்பினையைத் (அனுபவத்தை)

தந்த இறந்த காலம் 

உண்மையில் இறந்த காலமல்ல... 

அதுவும் நம் எதிர்காலமே...

அரசியல்

தீண்டாமை ஒரு பெருங்குற்றம் என்பவர்கள் 

அறியாமையை ஒரு பெருங்குற்றமாகக் கருதுவதில்லை...

உண்மையில், 

அறியாமையே தீண்டாமைக்கு மூலகாரணம்...

அறியாமல் இருப்போரை அப்பாவி என்கிறோம்...

அப்பாவியாக இருப்பதால்தான் ஏமாற்றப்படுகிறார்கள்...

ஆகையால்,

அப்பாவியாக இருப்பதே பெருங்குற்றம்...

சமூக விலங்காகிய மனிதன் 

எனக்கென்ன என்று இருப்பது பெருங்குற்றம்தான்...

இப்படிப் பட்ட அப்பாவிகளை வைத்து தான் அரசியலே பிழைத்துக் கொண்டிருக்கிறது...

அப்பாவிகளை வைத்து தான் எல்லாப் பித்தாலாட்டங்களிலும் ஈடுபட்டு ஆட்சியை நடத்திக் கொள்கிறார்கள்...

அப்பாவிகள்தான் மோசமான மனிதர்களுக்கும் ஓட்டுப் போட்டு நாட்டின் எஜமானர்களாக்கி விடுகிறார்கள்...

அறிவுடைய மனிதர்கள் குறைவு...

அவர்களின் வாக்குகள் குறைவு...

அவர்களின் வாக்குகள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கப் போதுமானதாக இல்லை...

ஆக,

அப்பாவியாக இருப்பதுதான் பெருங்குற்றம்...

மிஸ்டர் பொதுஜனத்திற்கு 

யார் நல்லது செய்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு

யார் காசை திருடித் தருகிறார்கள் என்று அறிந்து வைத்திருப்பது இல்லை...

நிலவின் ஒருபக்கம் மட்டுமே நமக்கு தெரிவது போல...

ஆட்சியாளர்களின் நல்ல முகத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் அப்பாவியாக இருப்பது பெருங்குற்றம்தான்...


அரசியல் பேசுவோம்; அரசியல் படுத்துவோம். 

வெறுப்பு

நெருப்பு விளக்கிலோ அடுப்பிலோ இருந்தால்தான் நல்லது. 

மற்ற இடங்களில் இருந்தால் அழிவு நிச்சயம். 

ஆனால் வெறுப்பு எங்கிருந்தாலும் அழிவு தான்.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

வெள்ளி விழா அழைப்பிதழ்

 அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி 
சுந்தரராஜபுரம் 

2000-2001இல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆசிரியர்களைக் கொண்டாடும்

வெள்ளி விழா அழைப்பிதழ் 

நாள்: .04.2026 நேரம்:காலை 9.00 மணி

இடம்: பள்ளிக் கலையரங்கம், சுந்தரராஜபுரம் 

வரவேற்புரை: திருமதி. முனைவர் K.ஆனந்த கனக ஜோதி, உதவிப் பேராசிரியர், திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, விருத்தாசலம் 

தலைமை :

திரு. S. வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., தலைமை ஆசிரியர், அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் 

சிறப்பு விருந்தினர்கள் 

1) திருமதி. வயலட் அவர்கள், தலைமை ஆசிரியர் , அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளி, வலசை.

2) திருமதி. கலைச்செல்வி அவர்கள்,சமூக அறிவியல் ஆசிரியை (ஓய்வு)

3) திரு.முருகானந்தம் அவர்கள், விடுதிக் காப்பாளர், சுந்தரராஜபுரம்.

4) திருமதி.               அவர்கள், தலைமை ஆசிரியர் அரசு ஆதிந தொடக்கப்பள்ளி, சுந்தரராஜபுரம்.

சிறப்புரை & ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசும் மாணவர்கள் 

முன்னாள் மாணவர்கள் 

1.திரு.பெ.இலட்சுமணன்  

கணபதி எம்பிராய்டிங் உரிமையாளர்

2.திரு.து.இராஜேந்திர பிரசாத் B.E.(Civil Engineer)

கட்டடப் பொறியாளர்

3.திரு.மு.திலகராஜன் 

மத்திய தொழிலக பாதுகாப்பு படை

4.திரு.கணேஷ் குமார் B.E.(Civil Engineer)

கட்டடப் பொறியாளர் 

5.திரு.மா.மாடசாமி 

மகா பிராய்லர்ஸ் உரிமையாளர் 

நன்றியுரை:

திரு.தி.முத்துராஜ் Trains Manager, 

திருநெல்வேலி 

நிகழ்ச்சித் தொகுப்பாளர் 

திரு. வீ.மகேந்திரன் தமிழாசிரியர் 

GHSS சங்கரலிங்கபுரம்


தலைமை ஆசிரியர், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இவண் 

முன்னாள் மாணவர்கள் 

வரவேற்புரை வழங்குபவர் திரு மாரிமுத்து

எங்கள் கணித ஆசிரியர் திரு முருகானந்தம் அவர்களுக்கு வரவேற்புரை வழங்குபவர் திரு. மாரிமுத்து அவர்கள்...


"பாட்ஷா -ஒரு தடவ சொன்னா 

நூறு தடவை சொன்ன மாதிரி" 

என்ற ரஜினி ஸ்டைலோடு 

என்றும் பசுமை மாறாமல் 

எங்கள் நினைவில் நிற்பவரே!

அடிப்படைக் கணக்கை 

அக்கு அக்கா பிரித்து மேய்ந்தவரே!!

ஒரே கணக்கை ஒன்பது வழிமுறைகளில் 

போடக் கற்றுத் தந்த வித்தகரே!!!

குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் 

வித்தையை கற்றுத்தந்த வீரரே!!!

எப்போதும் இனிக்கிறதே உன் கணக்கு !

ஈடு இணை இல்லையே உமக்கு !

காட்டகத்தே நிமிர்ந்து நிற்கும் தேக்கு போல 

வள்ளல் கர்ணனின் கொடை போல 

தவமின்றி கிடைத்த வரமே 

எமது சூப்பர் ஸ்டார் 

கணித ஆசிரியர் திரு முருகானந்தம் விடுதி காப்பாளர் அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உம்மை 

வருக வருக என வரவேற்பதில் 

உள்ளம் மகிழ்கிறோம்.

வரவேற்புரை வழங்குபவர் திருமதி இராஜேஸ்வரி

சமூக அறிவியல் ஆசிரியை திருமதி. கலைச்செல்வி அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி.L.இராஜேஸ்வரி அவர்கள்


ஆனைமுகனின் தீவிர பக்தை இவர்!

முகத்தில் புன்னகை நிறைந்த மழலை இவர் !!

மூட்டு வலியோடு முழுத் தேர்ச்சிக்காக 

முழுமையாகத் தன்னை அர்ப்பணித்தவர்!!!

முழுமையான அன்பைக் காட்டி,

எங்களை வசிகரித்த நிரந்தரக் காந்தம் இவர்!!!


கடலில் விளைந்த முத்து போல 

வயலில் விளைந்த நெல்மணி போல

மதிப்புமிகு செல்வம் நீங்கள்!!!

எங்களைச் சுடச்சுட ஒளிரும் பசுந்தங்கமாக

வெட்ட வெட்ட மின்னும் வைரமாக மாற்றிய 

பெருமைக்கு உரியவர்

எங்கள் உயிருக்கு உயிரானவர்!!!

சமூக அறிவியல் ஆசிரியை 

திருமதி. கலைச்செல்வி அவர்களே 

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பெருமகிழ்ச்சி அடைகிறோம்.!!!


வரவேற்புரை வழங்குபவர் திருமதி மு.கடல்கனி

தமிழ் ஆசிரியை திருமதி வயலட் அவர்களுக்கு வரவேற்புரை - வழங்குபவர் திருமதி. மு.கடல்கனி அவர்கள்

மணியை ஈன்றதால் மாமலையும்

முத்தை ஈன்றதால் பெருங்கடலும்

அகிலை ஈன்றதால் அடர்வனமும்

வள்ளுவனை ஈன்றதால் தமிழ்நாடும்

பெருமை அடைவது போல

உம்மைத் தமிழ் அன்னையாகப்

பெற்றதால் நாங்கள் பெருமை அடைகிறோம்!!!


அன்னைத் தமிழின் உள்ளம் மகிழ

அருந்தமிழ்ச் சான்றோர் அகம் மகிழ

தமிழைத் தவம் போல் நின்று கற்பித்தவரே!!!

புரியாத இலக்கணத்தை புரிய வைத்த 

இலக்கண வித்தகரே!!!

தமிழ்ப் பாலூட்டி வளர்த்த 

எம் அன்னையே!!!

அர்ச்சுனனின் வில்லைப் போலவும்

கர்ணனின் கவசம் போலவும்

கம்பனின் கவிநயம் போலவும்

வள்ளுவனின் வாக்கு போலவும்

எமக்கு அருள் வாய்த்த தாயே!!!

எம் உயிரே

எம் நினைவே

எம் சுகந்தமே

எம்மை வாழ்வித்த தங்கமே


திருமதி. வயலட் வலசை அரசு ஆதிந உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களே,

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உம்மை வருக வருக என வரவேற்பதில் 

பேருவகை கொள்கிறோம்!!!

வெள்ளி விழா நிகழ்ச்சி நேர அட்டவணை

 அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளி சுந்தரராஜபுரம் 

2000-2001-ல் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ-மாணவிகளும் கல்வியமுது ஊட்டிய ஆசிரியர்களும் சந்திக்கும் வெள்ளிவிழா 

இடம்:அரசு(ஆ.தி.ந)மேல்நிலைப்பள்ளி,சுந்தரராஜபுரம்                          நாள்: -05-2026

நேரம்: காலை 9.00-4.00 மணி

நிகழ்ச்சி நிரல் 

  1. முன்னாள் மாணவர்கள் வருகை-நேரம்: காலை 9 மணி
  2. ஆசிரியர்களை வரவேற்றல்-நேரம் :காலை 9.30 மணி
  3. குத்துவிளக்கு ஏற்றுதல் -நேரம்:காலை 9.40 மணி
  4. தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுதல்- நேரம்:காலை 9.50 மணி
  5. வரவேற்புரை -காலை 9.55 முதல் - 10.20 வரை( சிறப்பு விருந்தினர்கள் 5 பேருக்கு தலா 5 நிமிடங்கள் வீதம் 25 நிமிடங்கள்)
  6. ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தல் நேரம்: காலை 10.20 முதல் 10.25 வரை
  7. தலைமை உரை: தலைமை ஆசிரியர் -நேரம்: காலை 10.25 மணி முதல் 10.35 வரை
  8. ஆசிரியர்களுடன் வகுப்பு வாரியாக ஒளிப்படம் எடுத்தல் நேரம்: காலை 10.35 முதல் 10.45 வரை
  9. தேநீர் இடைவேளை நேரம்:காலை 10.45மணி முதல்-11.00மணி வரை
  10. சிறப்புரை நேரம்: காலை 11.00மணி முதல் 11.50 மணி வரை(முன்னாள் மாணவ-மாணவிகள் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களைப் பற்றிய நினைவலைகளை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துதல்)  (5 மாணவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் மொத்தம் 50 மணித்துளிகள்)
  11. ஆசிரியர்கள் ஏற்புரை-பிற்பகல் 11.50 மணி முதல்.- 12.10மணி வரை (திருமதி. வயலட், திருமதி. கலைச்செல்வி, திரு. முருகானந்தம் அவர்களுக்கு தலா 10 நிமிடங்கள் வீதம் 30 நிமிடங்கள்)
  12. நினைவுப்பரிசு வழங்குதல் (தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்) நேரம்:நண்பகல் 12.10 முதல்.-12.30 வரை
  13. மதிய உணவு விருந்து- நேரம்: நண்பகல் 12.30 மணி முதல்.- 2.15 மணி வரை 
  14. மாணவர்கள் கலந்துரையாடல் நேரம்: 02.15 பி.ப.- 03.15 பி.ப.
  15. தேநீர் இடைவேளை நேரம்: பிற்பகல் 03.15 முதல்-3.25 வரை
  16. மாணவர்கள் விரும்பிய வண்ணம் ஒளிப்படம் எடுத்தல் நேரம்: பிற்பகல் 03.25 முதல் 04.00 வரை. 2000-2001 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்!. 

சனி, 7 பிப்ரவரி, 2026

மேன்மக்கள்

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளவாய்

நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.

மாந்தர் இயல்பு

எதிர்வரும் துன்பங்களைக் கண்டு கலங்காதீர்


வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றால் போகா இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து 

துஞ்சுவதே மாந்தர் இயல்பு

வாழ்க்கை

இவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்! 


வைததனை இன்சொலாக் கொள்வானும் 

நெய்பெய்த சோறென்று கூழை மதிப்பானும் 

ஊறிய கைப்பதனைக் கட்டி என்று உண்பானும் 

இம்மூவர் மெய்ப்பொருள் கண்டு வாழ்வார்


கைப்பு - கசப்பு

கட்டி-இனிப்பு

வாழ்க்கை

வைரக்கல் போன்ற வாழ்க்கை இது. பார்வையிழந்தவன் "கருங்கல்" என்று எண்ணித் தூக்கி எறிவது போல் எறிந்துவிடலாகாது.

சுதந்திரம்

இனிய காலை வணக்கம் 


சுயக் கட்டுப்பாடே உண்மையான சுதந்திரம்!

மற்றவை யெல்லாம் 

மாயை தரும் போதை.

தெளிவு

தெளிந்த வானம்

காட்சிக்குச் சிறந்தது

தெளிந்த நீர் 

பருக ஏற்றது

தெளிந்த மனம்

வாழ்க்கைக்கு நல்லது

நான் பெற்ற இன்பம்

இறையின்பம் வேண்ட 

வேண்ட கிட்டும்!!!


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் 

நான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் 

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் 

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே

-திருமந்திரம்

துன்பமே இன்பம்


இனிய காலை வணக்கம் 

அஞ்சத் தகுந்த கடலே

அதிசயங்கள் நிறைந்தது!

ஆர்ப்பரிக்கும் அருவியே

அழகு நிறைந்தது!!

கடப்பதற்கரிய நெடுங்காடே

பசுஞ்சோலைகள் நிறைந்தது !!!

ஏறுதற்கரிய பெருமலையே 

எழிற்காட்சி தருவது!!!

எனில்,

துன்பத்தைக் கடந்த பின்னே

இன்பமே வந்தெய்தாதோ?

உழவு

இனிய காலை வணக்கம் 

அகல உழுவதை விட

ஆழ உழுவது நன்று

நிலத்திற்குப் பொருந்தும்

பொன் மொழி

மனத்திற்கும் பொருந்தும்.



உறுதி

இனிய காலை வணக்கம் 

மழை பொய்த்த காலத்தில் 

நெற்பயிர் தன்னை

வரகாக மாற்றிக் கொள்ளாது.

மழை மிகுந்த காலத்தில்

வரகு தன்னை

நெற்பயிராக மாற்றிக் கொள்ளாது.

அதுபோல, 

கேடு வந்து உற்ற போதும் 

சான்றோர் தீயோர் ஆகார்.

வாழ்வு வந்து உற்ற போதும் 

தீயோர் சான்றோர் ஆகார்.

உளவியல்

இனிய காலை வணக்கம் 

சூழலியல் உளவியலையும்

உளவியல் நமது வாழ்வியலையும்

நிர்ணயிப்பதால்

சூழலியலை மாற்றுங்கள்!!

அல்லது அதற்கு ஏற்ப

உங்கள் உளவியலை மாற்றுங்கள்!!!

வாழ்க்கை மாறும்!

வாழ்வு மலரும்.!!

தன்னம்பிக்கை

பிறர் ரசிக்கவில்லை என்பதற்காக

மலர்கள் வாடுவதில்லை

பிறர் வரவேற்கவில்லை என்பதற்காக

கதிரவன் இருள்வதில்லை 

பிறர் தூக்கி விடவில்லை என்பதற்காக 

அலைகள் எழாமலில்லை

தன்னை நம்பி

தன்னம்பிக்கை கொண்டு 

மதிப்பை மரியாதையை

பாராட்டை எதிர்பாராமல்

எதிர்நடை போடு


தன்னம்பிக்கை

இனிய காலை வணக்கம் 

சிறகுகளை நம்பி

பறவை உயரப் பறக்கிறது 

துடுப்புக்களை நம்பி

மீன் ஆழ நீந்துகிறது 

கால்களை நம்பி

கானில் மான் ஓடி மறைகிறது 

அதைப் போல 

உன்னை நம்பு

உண்மையை நம்பு

உன் உலகம் 

உன் ஆளுகைக்குள் வரும் 

வாழ்க்கை

இனிய காலை வணக்கம் 

வாழ்க்கை மிகவும் எளிதானது. 

மனிதன் தன் ஆசைகளை அதிகரித்து

வாழ்க்கையைச் சிக்கலாக்குகிறான்.

ஒரு கட்டத்தில் வாழ்வின் நோக்கத்தை மறந்து 

வாழும் முறையைக் கைவிட்டு

அடர்வனத்தில் சிக்கித் 

தனித்து துயரும் பேதைபோல் 

கலங்குவான்.

தேவைகளைச் சுருக்கிச் 

சிக்கல்களைக் குறைத்துக் கொள்.

எளிய வாழ்வே இன்பம் தரும்!

எளிய வாழ்வே இறைமை தரும்!!

அரசியல்

நடிகர் விஜய்க்கு எம்ஜிஆர் போல திரைக்கவர்ச்சி இருக்கு. லஞ்சம் ஊழலால் இருபெருந்திராவிடக் கட்சிகளாலும் எவ்வித நன்மையும் பெறாத, ஏழை எளிய, புறக்கணிக்கப்பட்ட, சோர்ந்துபோன, விளிம்புநிலை மக்கள் தனக்கொரு நல்லகாலம் வரவேண்டும் என்பதையும் தாண்டி, நாடும் நாட்டு மக்களும் நல்லா இருக்கணும்னு சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தான்மட்டும் எப்படியாவது நல்லா இருக்கணும்னு நினைக்காதவர்கள். அதனால்தான் யாரையும் அண்டிப் பிழைக்காமல், எந்தக் கட்சிப் பிரதிநிதியிடமும் உதவி கேட்டு நில்லாமல் தன்மானத்தோடு ஏழைப் பிழைப்பு நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட பொதுமக்களின் கண்களுக்கு நடிகர் விஜய் தலைவராகத் தெரிகிறார். இது அரிதான நிகழ்வு. இதற்கு ஏற்றாற்போல், பொதுமக்களிடம் சென்று நம்பிக்கைகளைப் பெற வேண்டிய அரசியல் கட்சிகள், நடிகர் விஜய்யிடம் சென்று விமர்சித்துக் கொண்டு இருக்கின்றன. பொதுமக்களுக்குப் பகுத்தறிவை விட இறை நம்பிக்கை அதிகம்; அறிவை விட நம்பிக்கை அதிகம். 

சுயநலத்தைவிட பொதுநலம் அதிகம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து!

வாழ்க்கை

இனிய காலை வணக்கம் 

வாழ்க்கை 

சாலைப் பயணம் போன்றது

மேடும் உண்டு 

சரிவும் உண்டு 

அடர்வனமும் உண்டு 

வெட்ட வெளியும் உண்டு 

பாலையும் உண்டு 

பசுஞ்சோலையும் உண்டு 

சுடும் வெயிலிலும் 

பெருமழையிலும் 

கடுங்குளிரிலும் 

தென்றல்காற்றிலும் 

கடுங்காற்றிலும் ஊடறுக்கும் 

சாலைவழித் தடம்போல 

வாழும் வாழ்க்கையில் 

தடம் பதிப்போம்!

களை

களை பறித்த பிறகுதான் 

தோட்டத்திற்குக் களையே (அழகு)

வருகிறது. 

பொறாமை பேராசை

பகை சினம் இவற்றை 

விலக்கிய பின்புதான் 

மனம் அமைதி எய்துகிறது.

முகம் பொலிவாகிறது.

அனுபவம்

கடந்து போன வாய்ப்பு

எதிர்வரும் வாய்ப்பைத்

தவறாமல் பற்றுவதற்கான

கருவி. 

அனுபவம் தந்த பாடத்தை

மறவாமல் இருப்பதே

வெற்றி(க்) காண(ன) வழி!!!

பற்றுறுதி

ஒன்று பிடித்து விட்டால்,

ஒன்றைப் படித்து விடலாம்!

ஒன்றைப் படித்து விட்டால்

ஒன்று பிடித்துப் போகும்!! 

ஒன்றைப் பிடித்துப்போகும் அளவுக்குப்

படித்துச் சுவைக்க வேண்டும்!!! 

பிடிக்காத ஒன்றும் 

படிக்கப் படிக்கப் பிடித்துப் போகும் !!!

படிப்பிலே சுவையுண்டு!

படிப்பவர்க்கே அது சுவைக்கும்.!

அது தனி உலகம் !!

ஏழைக்கும் அது கிட்டும் !!!

எவருக்கும் அதுதரும் சொர்க்கம்.!!!

பகுத்தறிவு

அறிவுக்குப் புலப்படாத

அம்சங்களை, 

அந்தணர் திணித்த வழிமுறைகளை,

அப்படியே நம்பித் தொலைக்காதே-மனமே!

உய்த்துணர மெய் உண்டு.

உணர்வாலே, உள்ளுணர்வாலே, 

உளப்பகுப்பாலே உய்த்துணரத் தலைப்படுவாய்!!

மூடநம்பிக்கை உன்னை முடமாக்கும்!

முடவனே நீ ஆனாலும் ,

நல்லதை மட்டுமே நீ எண்ணினால்,

உன் முடமும் உனக்குத் துணையாகும்!!

கடந்த கால கவலைகளைத் 

தூக்கித் திரியாதே?

நீ கோவேறு கழுதையில்லை...

வெற்றித் தடம் பதிக்கும் குதிரை,

வீரனை மட்டுமே சுமக்கும்!!!

நல்லதை மட்டுமே நினைக்கும்!!!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தம் புதிய ஆண்டு இது...

புதுமைகள் நிறைந்த ஆண்டு இது...

புதையல்கள் நிறைய புதைந்திருக்கு...

பொக்கிஷத்தை அள்ளிக் கொள்ள,

புதிய புதிய முயற்சிகள் வேண்டும் ...

புத்தம் புதிய வழிகள் வேண்டும் ...

புதிய புதிய நம்பிக்கை வேண்டும் ...

புதிய புதிய சிந்தனை வேண்டும்... 

புதிய நல்ல மனம் வேண்டும் ...

கண்டதையும் கொட்டி வைக்க, 

மனம் ஒன்றும் குப்பைத்தொட்டி அல்ல...

காற்றைக்கூட அளவுதாண்டி 

ஊதிவிட்டால் உடைந்து விடும்! 

மன அழுத்தம், மனக்கவலை, 

மனச்சோர்வு, மனப்பிரம்மை கொள்ளாமல்,

மன மகிழ்ச்சி, மன நிறைவு, 

மன வலிமை, மன வளத்தை வளர்த்து

மனித வாழ்வின் அத்துணை 

அம்சங்களையும் அனுபவித்து வாழ,

புத்தாண்டு காத்திருக்கு...

எதிர்வரும் காலம் முழுதும் உங்களுக்கு!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!

விந்தையான உலகம்

விந்தையான உலகம் -இங்கு!

வேடிக்கையான மனிதர் கூட்டம்!!

பண்டுதொட்ட உயர் பண்பாட்டுக்கே 

இங்கு பழமை என்ற அவமானம்!!!

நேர்மைக்கு இங்கு 

நல்ல நேரமில்லை!!!

உண்மைக்கு இங்கு 

உற்ற துணையில்லை!!!

எளிமை இங்கு நகைக்கப்படுகிறது!!!

ஊக்கம் இங்கு ஒதுக்கப்படுகிறது!!!

ஒழுக்கம் இங்கு வெறுக்கப்படுகிறது!!!

நன்மை இங்கு நசுக்கப்படுகிறதுகிறது!!!

சான்றோர் இங்கு சிதைக்கப்படுகிறதுகிறது!!!

சரித்திரம் இங்கு கிழிக்கப்படுகிறது!!!

அறிவு இங்கு அழிவுப் பாதையில்...

அன்பு இங்கு நடிகர் வேடத்தில்...

இன்பம் இங்கு 

கானல்நீர் தோற்றத்தில்...

மனக் கவலைகள் கடல்போல் பொங்குகிறது

இந்த நிலை மாற வேண்டும் 

எழில் மிகு பண்புகள் வேண்டும் 

ஏற்றம் மிகு வாழ்வு வேண்டும் 

நேர்மை மிக்க உலகம் 

நிதானித்துப் பிறக்க வேண்டும் 



புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டின் முதல் நாள் இன்று 

முதல் அடி

நிதானமாக

கம்பீரமாக 

நம்பிக்கையுடன்

சிறுசிறு இலக்குகளுடன்

சிறு புன்னகையுடன் 

தொடர்ச்சியாக

அயர்ச்சி இன்றி

ஆரவாரமின்றி 

வலுவாக 

முன்னேறிச் செல்வோம்!!!

திட்டமிடு!!!

தெளிந்துசெய் !!!

துணிந்துசெய் !!!

தொடர்ந்துசெய் !!!

புதிய உலகம் 

உனக்காகவே உதயம்!!!

வாழ்த்தும் என் 

அன்பு இதயம்!!!

இனிய புத்தாண்

டு 

வாழ்த்துக்கள்!!!

ஒப்பீடு

மற்றொருவரோடு ஒப்பிட்டுப் பார்த்து உயரத்தைக் கூறாதீர். அது உண்மையான உயரம் கிடையாது. நேற்றோடு ஒப்பிடுங்கள். நேற்று உங்களுடைய முயற்சி, பயிற்சி, முன்னேற்றம், தன்னம்பிக்கை ஆகியவற்றோடு ஒப்பிட்டால் இன்று உங்கள் உயரத்தைக் கணக்கிடலாம். இப்படி ஒப்பீடு செய்வதால் பொறாமை, கவலை, பதற்றம் ஏற்படாது. தன்னம்பிக்கை தானாக அதிகரிக்கும். வளர்ச்சி தானாக உண்டாகும்.

தேர்தல்

உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் நம்பிக்கை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் நாம் பெரும்பாலும் முட்டாள்தனமான முடிகளையே எடுக்கிறோம். அது தேர்தல் நாளில் நம் சந்ததிகளின் வாழ்வில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை நம்மில் பலரும் உணரவில்லை. இது நாம்பெற்ற சாபம்!!! நம்மை நாமே அடிமை சாசனமாக ஒப்படைத்துவிட்டு ஆண்டாண்டு காலமாக கூப்பாடு போடுவதில், என்ன நியாயம் இருக்கிறது? ஊழலை விரும்பாத மக்களால், ஊழல்வாதிகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? நெல்மணியை விளைவிப்பவன் பிச்சைப்பாத்திரம் ஏந்தி நிற்பது எப்படி புத்திசாலித்தனமான இருக்க முடியும்?

எதிரி

எப்போதும் நியாயமாக

நடந்து கொள்வது

என்று முடிவெடுத்த பின்பு

எதிரிகளை நேருக்கு நேர் 

சந்தித்துதான் ஆக வேண்டும்.

இதுதான் வாழ்க்கையின் பொருள்.

சோதனை

தாங்க முடியாத 

சோதனைகளே 

ஒருவனை 

வலிமையானவனாக 

மாற்றும் 

அஞ்சாமை

அச்சம் ஒருவனின் 

அழிவுக்கான நெருப்பு. 

அஞ்சாமை ஒருவனின் 

வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் 

வழிசெய்யும் திறவுகோல். 

அச்சம் உள்ள விலங்குகள் 

நிச்சயம் வேட்டையாடப்பட்டே தீரும். 

அஞ்சாத விலங்குகள் 

நிச்சயம் வேட்டையாடியே வாழும். 

நாம் இரையா? 

நமக்கு இரையா? 

என்பதை நாம் கொண்ட 

அச்சமே தீர்மானிக்கும்!!!

அஞ்சாத நெஞ்சத்தோடு 

திமிறி நிற்போம்!!!

திணிப்பு

ஒருவன் தன்னுடைய 

விருப்பு வெறுப்புகளை 

தன்னை நம்பி உள்ள 

தன் குடும்ப உறுப்பினர்களிடம் 

திணிப்பதும் 

ஒருவகையான வன்முறையே!!! 

தன்னைச் சுற்றி உள்ள 

நபர்களைவிட 

தன்னைத் தானே 

பலம்வாய்ந்த மனிதன் 

என்று எண்ணும்போது 

தன்னுடைய ஈகோவோடு 

தன்னுடைய அசுர குணங்களும் 

இயல்பாகவே வளர்கின்றன. 

தன்னைப் போலவே 

பிறரையும் நேசிப்போம். 

ஒவ்வொருவருக்கும் 

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் 

இருக்கும் என்பதை உணர்ந்து 

அவற்றில் நம் விருப்பு -

வெறுப்புகளைத் திணிக்காமல் 

இருப்பதே இறைக்குணம்.

வாழ்க்கை

கனவுகளும் லட்சியங்களும் நடைமுறை உலகிற்குப் புறம்பாக இருந்தால் ஏமாற்றங்களும் தோல்விகளுமே பரிசாகக் கிட்டும். வானவில்லை இன்னும் வளைத்து என் வீட்டுக்குள் கொண்டு வருவேன் என்பவனின் கனவு எப்படி ஈடேறும்? இல்லாத ஒன்றைப் பிடித்து ஏங்குவதை விடுத்து எதார்த்த உலகில் உலகானுபவங்களை ஏற்றுக்கொண்டு மனமுறிவின்றி வாழ்வதே வாழ்க்கை. 

மகிழ்ச்சி

எவருக்கும் கெடுதல் செய்யாமல் நேர்மையான வாழ்பவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை யாராலும் பறிக்க முடியாது. 

அனுபவம்

அதிக வலிகளை 

அனுபவித்தவரிடம் 

நிதானமும் பொறுமையும் 

விட்டுக்கொடுத்தலும் 

நிச்சயம் இருக்கும். 

நீ நான் என்ற பேதமோ 

பிறர்குறை காணும் 

அரையறிவோ 

நிச்சயம் இராது.  

வாழ்க்கை

பனிவிழும் மல்லிகைத் தோட்டத்தின் நடுவில் நிறைந்த நறுமணம் மனதை மயக்குவது போல வாழ்க்கையின் சுகானுபவங்களில் சிலபொழுதேனும் சொக்கித் திளையுங்கள்

வாழ்க்கை

வாழ்க்கை ஒரு 

வெள்ளைக் காகிதம். 

வண்ணம் தீட்டுவதும் 

கிறுக்கி எறிவதும் 

நம் விருப்பம். 

திருத்தி எழுத 

சில சந்தர்ப்பங்கள் 

கிடைத்தால் விரக்தியில் 

கிறுக்கிவிடாதீர்கள் 

சிந்தனை

அறிவைச் சேர்க்க 

வழி இல்லாதவர்கள் 

பொருளைச் சேர்த்துக் கொள்ளட்டும். 

பொருளைச் சேர்க்க 

வழி இல்லாதவர்கள் 

அறிவைச் சேர்த்துக் கொள்ளட்டும். 

இரண்டும் இல்லாதவர்கள் 

அருளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். 

வாழ்க்கை வசந்தமாகும். 

நட்பு கவிதை

அருமை நண்பர்களைப் பிரிந்து 

எத்தனை காலம் கழித்தோம்!!

எத்தனை இடைவெளியில் கிடந்தோம்!!

தத்தித் தத்தி நடந்தோம்!!

எத்தனை தடவை விழுந்தோம்!?

எத்தனை தடவை எழுந்தோம்!?

எத்தனை எத்தனை இழந்தோம்!!

வாழ்க்கை அப்படிப்பட்டதுதான்!!!

இன்னும் எத்தனை தயக்கம்?

இன்னும் எத்தனை கலக்கம்?

எத்தனை ஏற்றம்!

எத்தனை இறக்கம்!!

அத்தனையும் நமக்கே!!!

நம்மால் முடியும் .

எல்லாவற்றையும் கடந்தே நிற்போம்.

வென்றே நிற்போம்!!!

மனைவி கவிதை

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே 

உன் காதலை முழுவதும் எனக்கே தந்தவளே 

உன் உடல் பொருள் ஆவியை எனக்கே ஈந்தவளே 

உன் அன்பை காட்டி நீ

என்னைத் தின்றவளே 


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன் அக்கறை என்னையே 

என்னவோ பண்ணுதே 

என்னவோ பண்ணுதே 

உயிரையே தின்னுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உனக்கு நன்றிக்கடன் எப்படி தீர்ப்பேனோ 

என் உள்ளம் தடுமாறுதே 

உன் அளவுக்கு என்னால் 

உன்மேல் பாசம் வைக்க தெரிவில்லையே 

குற்ற உணர்விலே என் உள்ளம் குமுறுதே


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


பாசக்காரியே உன் நேசத்தாலே நெகிழ்ந்தே போனேன்

உன் அழகை கண்டு நான் சொக்கிப் போனேன்

உன் பொறுமை கண்டு நான் வியந்தே போனேன் 

உன் அமைதி கண்டு நான் அடங்கிப் போனேன்


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


உன்னைத் துணையாகப் பெறவே நான்

என்ன தவம் செய்தேனோ

உன் அன்பைப் பெறவே நான் 

என்ன கொடுத்து வைத்தேனோ


ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே


வண்ணம் தீட்டாத ஓவியமே

இன்பம் கூட்டும் அமுதக் கலசமே

தேன்மழைச் சாரலே 

பூமணத் தென்றலே

அழகொளிரும் அலங்காரத் தேரே

உன்னை துணையாகப் பெறவே

என்ன தவம் செய்தேனோ 

ஆருயிர் மனைவியே 

அன்பான துணைவியே

பொங்கல் வாழ்த்துக்கள்

தித்திக்கும் இனிப்புப் 

பொங்கலைப் போல 

வாழ்க்கையில் இன்பம் 

பொங்கட்டும். !!!

உங்கள் இல்லங்களிலும் 

அன்பே வடிவான 

உங்கள் உள்ளங்களிலும் 

வாழ்வும் வளமும் 

தங்கட்டும்.!!! 


நீங்கள் தான் கிங்

 ஐயாயிரம் வெவ்வேறு 

செயல்களைச் செய்வதிலே சிறப்பில்லை 

ஒரே செயலை 

ஐயாயிரம் முறை செய்வதே 

சிறப்பு தரும். 

சுவரில் 

ஐயாயிரம் இடங்களில் குத்துவிட்டாலும் 

சுவர் உடைவதில்லை. 

ஐயாயிரம் குத்துகளை 

ஒரே இடத்தில் விட்டால் 

சுவர் உடைந்து தூளாகும். 

உங்கள் திறமை என்னவோ 

அதைக் கண்டுபிடியுங்கள். 

அதில் ஐயாயிரம் முறை 

முயற்சி செய்து பாருங்கள். 

பிறகு நீங்கள் தான் கிங். 

வாழ்த்துக்கள் 

சுயபரிசோதனை

சிந்திக்க கூட நேரம் கொடுக்காமல் 

விட்டுவிட்டால் மனச்சாட்சியைக் கூட 

ஏமாற்றி விடலாம் என்பதை 

சுயபரிசோதனை செய்யாத காலங்களில் 

உணர்ந்து கொண்டேன். 

அது என் பொறுப்புகளில் இருந்து 

என்னை விடுவித்து கொள்ள 

பிறர் மேல் பழி போட 

நான் செய்த தந்திரம்தானே!!!

கைபேசியினால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நாடகம்

கைபேசியினால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த நாடகம் 

கதை மாந்தர்கள்: 

தினேஷ், கமலேஷ்: ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள்

சுரேஷ்: தினேஷின் தந்தை 

தலைமை ஆசிரியர் 

கண் மருத்துவர் 

காட்சி -1

இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சங்கரலிங்கபுரம் 

(தினேஷும் கமலேஷும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சங்கரலிங்கபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறந்த முதல்நாள் வழக்கம்போல கமலேஷ் காலை எட்டு முப்பதுக்கு பள்ளிக்கூடம் வந்து விட்டான். நண்பன் தினேஷை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவன் வராதது கண்டு ஏமாற்றம் அடைந்தான்.

முதல் பாட வேளை முடிந்து இரண்டாம் பாட வேளை தொடங்கியிருந்தது. அப்போது தினேஷ் அவனுடைய அப்பா சுரேஷ் உடன் வந்திருந்தான்)

கமலேஷ்: (ஓடி வந்து) என்னடா தினேஷ்... என்னடா ஒரு மாதிரி இருக்க...

(தினேஷ் பதில் எதுவும் கூறவில்லை)

தலைமை ஆசிரியர்: என்ன தினேஷ்? ஏன் லேட்டு? ஏன் சோர்வாக இருக்கிற? என்ன ஆச்சு? 

சுரேஷ் (தினேஷின் தந்தை): பள்ளிகூடம் போக பிடிக்கலனு அழுகிறான் சார்...

தலைமை ஆசிரியர்: ஏன் தினேஷ்? நீயும் உன் நண்பன் கமலேஷும் இந்த பள்ளிக்கூடத்திலேயே சிறந்த மாணவர்கள். உன் நண்பன் கமலேஷ் காலையிலேயே பள்ளிக்கூடம் வந்துட்டான். நீ மட்டும் ஏன் பள்ளிக்கூடம் வரப் பிடிக்கலைன்னு சொல்ற? ஏன் அப்படி சொல்ற? என்ன ஆச்சு உனக்கு? 

தினேஷ்: (வேற எங்கேயோ மாறி மாறி பார்த்தவாறு மெல்லிய குரலில்...) ஆங்... ஆங்... எனக்கு போன் வேணும்... எனக்கு போன் வேணும்...போன் குடுங்க... எனக்கு போன் வேணும்...(அழுகிறான்)

தலைமையாசிரியர்: (தினேஷின் தந்தை சுரேஷைப் பார்த்து) புகைப்பழக்கம் மாதிரி,  தினேஷ் திரைப்பழக்கத்தில் விழுந்துட்டான் போல இருக்கே...

தொடர்ச்சியா பல மணி நேரம் திறன்பேசியிலேயோ கணினியிலேயோ நேரம் செலவிடுறவங்களுக்கு கண் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

தினேஷை கண் மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போங்க...

சுரேஷ்: சரிங்க சார். இப்பவே அழைச்சிட்டு போறேன்...

காட்சி-2

இடம்: கண் மருத்துவமனை, விருதுநகர். 

(மருத்துவர் தினேஷின் கண்களை பரிசோதித்தார்) 

மருத்துவர்: தினேஷோட கண்கள் ரொம்ப வறண்டு கிடக்குது. ஒரு வாரத்துக்கு மேல தொடர்ச்சியாக செல்போன் பார்த்தானா?

சுரேஷ்: டாக்டர் ஐயா... நானும் என் மனைவியும் பயர் ஆபீஸுக்கு வேலைக்கு போயிருவோம். இரண்டாம் பருவ விடுமுறை நாட்கள்ல ஏதாவது தேவை என்றால் எங்களுக்கு ஃபோன் போடுவதற்காக தினேஷிடம் செல்போன் கொடுத்துட்டு போவோம். எங்களுக்கு காலைல 8 மணியிலிருந்து நைட் 8 மணி வரைக்கும் வேலை இருக்கும். அந்த நேரங்கள்ல தினேஷ் கிட்டதான் செல்போன் இருக்கும். 

நாங்க வேலை விட்டு வீட்டுக்கு வந்த பிறகும் அவன் போன கேட்டு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சான்.  போன கொடுத்துட்டா அதை வாங்கிட்டு போய் ஒரு ஓரமா உக்காந்து கேம் விளையாடுவான். வீடியோஸ் பாப்பான். நானும் போன கொடுத்துட்டு தொல்லை விட்டா சரின்னு இருந்திட்டேன் டாக்டர். என் மகனுக்கு என்ன ஆச்சு டாக்டர்?

(தினேஷ் மனநிலை பாதிக்கப்பட்டது போல சைகை செய்து கொண்டிருக்கிறான். )

மருத்துவர்: அவன பாருங்க. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசுல... எவ்வளவு சோர்வா இருக்கான்னு பாருங்க...

திடீர் திடீர்னு மாறிகிட்டே இருக்கிற காட்சிகளை இமைமூடாமல் பார்த்து பார்த்து கண்ணெல்லாம் வறண்டு போச்சு..  வறண்டு வறண்டு கண்ணில உள்ள நரம்புகள் எல்லாம் சேதம் ஆச்சு. கண்ணுல இருக்குற நரம்புக்கும் மூளைக்கும் நேரடி தொடர்பு இருக்கு. அதனால மூளை சோர்வு அடைஞ்சிருக்கு...

அவனோட மூளை மட்டும் இல்லை. இதயம் நரம்புகள் கூட பாதிக்கப்படுற நிலைமையில் தான் இருக்குது. 

(மருத்துவர், தினேஷோட இதயத்துடிப்பைச் சரிபார்க்கிறார்)

அவனுக்கு உடல் நடுக்கம், பயம், பதற்றம் எல்லாமே அவனுடைய உடல் நலனை ரொம்பவே கெடுத்துருச்சு.

சுரேஷ்: ஐயோ டாக்டர்... நான் என்ன செய்வேன்... முன்னாடி எல்லாம் நல்லா படிப்பான்... வகுப்புல முதல் ரேங்க் எடுப்பான்... எல்லா நல்ல பழக்கங்களும் அவனிடம் இருந்துச்சு. இப்போ எல்லாமே மாறிடுச்சு... அவன்கிட்ட செல்போனை கொடுத்து அவனுடைய உடல் நலனை ரொம்பவே கெடுத்துட்டேன் டாக்டர்... எப்படியாவது என் மகனைச் சரிப்படுத்துங்கள் டாக்டர்...

மருத்துவர்: செல்போன்ல கேம் விளையாடுவது ரொம்பவே ஆபத்தானது. முதல்ல கண் பார்வை பாதிக்கும். சிந்திக்கும் திறன் குறையும். உடல் நடுக்கம் பயம் பதற்றம் எல்லாமே அதிகரிக்கும். 

அவசியமானதுக்கு மட்டும்தான் செல்போனை பயன்படுத்தணும். அதுவும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பயன்படுத்தணும். குறைவான நேரம் மட்டும்தான் செல்போனை உபயோகிக்கணும். இரவு நேரங்களில் லைட் ஆஃப் பண்ணதுக்கு அப்புறம் செல்போனை யூஸ் பண்ணவே கூடாது. அது கண்ணுக்கு பல மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும். எத்தனையோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் இந்த மாதிரி குழந்தைகள் கிட்ட செல்போனை கொடுத்து கண்களைக் கெடுத்து மருத்துவமனைக்கு கூட்டிட்டு வர பெற்றோர்களோட எண்ணிக்கை ரொம்பவே அதிகம் ஆயிடுச்சு. இந்த நிலைமை மாறனும். இதுக்கு பெற்றோர்கள் தான் முதல் காரணம். தேவையில்லாத நேரத்துல எல்லாம் செல்போனை குழந்தைகிட்ட கொடுக்காதீங்க. செல்போன்ல தேவையில்லாத எதையும் பார்க்க அனுமதிக்காதீங்க... உங்க குழந்தைகளை கண்காணிங்க. உங்க குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுங்கள். 

சுரேஷ்: நன்றி டாக்டர். இப்பதான் எனக்கு புத்தி வந்திருக்கு. 

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

பாடலாசிரியர் மலர்மகேந்திரன்

Mysongs

எனது பாடல்கள் 

சிறப்புரை வழங்குபவர் திரு மா.மாடசாமி

திரு.மா.மாடசாமி அவர்களை சிறப்புரை மற்றும் ஆசிரியர்களை பாராட்டி பேச வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மலையிலே பிறந்தாலும் 

சந்தனம் ...

மலைக்கு என்ன செய்யும்? 

கடலிலே பிறந்தாலும் 

முத்து ...

கடலுக்கு என்ன செய்யும்? 

வீணையிலே பிறந்தாலும் 

இசை ...

வீணைக்கு என்ன செய்யும்? 

நீங்கள் வரைந்த 

வண்ண ஓவியம் நாங்கள் ...

நீங்கள் செதுக்கிய 

அழகுச்சிலைகள் நாங்கள் ...

நிஜ உலகின் பிரம்மாக்கள் நீங்கள்...

உளியின் வலியைப் 

பொறுத்துக் கொள்ளும் கற்களை...

நீங்கள்...

பல்துறை வித்தகராக மாற்றி விடுகிறீர்கள்...

உங்களிடம் பட்ட கடனை 

எங்களால் எப்படித் திருப்பி தர முடியும்???


பாரபட்சம் பாராமல் பெய்யும் மழைத்துளி நீங்கள்..

வேறுபாடு பாராமல் குடிசையிலும் நுழையும் இளம் தென்றல் நீங்கள்...

பள்ளத்தை நோக்கியே பாயும் ஆற்று நீர் நீங்கள்...

ஏதுமில்லாத எங்களின் உள்ளங்களை 

கொள்ளை கொண்டீர்கள்...!


பூவில் சுரந்த தேன் போல...

நாவில் தவழும் தமிழ் போல...

புள்ளிகள் நிறைந்த கலைமான் போல...

புன்னகை தவழும் மழலை போல...

உணவில் கரைந்த உப்பு போல...

கனவில் தோன்றும் தேவதை போல...

எங்கள் வாழ்க்கையைச் 

சுவை மிக்கதாக மாற்றினீர்கள்...


ஆனாலும் இப்போது...

அதிக ஸ்ட்ரெஸ் ஃபுல்லான ஜெனரேஷன் நாம தான்...

நேற்றைய பழமைக்கும் 

இன்றைய புதுமைக்கும் 

இடையில பிறந்து வளர்ந்தவங்க நாங்க...

நல்லா யோசிச்சா...

நம்ம கிட்ட இருக்கிற நல்ல பண்புகளே 

நமக்கு பிரச்சனையா அமைஞ்சிருது...

உண்மை, நேர்மை, 

உழைப்பு, உறவுகளை மதிக்கிறது என்று 

நாம கத்துக்கிட்ட எல்லா நல்ல விஷயங்களுக்கும் 

இந்த சமூகத்தில் இப்ப மதிப்பு இல்ல...

அதனால, இந்த குணங்களை எல்லாம் வச்சிக்கிறதா 

இல்ல விட்டுவிடலாமா அப்படின்ற குழப்பத்துல டென்ஷன் டென்ஷன்...

தீர்வு ஒன்று தான்...

நல்லதுக்கே காலம் இல்லங்க என்ற பழமொழியை ஓரமா வச்சிட்டு...

நம்மளுடைய நற்பண்புகளை 

கீழ போட்றாம கெட்டியா பிடிச்சுக்கணும்...

அதனால என்ன பிரச்சனை வந்தாலும் 

சமாளிக்கணுங்கிற மனநிலையை வளர்த்துக்கணும்....

இதுதான் ஒரே வழி...

ஏன்னா...

உண்மை நேர்மைய கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாமதான்...

உறவுகளை மதிக்கிற பழக்கத்தை கடைப்பிடிக்கிற கடைசி தலைமுறை நாம் தான்...

இப்போ இருக்கிற தலைமுறைக்கு ஒரு ரோல் மாடல் நாம தான்...

நற்பண்புகள் தான் நம்மளுடைய தனித்துவம்...

அத எதுக்காகவும் மிஸ் பண்ணிடக் கூடாது...

இதையெல்லாம் கத்துக் கொடுத்த 

என்னோட ஆசிரியர்களுக்கு 

என் உளப்பூர்வமான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

சிறப்புரை பெ.இலட்சுமணன்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுரை வழங்க வருமாறு திரு. பெ. இலட்சுமணன் கணபதி எம்பிராய்டிங் அவர்களை அன்புடன் அழைக்கிறோம். 

அன்ன சாத்திரம் ஆயிரம் வைத்தல் 

ஆலயம் பதினாயிரம் நாட்டல் 

பின்னர் உள்ள தர்மங்கள் யாவும் 

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்

அன்ன யாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 

என்ற புண்ணிய புலவன் பாரதியின் 

எண்ணப்படி ஆசிரியர் பணியை 

அர்ப்பணிப்போடு ஆற்றிய 

என் மனம் கவர்ந்த 

ஆசிரியர் பெருமக்களை வணங்கி 

என் சிறப்புரையைத் தொடங்குகிறேன்...


எம் தமிழ் அம்மா... 

அம்மம்மா...

சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைன்னு 

பாக்க மாட்டாங்க...

அடிச்சு புடிச்சு லீவு நாள்ல 

ஸ்பெஷல் கிளாஸ் வைப்பாங்க....

அப்போ கலர் டிரஸ் போட்டுக்கலாம்...

ஒரே கலர் கலரா இருக்கும்!!!

அக்கறையோடு நடத்துவாங்க...

திரும்பத் திரும்ப மொழிப்பயிற்சி தான்...

கை வலிக்க வலிக்க கரும்பலகை முழுக்க 

இலக்கணப் பயிற்சிதான்...!

அப்போ தமிழ் ஃபர்ஸ்ட் பேப்பர், 

செகண்ட் பேப்பர்ன்னு 

ரெண்டு பேப்பர் உண்டு...

கடின உழைப்பாளி..!

அதனால நாங்க நல்லா படிக்கணும்னு ஆசைப்படுவாங்க...

எழுத்துப்பிழை இருக்கான்னு 

-வரி வரியா பார்ப்பாங்க...

பேப்பர் ஃபுல்லா சிவப்புமை கோடு தான் இருக்கும்...

எழுத்து மணி மணியா எழுதணும்பாங்க...

நாங்களும் குண்டு குண்டா எழுதுவோம்...

இவர்கிட்ட படிச்சவன் 

மெல்ல படிக்கிறவனா இருந்தாலும்.

70 மார்க் எடுத்திருவான்...

டீச்சிங்கும் கோச்சிங்கும் அப்படி இருக்கும்...


எங்க வாய் சும்மா கிடக்காது...

அரட்டை அடிச்சுகிட்டே இருப்போம்.

அந்த நேரம் எங்க மேல உள்ள அக்கறையினால

உணர்ச்சிவசப்பட்டு பேசுவாங்க...

சில நேரம் அழுதுருக்காங்க...

அதெல்லாம் அப்ப புரியல...

இப்பதான் அவரோட அருமை புரியுது...

இவருகிட்ட தமிழ் படிச்சதனாலேயே 

நிறைய பேரு

டிஎன்பிஎஸ்சி பாஸ் பண்ணி வேலைக்கு போயிருக்காங்க...


அடிக்கடி வெட்டிப்பேச்சு பேசுறதுனால 

நிறைகுடம் தழும்பாது குறைகுடம் தான் கூத்தாடும் 

என்ற பழமொழியைச் சொல்லுவாங்க...

எப்பொழுதும் எங்கள் மனசுல நிற்பவர் நீங்கள்....

நன்றி மா ... தமிழம்மா...!!!


அப்புறம் சமூக அறிவியல் டீச்சர்...

எப்பவும் சிரிச்ச முகம்...

அன்பாலேதான் திருத்தணும்றது 

இவரோட பாலிசி....

எப்பவுமே படிக்காமல் திரியுற 

10, 20 பிள்ளைகளை தத்தெடுத்துப்பாங்க...

அதாவது எப்பவுமே பக்கத்துலயே 

உட்கார வைத்துக்கொள்வார்கள்...

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வைப்பாங்க...

கிளிப்பிள்ளை மாதிரி...

நல்லா படிக்கிற மாணவர்களை 

பெருசா கண்டுக்க மாட்டாங்க...

அவங்களுக்கு ஏதாவது படிக்க கொடுத்திடுவாங்க...


அதிக ரசிகர் படை இவருக்கு தான்...

நாங்க சாப்பிடறது எதுவா இருந்தாலும் வாங்கிக்குவாங்க...

அது சுத்தம் இல்லன்னு தெரியும்...

இருந்தாலும்...

குகனோட தேனையும் மீனையும் ராமன் வாங்கின மாதிரி...

பாசத்துல கொடுக்கிறத வாங்கிக்குவாங்க...


எங்க டீச்சருக்கு விநாயகர்தான் பிடித்த கடவுள்...

பப்ளிக் எக்ஸாம் வரைக்குமே 

எங்க டீச்சரு...

ஆனைமுகனே 

ஆதி முதல் ஆனவனே

மோனைப் பொருளே 

மூத்தவனே

கணேசா ஏன் என்று கேளுமையா 

இந்த ஏழை முகம் பாருமையா 

அப்படிங்கற விநாயகர் வணக்கத்தை 

எல்லாரையும் சொல்ல வச்சு 

பாஸ் பண்ண வச்சவங்க...


ஒரு இடத்தில் உட்காராம 

அங்கிட்டும் இங்கிட்டும் ஓடிக்கிட்டு 

திரியுற பசங்கள செல்லமா அடிப்பாங்க...

யாருக்குமே வலிக்காது...

வாய் பேசி அடி வாங்குற பசங்கள பாத்து...

நுணலும் தன் வாயால் கெடும் 

அப்படின்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவாங்க...

எப்பவுமே... பெத்த தாய் மாதிரி தான்...

நலம் விசாரிப்பாங்க...

எல்லாம் அந்தக் கடவுள் கொடுத்த வரம்...


அப்புறம்...

எங்க பாட்ஷா வாத்தியார்...

முருகானந்தம் சாரு..

ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு கணக்கு எடுத்தவர்...

கூட்டல் விதி, கழித்தல் விதியை 

தினமும் மனப்பாடம் செய்ய வைப்பார்...

அருமையா நடத்துவார்...

முதல்ல ...

ஸ்டெப் பை ஸ்டெப்பா நடத்துவாரு...

அப்புறம் ...

ஷார்ட் கட் சொல்லி நடத்துவாரு...

அப்புறம் ...

ஒரு குழப்பு குழப்பி விட்டு

எல்லா டவுட்டையும் கிளியர் பண்ணி 

நடத்துவாரு...


ஒரே கணக்க குறைஞ்சது 

மூணு மெத்தட்ல நடத்துவாரு...

இதனால எங்களோட டவுட் எல்லாம் கிளியர் ஆயிடும்...

கணக்குக்கு சரியான பேஸ்மண்ட் அமைச்சு தந்ததே இவர்தான்...

ஏதாவது மறந்து போச்சுன்னா...

அடி விழும்...

நிறைய கம்பு ஒடியும்...

வேற கம்பு கொண்டுவர சொல்லி...

அடிப்பார்....

நோய்க்கு மருந்து டானிக்...

மறதிக்கு மருந்து ...அடிதான்ம்பாரு...

நாங்க நிறைய டானிக் வாங்கி இருக்கிறோம்...

அந்த டானிக்கு தான் ...

அந்த அக்கறை தான்...

எங்களுக்கு கிடைச்ச இந்த வாழ்க்கை...

எப்பவும் நீங்க எங்க மனசுல தான் இருப்பீங்க...

தேங்க்யூ சார்....

சிறப்புரை வழங்க வாய்ப்பளித்த அனைவருக்கும் 

நன்றி ...!



வியாழன், 5 பிப்ரவரி, 2026

சிறப்புரை இராஜேந்திர பிரசாத்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுரை வழங்க திரு.இராஜேந்திர பிரசாத் B.E(Civil Engineer) அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

நம் வாழ்நாளில் ...

மிகவும் இனிப்பான தருணம் இது...

25 ஆண்டுகளுக்கு பின்னர் நாம்

எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம்! 


காலம் பற்பல மாற்றங்களை

நமக்கு தந்து விட்டது.

ஆனாலும், 

நம் மனம் மட்டும் 

டைம் ட்ராவல் பண்ணி, 

25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த,

பத்தாம் வகுப்பு மாணவனாக... மாணவியாக... 

நட்புணர்வுடன்... 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து... 

மலர்ந்த நினைவுகளுடன் நாம்...

மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மீண்டும் நாமெல்லாம் சந்திப்போம் என்று 

ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. ஏன்....

நம்மில் பலருக்குச் சிந்திக்கவே நேரமில்லை...

 

வாழ்க்கை பயணத்தின் அருமையான தருணத்தை...

மீட்டுக் கொண்டு வர முயற்சி செய்த...

ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி, 

என் உரையைத் தொடங்குகிறேன். 


வாழ்க்கைக் கணக்கு விசித்திரமானது !

வாழும் வாழ்க்கை அற்புதமானது !


அன்பான ஆசிரியர் பெருந்தகையீர்!!!

அறியாமைத் துயரில் ஆழ்ந்திருந்த எம்மை

ஆற்றுவித்தவர் நீங்கள் ...

கிணற்றுத் தவளையாய்க் கிடந்த எமக்கு...

எட்டுத்திசையைக் காட்டி நின்று,

ஏற்றமிகு வாழ்வளித்தவர் தாங்கள் ...

ஊர்ந்து வந்த நத்தை எமக்குச்

சிறகு தந்து பறக்கச் செய்தவர் தாங்கள் ...

இவை எவையும் மறந்ததில்லை நாங்கள்...

மனக் கோவில் உமக்கே கட்டி...

வழிபடுகிறோம் நாங்கள்...

எம்மால், உமக்குப் பட்ட கடனை...

எப்படித் திருப்பித் தர முடியும்? 

நன்றியைத் தவிர...


எத்தனை எத்தனையோ சவால்களை ...

இன்ப துன்பங்களை ...

ஏற்ற இறக்கங்களை...

ஏமாற்றங்களை  ...

விருப்பு வெறுப்புகளை....

வினோதங்களை ....வியப்புகளை ...

இந்த வாழ்க்கை எமக்குத் தந்திருக்கிறது.

இவை அத்தனையையும் கடந்து வந்ததில்... 

நீங்கள் தந்த தெம்பிருக்கிறது.

நீங்கள் தந்தது ஏட்டுக்கல்வியல்ல...

எப்படி வாழ வேண்டும் என்ற கல்வி...

பசிக்குதோ இல்லையோ...

பால் புகட்டும் தாய்போல ...

எங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ ...

பாடம் சொல்லித் தந்தவர் நீங்கள் ...


நாங்கள் கண்ட நல்லாசிரியர் நீங்கள்...

எதை எதிர்பார்த்து நல்வழி காட்டினீர்கள்?

யாரும் காட்டாத அக்கறையை ஏன் காட்டினீர்கள்...?

ஈகோ இல்லாமல் இறங்கி வந்து ...

இரக்கம் காட்டி...

அன்பைக் குழைத்து ...

அறிவைப் புகட்டிய...

பெருமை மிகுந்த சான்றோர் நீங்கள் ...

ஆசிரியர்களில் நீங்கள் முதல் தரம்...

உங்களிடத்தில் மாணவனாய் வாய்த்தது,

நாங்கள் பெற்ற வரம்...


மதிப்புமிகு தமிழம்மா அவர்களே..!

கருப்பு வைரம் நீங்கள் !!!


கண்டிப்புக் காட்டி,

புரியாத பகுபத உறுப்பிலக்கணத்தை ...

மீண்டும் மீண்டும் விளக்கி...


சொல்லையும் பொருளையும்

ஐயமறப் பொருத்தி...


நேர்க்கூற்று அயற்கூற்றை

நிதானமாக நடத்தி...


இலக்கணக் குறிப்பை 

இலகுவாகச் செதுக்கி...


அலகீட்டு வாய்ப்பாட்டை 

அற்புதமாக நடத்தி...


இலக்கணப் பாடத்தைத் 

இனிக்க இனிக்க நடத்தி...


திணை பால் எண் இடம் காலம் என்று ...

பிழையற்ற தொடர் அமைக்க...

பயிற்சி பயிற்சி என்று...


கல்லாய் இருந்த எங்களை

அருந்தமிழ்ச் சொல்லால்...

செதுக்கிச் செதுக்கி...


அழகுச் சிலையாக்கி...


மாலைதோறும் சிறப்பு வகுப்பு ...

வாரவிடுமுறைதோறும் சிறப்பு வகுப்பு ...

என்று வைத்து...


எங்கள் வாழ்க்கையில் 

ஒளி ஏற்றிய அம்மா...

தமிழ் அம்மா...

எங்கள் அம்மா...


உங்கள் பாதம் தொட்டே...

வணங்கி நிற்கிறோம் அம்மா...


இந்தப் பிள்ளைகள்

இன்னும் படிக்காமல் இருக்கிறார்களே...

என்று நீங்கள் ஏங்கியதைப் 

பார்த்திருக்கிறோம் நாங்கள்...


அன்று புரியவில்லை 

உங்கள் ஏக்கம்...


இன்றுவரை நிலைத்திருக்கிறது 

உங்களின் தாக்கம்...


அரசுப்பள்ளி ஆசிரியை நீங்கள் ...

அவசியத்திற்கும் மேலே 

எங்கள்மீது அக்கறை காட்டினீர்கள்...


அலட்சியமாய் இருந்தோம்

அறியாமையில் உழன்றோம் 

அனாவசியமாய்ச் சுற்றித் திரிந்தோம் 


அடித்தீர்கள்... வலிக்கவில்லை...

திட்டினீர்கள்... உறைக்கவில்லை...


அன்பு காட்டி, அரவணைத்து,

தகரமாய்க் கிடந்த எங்களை 

தங்கமாய்ப் பார்க்க நினைத்தீர்கள்...


இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் 

எங்கள் மனதில் என்றும் நீங்கள் 

தங்கம்தான்...


நான் பிறந்த கருவறைக்கு 

இணையானது உங்கள் வகுப்பறை...


கருவறை கவசம் தந்தது என்றால்...

உங்கள் வகுப்பறை 

கல்வி என்னும் ஆயுதம் தந்தது..

உங்களுக்கு என்னுடைய நன்றியை

உங்கள் பாதம் தொட்டு சமர்ப்பிக்கிறேன்.

வெள்ளி விழா முனைவர் திருமதி ஆனந்த கனக ஜோதி அவர்களின் வரவேற்புரை வரவேற்புரை

தலைமை ஆசிரியருக்கு வரவேற்புரை - வழங்குபவர் 

முனைவர் திருமதி K.ஆனந்த கனக ஜோதி அவர்கள் 


பிரபஞ்சம் கதிரவனை

அனுமதித்ததால் 

கருமை விலகி 

நீலவானம் நீண்டு கிடக்கிறது!!!


காற்று தண்ணீரை

அனுமதித்ததால் 

மேகம் திரண்டு 

எழுந்து நிற்கிறது!!!


மேகம் ஒளியை

அனுமதித்ததால் 

வண்ணங்கள் குழைத்து 

'வானவில்' வளைந்து 

கவர்ந்து இழுக்கிறது!!!


நீங்கள் எங்களை (தலைமை ஆசிரியரைப் பார்த்து...)

அனுமதித்ததாலேயே,

தோட்டத்தில் மலர்ந்த 

வாசனை மிகுந்த 

வண்ண மலர்கள் போல

இங்கு நாங்கள் மலர்ந்திருக்கிறோம்!!!



(பின்வரும் ஒவ்வொரு புகழ்ச்சித் தொடருக்கும் இடைவெளி விட வேண்டும். இடைவெளியில் தலைமை ஆசிரியரை நோக்கி சைகை மொழி காட்ட வேண்டும்)


கடமை தவறாத செயல் வீரர் இவர்!!!

கண்ணியம் நிறைந்த பண்பாளர் இவர்!!!

நேர்மை நிறைந்த குணசீலர் இவர்!!!

உருள்பெருந் தேர்க்கு அச்சாணி இவர்!!!

உயர்ந்து நிற்கும் கோபுரத்தின் கலசம் இவர்!!!

கூர்த்த சிந்தனையில் இவருக்கு நிகர் எவர்?


இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் 

திரு.S.வெங்கடேசன் M.Sc., M.Ed., M.Phill., அவர்களே !!!

வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு

உங்களை வருக வருக என வரவேற்பதில் 

மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்!