வியாழன், 5 பிப்ரவரி, 2026

சிறப்புரை இராஜேந்திர பிரசாத்

சிறப்புரை மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுரை வழங்க திரு.இராஜேந்திர பிரசாத் B.E(Civil Engineer) அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

நம் வாழ்நாளில் ...

மிகவும் இனிப்பான தருணம் இது...

25 ஆண்டுகளுக்கு பின்னர் நாம்

எல்லோரும் இங்கு கூடி இருக்கிறோம்! 


காலம் பற்பல மாற்றங்களை

நமக்கு தந்து விட்டது.

ஆனாலும், 

நம் மனம் மட்டும் 

டைம் ட்ராவல் பண்ணி, 

25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த,

பத்தாம் வகுப்பு மாணவனாக... மாணவியாக... 

நட்புணர்வுடன்... 

ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து... 

மலர்ந்த நினைவுகளுடன் நாம்...

மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

மீண்டும் நாமெல்லாம் சந்திப்போம் என்று 

ஒருபோதும் சிந்தித்ததே இல்லை. ஏன்....

நம்மில் பலருக்குச் சிந்திக்கவே நேரமில்லை...

 

வாழ்க்கை பயணத்தின் அருமையான தருணத்தை...

மீட்டுக் கொண்டு வர முயற்சி செய்த...

ஒவ்வொருவருக்கும் நன்றி கூறி, 

என் உரையைத் தொடங்குகிறேன். 


வாழ்க்கைக் கணக்கு விசித்திரமானது !

வாழும் வாழ்க்கை அற்புதமானது !


அன்பான ஆசிரியர் பெருந்தகையீர்!!!

அறியாமைத் துயரில் ஆழ்ந்திருந்த எம்மை

ஆற்றுவித்தவர் நீங்கள் ...

கிணற்றுத் தவளையாய்க் கிடந்த எமக்கு...

எட்டுத்திசையைக் காட்டி நின்று,

ஏற்றமிகு வாழ்வளித்தவர் தாங்கள் ...

ஊர்ந்து வந்த நத்தை எமக்குச்

சிறகு தந்து பறக்கச் செய்தவர் தாங்கள் ...

இவை எவையும் மறந்ததில்லை நாங்கள்...

மனக் கோவில் உமக்கே கட்டி...

வழிபடுகிறோம் நாங்கள்...

எம்மால், உமக்குப் பட்ட கடனை...

எப்படித் திருப்பித் தர முடியும்? 

நன்றியைத் தவிர...


எத்தனை எத்தனையோ சவால்களை ...

இன்ப துன்பங்களை ...

ஏற்ற இறக்கங்களை...

ஏமாற்றங்களை  ...

விருப்பு வெறுப்புகளை....

வினோதங்களை ....வியப்புகளை ...

இந்த வாழ்க்கை எமக்குத் தந்திருக்கிறது.

இவை அத்தனையையும் கடந்து வந்ததில்... 

நீங்கள் தந்த தெம்பிருக்கிறது.

நீங்கள் தந்தது ஏட்டுக்கல்வியல்ல...

எப்படி வாழ வேண்டும் என்ற கல்வி...

பசிக்குதோ இல்லையோ...

பால் புகட்டும் தாய்போல ...

எங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ ...

பாடம் சொல்லித் தந்தவர் நீங்கள் ...


நாங்கள் கண்ட நல்லாசிரியர் நீங்கள்...

எதை எதிர்பார்த்து நல்வழி காட்டினீர்கள்?

யாரும் காட்டாத அக்கறையை ஏன் காட்டினீர்கள்...?

ஈகோ இல்லாமல் இறங்கி வந்து ...

இரக்கம் காட்டி...

அன்பைக் குழைத்து ...

அறிவைப் புகட்டிய...

பெருமை மிகுந்த சான்றோர் நீங்கள் ...

ஆசிரியர்களில் நீங்கள் முதல் தரம்...

உங்களிடத்தில் மாணவனாய் வாய்த்தது,

நாங்கள் பெற்ற வரம்...


மதிப்புமிகு தமிழம்மா அவர்களே..!

கருப்பு வைரம் நீங்கள் !!!


கண்டிப்புக் காட்டி,

புரியாத பகுபத உறுப்பிலக்கணத்தை ...

மீண்டும் மீண்டும் விளக்கி...


சொல்லையும் பொருளையும்

ஐயமறப் பொருத்தி...


நேர்க்கூற்று அயற்கூற்றை

நிதானமாக நடத்தி...


இலக்கணக் குறிப்பை 

இலகுவாகச் செதுக்கி...


அலகீட்டு வாய்ப்பாட்டை 

அற்புதமாக நடத்தி...


இலக்கணப் பாடத்தைத் 

இனிக்க இனிக்க நடத்தி...


திணை பால் எண் இடம் காலம் என்று ...

பிழையற்ற தொடர் அமைக்க...

பயிற்சி பயிற்சி என்று...


கல்லாய் இருந்த எங்களை

அருந்தமிழ்ச் சொல்லால்...

செதுக்கிச் செதுக்கி...


அழகுச் சிலையாக்கி...


மாலைதோறும் சிறப்பு வகுப்பு ...

வாரவிடுமுறைதோறும் சிறப்பு வகுப்பு ...

என்று வைத்து...


எங்கள் வாழ்க்கையில் 

ஒளி ஏற்றிய அம்மா...

தமிழ் அம்மா...

எங்கள் அம்மா...


உங்கள் பாதம் தொட்டே...

வணங்கி நிற்கிறோம் அம்மா...


இந்தப் பிள்ளைகள்

இன்னும் படிக்காமல் இருக்கிறார்களே...

என்று நீங்கள் ஏங்கியதைப் 

பார்த்திருக்கிறோம் நாங்கள்...


அன்று புரியவில்லை 

உங்கள் ஏக்கம்...


இன்றுவரை நிலைத்திருக்கிறது 

உங்களின் தாக்கம்...


அரசுப்பள்ளி ஆசிரியை நீங்கள் ...

அவசியத்திற்கும் மேலே 

எங்கள்மீது அக்கறை காட்டினீர்கள்...


அலட்சியமாய் இருந்தோம்

அறியாமையில் உழன்றோம் 

அனாவசியமாய்ச் சுற்றித் திரிந்தோம் 


அடித்தீர்கள்... வலிக்கவில்லை...

திட்டினீர்கள்... உறைக்கவில்லை...


அன்பு காட்டி, அரவணைத்து,

தகரமாய்க் கிடந்த எங்களை 

தங்கமாய்ப் பார்க்க நினைத்தீர்கள்...


இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் 

எங்கள் மனதில் என்றும் நீங்கள் 

தங்கம்தான்...


நான் பிறந்த கருவறைக்கு 

இணையானது உங்கள் வகுப்பறை...


கருவறை கவசம் தந்தது என்றால்...

உங்கள் வகுப்பறை 

கல்வி என்னும் ஆயுதம் தந்தது..

உங்களுக்கு என்னுடைய நன்றியை

உங்கள் பாதம் தொட்டு சமர்ப்பிக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக